RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 20




1.பூமியில் 84,00,000 உயிரினங்கள் இருப்பதாக பத்மபுராணம் தெரிவிக்கிறது.இதில் 9,00,000 உயிரினங்கள் தண்ணீரில் வசித்து வருகின்றன;20,00,000 உயிரினங்கள் தாவரங்களாக வாழ்ந்து வருகின்றன;30,00,000 உயிரினங்கள் விலங்குகளாக வாழ்ந்து வருகின்றன;
மீதி 4,00,000 உயிரினங்களை உயர்ந்த படைப்புகளாக இறைவன் படைத்திருக்கிறார்;அந்த உயர்ந்த படைப்புகளில் ஒன்றுதான் நமது மனித படைப்பு! இதில் தேவர்கள்,கந்தர்வர்கள்,எட்சர்கள்,நாகதேவதைகள்,இந்திரலோகத்து மாந்தர்களும் அடக்கம்;இந்த 4,00,000 உயர்ந்த படைப்புக்களுக்கும் அடிப்படைப் படைப்பு நமது மனித படைப்பு.நாம் வாழ்ந்து வரும் பூமியே கர்மபூமி.


கர்மா என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு செயல் என்று பெயர்.கர்மாவில் நற்கர்மாவும் உண்டு;தீய கர்மாவும் உண்டு.
இறைவனை அடைய கர்மயோகமும் ஒருவழிமுறை ஆகும்.கர்மயோகம் என்றால்,நாம் செய்யும் எந்த ஒரு செயலையும் எதிர்ப்பார்ப்பு எதுவுமின்றிச் செய்வது ஆகும்;அப்படிச் செய்வதால்,நாம் கர்மயோகி ஆகிறோம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;வருடம் தோறும் சம்பள உயர்வு கிடைத்துவிடும்;ஆனால்,பதவி உயர்வு என்பது நமது சிறப்புத் தகுதி,நிர்வாகத் திறமை,கடந்த காலத்தில் நம் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் இருந்தால் தான் கிட்டும்;இந்தக் காரியத்தைச் செய்தால்,நாம் இந்தப் பதவிக்கு வருவோம் என்று எதிர்ப்பார்ப்புடன் செய்து,பதவி உயர்வு கிட்டாவிடில்,நமக்கு நம் மீதே எரிச்சல் வந்துவிடும்;நாளாக நாளாக தன் இரக்கம் என்ற சுயபச்சாதபம் வந்துவிடும்;இப்படி வருவதன் மூலமாக நாம் ஆசாபாசத்தில் சிக்க ஆரம்பிக்கிறோம்.இதன் மூலமாக நமது பிறவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கிறது;இதுதொடர்பான விரிவான விளக்கத்தை உபநிஷத்துக்களில் இருந்து எளிமையாக சுவாமி விவேகானந்தர் விளக்கியிருக்கிறார்;அந்த விளக்கத்தின் தொகுப்புதான் சுவாமிவிவேகானந்தரின் கர்மயோகம்=வெளியீடு ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் சென்னை வெளியீடு.


2.முருகக்கடவுள் நமது தமிழ்ப் பண்பாட்டின்படி போர்க்கடவுளாகக்கருதப்படுகிறார்;நவக்கிரகங்களில் செவ்வாயின் அதிதேவதையாகவும் கருதப்படுகிறார்;எனவே,திருச்செந்தூர்,பழனி முதலான ஆலயங்களுக்கு விரதம் இருந்து,பாதயாத்திரை செல்பவர்கள் சிகப்பு நிற ஆடையையே அணிய வேண்டும்;அப்படி அணிந்தால் முருகக்கடவுளிடம் நமது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.நடைமுறையில் பெரும்பாலானவர்கள் பச்சைநிற ஆடைகள் அணிந்து பாதயாத்திரை செல்கின்றனர்;இது மாபெரும் தவறு;ஏனெனில்,செவ்வாய்க்கிரகத்திற்கும்,புதன் கிரகத்திற்கும் பகையே இருக்கிறது;இதனால்,செவ்வாயின் அதிதேவதையான முருகக் கடவுளுக்கு,அதன்பகை நிறமான  பச்சை அணிந்து விரதம் இருக்கலாமா?


