RightClick

கடிகாரத் தயாரிப்பில் ஓர் முறியடிக்க முடியாத உலகச் சாதனை= டைட்டன் எட்ஜ்!!!

வருடம் 1994. டைட்டன் வாட்ச் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் செர்க்ஸெஸ் தேசாய், தன் அணியுடன் உட்கார்ந்து ஆலோசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவர்முன் இருந்த சவால், உலகத்திலேயே ஒல்லியான, தண்ணீர் புகாத கைக்கடிகாரத்தை உருவாக்கவேண்டும். இதன் தடிமன் 3.5 மில்லிமீட்டருக்குமேல் இருக்கக்கூடாது. 3.5 மில்லிமீட்டர் என்பது ஒரு பழைய ஃப்ளாப்பி டிஸ்க்கின் தடிமன்தான். அந்தக் கடிகாரம், தண்ணீர் பட்டால் வீணாகாமலும் இருக்கவேண்டும்.
முதலில் ஸ்விட்சர்லாந்தினரிடம் போய் உதவி கேட்டார்கள். அவர்கள்தான் வாட்ச் செய்வதிலேயே வல்லவர்கள். ஆனால் ஏமாற்றம்! அப்படி ஒரு வாட்சைத் தயாரிக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள் சுவிஸ்காரர்கள்! ‘அல்ட்ரா ஸ்லிம்’ என்ற வகையில் தடிமன் குறைவான கைக்கடிகாரங்கள் இருக்கின்றன; நீர் புகாத வாட்ச்களையும் தனியே டிசைன் செய்யலாம். ஆனால் ஒரே நேரத்தில் இந்த இரண்டையும் சேர்த்துச் செய்ய முடியாது.
டைட்டன் டீம், இதைத் தங்களுக்கு விடப்பட்ட சவாலாகவே எடுத்துக்கொண்டார்கள். ‘சுவிஸ்காரர்களால் செய்ய முடியாவிட்டால் என்ன? நாமே இதைச் செய்வோம்’
ஆக, உலகின் முதல் தண்ணீர் புகாத, மெல்லிய வாட்சைக் கற்பனை செய்து, டிசைன் செய்து, தயாரித்தது ஸ்விட்சர்லாந்தோ ஜப்பானோ அல்ல. பத்து வருடமே ஆன ஓர் இந்திய கம்பெனி. தங்கள் வாட்சுக்கு அவர்கள் வைத்த பெயர் ‘எட்ஜ்’.
இன்றைக்கு எட்ஜ் கடிகாரம், டைட்டனின் வெற்றிக் கதை. உலகின் மிக மெல்லிய, நீர் புகாத வாட்ச் என்று எல்லா நாடுகளிலும் விற்பனையாகிறது.
உலகமே நம் நாடக மேடை!
டைட்டன் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது 1985ம் வருடம். டாடா குழுமத்துக்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கும் இடையில் கூட்டு முயற்சியாகத் தொடங்கப்பட்டது.
முதலில் ஃப்ரெஞ்சு கம்பெனி ஒன்றிடமிருந்து கடிகாரத்தின் முக்கியப் பகுதியான ‘மூவ்மெண்ட்’களைப் பெற்று, பிறகு இங்கேயே அதைத் தயாரிக்கவும் தொடங்கியது டைட்டன். மார்ச் 1987ல் வர்த்தகரீதியாக வாட்ச் தயாரிக்க ஆரம்பித்தது. 1992வாக்கில் தன்னுடைய ஃப்ரெஞ்சுக் கூட்டாளிகளையே மிஞ்சி, அவர்களைவிட முன்னேறிய வாட்ச்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது.
ஒரு காலகட்டத்தில் ஃப்ரெஞ்சுக் கூட்டணி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. செர்க்ஸெஸ் தேசாய், ‘இனி நாமே கடிகார மூவ்மெண்ட்களை டிசைன் செய்வதுடன் தயாரிக்கவும் ஆரம்பிக்கலாம்’ என்று அறைகூவல் விடுத்தார். உலகத்துக்கே நாம்தான் வாட்ச் தயாரித்து அனுப்பவேண்டும் என்பது அவருடைய ஆவல். உலகின் முன்னணி வாட்ச் கம்பெனிகளின் மரியாதையைப் பெறவேண்டும் என்றால், சும்மா மார்க்கெட்டிங் செய்து பயன் இல்லை; தொழில்நுட்பத்திலும் நாம் சிறந்து விளங்கவேண்டும்.
