RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 19

1.இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு பயணிப்பதையும்,இந்தியக்குடியுரிமை பெறுவதையும் பெருமையாக நினைக்கப்போகிறார்கள்;அந்த அளவுக்கு நமது இந்து தர்மத்தின் பெருமைகள் சில பல அதிசய சம்பவங்களால் இந்த உலக மக்களுக்கு நிரூபணமாகப் போகின்றன;நாம் இதில் பங்கெடுக்க வேண்டியது எப்படியெனில்,நமது வாரிசுகளுக்கு நமது இந்து தர்மத்தின் பெருமைகளைச் சொல்லிக் கொடுப்பதும்,புரிய வைப்பதும் தான்.


2.நாம் முந்தைய ஐந்துபிறவிகளில் செய்த தவறுகள்,நமது முன்னோர்கள் ஐந்து தலைமுறைகளாகச் செய்த தவறுகளின் விளைவுகளை நாம் இப்போது அனுபவிக்கிறோம்.நாம் முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த புண்ணியச் செயல்கள் இப்பிறவியில் நமக்கு என்று சில திறமைகள்,வேலை அல்லது தொழிலைத் தந்து புகழையும்,வருமானத்தையும் தந்திருக்கிறது.இந்த உலகில் எந்த இரண்டு பேர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறு;இரட்டைப்பிறவிகளாகப் பிறந்தவர்களுக்குக்கூட, ஏதாவது ஒருசில வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன;
நமது முன்னோர்கள் ஐந்து தலைமுறைகளாகச் செய்த புண்ணியக் காரியங்களால் தான் இந்த அளவுக்காவது வசதியோடு வாழ்ந்து வருகிறோம்.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே சில புகழும் கிடைக்கும்;சில சிக்கல்களும் துரத்திக்கொண்டேதான் இருக்கும்;
இந்த வாழ்க்கைப்பின்னணியில்,நாம் செய்ய வேண்டிய தினசரிக்கடமைகளில் அன்னதானம் முக்கியமானது;துவாதசி திதி வரும் நாட்களில் அண்ணாமலைக்குச் சென்று அன்னதானம் செய்வது அளவற்றப் புண்ணியம் தரும் என்பது சிவமஹாபுராணத்தில் இருக்கும் சிவ உண்மை.இதைச் செய்வதற்கு இந்த பதிவினை வாசிக்கும் எத்தனை பேர்களுக்குச் சந்தர்ப்பம் அமையும்?
அதனால்,தினமும் சிவாலயத்தின் வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கிக் கொடுத்துவரலாம்;
அல்லது கோவில் யானைக்கு பழங்கள் வாங்கித் தரலாம்;
அல்லது வீட்டு வழியாக வரும் நாற்கால் பிராணிகளுக்கு தினமும் ஏதாவது சாப்பிடத் தரலாம்;
கோவில் குளத்தில் இருக்கும் மீனுக்கு பொறி வாங்கிப் போடலாம்;
வீட்டுக்கு அருகில் இருக்கும் அல்லது கோவில் வளாகத்தில் இருக்கும் பசுவுக்கு அகத்திக் கீரை வாங்கித்தரலாம்;
தினமும் என்று குறைந்தது ஒரு வருடம் வரை அதிகபட்சமாக நம்முடைய வாழ்நாள் முழுவதும் மேலே கூறிய ஏதாவது ஒன்றை மட்டும் செய்து கொண்டே இருந்தால் போதுமானது;இப்படிச் செய்து வந்தால்,குறிப்பிட்ட மாதத்திற்குப் பின்னர்,அண்ணாமலைக்கு துவாதசி திதி வரும் நாளில் சென்று அன்னதானம் செய்யும் சந்தர்ப்பம் தானாகவே அமையும்.

