பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேர விரும்பும்
ஒவ்வொரு மாணவ,மாணவியரும் தமது ஒன்பதாம் வகுப்பில் இருந்தே தன்னை தயார் செய்ய வேண்டும்.ஒன்பதாம்
வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினசரி செய்தித்தாள் வாசிக்கும்
பழக்கத்தை கொண்டுவர வேண்டும்;பத்தாம் வகுப்பில் சேரும் முன்பாகவே சரளமாக ஆங்கிலம் பேசக்கற்றுக்
கொள்ள வேண்டும்;ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தினசரி செய்தித்தாள்
வாசிக்கும் பழக்கம் வளர்ந்துவிட்டால்,பனிரெண்டாம் வகுப்பு படித்து முடிந்தது முதல்
கல்லூரிப் படிப்பு முடியும் வரை புத்தகப்படிப்பில் ஆர்வம் ஏற்படும்.ஆரம்பத்தில் 50
பக்கம் அல்லது 100 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகங்களை வாசிக்கப் பழக வேண்டும்;ஒருநாளுக்கு
ஐந்து முதல் பத்து பக்கம் வரை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால்,பட்டப்படிப்பு
முடிக்கும் முன்பாகவே ஒருநாளுக்கு ஒரு புத்தகத்தை முழுமையாக வாசிக்குமளவுக்கு முன்னேறிவிடலாம்.
புத்தக உலகம் இந்த பூமியை விடவும் பிரம்மாண்டமானது;புத்தகம்
வாசிப்பு இருந்ததால் தான் பல சாதாரண மனிதர்கள் சாதனையாளர்களாக பரிணமித்தார்கள்;முற்காலத்தில்
வாழ்ந்த சாணக்கியர்,தொல்காப்பியர்,திருவள்ளுவர் முதல் இக்காலத்தில் வாழ்ந்து வரும்
அரசியல் தலைவர்கள்,காவல்துறை தலைமை அதிகாரிகள்,விளையாட்டுவீரர்கள்,எழுத்தாளர்கள்,திரைப்பட
இயக்குநர்கள்,நடிகர்கள்,நடிகைகள்,இலக்கியவாதிகள்,குறும்பட இயக்குநர்கள்,நீதிபதிகள்,பேச்சாளர்கள்,கல்லூரி
விரிவுரையாளர்கள்,பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியைகள்,மருத்துவர்கள் என பெரும்பாலானவர்கள்
தமது அறிவை விசாலமாக்கியது இப்படித்தான்.
நடிகர்களில் யாரெல்லாம் நடிப்பில் தனி முத்திரை
பதித்து வருகிறார்களோ அவர்கள் அனைவருமே தினமும் ஒரு புத்தகம் வாசித்து வருபவர்களே!(உதாரணம்
ரஜினிகாந்த்,வடிவேலு,பிரகாஷ்ராஜ்,கமலஹாசன்)
நகைச்சுவையில் தனி பாணியை உருவாக்கி நம்மிடையே
நீங்காத இடம் பிடித்திருப்பவர் வடிவேலு.ஏராளமான புத்தக வாசிப்பினால் தான் அவர் இந்த
அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
இயக்குநர்களில் யாரெல்லாம் சுவாரசியமான வெற்றிப்படங்களைத்
தந்துள்ளார்களோ ஒவ்வொருவருமே புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்டவர்களே!
விஞ்ஞானிகளில் நம் அனைவருக்குமே பரிச்சயமானவர்,மக்கள்
ஜனாதிபதி என்ற பெயர் எடுத்தவர் திரு.அப்துல்கலாம் அவர்கள்.அவர் இதுவரை 40,000 புத்தகங்கள்
வாசித்திருப்பதாக ஒருமுறை தனது நெருங்கிய நட்பிடம் தெரிவித்திருக்கிறார்.புத்தக வாசிப்பினால்
தான் தனது ஆளுமைத் திறனை சீர்திருத்த முடிந்திருக்கிறது;பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில்
புத்தக வாசிப்பினால் கிடைத்த அனுபவமே அதிலிருந்து மீண்டு வர உதவியிருக்கிறது என்பதையும்
குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்காதவன்,அந்தப்
புத்தகத்தை வாசிக்கத்தெரியாதவனைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவன் அல்ல;
ஒரே ஒரு புத்தகம் அல்லது ஒரு புத்தகத்தில்
ஓரிரு வரிகள் நமது வாழ்க்கையையே மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது;நமது பிறவி சுபாவத்தில்
இருக்கும் குறைபாட்டினை சரிசெய்யக் கூடியது;நமது லட்சியத்தை அடைய ஒளிவிளக்காகிவிடக்கூடியது;
நம்மைச் செம்மைப்படுத்துவது;
நம்மை வழிநடத்துவது;
நம்மை நமக்கே அறிமுகம் செய்வது;
நமது பலத்தை உணரச் செய்வது;
அனைத்துமே புத்தங்கள் தான்;நமது இந்து தர்மமே
மனித நேயம் பற்றிய அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்து,மனிதன் எப்படி பிறரிடம் பழக வேண்டும்?
