RightClick

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்!
இன்றைக்கு நம்மவர் மத்தியில் நம் முன்னோர்களைப் பற்றியும், அவர்களது சாதனைகளைப் பற்றியும் எவ்விதப் பெருமை உணர்வும் இல்லை;மாறாக தாழ்வு மனப்பான்மையும்,அவமான உணர்வும் தான் மேலோங்கி இருக்கிறது.இதற்கெல்லாம் பிரதான காரணம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த போது நம் மீது கட்டாயப்படுத்தித் திணிக்கப்பட்ட ஆங்கிலக் கல்வி முறைதான்;

குழந்தைகளின் மனதில் அவர்களது முன்னோர்களைப் பற்றித் தாழ்வான அபிப்பிராயங்களை தொடர்ந்து விதைத்துக் கொண்டிருந்தால்,அக்குழந்தைகள் தங்கள் முன்னோர்களைப் பற்றி அவமானப்படுத்துவது மட்டுமின்றி,தாங்களும் ஏதும் செய்திட லாயக்கற்றவர்கள் என்ற அபிப்பிராயம் கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்;அத்தகைய ஒரு விபரீத நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் மட்டும் நம் நாட்டிற்கு வந்திருக்காவிட்டால் நாம் ரயில் எஞ்சின்,பஸ்,ட்ராம் எல்லாம் என்னவென்றே அறிந்திருக்க மாட்டோம்;மின்சாரம்,தபால்,தந்தி,விமானம் போன்ற நவீன விஞ்ஞானச் சாதனைகள் நம்மவரை வந்தடைந்திருக்காது என்று இன்றும்கூட சில ஆங்கிலம் பயின்ற மேதாவிகள் நமது தெருவில் அடிக்கடி பிதற்றுவதைக் காணமுடியும்.

நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளை எட்டும் வரையிலும் நாம் கல்விமுறையில் மாற்றம் எதையும் செய்யவில்லை;ஏனெனில்,தேசபக்தியும்,தெய்வபக்தியும் நிறைந்தவர்கள் நமது தேசத்தின் தலைமைபீடத்தை அலங்கரிக்கவில்லை;அதன் காரணமாக ஒவ்வொரு டீன் ஏஜ் இந்திய ஆண்கள் மற்றும் பெண்களிடமும் தாழ்வு மனப்பான்மை,அவமான உணர்வு,தன்னம்பிக்கையின்மை ஆகியன அடிக்கடி தலைதூக்கிக்கொண்டே இருக்கின்றன;

நம் நாட்டில் மிக உயர்ந்த மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்ற விபரம் நமக்கு உணர்த்தப்படவேயில்லை;ஆனால்,ஆங்கில்யேஅர்களின் மூதாதையர்களைப் பற்றிய எல்லாப்புள்ளி விபரங்களையும் நாம் தெளிவாக அறிகிறோம்;நம் சொந்த முன்னோர்களைப் பற்றி அக்கறைப்படாத பரிதாப நிலை உள்ளது.

புத்தி மான் கண்டது மின்சாரம்;பக்தி மான் கண்டது பிரசாதம் என்றெல்லாம் நமது ஊர்த் தெருச்சுவர்களிலே எழுதிப் போட்டு,நம்மை நாமே கேலியும்,கிண்டலும் செய்து வந்த தற்குறிக் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டில் இருந்துள்ளனர்;தங்களையும்,தங்கள் முன்னோர்களையும் இழிவு படுத்திவந்த இந்த பகுத்தறிவுவாதிகள் ஒரு விஞ்ஞானியை உருவாக்கவும் இல்லை;விஞ்ஞானச் சாதனைகளைப்படைக்கவும் இல்லை;
இந்த இழிநிலை நீங்க வேண்டுமானால்,நாம் நமது முன்னோர்களின் எந்த அரிய சாதனைகளை அறிந்து கொள்ளமுடியாதபடி ஆங்கிலக்கல்வி முறை இருட்டடிப்பு செய்ததோ,அவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம் என்ற முறையில் இந்த நூல் “பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்”  ஆக்கப்பட்டிருக்கிறது.

