RightClick

அட்ட வீரட்டானம் : அய்யன் பைரவர் வழிபாடு


பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர்.பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்பதால் இவை இந்தப் பெயர் பெற்றன.இந்த அட்ட வீரட்டானங்களுக்குச் சென்று பைரவரை முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே பைரவரின் திரு அருள் முழுமையாக ஒருவருக்குக் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பைரவ ரகசியங்களுள் ஒன்று !!!

தேவாரம் அருளிய நால்வரில் ஒருவராம் என்னப்பர் அப்பர் பெருமான் தேவாரத்தில் அட்ட வீரட்டானத்தின் பெருமையை விவரிக்கிறார்.

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்

கடவூர் வீரட்டானம்,காமருஞ்சீர் அதிகை

மேவீய வீரட்டானம்,வழுவை வீரட்டம்

வியன்பறியல் வீரட்டம்,விடையூர் திக்கிடமாம்

கோவல்நகர் வீரட்டம்,குறுக்கை வீரட்டம்

கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்

நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!

திருக்கண்டியூர், திருக்கடவூர்,திருவதிகை,வழுவூர்,திருப்பறியலூர்,திருக்கோவிலூர்,திருக்குறுக்கை,திருவிற்குடி ஆகிய தலங்களில் சென்று சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருக்கும் பைரவப் பெருமானை வழிபடும் அன்பர்களை எமன் எக்காலமும் நெருங்கிடான்.இவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்கள் என எமன் இவர்களைக் கண்டு அஞ்சி வணங்கி ஒதுங்குவான்.

1.திருக்கண்டியூர்

இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.

இறைவனின் திருநாமம்  பிரமசிர கண்டீஸ்வரர்.பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த இடம்.இத் தலத்திற்கு வந்து பக்தியோடு வழிபாடு செய்தால்,மறுபிறவியில்லை;திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.இந்தக் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது.

ஞாயிறு,செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு.இந்த நாட்களில் இலுப்பையெண்ணெய்,புங்கெண்ணெய்,நல்லெண்ணைய் கலந்து 8 விளக்கேற்றி மூலவருக்கு அர்ச்சனை,அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்.

திரு மூலப்பெருமானும்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு

நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்

தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)

என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.இதுவே நான்முகனின் தலையை கொய்த வரலாற்றோடு தொடர்புடையது ஆகும்.

சுவாதிஷ்டமாகிய சக்கரத்திலிருந்து விந்து நாதம் செய்து கொண்டிருந்த அலையும் மனமாகிய நான்முகனை(மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நான்கு முகம்) ,விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து,சுத்தக்கினியால் இறையருளால் விந்து சக்தியை நிலைப்படுத்தி,மனதின் உலகச் செயல்களை செயல்படுமாறு செய்து குறும்பை,அகங்காரத்தை நசுக்கிக் காத்து அருள் செய்தார் பைரவர்.

2.திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்,திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி.அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி.

ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.ஞாயிறு,வெள்ளி,வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்பு.

இங்குள்ள மஹாகணபதி சன்னதியில் தான் ஸ்ரீமஹா கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வையார் விநாயகர் அகவலை அருளினார்.

இத்தலத்தில் அபிஷேகம் செய்தால்,நல்ல குருவின் திருவருள் முழுமையாக அமையும்.சோழச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது!!! ஸ்ரீராஜராஜசோழன்        ஸ்ரீகருவூரார் சித்தரின் அருளின் படி பைரவரை வணங்கி ஈடில்லாத புகழ் பெற்றார்.அவரது சாம்ராஜ்ஜியம் ஆசியா முழுவதும்,ஆஸ்திரேலியா வரையிலும் பரவியிருந்தது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்

வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்

வருத்தஞ் செய்தானென்று வானவர் வேண்டக்

குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே= திருமூலரின் திருமந்திரம் 339

(மனதில் பொறாமை,காமம் முதலான தீய எண்ணங்கள் இறை வழிபாடு விடாமல் செய்து வரும்போதுதான் எழுச்சி பெறும்;அவ்வாறு எழுச்சி பெற்று நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும்;இப்படி காம,பொறாமை எண்ணங்கள் தோன்றிடக் காரணம் நான் என்ற அகங்காரம் தான்!!!இந்த எண்ணங்களை முறியடிக்க நாம் பைரவரை விடாமல் தொழுதால்,மனதில் மெய்ஞான எண்ணங்களை தோற்றுவித்து,நமது மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை அழித்து,நல்லெண்ணத்தால் மெய் இறைஞான நிலையை பைரவரே உருவாக்கிவிடுவார்.

