RightClick

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் பகுதி 21


கொலை செய்தல்,செய்வதற்கு உதவி செய்தல்;
கற்பழித்தல்,கற்பழிக்கத் தூண்டுதல்;
ஏமாற்றுதல்,திருடுதல்,கொள்ளையடித்தல்;
நம்பிக்கை துரோகம் செய்தல்;
பொய் சொல்லுதல்
இவை ஐந்துமே பஞ்சமாபாதகங்கள் ஆகும்.இதில் பொய் சொல்வதற்கு பரிகாரம் உண்டு;அதுதான்  இறைநாம ஜபம் அல்லது மந்திர ஜபம்;
மற்றவைகள் நம்மை இப்பிறவியிலும்,அடுத்து வரும் பிறவியிலும் தொடர்ந்து கொண்டே வரும்;எனவே,தர்மநியாயப்படி வாழ முயற்சி செய்பவர்கள்,முடிந்தவரையிலும் இந்த கருத்தினை மனதிற்குள் பதித்துக் கொள்வது நன்று.

இந்துக்காலக்கணக்கீடு: (பழையதும் புதியதும்)
60 நாழிகை = 24 மணி நேரம்
30 நாழிகை = 12 மணி நேரம்
30 நாழிகை = ஒரு பகல் அல்லது ஒரு இரவு
1 ஜாமம்   = 6 நாழிகை
6 நாழிகை  = 2 மணி நேரம் 24 நிமிடங்கள்


மறைந்த முன்னோர்களின் படங்களை சுவாமி படங்களுடன் சேர்த்து வைக்கக் கூடாது;விளக்கு ஏற்றியப் பின்னர்,அதில் இருந்து ஊது பத்தியோ,கற்பூரமோ ஏற்றக்கூடாது;


ஜோதிடம் என்பது வருமானத்திற்குரிய ஒரு தொழிலாக முதல் யுகத்தில் இருக்கவில்லை;அது இறைவனை அடைய உதவும் காலக்கண்ணாடி.நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் கலையைக் காசாக்கத் தெரியாதவன் அந்தக் கலையை அவமதிக்கிறான் என்றே அர்த்தம்;அது மட்டுமல்ல;தட்சிணாதேவியின் சாபத்திற்கு ஆளாக வேண்டும்.இதனால்,இப்பிறவியிலும்,அடுத்து வரும் பிறவியிலும் ஜோதிடக் கலை கைகூடினாலும்,அதில் சாதிக்கவோ பிரபலமாகவோ முடியாது;அதே சமயம் துல்லியமான பலன்களைச் சொல்லவிடாமல் மனக்காரகன் தடுப்பார்;

அக்னிதேவர்,இந்திரன்,நிருதி,வாயு,குபேரன்,வருணன்,ஈசானன்,எமன் ஆகிய எட்டு தேவதைகளே அஷ்டதிக் பாலகர்கள் ஆவர்;பூமியில் நாம் யாருக்குமே தெரியாமல் ஏதாவது ஒரு தவறு செய்தாலும் இவர்களின் பார்வையில் இருந்து தப்ப முடியாது;நமது கர்மக்கணக்கில் நமது பாவபுண்ணியங்களைப் பதிவு செய்பவர்கள் இவர்களே! நமது மரணத்திற்குப் பிறகு,நமது பாவ புண்ணியக் கணக்கினை சித்திரகுப்தரிடம் ஒப்படைப்பதும் இவர்களே!
இந்த அஷ்டதிக் பாலகர்களே இந்தப் பிரபஞ்சத்தின் கடவுள்களுக்கெல்லாம் கடவுளாகிய ஆதிசிவன் என்ற சதாசிவன் என்ற அண்ணாமலையைச் சுற்றி லிங்க வடிவில் இருந்து இந்த பூமியை நிர்வகித்து வருகின்றனர்;இந்த பூமியில் எவரது ஆயுள் முடிந்தாலும்,அவரது உயிரை உடலில் இருந்து பிரிக்க வரும் எமதூதர்கள்,வானுலகில் இருந்து பூமிக்கு வந்து இறங்குவது அண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் எமலிங்கத்தில் தான்.அவ்வாறு இறங்கி எமலிங்கத்தை வழிபட்டு விட்டே பூமியில் அந்த ஆத்மா வாழ்ந்து வரும் இடத்துக்கு பயணிப்பது வழக்கம்;