3.ஒரு ரியல் எஸ்டேட் தரகர் அல்லது ஒரு கார் தரகர் எப்படி தான் வருமானம் பார்க்கிறார் என்பதை எவருக்காவது சொல்லித்தருவாரா? (தகுந்த பொறுப்பு வந்தப் பின்னர் தனது மகன்/மகளுக்குச் சொல்லித் தருவார்)ஒருவேளை அப்படிச் சொல்லித் தந்தால்,அவர் அந்தத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லக் கூடிய சூழ்நிலைதான் உருவாகும்;அதே போல,நான் இத்தனை மாதங்களாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு வீட்டில் செய்து வருகிறேன் என்று சொன்னால்,பிறருடைய பொறாமை எண்ணங்களால் வழிபாட்டின் பலன்கள் கிடைக்கத் தாமதம் ஆகும்;அல்லது அந்த நொடியில் இருந்து வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாட்டைத் தொடரமுடியாமல் போய்விடும்;
ஆந்திரமாநிலத்தில் பிறந்த வீரபிரம்மம் என்ற மகான் சொன்ன உபதேசத்தை இப்போது நினைவு கூர வேண்டியிருக்கிறது: கலியுகத்தில் பொறாமையும்,பொச்சரிப்பும் இல்லாத இடங்களே கிடையாது;இதனால்,(நல்ல) ஆத்மார்த்தமான செயல்களைத் தொடர்வதில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.


4.சதாசிவனின் நெற்றியில் இருந்து தோன்றியவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்! அவரது சாபநிவர்த்தி ஆனதும் அவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவராகவும் பரிணமித்தார்;நாம் ஒவ்வொருவருமே ஆரம்ப கட்டத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானை மட்டும் வழிபட்டு வர வேண்டும்;குறிப்பிட்ட மாதங்கள்/வருடங்கள் இப்படி ஸ்ரீகாலபைரவப்பெருமானை வழிபட்டுக் கொண்டே வந்தால்,பைரவப் பெருமானின் அருளால் நமது அனைத்து கர்மவினைகளும் கரைந்து போய்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்கும் சூழ்நிலை  உருவாகும்;இது கடந்த சில ஆண்டுகளில் நேரடியாக உணர்ந்த அனுபவங்கள் ஆகும்.


5.இன்றைய கால கட்டத்தில் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் கிரக சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதில்லை;மாறாக பலன்களை மாற்ற முயற்சிக்கிறார்கள்;அதற்கும் ஜோதிடரே பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.எந்த ஜாதகமாக இருந்தாலும் நல்ல யோகங்களும்,தீய தோஷங்களும் கலந்துதான் இருக்கும்;அதை கவனமுடன் கேட்டு அதற்குத் தகுந்த படி தம்மை மாற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயமே!


6.ஒரு போதும் சாப்பிடும்போது பேசக் கூடாது;டிவி பார்க்கக் கூடாது;செல் போனில் பேசக்கூடாது.இப்படி ஒரு வருடத்திற்கும் மேலாக இருந்தால் வயிற்றின் ஜீரண உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்;இதை சரி செய்யும் மருத்துவம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை;


7.கடும் கோபத்தில் இருக்கும் போதோ அல்லது பயங்கர சோகத்தில் இருக்கும் போதே வாகனம் ஓட்டக் கூடாது;அது இரு சக்கரவாகனமாக இருந்தாலும் சரி,நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி.


8.அமெரிக்காவில் நமது உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் முன் அனுமதி பெற்றப் பின்னரே செல்ல முடியும்;இது அமெரிக்க நாகரீகம் என்று நாம் பெருமைப் பட்டுக்கொள்கிறோம்;நாமும் இதைப் பின்பற்றத் துவங்கியிருக்கிறோம்;ஆனால்,கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் இருந்து யார் வேண்டுமானாலும்,யாரிடமும் பேசும் தொழில் நுட்பத்தின் மூலமாக இன்று இந்தியாவில் பத்து நிறுவனங்கள் ஒரு நாளுக்கு தலா ரூ.2000 கோடிகளை சம்பாதிக்கின்றன;இந்தியர்களின் காதுகள் கேட்கும் திறனை இழந்து வருகின்றன;மூளையின் நினைவுத் திறன் பகுதி படிப்படியாகச் செயலிழந்து வருகிறது;பலருக்கு நினைவுப்பகுதியே அழிந்து வருகிறது;இது வளர்ச்சி என்ற பெயரில் நமது சிந்தனையைச் சிதைக்கும் முட்டாள்த்தனமான தொழில்நுட்பம் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்? அதுவும் நமது தமிழ் நாட்டில் தான் அதிகமாகப் பேசி இந்த நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கிறோம்;
தொலைபேசியாக இருந்தால் 17 நிமிடங்கள் வரையிலும்,அலைபேசியாக இருந்தால் 12 நிமிடங்கள் வரையிலும் அதிகபட்சமாகப் பேசலாம்;அதற்கு மேல் ஒரு விநாடி பேசினாலும் நமது மூளை,காது போன்றவை கடுமையாகப் பாதிக்கப்படும்;என்பதை ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்பு தெரிவிக்கிறது.

