RightClick

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்
`               சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் 

அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் 
ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம் 
தோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.

மிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் 'ஓம் நமசிவய' என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக  விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.

       

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.

"கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்" இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

 நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய  ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான்  அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே."உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே".

நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின்  கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை


“வடிவு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும் என்பனே
நடுவண் வந்து அழைத்த பொது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தொட்டி கைக் கொடுப்பரே".

அழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால், விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள் .   முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான். . அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய். . மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமா?  அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா . ஆகவே அதனை அந்த
அழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து
அவன், அந்த தோட்டி, அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ சொல்லுவார்கள். .அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையே? அது ஏன் என்று யோசியுங்கள். . அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள். . அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.


“என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.

எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள். . என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, இருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அநாதி முன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே

நான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளே, அது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து  நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை. நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், நின்ற மனம் ஒரு மாயையோ,இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே. எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனே, உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே!!!!மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.

பூமியாகவும், ஆகாயமாகவும், ஏழு கடல் நீராகவும், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. . இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!


அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே

மெய்ப் பொருள் விஷ்ணுவுமல்ல, பிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும், பிரம்மாவாலும்
அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச்சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான்.  அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதைஉணருங்கள். . அது பெரியதும் இல்லை,சிறியதும் இல்லை, யாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரமாய் தோன்றுகின்றது. இதனை தனக்குள்ளேயே அறிவை அறிந்து உண்மையை என்று உணர்ந்து தியானியுங்கள்.