30 நாழிகை = ஒரு பகல் அல்லது ஒரு இரவு
30 நாழிகை = 5 ஜாமம்
முதல் ஜாமம் = காலை 6 மணி முதல் காலை 8.24 வரை
இரண்டாம் ஜாமம்= காலை 8.25 முதல் காலை 10.48 வரை
மூன்றாம் ஜாமம் = காலை 10.49 முதல் மதியம் 1.12 வரை
நான்காம் ஜாமம் = மதியம் 1.13 முதல் மதியம் 3.36 வரை
ஐந்தாம் ஜாமம் = மதியம் 3.37 முதல் மாலை 6 மணி வரை
இந்தக் காலக் கணக்கு எதற்காக எனில்,புராணக் கதைகள்,சாண்டில்யன் நாவல்கள் வாசிக்கும் போது இந்த காலக் கணக்கீடு உதவிகரமாக இருக்கும்;பழமையான ஜோதிட,ஆன்மீகக்ச் சுவடிகள் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் இந்த காலக் கணக்கீடு உதவும்.


இன்றும் மேல்நாட்டினர் பலர் அடிக்கடி அண்ணாமலைக்கு வந்து குறிப்பிட்ட திதி,குறிப்பிட்ட நட்சத்திரம் இருக்கும் நாட்களில் கிரிவலம் செல்கிறார்கள்.கி.பி.2070 இல் இந்தியாவின் ஜனத்தொகை 600 கோடிகளாக இருக்குமாம்;அதில் 200 கோடி பேர்கள் மட்டுமே இந்தியர்களாக இருப்பார்களாம்;மீதி 400 கோடி பேர்கள் உலகின் ஐந்து கண்டங்களில் இருந்தும் வந்து இங்கே குடியுரிமை பெற்று,இந்து தர்மத்தின் புராதனக்கலைகளைகற்று இங்கேயே வாழ்ந்து வருவார்களாம்.


பணம் சம்பாதிக்க பத்து மடங்கு திறமைதேவை;ஆனால்,சம்பாதித்த பணத்தை சேமிக்கவும்,சேமிப்பை சொத்துக்களாக மாற்றவும் ஆயிரம் மடங்கு திறமை தேவை;ஏன் தெரியுமா? நமது நாட்டில் உழைப்பவர்களை விடவும்,அந்த உழைப்பை நாசூக்காகத் திருடுபவர்களின் எண்ணிக்கையே பலமடங்கு அதிகம்;எனவே,உங்களது சம்பளம்.லாபம் இவைகளை எப்போதும்,எவரிடமும்(எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும்சரி) வெளிப்படுத்தக் கூடாது;நீங்கள் எவ்வளவு சேமித்துள்ளீர்கள்? சொத்து வாங்குவதில் உங்களது எதிர்காலத் திட்டம் என்ன? போன்றவைகளையும் ராணுவ ரகசியம் போல பாதுகாப்பது அவசியம்.

தமிழ்நாட்டில் பள்ளி ஆண்டுத்தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன;ஆண்டுத்தேர்வு விடுமுறையை ஆன்மீக மயமாகவோ,ஆளுமைத்திறனை மேம்படுத்தும் விதமாகவோ நமது குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பது நமது பொறுப்பு;அட்டவீரட்டானங்களுக்கு நான்கு/ஐந்து நாட்கள் பயணமாகச் சென்று வரலாம்;அல்லது ஆளுமைத்திறனை மேம்படுத்தும் பல பயிற்சிகள் மாநகரங்களில் நடைபெற்று வருகின்றன;அவைகளுக்கு நமது குழந்தைகளை அனுப்பலாம்;அட்லீஸ்ட் அவரவர் நட்சத்திர பைரவர் ஆலயம் இருக்கும் ஊர்களுக்காவது சென்று வரலாம்;அதுவும் இயலாதவர்கள்,உள்ளூரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்திற்கு அழைத்துச் சென்று,அந்த ஆலயத்தின் ஸ்தலவரலாற்றை அந்தக் கோவிலிலேயே போதிக்கலாம்;கூடவே,ஒவ்வொரு தெய்வத்தின் புராணத்தையும் சுருக்கமாகச் சொல்லி,எந்த தெய்வத்தை எந்தக் கிழமையில் எப்படி வழிபட வேண்டும் என்பதையும் விவரிக்கலாம்;நமது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப் பெரிய வழிகாட்டுதல் என்பது இதுதான்;இன்றைய கால கட்டத்தில் நமதுபொருளாதாரமும்,அரசியலும் சீரழிந்து போனதற்குக் காரணம் நமது அடுத்த தலைமுறைக்கு நமது சனாதன தர்மம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்காமல் இருந்ததே!