பி.ஜி.துவாரகாநாத்தின் தலைமையில் ஆராய்ச்சிப் பிரிவு வேலையைத் தொடங்கியது. சொந்தமாக ஒரு கடிகார மூவ்மெண்டைத் தயாரித்து, அதை வாட்ச்களிலும் பொருத்தி விற்க ஆரம்பித்தது டைட்டன். பிறகு 1994ல் தேசாய் போர்க் கொடியை இன்னும் உயர்த்திப் பிடித்தார். ‘உலகத்திலேயே மெல்லிய வாட்ச் மூவ்மெண்ட் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும். முடியுமா?’ என்று ஆராய்ச்சிப் பிரிவுக்கு சவால் விட்டார். மிகவும் போராடி அதில் ஜெயித்த பிறகு, தேசாய் இப்போது போர் முரசை இன்னும் பலமாகக் கொட்டினார்:
நாம் மூவ்மெண்டை மட்டும் தயாரித்தால் போதாது; அதை ஒரு வெளிக் கவசத்துக்குள் பொருத்தி முழு வாட்சாகத் தயாரித்து விற்கவேண்டும். அதுவும் ஒல்லியான வாட்ச் ஒன்றைத் தயாரிக்கவேண்டும்; அது தண்ணீர் புகாமலும் தினசரி உபயோகத்துக்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டும்.
எழுந்தது சவால்!
எட்ஜ் கடிகாரத்தைத் தயாரிப்பது எளிதாக இல்லை. டைட்டனில் இருந்த பலரும் கேட்ட கேள்வி, ‘ஸ்விஸ்காரர்களாலேயே செய்ய முடியவில்லை என்றால் நம்மால் எப்படி முடியும்?’ ஆக, ஸ்விட்சர்லாந்தால் முடியாதது யாராலும் இயலாத காரியம் என்ற தீர்மானத்துக்கு அவர்கள் ஏற்கெனவே வந்திருந்தார்கள்.
மேற்கத்தியர்களுக்குத் தலை வணங்குகிற இந்த மனப்பான்மையை எதிர்த்துதான் நம் கதையின் ஹீரோக்கள் போராடினார்கள். அப்போது தலைமைத் தொழில் நுட்ப அதிகாரியாக இருந்த துவாரகாநாத், மூவ்மெண்ட் ஆராய்ச்சி & வளர்ச்சிப் பிரிவின் தலைவர் சுப்பிரமணிய பட், நாகராஜ், தேசாய் இவர்களுக்கு இதுதான் பெரிய சவால்.
மூவ்மெண்ட் பாகத்தில் ஆராய்ச்சி செய்து வளர்த்தெடுப்பதற்கு ஒரு டீம் தயாரானது. அதன் தலைவர் சுப்பிரமணிய பட். மேற்பார்வை துவாரகாநாத். வானளாவிய சோதனை இது! மூவ்மெண்ட்டின் தடிமனை 3.4 மில்லிமீட்டரிலிருந்து 1.15 மில்லிமீட்டராகக் குறைக்கவேண்டும் என்றால், அங்கே ஆட்டமே மாறிவிடுகிறது. இதன் டிசைன், தயாரிப்பு, இணைப்பு, தரப் பரிசோதனை எல்லாவற்றிலும் மிகப் பெரிய தொழில்நுட்ப சவால்கள் இருக்கின்றன. உதாரணமாக, அவ்வளவு சின்ன இடத்தில் அடைக்கவேண்டும் என்றால் கடிகாரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் குறுக்கவேண்டும். குறிப்பாக, பேட்டரி, ஸ்டெப் மோட்டார் ஆகிய இரண்டுமே வில்லங்கமான பாகங்கள். பேட்டரியைச் சிறியதாக்கினால், சீக்கிரமே தீர்ந்துபோய்விடும்; அடிக்கடி செல்லை மாற்றவேண்டும். ‘இதுவாஅதுவா’ என்கிற பிரச்னை இது. ஒல்லியான பேட்டரி வேண்டுமா, அல்லது நீண்ட நாள் உழைக்கும் பேட்டரி வேண்டுமா? இரண்டையும் கேட்டால் கிடைக்காது!
