RightClick

அஷ்ட வக்ர கீதை பிறந்த கதை

பிரளயத்திலும் நாம் வாழ்ந்து வரும் பூமியும்,பிரபஞ்சமும் அழிந்துவிடும்;அதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும்;அகத்தியரை விடவும் நீண்ட ஆயுளை உடையவர் காகபுஜண்டர் சித்தர் ஆவார்;நாம் வாழ்ந்து வரும் பூமி இதுவரை ஆறுமுறை பிரளயத்தால் அழிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்;காகபுஜண்டரை விடவும் வயதானவர் அஷ்டவக்ரர் என்ற துறவி.இவர் உடலானது எட்டுவிதமான கோணலுடன் இருக்கும்;ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்ததும் இவரது உடலில் இருக்கும் ஒரு கோணல் சரியாகும்;பூமியில் 432 கோடி ஆண்டுகள் ஆனால்,பிரம்மாவுக்கு ஒரு நாள்! இப்படி பிரம்மாவுக்கு 100 வயது ஆனதும் அவர் இறப்பார்;முன்னொரு காலத்தில் ஜனகன் தனது ஆஸ்தான பண்டிதருடன் வேதாந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு வேதாந்த நூலில், ‘குதிரை ஏறும் ஒருவன் சேணத்தின் ஒரு சுவட்டில் கால் ஊன்றி மற்றொன்றில் கால் எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ‘பிரம்மஞானம்’ ஏற்பட்டுவிடும்’ என்று ஓர் வசனம் இருந்தது.

இமைப்பொழுதில் ஞானம் அடையலாம் என்பது இதன் தாத்பர்யம்.அத்துடன் ஜனகன் பாடத்தை நிறுத்திக் கொண்டு பண்டிதரை நோக்கி, “இவ்வாக்கியத்தின் உண்மையைத் தாங்கள் நிரூபிக்க வேண்டும்.குதிரையைக் கொண்டுவரச் சொல்லவா?”என்று கேட்டான்.

ஞான அனுபவத்தைத் தன்னால் அருள முடியாது என்று தன் நிலையை பண்டிதர் ஒப்புக்கொண்டார்;

அப்படி என்றால் அந்த வசனம் பொய்;மிகைப்படுத்திக்கூறப்பட்டது என்றான் ஜனகன்.

“மன்னா! என்னால் நிரூபிக்க முடியவில்லை என்பதற்காக பொய் என்று சொல்லிவிடக்கூடாது;அவ்வசனம் ஆன்றோர் வாக்கு அல்லவா?” என்றார் பண்டிதர்.அரசனுக்கு கோபம் வந்தது;பண்டிதரைச் சிறையில் அடைத்தான்;நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பண்டிதரையும்,அறிஞர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து இந்த வசனத்திற்கு விளக்கம் கேட்கத் துவங்கினான்;சரியான பதிலை எவராலும் சொல்லமுடியவில்லை;எனவே,அனைவரையும் சிறையில் அடைக்கத் துவங்கினான்.இந்தநிலையில் வயதில் சிறியவரும்,அறிவில் பெரியவருமான முனிவர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்தார்.அவரது உடல் எட்டுக் கோணல் கொண்டதாக இருந்தது;அதனால் அவர் அஷ்டாவக்ரர் என்று அழைக்கப்பட்டார்.

அந்த நாட்டு அரசன் ஜனகன், கற்றோர் அனைவரையும் ஒவ்வொருவராகச் சிறைப்படுத்துகிறான் என்ற வரலாற்றைக் கேள்விப்பட்டார்.அரசனைச் சமாதானப்படுத்தி,அறிஞர்கள் அனைவரையும் விடுவிப்பதாகத் தன்னிடம் முறையிட்ட மக்களிடம் வாக்களித்தார்;

மக்களில் சிலர்,அஷ்டாவக்ரரை பல்லக்கில் அமர வைத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

சபைக்குள் நுழைந்த முனிவரைக்கண்டு ஜனகன் எழுந்து நின்று வணங்கி வரவேற்றான்.

பண்டிதர்களைச் சிறைப்படுத்தும் காரணத்தை அஷ்டாவக்ரர் அரசனிடம் நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டார்.அனைவரையும் விடுவிக்கச் சொன்னார்.

ஜனகனும் தனது சந்தேகத்தைத் தீர்க்கும் வல்லமை படைத்த ஒருவரே இவ்வாறு தன்னைக் கேட்டுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தான்.

