RightClick

உணவே மருந்து - சகஸ்ரவடுகர்

அனைவருக்கும் வணக்கம் 

இன்றைய வளர்ந்த தலைமுறைகளுக்கும் சில முக்கியமான விசயங்களும், அதன் சார்ந்த மரபுகளையும் சொல்வதற்கான கடமை என்னுடையது. அது ஆன்மீகம் சார்ந்தவையாக மட்டும் அல்ல அனுபவமும் அறிவியலும் கலந்த கலவை. அந்த வகையில் இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி உணவு உண்பது.

இத படித்தவுடன் இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். இங்கு தான் நம் முன்னோர்களின் ஆரோக்கியம் என்னும் புதையலை விட்டு சென்றிருக்கிறார்கள். ஆம் இந்த உணவின் அடிப்படையிலே இந்த பிரபஞ்சம் அடக்கம் என்பது உண்மை. எனினும் நாம் உண்ணும் உணவில் பல வகையான மாற்றங்கள் நம் முன்னோர்களின் செய்முறைகளிலும், நம் பழக்கங்களிலும் மாறி வருகிறது. இது போன்ற மாற்றங்கள் பூவுலகில் தோன்றும் என்பதை உணர்ந்த மகான்கள் அதை சுவையின் தன்மையிலும் உள்ளிருப்பதை சொல்கிறார்கள் . அதைதான் அறுசுவை உணவு என்பதாகும் . இப்பொழுது ஒரு சந்தேகம் எழும் அப்படிஎன்றால் சுவைகளுக்கும் பஞ்ச பூதத்திற்கும் என்ன தொடர்பு என்று . ஆம் காற்று – காரம் , தண்ணீர் – உப்பு , ஆகாயம் – புளிப்பு, நெருப்பு – துவர்ப்பு / கசப்பு மற்றும் நிலம் இனிப்பின் அடையாளமாக இருக்கிறது. இவை அனைத்துமே கால நிலைகளின் அடிப்படையில் தான் உச்சம் பெற வேண்டும் . இந்த மாற்றத்தின் பெயரே பருவநிலை மாற்றம் ஆகும். இப்பொழுது உங்களுக்கு அண்டத்தின் இயல்புக்கும் நம்மை மனித பிண்டங்களுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்திருப்பீர்கள்  

இன்று நம் உலகியல் மாற்றம் உடலில் ஏற்படும் நோய்க்கும் உண்டான தொடர்பை உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் . இதற்கு மேலும் இரண்டு காரணிகளிலும் உடன் பிறந்தவர்களாக செயல்பட்டு வருகிறார்கள் . அவர்கள் திசைகள் மற்றும் நிறங்கள்.

திசைகள் 

நாம் அமர்ந்து உணவு உண்ணும் போது நாம் எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பதை பொறுத்து நமது வாழ்க்கையின் படிக்கட்டுக்களான கல்வி,செல்வம்,நோய் மற்றும் புகழ் அமையும். அவைகளை முறையே கையாள்வதே நமது கடமை.

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்

மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம்  வளரும்

வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வளரும்

தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாத புகழ்  வளரும்

 

இவை அனைத்துமே நம் வீட்டில் சாப்பிடும் போது மட்டுமே மேற்கொள்ள வேண்டிய விதிகள் தான் . வேறு எங்கும் இது பொருந்தாது. முடிந்தால் வடக்கு திசையை மட்டும் தவிர்ப்பது நலம்.

நிறங்கள் 

நான் முன்னர் கூறியது போல் பஞ்ச பூதங்களில் காற்று – வெள்ளை , தண்ணீர் – கருப்பு / சுடர் நீலம், ஆகாயம் –பச்சை , நெருப்பு – சிவப்பு , நிலம் – மஞ்சள் . இப்படி அறுசுவைகளை கொண்டு உலகை இயக்குகிறான் இறைவன். இதன் அடிப்படையில் எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் சுவைத்தன்மை மணக்கிறது.சற்று சிந்தித்துப் பார்த்தால் நமது உணவின் சுவையும், நமது செயல்பாடுகளையும் நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். இதில் சைவம் , அசைவம் பற்றி எண்ணம் அவர்களின் மனம் சார்ந்தது. ஆனால் இன்றைய மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் நோயின் முதல் நாடி உணவு என்று சொல்வதை யாரும் மறுக்க இயலாது. எனவே உணவில் கவனம் செலுத்துங்கள்.

-சகஸ்ரவடுகர்