ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்
முதலியார்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியை ஒட்டி, 77 வயதான
மூதாட்டி, கொதிக்கும் நெய் சட்டியில், கையால் அப்பம் சுட்டு, பக்தர்களை
மெய்சிலிர்க்க வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர், முதலியார்பட்டி தெரு,
பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியை ஒட்டி, 47 ஆண்டுகளாக, கொதிக்கிற
நெய் சட்டியில், கையால் அப்பம் சுட்டு, வழிபாடு நடந்து வருகிறது. நேற்று
முன் தினம், பத்திரகாளியம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடுகள்
நடந்தன. விழாவில், நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, நள்ளிரவு,
12:00 மணிக்கு நடந்தது. இதற்காக, ஸ்ரீவி., ஊரணிபட்டியைச் சேர்ந்த, 77 வயதான
முத்தம்மாள், 90 நாட்கள் விரதமிருந்து, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை
அணிந்தபடி, கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, சட்டியில் நெய் ஊற்றி,
அப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். முத்தம்மாளுக்கு, பக்தர்கள் மாவை
பிசைந்து கொடுக்க, அவர், கொதிக்கிற நெய்யில், கரண்டி பயன்படுத்தாமல்,
கையாலேயே, அப்பத்தை புரட்டிப் போட்டு வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன்,
அவற்றை மீண்டும் கையாலே வெளியில் எடுத்தார். அவருக்கு உதவியாக கோவில்
பூசாரிகள் இருந்தனர். தொடர்ந்து, 25 பெட்டி அப்பத்தை, தன் கையால்,
கொதிக்கிற நெய்யில் போட்டு எடுத்து, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். இதை
காண, ஏராளமானோர் வந்திருந்தனர். கையால் சுட்ட அப்பம்,
பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.