9.பெரோசஸ் ஜோதிடம் கணித்துக்கூறினால்,பலன் மிகச் சரியாக இருக்கும் என்றக் கருத்து முதலாம் நூற்றாண்டில் இன்றைய இத்தாலியில் இருந்திருக்கிறது.அதனால்,அந்தக் காலத்தில் பெரும் செல்வந்தர்கள் இவரைக் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் எடுப்பதில்லை;அவர் இறந்தப் பின்னர்,அவரின் ஜோதிடப் புலமையையும்,வாக்குப் பலிதத்தையும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு கல்லில் நினைவுச்சிலையை எழுப்பினர்;அந்த நினைவுச்சிலையில் நாக்கை மட்டும் தங்கத்தில் செய்து பொருத்தினர்;இன்றும் தங்க நாக்குக்கு தகுதியுள்ள சிறந்த ஜோதிடர்கள் தமிழ்நாட்டிலும்,வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களை நாம் கவுரவிக்க வேண்டாம்;அவரது ஆலோசனைகளைப் பின்பற்றி,நமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளவாவது செய்யலாமே?


10.ஹீப்ரு ஜோதிட முறைக்கு டாரட் கார்டு என்று பெயர்;இதில் எதிர்காலத்தைக் கணித்துப் பார்க்க முடியாது;நிகழ்காலத்தில் நமது ஜோதிடரீதியான கேள்விகளுக்கான விடையைக் கண்டுபிடிக்கலாம்;தமிழ்நாட்டில் இது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை;தமிழில் டாரட் கார்டு தொடர்பான புத்தகங்கள் வெளிவரவில்லை;இந்த ஹீப்ரு ஜோதிட முறையானது நமது தமிழ்நாட்டில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு அரபுப்பாலைநிலப்பகுதிக்குச் சென்றதாகத் தெரிகிறது.


11.கனவுகளும் அவற்றின் பலன்களும் என்ற தலைப்பில் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன;இன்றைய இணைய யுகத்தில் பலர் இஷ்டத்திற்கு இணையத்தில் கனவுகளும் அவற்றின் பலன்களும் என்ற கருத்தின் அடிப்படையில் எழுதித் தள்ளுகிறார்கள்;
நமது ஆழ்மனதினுள் புதைந்திருக்கும் ஏக்கங்களின் வெளிப்பாடாக கனவு வருகிறது;
நமது கடந்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நமது மனதை பாதித்த சம்பவங்களின் அடிப்படையில் உணர்வுகளின் வெளிப்பாடாக கனவு வருகிறது;
யாருக்கெல்லாம் குலதெய்வத்தின் அருள் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் எதிர்காலத்தில் நிகழ இருப்பவைகளை குறிப்பால் உணர்த்தும் விதமாக கனவு வருகிறது.(லக்னாதிபதி,ஐந்தாமிடத்து அதிபதி தொடர்பு இருந்தால் குலதெய்வ அருள் பெற்றவர்)அந்தக் குறிப்புக்கான விளக்கம் உரியவர்களுக்கு மட்டுமே புரியும்;பொருந்தும்;அவரது உடன் பிறந்தவர்களுக்குக் கூடப் பொருந்தாது;
கனவுகளைப் பற்றிய புத்தகங்கள்,வலைப்பூக்கள்,இணையதளங்களில் வெளிவருபவை,வெளிவந்தவைகளில் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை எச்சரிக்கை செய்யும் விதமாகவோ,நம்பிக்கையூட்டும் விதமாகவோ எழுதப்படவில்லை;மிரட்டும் விதமாகவும்,அவநம்பிக்கையை ஊட்டும் விதமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன;


12.சாதாரண மனிதர்களை விடவும் ஜோதிடத்தின் அடிப்படை தெரிந்தவர்களால்  விரைவாக இறையருளைப் பெற முடியும்;ஏனெனில்,ஜோதிடத்தின் அடிப்படை அறிந்தவர்களுக்குத் தான் இந்தத் திதியில் இந்த ஓரையில் இந்தக் கடவுளை இத்தனை நாள்/வாரம்/மாதம் வழிபட்டால் இந்த நோக்கம் நிறைவேறும் என்பது தெரியும்.இதை மாற்றும் விதமாகவே நமது ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் பதிவுகள் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசிகளோடும்,ஆதரவோடும் அனைவருக்கும்  புரியும் விதத்தில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம்.

நிம்மதியைத் தேடுபவர்கள் ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் பதிவுகளை குறைந்தது ஒரு வருடம் வரை(அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் வரை)பின்பற்றினால் அனைத்து சிக்கல்களில் இருந்தும் விடுபட்டு,வளமோடும்,நலமோடும் வாழ்வர்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