ஆனால் புதுமை என்பதே ‘இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும்’ என்பதுதானே? வழக்கமாக பேட்டரி சப்ளை செய்பவர்களைக் கேட்டால் ‘முடியாது, நடக்காது’ என்றார்கள். தீவிரமாகத் தேடி, கடைசியில் அமெரிக்காவில் இருந்த ஒரு பேட்டரி தயாரிப்பாளரைக் கண்டுபிடித்தார்கள். இவர்கள்தான் உலகத்திலேயே 1.05 மில்லிமீட்டர் தடிமனில் நீண்ட நேரம் வேலை செய்யக்கூடிய பேட்டரியைத் தயாரித்த ஒரே கம்பெனி.
ஆனால் இதுவும் போதாது. பல வருடங்களுக்கு தண்ணீர் புகாமல் உழைக்கவேண்டும் என்றால், கடிகாரத்தின் பின் பகுதியை அதிகம் திறந்து மூடாமல் ஜாக்கிரதையாக வைத்திருப்பது அவசியம். இதற்கு பேட்டரியை அடிக்கடி மாற்றவேண்டிய தேவை இருக்கக்கூடாது; அதாவது, பேட்டரியின் வாழ்நாள் நீண்டதாக இருக்கவேண்டும்.
பேட்டரியின் வாழ்நாளை நேரடியாக அதிகரிக்க முடியாது என்றால், வாட்ச் எடுத்துக்கொள்ளும் மின் சக்தியை எப்படியாவது பாதியாகக் குறைக்க முடியுமா? கடிகாரத்திலேயே ஸ்டெப் மோட்டார்தான் மிக அதிகம் மின்சாரம் உறிஞ்சும் பாகம். அது உறிஞ்சும் மின்சாரத்தை மட்டுமாவது குறைக்க வழி கண்டுபிடித்தாக வேண்டும். ஏற்கெனவே இந்த மோட்டார்தான் மூவ்மெண்டிலேயே மிகச் சிக்கலான பகுதி. அதனிடம் போய் மின்சாரத்தைப் பாதியாகக் குறை என்றால்?
அணி உழைத்தது. பேட்டரியின் ஆயுளை நீட்டிப்பதற்காக ஸ்பெஷலாக சிலிக்கான் சில்லு ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதே சமயம், ஸ்டெப் மோட்டாரின் மின்சார உபயோகத்தையும் குறைத்தார்கள். இதன் மொத்த விளைவு, பேட்டரியின் வாழ்நாள் இரண்டு மடங்காக அதிகரித்தது!
ஐடியாவிலிருந்து தயாரிப்புவரை, அதன் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனையோ புதுமைகள் படைக்கப்பட்டன. கருவிகள், சாதனங்கள், தயாரிப்பு வசதிகள் எல்லாவற்றையும் புதிதாக அமைத்துக்கொண்டுதான் உலகத்தின் மிக மெல்லிய வாட்சைத் தயாரிக்க முடிந்தது. இவர்களாகவே ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மைக்ரோ மைக்ரோ துல்லியமாக உருவாக்கினார்கள். கடைசியாக, 1.15 மில்லிமீட்டர் மூவ்மெண்ட் தயாராகிவிட்டது.
அடுத்த தேவை, மூவ்மெண்டைச் சுற்றி ஒரு வெளிக் கவசம். அதுவும் சொட்டுகூடத் தண்ணீர் புகாத கவசம்.
கவசம் தந்த குடைச்சல்!
