முக்கணும் நிலவெழ முகிழ்த்த மூரலும்
சக்கர வதனமும் தயங்கு வேணியும்
செக்கர் மெய் வதனமும் ஆன என்று வில்லிபாரதத்தில் சுகாசன வடிவம் பற்றி
பாடியுள்ளார்;
உலக அன்னையாகிய சர்வேஸ்வரி தட்சனின் மகளாகத் தோன்றி தவம் செய்து சிவனை
மணந்தாள்;தட்சன் சிவநிந்தை செய்தமையால்,அவனால் வளர்க்கப்பட்ட உடலையும்,அவனது மகள் என்பதாலும்
தான் பெற்ற தாட்சாயணி என்ற பெயரையும் மாற்ற சிவனிடம் வேண்டினாள்;ஈசனின் திருவருளால்
இமாசல மன்னனுக்கு மகளாகத் தோன்றி ‘உமை’ என்ற பெயருடன் வளர்ந்தாள்;இமராசகுமாரியான அவள்,தவம்
மேற்கொண்டு சிவபெருமானுக்கு மாலையிட்டாள்;
ஒரு நாள் உமாதேவி,சிவனிடம், “எம்பெருமானே! சிவ ஆகமங்களை அறிந்து கொள்ள
விரும்புகிறேன்;எனவே,அடியேனுக் கு மந்திர தீட்சை செய்து அவைகளை தாங்களே உபதேசிக்க வேண்டும்”
என்று வேண்டினாள்;அதன்படி,ஈசன் அவளுக்குத் தீட்சை கொடுத்தார்;பிரணவ சொரூபத்தை உபதேசித்தார்;பின்னர்
மலர்களை அணிந்து தன்னை அலங்கரித்துக் கொண்ட உமாதேவி சிவனின் இடப்புற மடியில் அமர்ந்தாள்;அமர்ந்து,சிவனிடம்
பிரணவ மந்திரத்தின் பொருள்,அதன் தோற்றம்,பிரணவ மந்திரத்தின் தேவன்,அவரை வழிபடும் முறைகள்
போன்ற விவரங்களைக் கூறியருளும் படி வேண்டினாள்;அவளது கேள்விகளுக்கு சிவபெருமான் விளக்கமளித்தார்:
பிரணவப் பொருளே சிவனின் சொரூபம்! அது அனைத்து விதைகளுக்கும் ஆதிவிதை
போன்றது;மிகவும் சூட்சுமம் நிறைந்தது;உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படுவது;அதுவே
பரபிரம்மம் ஆகும்;ஏகாட்சரம் என்றும் ஆதி மந்திரம் என்றும் சொல்லப்படுவது;அதனாலேயே சிவபெருமானை
‘ஏகாட்சரரூபி’ என்று அழைக்கிறார்கள்;
‘அ’+ ‘உ’+ ‘ம’=ஓம் இந்த ஓம்காரத்தில் இருந்து வேதங்கள் தோன்றின;
அகாரத்தில் இருந்து ரஜோகுணத்துடன் கூடிய நான்கு முகம் கொண்ட பிரம்மனாக
உற்பத்தி செய்யும்;
உகாரத்தில் இருந்து சத்துவ குணத்துடன் கூடிய பிரகிருதி என்ற யோனியாகிய
விஷ்ணு ரூபமாகி உலகத்தை பாதுகாக்கும்;
மகாரத்தில் இருந்து தமோ குணத்துடன் கூடிய ருத்ரன் உற்பத்தியாகி உலகத்தை
சம்ஹாரம் செய்யும்;
பிந்து(விந்து) மகேசுவர சொரூபமாக திரோபாவத்தை(மறைத்தலை)ச் செய்யும்;நாதம்
சதாசிவரூபமாக எல்லாவற்றையும் அருளும் சதாசிவ மூர்த்தியாக விளங்கும்;
மந்திரம்,யந்திரம்,தேவதை,பிரபஞ் சம்,குரு,சீடன் என்னும் ஆறுவகை சாதனங்களால்
சிவபெருமானை அறிந்து,ஐக்கிய அனுசந்தானம் செய்து கொள்ள வேண்டும்;அதற்கான மந்திரம்,தியானம்
