RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 16
1.ஒவ்வொரு மூன்று தலைமுறைக்கும் ஒருமுறை பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மிகப் பெரிய எழுச்சி அல்லது மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திப்பார்கள்.நமது முன்னோர்களின் வாழ்க்கை வளத்தை நினைத்துப் பார்த்தால்,நமது தாத்தா பாட்டி காலத்தில் சகல வசதி,அந்தஸ்தோடு வாழ்ந்திருந்தால் நமது பொருளாதார வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும்;அதே சமயம்,நமது தாத்தா பாட்டி காலம் வறுமையாக இருந்திருந்தால்,நமது வாழ்க்கை செல்வ வளம் மிக்கதாக இருக்கும்;இந்த விதி பெரும்பாலானவர்களுக்குப் பொருந்தினாலும்,விதி விலக்குகளும் உண்டு;
ஒரே தலைமுறையில் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிய குடும்பங்களும் இருக்கின்றன;எனக்குத் தெரிந்த ஒருவர் மாதம் ஒருமுறை சதுரகிரிக்குச் சென்று,அங்கே சதுரகிரி சுந்தரமஹாலிங்கசுவாமிகளைப் பாடுவார்;அவருக்குத் தெரிந்த ஆன்மீக சேவை இது மட்டுமே.இப்படி சுமாராக 40 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.அதன் விளைவாக அவரது மகன் காவல்துறையின் மாவட்ட தலைமை அதிகாரி என்ற அந்தஸ்தோடு இரண்டாவது தலைமுறையிலேயே முன்னேறியிருக்கிறார்.அந்த காவல்துறை அதிகாரியின் வாரிசுகள் அனைவரும் இன்று அயல்நாட்டில் குடியுரிமை பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
மூன்று தலைமுறைக்கு ஒருமுறை வரும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்திய குடும்பங்கள் பின்பற்றும் ரகசியங்கள் என்ன தெரியுமா?
இது தொடர்பாக விரிவான தனிப்பதிவு ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளிவரும்.
2.திருமணப்பொருத்தம் பார்ப்பதில் இன்று பல பெற்றோர்கள் கவனமாக இருப்பதில்லை;வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்வதால் தான் பலர் திருமணம் ஆன சில வாரங்கள்,மாதங்களில் பிரிந்துவிடுகின்றனர்;12க்கு 10 பொருத்தம் இருக்கும்;நமது மகனுடைய சுபாவத்திற்கு இந்த வரன் ஏற்றவளா? என்று பார்ப்பதில்லை;நமது மகனின் ராசிக்கு ஆறாவது ராசியாகவோ,எட்டாவது ராசியாகவோ வரனின் பிறந்த ராசி வந்தால் முடிப்பது நல்லதல்ல;உதாரணமாக மேஷ ராசிக்கும் கன்னி ராசிக்கும் ஆகாது;மகர ராசிக்கும் சிம்மராசிக்கும் ஆகாது;மீன ராசிக்கும் சிம்மராசிக்கும் ஆகாது;மிதுன ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் ஆகாது;கடகராசிக்கும்  கும்ப ராசிக்கும் ஒத்துப் போகாது;இது போல குறைந்த பட்சம் 15 விதமான ஒற்றுமை அல்லது வேற்றுமையை பார்க்கவேண்டும்.
அடுத்தபடியாக,திருமண நாளானது மணமகனின் பிறந்த நட்சத்திரத்திற்கும்,மணமகளின் பிறந்த நட்சத்திரத்திற்கும் சந்திராஷ்டமம் உள்ள நாளில் அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஆனால்,நடைமுறையில் திருமண மண்டபம் கிடைக்கும் தேதியில் தான் முகூர்த்தங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.நூறு வருடம் இல்லையில்லை ஐம்பது வருடம் சேர்ந்து வாழ வேண்டிய ஒரு இளைஞன் ஒரு இளம்பெண்ணுக்கு சிறப்பான வாழ்க்கையை ஆரம்பித்துக் கொடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பது இருவரின் பெற்றோர்களின் பொறுப்பு.
3.பலர் ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல்,அஷ்டபைரவா வலைப்பூக்களை வாசித்து,அதில் தமக்கு பிடித்தமான ஒரு வழிபாட்டை பின்பற்றத் துவங்குகிறார்கள்.அதுவரை மகிழ்ச்சியே.வழிபாட்டை நிறைவு செய்ய குறைந்தது நான்கு மாதங்கள் அதிகபட்சமாக ஒருவருடம் வரை ஆகிறது.காலம் செல்லச் செல்ல தன்னோடு பழகுபவர்களிடம் ‘நான் இப்படி இந்த காரணத்துக்காக இந்த வழிபாட்டை செய்து வருகிறேன்’ என்று சொல்கிறார்கள்.அவர்கள் இவர்களின் பாசத்தை/அக்கறையைப் புரிந்து கொள்வது கிடையாது;உடனே,இவர்களின் வழிபாட்டை தடுக்க ஆலோசனை சொல்லிவிடுகிறார்கள்.அதுவும் எப்படி? தன்னால் முடிந்த வரையிலான ‘பிட்டை’ப் போட்டு அந்த வழிபாட்டைச் செய்யாமல் தடுத்துநிறுத்தி ‘வெற்றியும்’ பெற்றுவிடுகிறார்கள்.கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் நடத்தும் டிவி தொடர்கள்,தமிழர்களின் பண்பான பிறருக்கு உதவுதல்,பிறரின் கஷ்டத்தை தனது கஷ்டமாக நினைத்து அவர்களை அதிலிருந்து மீட்டல்,எல்லோரும் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக வாழ முடியும்,முடிந்தவரையிலும் பிறருக்குத் தொந்தரவு தராமல் இருப்பது,எதிர்ப்பார்ப்புகள் இன்றி உதவி செய்தல் போன்ற மனோபாவங்களை அழித்துவிட்டன;
4.இந்த பிறவியிலேயே இறைவனது அருளைப் பெற நீங்கள் விரும்பினால் ஒரே ஒரு வழிமுறையைப் பின்பற்றினாலே போதுமானது;அது:-
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக்கைவிட்டுவிட வேண்டும்;மது அருந்துவதையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்;தமிழ்ப்பண்பாட்டை விடாப்பிடியாகப் பின்பற்ற வேண்டும்.இந்த தினசரிக் கொள்கைகளோடு மாதம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நோட்டில் எழுதி வர வேண்டும்.இன்று முதல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எழுதி வந்தாலே போதுமானது.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை பின்வரும் விதமாகவே எழுத வேண்டும்.