மூவ்மெண்ட் தயாரான உடனேயே தேசாய், பி.வி நாகராஜைக் கூப்பிட்டார். நாகராஜ், தயாரிப்புபொறியியல் துறையின் தலைவர். அவர்தான் கவசத்தின் பிரச்னையைச் சமாளிக்கக் கூடியவர்.
1.15 மில்லிமீட்டர் மூவ்மெண்டின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு நாகராஜும் துவாரகாநாத்தும் ஸ்விட்சர்லாந்துக்குப் புறப்பட்டார்கள். பேஸல் நகரத்தில் புகழ்பெற்ற வாட்ச் திருவிழா ஒன்று நடக்கும். அங்கே சுவிஸ்காரர்களைப் பார்த்து ‘இந்த மூவ்மெண்டுக்கு ஒரு தண்ணீர் புகாத வெளிக் கவசம் தயாரித்துக் கொடுங்கள்’ என்று கேட்பதாகத் திட்டம். எல்லா வாட்ச் கம்பெனிகளையும் போலவே, அப்போது இவர்களும் ஸ்விட்சர்லாந்துதான் ராஜா என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் அங்கே போனதும் அவர்களுக்குக் கிடைத்ததற்குப் பெயர்தான், அதிர்ச்சி!
‘பல ஸ்விஸ் தயாரிப்பாளர்களிடம் எங்கள் மூவ்மெண்டைக் காட்டினோம். அவர்கள் அனைவரும் ‘இது யார் செய்தது? நீங்களா செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.’ என்றார் நாகராஜ்.
ஓர் இந்திய கம்பெனி இப்படி ஒரு பொருளைத் தயாரித்ததில் அவர்களுக்கு ஒரே திகைப்பு. கடைசியில் அவர்கள் அனைவரும் இதற்கான கவசம் தயாரிப்பது இயலாத காரியம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பற்பல துறைகளின் தொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் மாபெரும் முன்னேற்றங்கள் தேவைப்படும். கொஞ்சம் சிரமப்பட்டால் அவர்களாலும் இதேபோல் மூவ்மெண்ட் ஒன்றைத் தயாரிக்க முடியும்; ஆனால் அதற்கு ஒரு தண்ணீர் புகாத கவசம்? நடக்கவே நடக்காது!’
கவசம் தயாரிப்பதில் என்ன பிரச்னை? வெளிக் கவசம் மூன்று விதிகளுக்கு உட்படவேண்டும்: முதலில் 3.5 மில்லிமீட்டருக்கு மிகாமல் இருக்கவேண்டும். இரண்டு, தண்ணீர் சுலபத்தில் உள்ளே புகுந்துவிடக் கூடாது. மூன்றாவதாக, அதன் டிசைன் பார்ப்பதற்கு அழகாக இருந்தாகவேண்டும். இந்த மூன்று அம்சங்களிலும் புரட்சிகரமான முன்னேற்றங்கள் தேவை.
நாகராஜும் துவாரகாநாத்தும் ஊருக்குத் திரும்பிவந்து தேசாயைச் சந்தித்தார்கள். ஸ்விஸ்காரர்கள் முடியாது என்று சொல்லிவிட்டதைத் தெரிவித்தார்கள். அப்போது தேசாய் தன் புகழ்பெற்ற கேள்வியைப் போட்டார்: ‘அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கப்போகிறீர்கள்?’
இதற்கு இரட்டையர்கள் சொன்ன பதில்: ‘ஸ்விட்சர்லாந்தால் முடியாவிட்டால் என்ன? நாமே இந்த வாட்சைத் தயாரிப்போம்.’
‘சரி. ஜமாயுங்கள்!’ என்றார் தேசாய்.
தன் அணியால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
ஒரு வழியாக கேஸ் தயாராகியது. அழகுணர்ச்சியுடன் செய்யப்பட்டு, பார்ப்பதற்கும் நன்றாக இருந்தது. ஒவ்வொரு பகுதியும், இருக்கவேண்டிய அளவுகளில் மயிரிழை பிசகாமல் துல்லியமாகச் செய்யப்பட்டிருந்தது.