 

அனைவரையும் சிறையில் இருந்து விடுவிக்கக் கட்டளையிட்டான்;பிறகு முனிவரை நோக்கி, ‘குதிரையைக் கொண்டுவரச் சொல்லவா?’ என்று கேட்டான்.

அஷ்டாவக்ரர், “அரசே! அவசரப்பட வேண்டாம்.தாங்கள் கேட்கும் உண்மையை உணர்த்துவதற்காக நாம் தனியான இடம் போக வேண்டும்” என்று சொன்னார்.

அஷ்டாவக்ரர் பல்லக்கில் பயணிக்க,அரசன் தன் பரிவாரங்களுடன் தனிக்குதிரையில் அவரைப்பின் தொடர்ந்தான்.நாட்டின் எல்லைப்புறத்தில் காடு வந்தது;வனத்தை எட்டியதும், “அரசே! நாம் இருவர் மட்டும் தனித்து இருக்க வேண்டும்;மற்றவர்களைப் போகச் சொல்லுங்கள்” என்றார் அஷ்டாவக்ரர்.

அரசனின் ஆணைப்படி அனைவரும் போய்விட்டனர்;இப்பொழுது வனத்தில் முனிவரும் மன்னரும் மட்டும் இருந்தனர்.அரசன் குதிரைச் சேணத்தின் மீது ஒரு சுவட்டை மிதித்துக் கொண்டு, “ முனி அரசே! தயை புரிக!” என்று வேண்டினான்.

அஷ்டாவக்ரர், “அரசே! அந்த வாசகம் உள்ள நூலில் இவ்வுண்மை குருவினால் சீடனுக்கு அருளப்படுவது என்று உள்ளதே! நாம் இருவரும் அத்தகைய சம்பந்தத்தோடு இருப்பது உண்மைதானா?”

ஜனகன்: சீடனானேன்;அருள் புரிக!

அஷ்டாவக்ரர்: உண்மைச் சீடன் தன்னையும், தன் உடமைகளையும் குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

ஜனகன்: ‘அவ்வாறே’ என்று சொன்ன அந்த நொடியில் அஷ்டாவக்ரர் மறைந்து விட்டார்.

ஜனகன் ஸ்தம்பித்துப்போனான்.

அந்த இடத்திலேயே சிலையாக நின்றான்;பொழுதாகிவிட்டது. சூரியன் அஸ்தமித்து இருளும் சூழத் துவங்கியது.நெடுநேரம் காத்திருந்தும் மன்னன் திரும்பாததைக் கண்ட குடிமக்கள் கவலை அடைந்து,அவனைத் தேடி வந்தனர்.

காட்டினுள் சென்று சிலை போல நிற்கும் மன்னனைக் கண்டனர்.

அவனோ ஜனக்கூட்டத்தையோ,அவர்களின் ஆரவாரத்தையோ உணரவில்லை;மக்கள் அரசனின் நிலையைக் கண்டு வியப்பும் வருத்தமும் அடைந்தனர்.

அஷ்டாவக்ரரை எங்கு தேடியும் காணவில்லை;அவர் ஒரு மாயாவி என்று அவர் மேல் மந்திரிகளும் மற்றவர்களும் சினம் கொண்டனர்.அரசனை பல்லக்கில் வைத்து அரண்மனைக்கு தூக்கிச் சென்றனர்;அவனது நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை;அரசனைப் படுக்கையில் படுக்க வைத்தனர்;அமைச்சர்கள் கவலையுடன் காத்திருந்தனர்;அடுத்த நாள் காலையும் அரசர் அதேமாதிரி இருந்தார்;எனவே,உடனடியாக அஷ்டாவக்ரரைக் கண்டுபிடிக்க நாலாபுறமும் தூதர்களை அனுப்பினர்.அன்று இரவுதான் தூதர்கள் அஷ்டாவக்ரரை அழைத்து வந்தனர்;தலைமை மந்திரி,அவர் மீது கோபமாக இருந்தார்;இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை;முனிவரின் தயவு வேண்டும் என்பதால்,அமைதி காத்தார்;தலைமை மந்திரி அஷ்டாவக்ரரிடம்,அரசரின் பரிதாபநிலையையும்,அதனால் மக்களின் கவலையையும் எடுத்துரைத்தார்;எனவே,மீண்டும் அரசரை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டினார்.