எப்படி சமுதாயமாக வாழ வேண்டும்? எப்படி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும்? எப்படி அரசாங்கத்தை
இயக்க வேண்டும்? என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துவிட்டது.சாணக்கியரின்
அர்த்த சாஸ்திரம் ஒன்றே போதும்;இந்த உலகத்தையே போர் செய்யாமலேயே ஜெயித்து உலக அரசாங்கத்தை
அமைத்துவிடலாம்;அதன் தலைமைபீடத்தில் நமது நாட்டை உட்கார வைக்க முடியும்.
சிறந்த நூல்கள் நிரந்தரமாக வாழ்கின்றன;அதைத்
திரும்பத் திரும்ப காலம் தோறும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்களே தவிர அது புதிதாக
எழுதப்படுவதில்லை;(நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன்,தான் எப்படி ஆத்திகவாதியாக மாறினேன்
என்பதை புத்தகமாக எழுதினார்;அதுதான் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்;ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும்
ஒருமுறை இதன் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது;மறுபதிப்பாக பிரசுரமாகிக்கொண்டே
இருக்கிறது)
ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பிரபஞ்சம்.ஒவ்வொரு
புத்தகமும் ஒவ்வொரு உலகின் கதவுகளைத் திறந்துவிடும்;நம்முடன் பேசும்;நம்முடன் நட்பு
கொள்ளும்;தாயாக அன்பு செலுத்தும்;தந்தையாக வாழ்க்கைக்கல்வியை போதிக்கும்;
சீனப்பயணி யுவான் சுவாங் நமது நாட்டிற்கு
வந்திருந்தார்;அவர் நாளந்தா பல்கலைக்கழகத்திற்குச் செல்ல நேரிட்ட போது ஒரு ஆற்றினைக்
கடக்க வேண்டியிருந்தது;அவருடைய பயணக் குறிப்புகள்,நூல்கள் ஆகியவற்றை படகு ஒன்றில் எடுத்துச்
சென்றார்.படகு பாரம் தாங்காமல் மூழ்கும் நிலை உண்டானது;அப்போது படகோட்டி யுவான் சுவாங்கிடம்,
“இந்த நூல்களை ஆற்றில் தள்ளிவிட்டால்,நாம் தப்பித்துக் கொள்ளலாம்” என்றான்.
உடனே யுவான் சுவாங், “நான் ஆற்றில் குதித்துவிடுகிறேன்;நீ
அந்த அரிய நூல்களைக் காப்பாற்று” என்றவாறே ஆற்றில் குதித்தார்.
இன்றும் நமது வீட்டின் பரண்களிலும்,தாத்தாவின்
அலமாரிகளிலும் எங்குமே கிடைக்காத,தமிழ்நாட்டில் பலர் தேடிக்கொண்டிருக்கும் அரிய புத்தகங்கள்
இருக்கத்தான் செய்கின்றன.அவற்றின் அருமை பெருமை தெரியாமலோ,அவைகளில் என்னென்ன இருக்கின்றன
என்பதை அறியாமலோ நாம் பழைய புத்தகக் கடைகளுக்கு விலைக்குப் போட்டுவிடுகிறோம். . .அபூர்வமான
அறிவுப் பொக்கிஷத்தை கிலோ கணக்கில் விற்பனை செய்வது உலகிலேயே நாமாக மட்டும் தான் இருக்க
முடியும்.
ஒம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