அடுத்த கட்டம், முழு அளவில் டைட்டன் எட்ஜ் கடிகாரத்தை உற்பத்தி செய்வது. உற்பத்திப் பிரிவின் தலைவராக இருந்தவர் ஹரி ராவ். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி! ‘நாம் இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு செய்து காட்டுவோம்’ என்றார். அடுத்ததாக கவசத் தயாரிப்பு, மற்றும் ஒன்றிணைப்பு (அசெம்ப்ளிங்) பிரிவுகளின் ஜெனரல் மேனேஜர்களின் ஒத்துழைப்பும் வேண்டியிருக்கும். கேஸ் தயாரிப்புப் பிரிவின் பொது மேலாளர் ரஃபீக் அகமதிடம் நாகராஜும் ஹரி ராவும் பேசினார்கள்.
ஸ்விஸ்காரர்களே முடியாது என்று கையை விரித்த திட்டத்தை செயல்படுத்துவதில் ரஃபீக்குக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் அவருக்கேகூடக் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. இந்த வாட்ச்சில் தேவைப்படும் அளவுக்கு மெல்லிய கண்ணாடியைச் செய்வது மிகவும் கடினம். 0.3 மில்லிமீட்டர் தடிமன் உள்ள கண்ணாடி வைத்த வாட்சைக் கையில் கட்டிக்கொண்டு தினசரி நடமாட முடியாது! ‘என்னைப் பொறுத்தவரை கண்ணாடியில்தான் பிரச்னையே இருக்கிறது; டிசைன் டீம் மட்டும் ஒரு சரியான கண்ணாடியைக் கொண்டுவந்தால், நான் எப்படியாவது கவசம் தயாரித்துத் தருகிறேன்’ என்றார் ரஃபீக்.
இப்போது கண்ணாடி தேடுவது நாகராஜின் முக்கிய வேலையாகிவிட்டது. அவர் தேடிக் கண்டுபிடித்த விடை: சஃபயர் கண்ணாடி! இந்த வகைக் கண்ணாடி விலை அதிகம்; ஆனால் உறுதியானது. எவ்வளவு மெல்லியதாகச் செய்தாலும் எளிதில் உடையாது. நீண்ட தேடலுக்குப் பிறகு சஃபயர் கண்ணாடியைத் தயாரிக்கும் ஸ்பெஷலிஸ்ட் கம்பெனி ஒன்றைப் பிடித்தார்கள்: ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸ்டீட்லர் என்ற நிறுவனம் இந்தக் கடிகாரத்துக்கு ஏற்ற கண்ணாடி முகப்பைத் தயாரித்துக் கொடுத்தார்கள். இப்படியாக, மெல்லிய கண்ணாடிப் பிரச்னை தீர்ந்தது. இந்த வெற்றியைக் கண்டவுடன் ரஃபீக் அகமது மகிழ்ந்துபோய் முழுமூச்சாகத் திட்டத்தில் இறங்கிவிட்டார்!
மாதிரி வடிவம், மாபெரும் சவால்!
இப்போதுதான் உண்மையான சோதனை ஆரம்பித்தது. முழு வாட்சையும் கோர்த்து இணைத்து, மாதிரி வடிவம் ஒன்றைச் செய்துபார்க்கவேண்டும். நான்கு பக்கத்திலும் உலோக கேஸ் மிகவும் மெலிதாக இருந்தது. கண்ணாடிக்கும் வாட்ச்சின் விளிம்புக்கும் இடையில் மெல்லிய கரைதான் இருக்க முடியும். அப்போதுதான் ஒல்லியான இந்த வாட்ச்சின் பரிமாணங்கள் அளவாக, அழகாக இருக்கும்.
இந்த மெல்லிய கரையில் திருகுக்காக ஓர் ஓட்டை போட முயன்றபோது, அதற்குக் கீழே இருந்த 0.1 மில்லிமீட்டர் தகடு உடைந்துகொண்டே இருந்தது! போராடிப் போராடி இதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார்கள். ஒவ்வொரு சவாலாக எழுந்தது; அனைத்தையும் வென்றார்கள்.