ஏழரைச்சனியால் அவதிப்படும் கன்னிராசி,துலாம் ராசி,விருச்சிக ராசிக்காரர்கள்; அஷ்டமச்சனியால் தற்போது சிரமப்படும் மீன ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் உடல் ஊனமுற்றோர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கித் தருவது நமது கர்மவினைகளைக்கரைக்க  காரணமாக இருக்கும்;அல்லது காக்கைக்கு தினமும் காலையில் உணவு வைத்து விட்டு,நாம் காலை உணவு சாப்பிட வேண்டும்; (சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது வீடுகளில் இந்தப் பழக்கம் இருந்து வந்திருக்கிறது;தற்போது கிராமங்களில் இந்தப் பழக்கம் தொடர்கிறது)
மழை நாட்களில் அருகில் இருக்கும் மலை சார்ந்த கோவில்களுக்குச் சென்றால் ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,ஐந்து கிலோவிற்குக் குறையாமல் நவதானியங்கள் போன்றவைகளை வாங்கி மலைப்பாதைகளில் இருக்கும் முட்புதர்களில் தூவுவது நவக்கிரகதோஷங்களை நீக்கும்;நமது நிம்மதியை உறுதிபடுத்தும்.
3.ஒவ்வொரு வாரமும் குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்;வாரம்தோறும் குலதெய்வத்தை அது இருக்கும் கோவிலில் சென்று வழிபட முடியாதவர்கள்,மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது வழிபட வேண்டும்;தொலைதூர இடங்களில் வசிப்பவர்கள் அதன் போட்டோவையாவது(மூலவரை போட்டோவாக எடுக்க பல இடங்களில் தடை செய்துள்ளனர்) தனது செல்போன் வால்பேப்பர்,கணினி,மடிக்கணினி வால்பேப்பராக வைத்துக் கொள்வது நன்று.பூஜையறையில் இதே போட்டோவையும் வைத்துக் கொண்டு மனப்பூர்வமாக வழிபாடு செய்து வர வேண்டும்.
ஒரு வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை உள்ளூர் உறவினர் மூலமாகவோ,தகுந்த நபர்கள் மூலமாகவோ அரிசி,எண்ணெய் வாங்கித் தருவது நன்மைகள் தரும்;அசைவம் சாப்பிடுபவர்களுக்கு எந்த தெய்வமும் உடனடி வரங்களைத் தராது;குலதெய்வத்தின் அருள் மிகவும் தாமதமாகவே கிட்டும்;

4.சைவ உணவு உண்டு,அன்னதானம் செய்பவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கும்;அசைவம் சாப்பிடுபவர்கள் அன்னதானம் செய்தால் பலன்கள் கிடைக்காது;தினசரி அன்னதானம் செய்ய இயலாதவர்கள்,வாரம் ஒரு நாளாவது (அது எந்த நாளாக இருந்தாலும்)அன்னதானம் செய்வது அவசியம்;
5.அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு என்பது இல்லை;ஏனெனில்,அசைவம் சாப்பிடுவதாலேயே அவர்களின் சுவாசம் வித்தியாசப்படும்;சிந்தனை மென்மையாக இருப்பதில்லை; எனவே,அவர்கள் செய்யும் எந்த வழிபாடும்,எந்த பரிகாரமும் பலிக்காது;
6.ஒரே நாளில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பயிற்சியையும்,யோகாவையும் செய்ய விரும்புவோர் ஒன்றை காலையிலும்,மற்றதை மாலையிலும் செய்வது நன்று.ஒரே வேளையில் இரண்டையும் செய்யக் கூடாது.ஏதாவது ஒன்றில் சாதிக்கும் வரை ஒன்று மட்டும் பயிற்சி செய்வதே இன்னும் மிகச் சிறந்தது.
7.எந்த கோவிலுக்கும்,சித்தர்பீடங்களுக்கும்,ஜீவசமாதிக்கும் சென்றால் ஒரே ஒரு கோரிக்கையோடு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வதே நன்று;அப்படி ஒரே ஒரு கோரிக்கை வைத்தால் தான் பலன்கள் நம்மை வந்து சேரும்;ஒன்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வைக்கும் போது நமது கோரிக்கைகள் நிறைவேறிட வெகு காலமாகிறது.நாமோ பொறுமையிழந்துவிடுகிறோம்.
8.வாரம் ஒருநாள் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்வது நமக்கு நன்று;ஏனெனில்,நமது வீடு,உறவு,பணியிடம் என எங்குமே பிறரின் பொறாமைஉணர்ச்சியால்  நமது ஆரோக்கியம் அல்லது தொழில் அல்லது வருமானம் பாதிப்பாகிறது.இதைச் சரி செய்யவே டிசைன் இல்லாத மஞ்சள் நிற ஆடையை வாரம் ஒரு நாள் அணிந்து கொள்வது அவசியம்;அல்லது மஞ்சள் நிற கைக்குட்டையை எப்போதும் நம்முடன் வைத்திருக்கலாம்;வசதியிருந்தால் ஆண்கள் மஞ்சள் பட்டில் ஒரு சட்டையையும்,பெண்கள் மஞ்சள் பட்டுச் சேலை ஒன்றையும் தயார் செய்து வைத்துக் கொள்வது நல்லது;சுப காரியங்களுக்குச் செல்லும் போது இதை மட்டும் அணிந்து செல்வதன்மூலமாக பிறரின் தீய எண்ணங்களின் தாக்குதலில் இருந்து விலகிக்கொள்ளலாம்;
9.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் படத்தை பூஜை அறையில் வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும்;பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்;நமது மணிபர்ஸில் வைத்துக் கொள்ளலாம்;ஒருபோதும் அழகுக்காக ஸ்டிக்கர் போல அச்சடித்து வாகனங்களில் ஒட்டக் கூடாது;நகைக்கடை ஒவ்வொன்றிலும் வைத்து தினமும் வழிபட வேண்டியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான்!!!
10.யாருக்கு பூர்வபுண்ணியம் இருக்கிறதோ அவருக்கு மட்டுமே ஒருமுக ருத்ராட்சத்தை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும்;யாருக்கு பூர்வபுண்ணியமும்,குல தெய்வத்தின் ஆசியும்,குருவின் ஆசிகளும் இருக்கிறதோ அவர்களுக்கு தானாகவே ஒரு முக ருத்ராட்சம் கிடைக்கும்;கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் அளவுக்கு அது ஒன்றும் எளிதில் கிடைக்கும் பொருள் அல்ல;அரிய பொருளே! ஒருமுக ருத்ராட்சத்தைத் தேடி அலைவது நமது பொன்னான நேரத்தை வீணடிக்கும்;