முதலியவற்றையும் உமாதேவிக்கு விளக்கினார் சிவபெருமான்;
‘இதயக் கமலத்தில் ஆதாரசக்தி முதல்,அந்தராகாசத்தில் ‘ஓம்’ எனும் ஏகாட்சரசொரூபியாக
பிரம்மத்தையே தியானிப்பவர்கள்,சிவலோகம் அடைந்து,சிவஞானத்தை உணர்ந்து சிவகதியைப் பெறுகிறார்கள்;குருவைத்
தியானித்து வணங்கி, அவர் மூலம் உபதேசம் பெற்று தூய்மையான இடத்தில் பிரணவத்தை உச்சரித்து
பஞ்சாட்சரம் ஜெபித்து,பிறகு விதிப்படி பஞ்சாவரண பூசை செய்ய வேண்டும்’ என்று அம்பிகைக்கு
உபதேசித்தார்;
உமாதேவியின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் சுகாசனத்தில் அமர்ந்து,அவளுக்கு சிவ
ஆகமங்களை உபதேசித்த திருக்கோலமே சுகாசனமூர்த்தி வடிவம்!!
சுவத்திகம்,கோமுகம்,பதுமம்,வீ ரம்,கேசரி,பத்திரம்,முக்தம்,மயூ ரம்,சுகம்
ஆகிய ஒன்பது வகை ஆசனங்களை ஆகமங்கள் குறிப்பிடுகின்றன;இடக்காலை இருக்கையில் மடித்து
வைத்து,வலக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பதே சுகாசனம்;சுகாசன மூர்த்தியின் சக்தி
‘தர்மார்த்த காம மோட்ச பிரதாயினி’ என்று அழைக்கப்படுகிறாள்;
உயிர்களுக்கு ஆன்ம நலம் பயக்கும் வகையில் சிவபெருமான் கொள்ளும் உயரிய
திருவருட்கோலமே சுகாசன மூர்த்தமாகும்;
சிவ ஆகமங்களை உமாதேவிக்கு முதலில் உபதேசித்தவர் சிவபெருமான்;அம்பிகை
அதை அருள் முகத்தால் பிற ஆன்மாக்களுக்கு உணர்த்தினாள்;இந்த வகையில் சிவனுக்கு மாணவியாகவும்,ஆன்மாக்களுக்கு
குருவாகவும் விளங்குகிறாள்;சைவமரபில் முதல் ஏழு குருமார்களில் அம்பிகையும் குருவாகப்
போற்றப்படுகிறாள்;இதன் அடிப்படையில் உமாதேவியை அருகில் அமர்த்தி அவளுக்கு ஆகமங்களை
உபதேசிக்கும் மூர்த்தியை உமா உபதேச மகேசுவரர் என்று அழைப்பர்;
இந்தத் திருவடிவத்தில் ஆறு திருக்கரங்களுடன் விளங்குகிறார் ஈசன்;ஐந்து
கரங்களில் மான்,பாம்பு,செபமாலை,தண்டம் ஆகியன திகழ மற்றொரு கரத்தில் சின் முத்திரையுடன்
காட்சியளிப்பார் என்று சிவபராக்கிரமம் தெரிவிக்கிறது;சில்ப ரத்தினம்,ஸ்ரீதத்துவநிதி
போன்ற நூல்களில் சுகாசனமூர்த்தி பற்றிய முழுமையான விளக்கங்கள் இருக்கின்றன;
சுகாசன மூர்த்தி திருவடிவம் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோவில்,மதுரை,சிதம்பரம், காஞ்சிபுரம்
கயிலாயநாதர் கோவில் போன்ற இடங்களில் காணப்படுகிறார்;
சுகாசன மூர்த்தியை வழிபடுவோர் வாழ்வில் சகல சுகங்களையும் அடைந்து இன்புறுவர்
என்று ஆகமங்கள் தெரிவிக்கின்றன;
ஓம்சிவசக்திஓம்