RightClick

மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குடவரை கோவில் கழுகாசலமூர்த்தி கோவில்,கழுகுமலை


ஒற்றைப் பாறையில் செதுக்கிய வெட்டுவான் கோயில்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கழுகுமலை எல்லோரா குகைக் கோயில்களுக்கு நிகராகக் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக் கோயில்களில்  ஒன்றாகும்.
கழுகுமலை என்பது ஒரு சிறிய கிராமமாகும். இது கோவில்பட்டியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்கரன்கோயிலுக்கும், கோவில்பட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருப்பதுதான்,  வரலாற்றுச் சிறப்பு மிக்க
கழுகுமலை. இது மிக முக்கியமான ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. கழுகுமலைப் பகுதியில், 7 மற்றும் 8ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல  பாறைச் சிற்பங்களைக் காண முடியும்.
இங்கு மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன. அவை, வெட்டுவான் கோயில், சமணர் பள்ளி, கழுகாசலமூர்த்தி திருக்கோயில் என்பதாகும்.
4வெட்டுவான் கோயில்
வெட்டுவான் கோயில் இருக்கும் மலை, அரைமலை என்னும் பெயரால் முன்பு அழைக்கப்பட்டுள்ளது.  மலைமீது ஒற்றைக் கற்கோயிலாக வெட்டுவான் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. பாண்டிய  மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது செதுக்கப்பட்டுள்ளது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுமையாக செதுக்கப்படவில்லை. கோயில் பணி நிறைவடையாமல் விடுபட்ட நிலையில்,  தற்போது பிள்ளையார் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது. ஒரு பாறையின் மேல், உட் பகுதியை வெட்டி, நடுவில் உள்ள பகுதியைக் குடைந்து இக்கோயில் உருவாக்கப்பட்டதால்  இக்கோயிலுக்கு வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலை வெளியில் இருந்து பார்க்கும் போது வெறும் பாறை போல் தான் தெரியும். அதற்குள்  இருக்கும் அழகான கோயிலை உள்ளே சென்றுதான் பார்க்க முடியும்.
வெட்டுவான் கோயிலில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவையாக உள்ளன. இங்குள்ள பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர், பூத கணங்களின் சிலைகள் அனைத்தும் மிகவும்  நுட்பத்தோடு, கலை உணர்வோடு செதுக்கப்பட்டுள்ளன. இங்கு அமர்ந்திருப்பது வெறும் சிலைகள் என்று தோன்றவில்லை. நிஜமாகவே இறைவன் மனித உருவில் தோன்றி அமர்ந்து கொண்டிருப்பது  போன்றே எண்ண தோன்றும். ஆங்காங்கே சில இடங்கள் முழுமை பெறாமல் இருக்கின்றன. முழுமை பெறாமல் இருக்கும் சிற்பங்களும், நம்மைப் பார்த்து ஏதோ ஒரு செய்தியை சொல்ல நினைப்பது  போலவே இருக்கிறது. சிறிய சிறிய சிலைகள் கூட கலை நயத்தோடு, அழகு சொட்ட சொட்ட அமர்ந்திருக்கின்றன.
5சமணர் பள்ளி
இங்குள்ள முக்கியமான இடம் சமணர் பள்ளியாகும். இந்த பள்ளியில் பல சமணர் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இறந்து போன குடவர் சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக  இவ்வுருவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமணத் துறவிகள் குரவர்கள் என்றும், குரவடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது. அந்த  காலத்திலேயே, இரு பாலரும் இங்கு  தங்கி படித்துள்ளது பல்வேறு கல்வெட்டுக்களின் வாயிலாக தெரிய வந்துள்ளது. வானியல், சோதிடம், கணிதம், மருத்துவம் எல்லாவற்றையும் கற்றுக்   கொடுத்திருக்கிறார்கள். இதில் முக்கியமானது என்னவென்றால், இன்றைக்குப் போலவே அந்தக் காலத்திலும் மாணவிகள் அதிக அளவில் படித்திருக்கிறார்கள் என்பதுதான்.
கழுகாசல மூர்த்தி முருகன் கோயில்
தமிழகத்திலேயே மிகப் பழமையான முருகன் கோயில்களில் இதுவும் ஒன்று. குடவரைக் கோயில் வகையைச் சேர்ந்த இதில், மலையைக் குடைந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த குடவரைக்  கோயிலில், குகைச் சுவற்றைக் குடைந்து சுவாமியின் சிலை செதுக்கப்படிருப்பதால், முருகனை வலம் வர வேண்டும் என்றால், இந்த முழு மலையையும் சுற்ற வேண்டும்.
இங்கு முருகர் ஒரு முகத்துடனும், ஆறு கரத்துடனும் இடதுபுறமாக திரும்பியுள்ள மயில் மீது ராஜ கோலத்தில் வீற்றிருக்கிறார்.
இந்த கோயில், எட்டையபுரம் சீமைச் ஜமீனுக்கு சொந்தமான கோயிலாக உள்ளது. வெட்டுவான் கோயிலும், சமணர் பள்ளியும் தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளன.7
கழுகுமலையில் உள்ள முருகப்பெருமான், மேற்கு முகமாகக் காட்சியளிப்பதால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வணங்கிச் சென்றால், தோஷம் நீங்கும் என்று  சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல, நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கழுகுமலை முருகனுக்கே விற்றுவிடுவதாக அக்குழந்தையின் பெற்றோர் வேண்டிக்  கொள்வார்களாம். அவ்வாறு வேண்டிக் கொள்வதால் அக்குழந்தைகள் நலமடைந்ததும், உடனேயே அங்கு நடக்கும் ஏலத்தில் அந்தக் குழந்தைகளை விலை கொடுத்துத் திரும்ப வாங்கிக்கொள்வதும் இந்த  ஊர் மக்களின் தொன்றுதொட்ட வழக்கமாம்.


கழுகுமலைக்கு, ரயில் மார்கமாக செல்வோர் கோயில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து அல்லது தனி வாகனம் வைத்துக் கொண்டு கழுகுமலை செல்லலாம். அதேப்போல, கோயில்  பட்டியில் இருந்தும், சங்கரன்கோயிலில் இருந்தும் கழுகுமலைக்கு ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.


நம் முன்னோர்கள், பாறைகளைக் குடைந்து அழகான கோயில்களை எழுப்பியுள்ளனர். வருங்கால சந்ததியினருக்கு அவர்கள் விட்டுச் சென்றுள்ள இந்த தலங்கள்தான், அவர்கள் வாழ்வியல் முறையை  நமக்கு பறைசாற்றுகின்றன.நன்றி:தினமணி 7.2.14