RightClick

திருச்சுழி ரமணமகரிஷியின் உபதேசங்கள்!!!

விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் சிற்றூர் தான் திருச்சுழி! அருப்புக்கோட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் திருச்சுழியில் தான் ரமணமகரிஷி பிறந்தார்.பல ஜன்மங்களாக அண்ணாமலையின் அருமை பெருமைகளை உணர்ந்த இம்மகான் இந்த கடைசிப்பிறவியில் அண்ணாமலையிலேயே வாழ்ந்து,தனது இறுதிக் காலத்தில் சிவஜோதியாகி அண்ணாமலையுடன் கலந்தார்;இவரது வாழ்க்கை வரலாற்றை வாசித்தால்,அண்ணாமலையின் அருமை பெருமைகளை நாம் ஒவ்வொருவருமே உணர முடியும்.


பால் பிராண்டன் மற்றும் சில ஐரோப்பியர்கள் ரமணமகரிஷியைச் சந்தித்து, தமது அனுபவங்களை ஆங்கிலத்தில் புத்தகங்களாக எழுதி கி.பி.1960களில் வெளியிட்டனர்;பின்னர் அந்த புத்தகங்கள் 16 ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பா,அமெரிக்கா,தென் அமெரிக்கக்கண்டங்களில் பரவியது;இதனால் இன்று உலகம் முழுவதும் இருந்து அண்ணாமலையைத் தேடி வந்த வண்ணம் இருக்கின்றனர்.அந்த புத்தகங்களில் ரமண மகரிஷியின் ஆத்மபலம் பற்றியும்,அண்ணாமலை பற்றிய ஆன்மீக ரகசியங்கள் பற்றியும் விரிவாகவும்,விளக்கமாகவும் எழுதப்பட்டன. ஸ்டீவ் ஜாப்  இந்த புத்தகங்களை வாசித்தப்பின்னரே  அண்ணாமலைக்கு வந்தார்;இங்கே மூன்று ஆண்டுகள் வரை தங்கினார்;இங்கே கிடைத்த ஆன்மீக அனுபவங்கள்,மகான்களின் ஆசியால் தான் ஆப்பிள் என்ற நிறுவனத்தைத் துவக்கினார்.இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் தனக்கென்று ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண்டார்.


ரமணமகரிஷியின் பொன்மொழிகள்;


1.ப்ராப்த கர்மம் என்பது சென்ற பிறவியில் உருவானது;இது ஒருவர் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அவரவர் வாழ்வில் நடந்தே தீரும்.எந்த விருப்பமும் இல்லாத ஞானி கூட இத்தகைய நிகழ்வுகளை சந்தித்தே ஆக வேண்டும்.

2.அண்ணாமலையாரை முழுமையாகச் சரணடைந்துவிட்டால் நிறைந்த அமைதி கிடைக்கும்;ஆன்ம உணர்வு கிடைக்கும்;குறை பற்றி முறையிட இதயத்தில் இடமேயில்லை;முழுமையான பக்தியின் இயல்பு அதுவே.

3.கடவுளும் நீயும் ஒன்று என்று உணரும் வரை பிரார்த்தனை செய்வது நியாயமே.ஆனால்,ஆத்ம சரணாகதி அடைந்து உன் முழுமையான சுமையையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டால் உன் முதுகில் உள்ள சுமை முழுவதையும் இறக்கிவிட்டு நீ அவருக்குள் இருக்கலாம்.

4.சரணாகதி முழுமையாகவும்,முற்றுமாகவும் இருக்குமானால் நீ எதையும் கேட்க வேண்டியதில்லை; ‘நான், எனது’ என்ற எண்ணங்களைத் தவிர்த்துப் பார்;எதையும் உனது என்று எண்ணாதே.எல்லாமே இறைவனுடையது என்று எண்ணிப்பார்;நிம்மதி உன்னிடம் வந்து சேரும்.

5.பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டால் எல்லாம் ஒழுங்காக நடக்கும்; மனம்,வாக்கு,காயம் ஆகியவற்றின் செயல்கள் இறைவனோடு இணைந்துவிட்டால்,வாழ்வில் எல்லா சுமைகளையும் அவன் மீது சுமத்திவிடலாம்.பின்னர் நிம்மதியும் பெறலாம்.

6.ஆன்மீக உண்மையை அறியாதபோது மனதில் எழும் மகிழ்ச்சியும் துயரமும் தற்காலிகமானவை;மனித இயல்பே ஆனந்தம் தான்.அது நம்மோடு பிறந்தது.ஆத்ம சக்தி இறைவனுடன் இரண்டற கலந்துவிட்டால் பெறுவது மகிழ்ச்சியும் நிம்மதியுமே!

7.அடிக்கடி அண்ணாமலையாரை வந்து வலம் வந்தால்,அடுத்து உனக்கு வர இருக்கும் பல பிறவிகளை உன்னால் குறைக்க முடியும்.பவுர்ணமியன்றுதான் இங்கே(அண்ணாமலை) வர வேண்டும் என்று அவசியமில்லை;எப்போதெல்லாம் உனக்கு அவகாசம்(நேரம்) அமையுமோ அப்போதெல்லாம் இங்கே தனியாக வந்து வலம் வந்தாலே மூன்று ஆண்டுகளுக்குள் உனக்குள் இருக்கும் சிவத்தை உணர்வாய்.இந்த யுகதர்மத்தின்படி(கலியுகம்),நீ(அண்ணாமலையை) வலம் வர,வலம் வர உனது கர்மச்சுமையை இங்கேயே இந்த ஜன்மத்திலேயே கரைத்துவிடலாம்;

நன்றி:ஆன்மீக ஆன்றோர்களின் ஜாதக அமைப்புகள்:ஓர் ஆய்வு