11.நாம் குருவாக ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு நம் மேல் திருப்தி வராத வரைக்கும் தெய்வத்தின் கடாட்சம் நமக்கு கிடைக்கவே கிடைக்காது.ஒருவரை நாம் குருவாக மானசீகமாக ஏற்றுக்கொண்டாலே அவரது உபதேசங்கள் படி நமது சிந்தனை,செயல்,வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மட்டுமே அவரது அருள் நமக்குக் கிட்டும்;ஒரே பிறவியில் பெரும்பாலானவர்களுக்கு தகுந்த குரு கிடைப்பது அரிது;3000 மனிதப் பிறவிகள் எடுத்து,ஒவ்வொரு பிறவியிலும் குலதெய்வ வழிபாடு,பைரவ வழிபாடு,சித்தர் வழிபாடு செய்து வந்த பின்னர்தான் 3001 வது பிறவியில் நமக்கு ஏற்ற குரு அமைவார் என்பது சித்தர்களின் தலைவர் அகத்தியரின் உபதேசம்!!

12.மணி,மந்திரம்,ஒளஷதம்(மூலிகை) போன்றவைகளை குருவின் உபதேசப்படி பயன்படுத்தி,நமது உள் ஒளியைத் தூண்டும் பயிற்சியைச் செய்து வந்தால் தான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும்.குலதெய்வவழிபாட்டுடன் தினமும் தியானம் அல்லது பைரவ மந்திர ஜபம் அல்லது பைரவ மந்திரம் 108முறை எழுதி வருவதன் மூலமாக நமக்கு மன ஒருமைப்பாடு கிட்டும்;இது ஆரம்ப நிலை;இந்த ஆரம்ப நிலையை குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்;அதிக பட்சம் பனிரெண்டு ஆண்டுகள் வரை செய்து வந்தால் ஆன்மீகத்தில் முன்னேறும் விதமாக நமது அனைத்து பிறவி கர்மவினைகளும் கரைந்து தகுந்த சீடனாகத் தயாராகுவோம்;
சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார் என்பது ஆன்மீக அனுபவ மொழி!
13.அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் ஒரே ஒருமுறை சாப்பிட்டாலும் சரி, மாதம் ஒரு நாள் சாப்பிட்டாலும் சரி; ஆண்டுக்கு ஒரு முறை சாப்பிட்டாலும் சரி; அவர்கள் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது;அவர்களின் எந்த பரிகாரமும் அவர்களுக்குப் பலன் தராது;
14.மாநகரங்களிலும்,சொந்த ஊர்களிலும் இன்றைய காலகட்டத்தில் தனித்து வாழும் ஆண்களும்,பெண்களும் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர்;தொடர்ந்து சிலபல நாட்கள் தாம் வசிக்கும் வீட்டிற்கு வருவதில்லை;ட்ரெய்னிங்,மார்க்கெட்டிங்,வெளியூரில் வேலை,மூன்று அல்லது நான்கு மாவட்டங்களில் பயணம் செய்துவிட்டு ஒரு வாரம் வரை அல்லது அதற்கும் மேலான நாட்கள் கழித்து வீடு திரும்புகின்றனர்;அப்படி வராத நாட்களில் அவர்கள் வீட்டில் விடிவிளக்கை மட்டுமாவது 24 மணி நேரமும் எரியவிட்டுச் செல்வது அவசியம்;நாம் வசிக்கும் வீடு,ஒரே ஒரு இரவு கூட விளக்கு இல்லாமல் இருளடைந்து இருக்கக் கூடாது.(மின் வெட்டைப் பற்றி இங்கே கூற வேண்டாம்;நமது தினசரிக் கடமைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும்)