உண்மை என்ன?

நம்மவர்களுக்குத் தெரியாத அறிவியல் நுட்பங்கள் ஏதுமில்லை என்றளவில் நம் உலக நாடுகளை விட ஒருபடி மேலேயே நமது சாதனைகள் இருந்துள்ளன;

உலக நாடுகளில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகள்,தொழில் மறுமலர்ச்சி எல்லாம் கடந்த 500 ஆண்டுகளுக்குள்ளேதான்!

ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரத நாடு மருத்துவம்,பொறியியல்,நெசவு,கட்டிடக்கலை,சிற்பம்,ஓவியம், இயந்திரவியல்(Mechanical Engineering),விமானவியல்(Aeronautical Engineering),வான சாஸ்திரம்(Astronomy),உலோகவியல்,ரசாயனம்(Chemistry) மற்றும் அணு விஞ்ஞானம்(Automic Physics) ஆகியவற்றில் நாம் இன்று கற்பனை செய்ய முடியாத அளவில் சிறப்புற்று இருந்தது;வராஹமிஹிரரின் “ப்ருஹத் ஸம்ஹிதை” இதை தெளிவுபடுத்துவதாக உள்ளது.

அணுவிஞ்ஞானம்: அணுவைப் பற்றி விஞ்ஞான உலகம் சிந்திக்க தலைப்படும் முன்பே நமது முன்னோர்கள் அணுவைப் பற்றிய உண்மையை அறிந்திருந்தார்கள்;உலகின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது அணுவின் நர்த்தனமே!இதையே நமது முன்னோர்கள் சிவதாண்டவமாக வர்ணித்தனர்;நவீன விஞ்ஞானம் கூறும் மேட்டர் சிவமாகவும்,எனர்ஜி சக்தியாகவும் உருவகப்படுத்தப்பட்டது;மேட்டர் என்பது வேறு,எனர்ஜி என்பது வேறு அல்ல;மேட்டரே எனர்ஜியாகவும் மாறுகிறது என்பன போன்ற உண்மைகளை உலகுக்கு முதலில் சொன்னவர்கள் நம்மவர்களே.அணுவிஞ்ஞானத்தை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்திய நூல் “த்யாய வைசேஹிதம்” ஆகும்.இதனைத் தந்தவர் மகரிஷி கணாதர் ஆவார்.ஆகவே தான் ஜெர்மனியில் 1975 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் பங்கேற்ற கருத்தரங்கில் ஒரு நாள் ‘கணாதர் தினம்’ என்று கொண்டாடப்பட்டது;ஓராயிரம் ஆண்டு காலம் அடிமைப்பட்டு ஓய்ந்து போக நேரிட்டதால் இன்றைய அணுசக்தித் துறையில் சற்று பின் தங்கியிருந்தோம்;தற்போது,உலக வல்லரசு நாடுகளின் அணு உலைகள் வடிவமைப்பில் நான்காம் தலைமுறையை உருவாக்கிவிட்டோம்;