அரசரின் இந்த நிலைக்கு அஷ்டாவக்ரரே காரணம் என்று அமைச்சர் கூறியதால், ‘அவன் அனுபவத்தைப் பற்றி அரசனிடமே கேட்டுப்பாரும்’ என்று முனிவர் அமைச்சரைத் தூண்டினார்.

ஆனால் மன்னரிடம் நேரடியாகக் கேட்பதற்குத் தனக்குச் சாத்தியப்படாது என்று தலைமை மந்திரி பயந்தார்;அஷ்டாவக்ரரை நாடி நின்றார்.

அஷ்டாவக்ரர் அரசனை. “ஜனகா!” என்று கூப்பிட்டார்.அரசனும் ‘ஸ்வாமி’ என்று அவரை வணங்கினான்.

அமைச்சர்கள் திகைத்துப் போனார்கள்;முனிவர் மீண்டும் அரசனை நோக்கி, “ஜனகா! நான் உன்னை பரிதாபகரமான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டேன் என்று இவர்கள் பேசுகிறார்கள்;அது உண்மையா? சொல்” என்றார்.

ஜனகன், “யார் அப்படிச் சொன்னது?” என்று வெகுண்டார்.மந்திரிகள்,பிரதானிகள் அனைவரும் நடுங்கினர்;இருந்தபோதிலும்,அரசனை நல்ல நிலைக்குக் கொண்டு வர அஷ்டாவக்ரரை வேண்டினர்;

“அப்படியானால் அரசனை என்னிடம் தனியே விட்டு அனைவரும் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டார் முனிவர்.

அனைவரும் சென்றதும் அரசனை நோக்கி, “ ஜனகா! நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய்? உலகியலுக்கு மாறாக நடப்பது எதற்காக? எல்லோரையும் போல இருப்பதுதானே முறை” என்றார்.

ஜனகன்: ஐயனே! நான் உமது சீடன்.உங்கள் ஆணைப்படியே நடப்பேன்

அஷ்டாவக்ரர்: பிரம்ம ஞானம் பக்குவமானவர்களுக்கே உணர்த்தமுடியும்.இதுவரை உனது தகுதியை சோதித்துவிட்டேன்.உணவு அருந்து;பிறகு இது பற்றி நாம் பேசுவோம்.

ஜனகன் உணவு உண்டான்.இரவு உணவு உண்டபின்னர், “பிரம்ம ஞானத்தை எப்படி அடைவது?” என்று கேட்டான்.

அன்று இரவு ஜனகனுக்கும் அஷ்டாவக்ரருக்கும் நிகழ்ந்த உரையாடலின் தொகுப்பே அஷ்டாவக்ர கீதை.

மறு நாள் காலையில் அரண்மனைக்கு வந்த அமைச்சர்கள்,அரசன் இயல்புநிலைக்கு மாறியிருப்பது கண்டு மன அமைதியடைந்தனர்.முனிவருக்கு நன்றி தெரிவித்தனர்;அரசன் வழக்கமான அலுவல்களில் ஈடுபடத் துவங்கினான்.

அரசவை கூடியது;அந்த சபைக்கு அந்த அஷ்டாவக்ரர் அரசனை நோக்கி, “ வேந்தே! கணத்தில் ஞான அனுபவம் பெறலாம் என்று சாஸ்திரத்தில் கூறியிருந்தது பற்றிச் சந்தேகம் உங்களுக்கு வந்து இல்லையா? இப்போது அது பற்றிய தங்களுடைய அனுபவத்தை சபையோருக்கு உணர்விக்கவும்”

மிகுந்த வணக்கத்துடன் அரசன், “ ஐயனே! எனது சந்தேகம் முழுவதுமாகத் தீர்ந்தது;அப்படி அடியேன் சந்தேகப்பட்டது தவறு;எனது பக்குவமில்லாத மனோபாவத்தால் அப்படி சந்தேகப்பட வேண்டியதாகிவிட்டது;மன்னிக்கவும்;அந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரியும் உண்மையே! போதுமான ஆன்மீக முன்னேற்றமும்,தகுதியும் அடையும் போது தகுந்த குருவால் மட்டுமே அதை உணரமுடியும்;வேறு எந்த வழிமுறையாலும் அதை புரிந்து கொள்ள முடியாது”

ஓம்சிவசக்திஓம்