15.சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது காலம் காலமாக நம்மிடையே புழங்கும் பழமொழி! சஷ்டி திதி வரும் நாட்களில் விரதம் இருந்தால் தான் அகத்திற்குள்(உடலுக்குள்) இருக்கும் பையில் (குழந்தை) வரும் என்பது இந்த பழமொழிக்கான விளக்கம்;இந்த பழமொழிக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞான ரகசியத்தை எதிர்கால விஞ்ஞானம்,நமது மெய்ஞானத்தின் துணையோடு கண்டுபிடிக்கும்;அந்தக் கண்டுபிடிப்பினாலேயே நமது சனாதன தர்மம் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் நிலை தோன்றும்.

16.நாம் ஆண்டுக்கு ஒருமுறையோ சில மாதங்களுக்கு ஒருமுறையோ புதிய கோவில்களுக்குப் போகிறோம்;அவ்வாறு போகும் முன்பு,அந்த கோவில் எந்த ஊரில் இருக்கிறது? எந்தக் கிழமையன்று அல்லது எந்த நட்சத்திரம் நிற்கும் நாளன்று செல்ல வேண்டும்? என்னென்ன பூஜைப் பொருட்களுடன் சென்று வழிபட வேண்டும்? என்பதை விசாரித்து,அதற்குச் செலவாகும் பணத்தையும் சேர்த்துக் கொண்டு போய் வருகிறோம்;இதுதான் காலம் காலமாக நடந்துவருகிறது.அப்படிச் சென்று வரும் போது சில சமயம் அல்லது எப்போதாவது அந்த ஊரில் நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு, வழிபாட்டை மட்டும் நினைத்துக்கொண்டு வருவது நமது இயல்பு;
ஆனால்,நமது நாட்டிற்குள் ஒளிபரப்பாகும் வெளிநாட்டி டிவி நிறுவனங்கள் ,நமது நாட்டிற்குள் நடைபெற்றிருக்கும் சாதனைகள்,பாலிடெக்னிக் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்,என் ஜினியரிங் மாணவர்களின் புதிய கருவிகள் பற்றிய புராஜக்டுகள்,பெருமைகளை பெரும்பாலும் ஒளிபரப்புவதில்லை;உண்மையை மட்டும் சொல்கிறோம்,குற்றம் எப்படி நடந்தது? என்ற அர்த்தம் வருமாறு தலைப்பு வைத்துக் கொண்டு நமது நாட்டில் எங்கோ அபூர்வமாக நடக்கும் அசிங்கங்களை ஒளிபரப்பி காசு பார்க்கின்றன;இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கும் அப்பாவி மக்கள்,நமது இந்து தர்மத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர்;அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் மறைந்திருக்கும் நயவஞ்சகத்தைப் புரிந்து கொள்வதில்லை;நாமும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு நாம் கடும் கண்டனம் தெரிவிப்பதே இல்லை;
17.ஜோதிடப்படி எந்த ஒரு ராசியும் கெட்ட ராசி அல்ல;அவரவர் பிறந்த நேரப்படியே ஒருவரின் பிறவிகுணம் அமைகிறது;அதே போல எந்த ராசியும் ஏழைகளை உருவாக்குவதில்லை;அவரவர் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளின் படிதான் இப்பிறவியில் ஏழையாகவோ,செல்வந்தராகவோ பிறக்கிறார்கள்;எந்த ராசியும் சோம்பேறியை உருவாக்க வில்லை;பிறக்கும் போது ஒன்பது கிரகங்களும் அமைவதைப் பொறுத்தே ஒருவர் சுறுசுறுப்பானவராகவோ,சோம்பேறியாகவோ இருக்கிறார்;எந்த ராசியும் பாவிகளை உருவாக்கவில்லை;மனிதராகப்பிறந்த எவரும் தினமும் ஏதாவது ஒரு சிறு புண்ணியக் காரியம் செய்தாலே ஒரே பிறவிக்குள்ளாகவே தனது அனைத்து கர்மவினைகளையும் கரைத்து சிறந்த ஆத்மாவாக உருவெடுக்க முடியும்.