3.திருவதிகை

பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர்.ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார்.திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது.வெள்ளி,புதன் கிழமைகளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது.சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.உடல் நோய்களும்,பிறவி நோய்களும் நீங்கும் இடம் இதுவே! நமது கர்மத்தடைகளை நீக்கி,யோக மற்றும் ஞான நிலைகளை வழங்கும் திருத்தலமும் இதுவே தான்!!!

அப்பணி செஞ்சடை ஆதிபுராதனன்

முப்புரஞ்செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புரமாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமூலரின் திருமந்திரம் 343)

காமம்(உடல் இச்சை மட்டும் காமம் அல்ல;பேராசை;பணத்தாசை;பொன்னாசையும் தான்!), கோபம்,தாபம்(நீண்ட கால ஏக்கம்) ஆகிய மும்மலங்களை(நம்மை ஆன்மீக வாழ்க்கையில் வளரவிடாமல் தடுக்கும் கழிவுகள் அனைத்தும் மலம் ஆகும்)எரித்து நமது மூலாக்கினியை ஞானக்கினியால் சேர்த்து யோக சித்தி,ஞான சித்தி அருளும் சிறப்பான திருத்தலமே இந்த திருவதிகை ஆகும்.

4.திருப்பறியலூர்

மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.

சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது.தட்சன் யாகம் செய்த இடமே  தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.இங்கு வந்து வழிபட்டால்,தீராத கடன்கள் தீரும்;பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட சாபங்கள்,தோஷங்கள்  ஆகியவற்றை நீக்கி,நல்வாழ்வு தருமிடம் இதுவே!!!

5.திருவிற்குடி

திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.

மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி.

திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து அருளையும்,சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.எனவே,இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.இங்கு திருமால் தனது தேவியான லட்சுமியோடு இருக்கிறார்.

பெரும் வறுமை நீங்கிட அல்லது மகத்தான செல்வ வளம் வேண்டுவோர்,இங்கு 16 வெள்ளிக்கிழமைகளுக்கு வர வேண்டும்.வந்து விநாயகர்,சுவாமி,அம்பாள்,இலக்குமி,பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும்;இதைச் செய்ய இயலாத அளவுக்கு பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருப்போர் அர்ச்சனை செய்தால் போதும்.இவ்வாறு செய்து முடித்தால், வறுமை நீங்கும்;செல்வ வளம் பெருகும்.

குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் 27 செவ்வாய்க்கிழமைகளுக்கு மேற்கூறியவாறு வழிபாடுகள் செய்து விட்டால்,தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி புத்திரபாக்கியம் பெறுவது நிச்சயம்.

திருமணமாகாதவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தங்கக் காசுகளை சுவாமிக்கு காணிக்கையாக வேண்டி ஒன்பது மாதங்கள்(வெள்ளி அல்லது தேய்பிறை அஷ்டமியன்று) வேண்டிக்கொள்ள ,நல்ல முறையில் திருமணம் நடக்கும்.

தொழிலில் நசிந்தோர்கள்,இலாபமில்லாதவர்கள் இங்கு பைரவருக்கு அபிஷேகங்கள் செய்துவர அற்புதமான பலன்களை அனுபவத்தில் உணரமுடியும்.நீங்கள் இவ்வாறு வழிபாடுகள் செய்து வர,நாய்கள் உங்களைத் தொடர்ந்து வருவதையும் அனுபவத்தில் காணலாம்.

எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்

தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற

அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமூலரின் திருமந்திரம் 341)

6.வழுவூர்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்றதும்,வலப்புறம் திரும்ப வேண்டும்.அங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.

இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார்.

அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து,திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.