வெளிக் கவசமும் தயாராகிவிட்டது. ஆனால் மொத்த வாட்சையும் இணைத்துக் கோர்ப்பது சுலபமாக இல்லை. பொதுவாகவே வாட்சுக்குள் எல்லா பாகங்களும் நெருக்கி அடித்தன. அதிலும் கண்ணாடிக்கும் கடிகார முட்களுக்கும் இடையே மிகக் குறைவான இடைவெளிதான் இருந்தது. இதற்கு வழக்கமாக 150 மைக்ரான் இடைவெளி விடுவார்கள். இப்போதோ 100 மைக்ரானுக்குமேல் தர முடியாத நிலை. இது ஒரு மனிதத் தலைமுடியின் தடிமன்! முட்களுக்கு இடையிலும் போதிய இடைவெளி இல்லாமல் அவை மோதிக் கொள்ள, எல்லாப் பிரச்னைகளும் பத்து மடங்கு பெரிதாகிவிட்டன. இதையும் சரி செய்யவேண்டியிருந்தது. கடைசியாக வாட்ச் ஒரு வடிவத்துக்கு வந்தது.
பெரும் போராட்டத்தின் முடிவில் ஒரு வழியாக டைட்டன் எட்ஜ் ரெடியாகிவிட்டது! பதினைந்து இருபது வடிவங்களில் மாடல்கள் தயாராயின. அவை பரிசோதனைக்காக ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டன.
கைக்கடிகாரத்துக்குச் சித்திரவதை!
எட்ஜின் முதல் மாதிரிகள் தயாரானதும், ஸ்விட்சர்லாந்தில் உள்ள க்ரோனோஃபயபிள் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. இது உலகப் புகழ் பெற்ற கடிகாரப் பரிசோதனை மையம். அங்கே எட்ஜ் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகியது. கடைசியில் டைட்டன் எட்ஜ் ஒரு நம்பகமான கடிகாரம் என்று சான்றிதழ் பெற்றது.
இதே நேரத்தில் டைட்டனிலும் புதிய வாட்சைப் பரிசோதித்தார்கள். துவாரகாநாத் அதை டெஸ்ட் செய்த விதமே அலாதியானது: ‘ஸ்விட்சர்லாந்தில் வாட்ச்களைத் திறமையாகத்தான் பரிசோதிக்கிறார்கள். ஆனால் சில சமயம் அவர்கள் செய்யும் சோதனைகள் நிஜ வாழ்க்கையில் ஒரு கைக்கடிகாரம் படும் பாட்டைப் பிரதிபலிப்பதில்லை’ என்கிறார் அவர்.
எனவே துவாரகாநாத் சுவர் டெஸ்ட், தரை டெஸ்ட், குளம் டெஸ்ட், பெங்களூர்ஹோசூர் சாலை டெஸ்ட் என்று பல பரிசோதனைகளைச் செய்தார்! கடிகாரத்தைச் சுவரில் தூக்கி அடிப்பார்; வெவ்வேறு கோணங்களிலிருந்து தரையில் போட்டு என்ன ஆகிறது என்று பார்ப்பார். நீச்சல் குளத்தில் எறிவார். கடைசியாக வாட்சைத் தன் காரின் ஷாக் அப்ஸார்பரில் கட்டி வைத்துக்கொண்டு பெங்களூர்ஹோசூர் இடையே உள்ள பயங்கரமான சாலையில் பலமுறை பயணம் செய்வார். மொத்தம் 200 கிலோமீட்டர் தூரம். எட்ஜ், எல்லாப் பரீட்சைகளிலும் வெற்றிகரமாகத் தேறியது.
டைட்டன் டீம், சாதிக்க முடியாததைச் சாதித்திருக்கிறது. உலகின் மிக மெல்லிய, தண்ணீர் புகாத கைக்கடிகாரத்தை உருவாக்கியபோது, வரலாறு அவர்கள் வீட்டுக் கதவில் ஆணி அடித்துத் தொங்க விடப்பட்டது. ஆதாரம்: ஆழம் என்ற மாத இதழ்