இன்றும் நாம் நம்முடன் பழகும் எவர் என்ன சொன்னாலும்(ஆன்மீக விஷயத்தில்) அதை அப்படியே நம்பிவிடுகிறோம்;வீட்டில் குழல் ஊதும் கண்ணன் படத்தை வைத்திருந்தால்,குழல் ஊதுவது போல நமது குடும்பத்தை ஊதிவிடுவான்;
நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டால்,அவர் நமது குடலை உருவிவிடுவார்;மஹாவிஷ்ணு பாற்கடலில் இருப்பது போல படத்தை வீட்டில் மாட்டியிருந்தால்,அவரது சக்கரத்தால் நமது தலையினைச் சீவி விடுவார்;
ஈசன் தியானம் செய்வது போல இருக்கும் போட்டோவை வீட்டில் வைத்திருந்தால் அவரது நெற்றிக்கண்ணால் நம்மை எரித்துவிடுவார்;
நாக்கைத் தொங்கப்போட்டிருக்கும் காளி படத்தை வீட்டுப்பூஜையறையில் வைத்திருந்தால்,காளி நமது ரத்தத்தைக் குடித்துவிடுவாள்;என்பது போன்ற ஏராளமான முட்டாள்தனமான நம்பிக்கைகளை பொழுது போகாதவர்கள் கிளப்பிவிட்டுக்கொண்டே இருக்கின்றனர்;1960களில் இதுபோன்ற போலியான நம்பிக்கைகளை வேற்றுமதத்தினர் நம்மிடையே உலவ விட்டனர்;தற்போது,தெய்வநம்பிக்கை (மக்கள்தொகையின் வளர்ச்சிக்கு இணையாக) குறைந்து போனதால்,பொறுப்பற்றவர்கள் இப்படி ‘அள்ளி’ விட்டுக் கொண்டே இருக்கின்றனர்;இது போன்ற முட்டாள்த்தனமான போலி மிரட்டல்களை யாரும் நம்ப வேண்டாம்.நமது பூர்வ ஜன்ம புண்ணியத்தின்படியே மேலே கூறியிருக்கும் படங்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகள் நம்மைத் தேடி வருகின்றன;மேலே கூறியவிதமான எந்த ஒருபடத்தையும் நமது வீட்டில் வைத்து வழிபடலாம்;இதேபோல,ஏராளமானவர்கள் ஜோதிடத்தின் மீது ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.ஜோதிடத்தை தொழில்ரீதியாக பார்க்கும் முன்பாகவே பிறரை தான் கற்றுக்கொண்டிருக்கும் ஜோதிடத்தின் மூலமாக பயமுறுத்துவது;நம்பிக்கையைச் சிதைப்பது போன்ற காரியங்களில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஜோதிடப் பலன்களை யார் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்;தொழில்முறை ஜோதிடர்கள் சொல்வதை விடவும்,இதுபோல அரைகுறைஜோதிட சிகாமணிகளின் வார்த்தைகளை நம்பி நமது கவலைகளை இரண்டு மடங்காக்கிக் கொள்கிறோம்;இந்த அரைகுறை ஜோதிடர்களுக்கும் ஒரு முதன்மையான உண்மை புரிவதில்லை;அது என்னவெனில்,ஜோதிடர் என்றால் ஜோ என்ற மனத்தை திடப்படுத்துபவர் என்பதே!(ஜோ+திடர்)

ஒருவருடம் வரை தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை வீட்டில் ஜபித்துவந்தவர்களுக்கு 90 ஆவது நாளில் இருந்து பணச்சிக்கல்கள் தீரத்துவங்கியிருக்கின்றன; ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒருமுறையும் எதிர்பாராத வருமான வாய்ப்பு அல்லது எதிர்பாராத பண உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன; பலர் மூன்று ஆண்டுகள் வரை தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி ஜபித்துக் கொண்டு வருகின்றனர்;அவர்களது நியாயமான அதே சமயம் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறிவிட்டன;அப்படி நிறைவேறியதால்,இன்னும் அதிகமான பைரவ பக்தி அவர்களிடம் உருவாகியிருக்கிறது.கடந்த ஒரு வருடத்தில் நமது ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளிடமிருந்து கிடைத்த அனுபவத் தொகுப்புகள் இவை!!!


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