மருத்துவம்:உடலுக்கு எந்த வியாதி வராமல் தடுக்கவும், வியாதி வந்தால் குணப்படுத்திக் கொள்ளவும் மருந்துகளையும்,பத்யங்களையும்,உணவு முறைகளையும் மற்ற சுகாதார விதிகளையும் தெரிவிக்கும் சாஸ்திரமாகவே சித்தமருத்துவம் உருவாகியிருக்கிறது.அதில் இருந்து எளிமைப்படுத்தப்பட்ட இன்னொரு மருத்துவ முறையே ஆயுர்வேதம் ஆகும்.
அறுவை சிகிச்சை முறை தோன்றியதும் நம் நாட்டில் தான் என்பதை உலக மருத்துவ கவுன்சில் அங்கீகரித்துள்ளது.பார்க் டேவிஸ் என்ற மருந்து நிறுவனம் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட தனது காலண்டரில் உலகின் முதலாவது அறுவை சிகிச்சை நிபுணர் என்று சுஸ்ருதரின் படத்தை வெளியிட்டிருந்தது;சுஸ்ருதருடைய நூலில் அறுவை சிகிச்சைக்குப்பயன்படும் கருவிகள் என 127 நுண் கருவிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளன என்று என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.சரஹ சம்ஹிதை,சுஸ்ருத ஸம்ஹிதை,காச்யப ஸம்ஹிதை,ஹரித ஸம்ஹிதையுடன் அகத்தியர் வாத காவியம்,மாட்டுவாடகம் போன்றவைகளும் தலைசிறந்த மருத்துவ நூல்கள் ஆகும்.
இந்துக்களின் மருத்துவ முறையே பிற்கால ஐரோப்பியர்களின் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக அமைந்ததாக சர் வில்லியம் ஹண்டர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்;பிளாஸ்டிக் சர்ஜரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றில் நமது முன்னோர்கள் மிகச் சிறந்த புலமை பெற்றிருந்தார்கள் என்பதற்கு நிறையவே சான்றுகள் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன;
மூலிகை,மணி,மந்திரம் இவற்றோடு செய்யப்படும் வைத்திய முறை நமது நாட்டின் தனிச்சிறப்பாகும் என்பதை சிறப்பாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.ரசாயனம்,உலோகவியல்,படைக்கலன்கள்,கப்பல் கட்டும் தொழில் நுட்பம்,ஆகாய விமானம் கட்டுதல் ஆகிய துறைகளில் வியத்தகு முன்னேற்றம் கண்டார்கள் நம் முன்னோர்கள்.

கப்பல் கட்டுமானம்(Navigation Structuring): கப்பல் கட்டும் துறையில் கி.பி.1800 வரை பாரதமே தலைசிறந்த நாடாக இருந்துள்ளது;அக்பர் நாமா என்ற நூலில் சிந்து பகுதியில் மட்டும் 4000 கப்பல்கள் இருந்ததாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.18 ஆம் நூற்றாண்டு வரை நமது துறைமுகங்களில் சுமார் 40,000 கப்பல்கள் இருந்துள்ளன; 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  நமது நாட்டில் இருந்தே நவீன கப்பல்களை இங்கிலாந்து விலைக்கு வாங்கியுள்ளது வரலாற்று ஆவணங்களில் உள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது நமக்கு ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது.
வானவியல்,வான சாஸ்திரம்,கோள்களின் இயக்கம் இவற்றில் பன்னெடுங்காலமாக உலகின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

காலக்கணக்கீடு: சூரியன் நிலையானது;பூமி உள்ளிட்ட கிரகங்கள் தான் சுற்றுகின்றன என்றும்,பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதையும் கண்டறிந்தனர்.ஆர்யபட்டர்,பாஸ்கராச்சாரியா,வராஹ மிஹிரர்,இடைக்காடர் போன்றோர் இதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.
சூரிய ஒளி அரை நிமிட நேரத்தில் 2202 யோஜனை தூரம் (ஒரு யோஜனை என்பது இக்காலத்தில் 16 கி.மீ) பயணிக்கிறது;இதுவே மைல் கணக்கில் 9.0625 மைல்கள் ஆகும்.

காலக்கணக்கீட்டில் 5 உறுப்புகளான திதி,கரணம்,யோகம்,வாரம்,நட்சத்திரம் என்று பகுத்தார்கள்;திதி 15;வாரம் 7;நட்சத்திரம் 27 ஆகிய அனைத்துமே வானியல் சார்ந்த கணக்குகளே!

ஒரு நாளுக்கு 60 நாழிகை;ஒரு நாளுக்கு 24 ஹோரைகள் வரும்;ஒவ்வொரு ஹோரையிலும் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும்;ஒரு நாளின் சூரிய உதயத்தின்போது எந்த கிரகத்தின் ஆதிக்கம் வருகிறதோ,அதுவே அந்த நாளின் பெயராக வைக்கப்பட்டது;ராகு,கேது கிரகங்கள் நிழல்கிரகங்கள் ஆகும்;

ஒரு நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்துடன் பூமியில் இருந்து பார்க்கும்போது நேர்கோட்டில் ஒரே தீர்க்காம்சத்தில் அமைந்துள்ளதோ அதுவே அன்றைய நட்சத்திரமாகும்;
நமது மாதங்களின் பெயர்கள்(அரசர்களின் பெயரைக் கொண்ட ஆங்கில மாதங்கள் போல இல்லாமல்),நட்சத்திரத்தின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறது.