18.பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்யும் மனிதர்களின் எண்ணிக்கை நமது நாட்டில் அதிகரித்து வருகிறது.இதனால் தான் இயற்கையே நம்மை வஞ்சிக்கிறது.குடும்பம் என்ற அமைப்பு சிதையத் துவங்கியிருக்கிறது; ஒழுக்கமாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது;இந்த சூழ்நிலையை உருவாக்கியதில் உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை முக்கியப்பங்கு வகிக்கிறது! உலக வர்த்தக அமைப்பில் நமது இந்தியா 1.1.1995 அன்று கையெழுத்திட்டது;இதனால்  நமது நாட்டில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக பல வழிகள் நமது நாட்டின் சட்டப்படி திறக்கப்பட்டுவிட்டன;அப்படித் திறந்ததால் தான் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள்;இல்லத்தரசிகளால் பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்த முடியவில்லை;திணறுகிறார்கள்;தேசபக்தியும்,தெய்வபக்தியும் கொண்டவர் நமது நாட்டை ஆளத் துவங்கும் வரையிலும், மாதம் தோறும் பெட்ரோல் விலையும்,டீசல் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்லத்தான் செய்யும்;இந்த சூழ்நிலையை மாற்றிட நம்மால் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடியும்.அது பைரவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது;காலபைரவப் பெருமானை வழிபாடு செய்தாலும் சரி;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபாடு செய்தாலும் சரி!!! பைரவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நமது நாட்டில் இருப்பவர்களின் தனி நபர் வருமானம் நியாயமான முறையிலேயே அதிகரித்துவிடும்;

19..தமிழ் பேசும் மக்கள் தொகை தமிழ்நாட்டில் எட்டு கோடிபேர்களும்,தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் பெரும்பாலானவற்றிலும் இரண்டு கோடி பேர்கள் வசித்து வருகின்றனர்;பத்து கோடி மக்கள் பேசும் தமிழ்மொழி மக்களுக்காக தமிழ் ஆன்மீக உலகில் இதுவரை எவரும் வெளிப்படுத்தத் தயங்கிய பல ஆன்மீக ரகசியங்களை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி, ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல்,அஷ்டபைரவா இம்மூன்று இணையதளங்களிலும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடும்,அருளாலும் வெளியிட்டுக்கொண்டே வருகிறோம்.
இவைகள் அனைத்தையும் நாம் ஒருவரே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;
ஆனால்,நமக்கு இருக்கும் சிரமங்கள்,கர்மவினைகள்,கஷ்டங்களின் அடிப்படையில் முறைப்படியும்,தொடர்ந்தும் ஏதாவது ஒரே ஒரு வழிபாடு அல்லது சுயப் பரிகாரத்தைப் பின்பற்றி வந்தால் நிச்சயமாக நமது சிரமங்கள் நீங்கிவிடும்;அவ்வாறு நீங்கியவர்களின் அனுபவங்களை நேரிலும்,போனிலும் தெரிவித்துவருகின்றனர்;அந்த அனுபவங்களில் வெகுசிலவற்றை மட்டுமே ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல்,அஷ்டபைரவா இணையதளங்களில் வெளியிட்டு வருகிறோம்.நமது சிரமங்கள் நீங்காதா? என்று ஏங்குபவர்களுக்காகவே இந்த தெய்வீக ரகசியங்களை வெளியிட்டுவருகிறோம்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