ஸ்ரீஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே!!! எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்;தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள்,இங்கு வருகைதந்து,இறைவனை வழிபட வேண்டும்.மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;இவ்வாறு செய்வதால்,அவர்களின் தியானம் சித்திக்கும்;கூடவே இறைவனின் திருவருட்காட்சியும்(தரிசனம்!!!) பெற்று இறைமார்க்கத்தில் முன்னேறமுடியும்.

இத்தலத்தில் அமர்ந்து தியானம் செய்து வந்தால், ‘பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தமே’ என்னும் வாக்கினை அனுபவபூர்வமாக உணரலாம்.

இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார்.இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்த அஷ்டமச்சனி(4 ஆம் இடத்துச்சனி),சனி திசையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 சனிக்கிழமைகளுக்கு இங்கு வர வேண்டும்;அவ்வாறு வந்து,இவரது சன்னிதியில் 8 தீபம் நல்லெண்ணெய் ஊற்றி,ஏற்ற வேண்டும்.அதன்பிறகு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்;முடியாதவர்கள் அர்ச்சனை செய்து வர சனிக்கிரகத்தின் பாதிப்புகள்,தொல்லைகள் நீங்கி,எல்லையில்லாத மனநிம்மதியைப் பெறலாம்.

7.திருக்குறுக்கை

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும்,பிரிந்து செல்ல வேண்டும்.அங்கிருந்து 3 கி.மீ.சென்றால் திருக்குறுக்கை வரும்.

இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும்.காமனை எரித்த இடம் இதுவே!!!

தியானம் செய்பவர்கள்,இறை நெறி செல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுழுமுனை கூடி,வாக்கு சித்தியும் தவ உயர்வும் பெறமுடியும்.

குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து 8 வியாழன் அல்லது 8 செவ்வாய்க்கிழமை அல்லது மாதாந்திர வியாழன் அல்லது மாதந்திர செவ்வாய்க்கிழமை என்று  8 முறை வழிபட்டு,அன்னதானம் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மழலைச் செல்வம் பெறுவார்கள்.

இருந்த மனத்தை இசைய இருத்திப்

பொருந்தி இலிங்க வழியதுபோக்கி

திருந்திய காமன் செயலழித்தங்கண்

அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமூலரின் திருமந்திரம் 346)

இந்தக் கோவிலுக்கு வந்துவிட்டு,வீடு சென்றவர்களுக்கு கனவில் பைரவர் அல்லது கூட்டமாக நாய்களையோ காண்பார்கள்.ஸ்ரீபைரவரின் திருவருளுக்கு இது ஒரு சான்று ஆகும்.

8.திருக்கடவூர்

திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.

அமிர்தகடேஸ்வரர்,அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர்.எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே!!!

இதய நோயில் வருந்துவோர்கள்,ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன்பிறகு தியானம் செய்ய வேண்டும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகளுக்குச் செய்து வந்தால்,மரண பயம் அகன்று நீடூழி வாழலாம்.

பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த இடம் இது.

மூலத்துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று

காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமூலரின் திருமந்திரம் 345)

இது சித்தர்கள் தவம் செய்த பூமி ஆகும்.இங்கு ஈசான மூலையில் அமர்ந்திருக்கும் பைரவரை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்  8 நாட்களுக்கு தவம் செய்து,வில்வம் மற்றும் செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால்,அஷ்டமாசித்திக்குச் செல்ல நமக்கு நல்ல குருவை,சித்தரை அடையாளம் காட்டும்.இந்த ஊருக்கு 2 கி.மீ.தொலைவில் திருக்கடவூர் மயானம் என்னும் இடத்துக்குச் சென்று பிரம்மபுரீஸ்வரர்,மலர்க்குழல் மின்னம்மை தம்பதியராக இருக்கும் அருள்ஞான பெற்றோர்களை வழிபட,மெய்ஞானம் கைகூடும்.

கொன்றாய் காலனை; உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,

மான் கன்றாருங் காவாக்கடவூர் திருவீரட்டத்துள்

என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே என்பது சுந்தரரின் தேவாரப்பாடல் ஆகும்.

நன்றி:பைரவ ரகசியம்

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