பவுர்ணமியன்று பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரனுடன் ஒரே நேர்கோட்டில் எந்த நட்சத்திரம் அமைந்துள்ளதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்த மாதம் அழைக்கப்படுகிறது.பவுர்ணமி திதி சித்திரை நட்சத்திரத்தில் வந்தால்,அந்த மாதத்தின் பெயர் சித்திரை.இதே போல, பூர்வ அல்லது உத்திர பல்குண நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் மாதம் பங்குனி ஆகும்.

ராசி மண்டலமும் அது போலவே 360 டிகிரி கொண்ட வட்டப்பாதையாகக் கொள்ளப்படுகிறது.30 டிகிரிக்கு ஒரு ராசி என 12 ராசிகள் அமைந்துள்ளன;இந்த ராசி மண்டலம் சூரியனின் உத்தேச சுற்றுப்பாதையில் அமைவதாக உள்ளது.(Apparent motion of the sun)பூமி, 23 ½ டிகிரி சாய்வில் தன் அச்சில் சுற்றுவதால்,பார்ப்பதற்கு சூரியன் ஒரு வட்டப்பாதையில் சுற்றுவது போல் தோன்றும்;இதில் 0 டிகிரியில் சூரியன் வருவதே ஆண்டின் தொடக்கமாகும்;மேஷ ராசியில் சூரியன் பிரவேசம் சித்திரை மாதமாதலால் நமது ஆண்டுப்பிறப்பு சித்திரை முதல் நாளே.


 270 டிகிரியில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது நீசத் தன்மையை இழந்து உச்சகதியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார்.அதுவே தை மாதம் முதல் நாளான மகர சங்கராந்தி.
சூரியன் ராசி மண்டலத்தில்  1 மாதத்திற்கு 1 ராசியைக் கடக்கும்;குரு சுமார் 1 வருடத்திற்கு 1 ராசியைக்கடக்கும்;குரு ராசி மண்டலத்தை 1 சுற்று சுற்றி வர 12 வருடங்கள் ஆகும்;சனிக்கிரகம்,ராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்றி வர இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு ராசி என்ற வகையில் 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.ராசி மண்டலத்தைச் சுற்றிவரத் தாமதமாவதால் அதாவது அதிக காலம் எடுத்துக் கொள்வதால் சனிக்கு மந்தன் என்று ஒரு பெயரும் உண்டு.

சனியும்,குருவும் சேர்ந்து அசுபதி நட்சத்திரத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திக்கும்;அதுவே நமது 60 தமிழ் ஆண்டு கணக்கீட்டின் தொடக்கமான ப்ரபவ ஆண்டு!
இத்தனையும் நம் முன்னோர்கள் கண்டறிந்து உலகிற்கு வழங்கியுள்ளார்கள் என்பதை அறிய வரும்போது, ஆஹா என்ன பெருமிதம் என்று வாய் பிளந்து நிற்கச் செய்கிறது அல்லவா?

மேலும் இது போல நம் முன்னோர்களின் விஞ்ஞானச் சாதனைகளை ஆதாரப்பூர்வமாக வேதங்களில் இருந்தும்,ஸம்ஹிதைகளில் இருந்தும் எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர் மணியன் அவர்கள்.ஆசிரியரின் முயற்சிக்கும்,தேசத்தின் மீது கொண்டிருக்கும் பக்திக்கும் வாழ்த்துச் சொன்னால் மட்டும் போதுமா? நமது குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தை பரிசாக வழங்குவது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட!
புத்தகத்தின் பெயர்: பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்
வெளியீடு: வர்ஷன் பிரசுரம்,தி.நகர்,சென்னை 17.விலை ரூ.140/-