ஓம்(உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும்
ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று 108 முறையும்
ஓம் அண்ணாமலையே போற்றி என்று ஒருமுறையும் எழுதி முடிக்க வேண்டும்.இப்படி எழுதுவதை நமது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கலாம்;ஆனால்,வெளிவட்டார நட்புக்களிடம் ஒருபோதும் காட்டக் கூடாது;
தினமும் இந்த 108முறை எழுத ஆரம்பித்தால்,எக்காரணம் கொண்டும் எழுதி முடிக்கும் வரை வேறு வேலையில் கவனம் சிதறக் கூடாது.செல்போன் பேசக் கூடாது.டிவி பார்த்துக் கொண்டே எழுதக் கூடாது;ரேடியோ கேட்டுக்கொண்டே எழுதக் கூடாது.ஒரு நாளில் உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் எழுதலாம்;
18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இந்த மந்திரத்தை எழுத வேண்டும்.அதை விடக் குறைந்தவர்கள் எழுதக் கூடாது.ஒருபோதும் சிகப்பு,கறுப்பு நிறப்பேனாக்களால் எழுதக் கூடாது;நீல நிறப் பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்.பூஜையறையில் அமர்ந்து மட்டுமே எழுத வேண்டும்.


அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் தினமும் இந்த 108 ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுத சிறந்த நேரம் ஆகும்.
தீட்டு வீடுகளுக்குச் சென்று கலந்து கொண்டால் ஒன்பது நாட்கள் வரை எழுதக் கூடாது.பத்தாவது நாளில் இருந்து எழுதத் துவங்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை எழுதிக்கொண்டே வந்தால்,நமக்கு நமது பிறவி சுபாவத்திற்கேற்றவிதமான ஆன்மீக குரு கிடைப்பார்;(பழமொழி:சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார்).அதன் பிறகு,நமது வாழ்க்கையில் துரோகம்,ஏமாற்றம்,பண நெருக்கடி,குடும்பக் குழப்பம் என்று எதுவும் ஏற்படாது;நமது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகிவிடும்;கர்மவினைகளும் கரையத் துவங்கும்;
ஐந்து ஆண்டுகள் வரை தினமும் எழுதிக்கொண்டே வந்தால்,நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சும உலகத்தோடு தொடர்பு உண்டாகும்; நிச்சயமாக அட்ட வீரட்டானங்களுக்கு உங்களின் ஆன்மீக குருவோடு பயணிக்கும் சந்தர்ப்பம் அமையும்;அட்டவீரட்டானங்களுக்குப் போய்த் திரும்பியப் பின்னர் என்ன நடக்கும் தெரியுமா?
நீங்கள் இது வரை எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்துள்ளீர்கள்?
எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன தவறுகள் செய்தீர்கள்?
அந்தத் தவறுகளால் இப்பிறவியில் என்னென்ன விதமான கஷ்டங்கள்,அவமானங்கள்,வேதனைகளை அனுபவிக்கிறீர்கள்?
 அனுபவிக்கப் போகிறீர்கள்? என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்?
எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன புண்ணியம் செய்தீர்கள்?
அந்த புண்ணியங்களால் இப்பிறவியில் உங்களுக்கு கிடைத்திருக்கும் சொத்துக்கள்,திறமைகள்,அதிர்ஷடங்கள் என்னென்ன? இனிமேல் என்னென்ன கிடைக்க இருக்கிறது? என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.
எதனால் இந்த அதிசயம் நிகழும் தெரியுமா? நீங்கள் தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுதுவதன் மூலமாக காலத்தை இயக்கும் கடவுளான காலபைரவப் பெருமானைச் சரணடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
30 ஆண்டுகள் வரை தினமும் 108 முறை எழுதிவிட்டீர்கள் எனில் நிச்சயமாக நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள்இன்னும் ஏராளமான ஆச்சரியங்களை இந்தப் பிறவியிலேயே காண்பீர்கள்;அவைகளை இங்கே பகிரங்கப்படுத்த முடியாது.ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு மனக்குறை என்று எதுவுமே இராது.ஆரம்பிப்போமா?
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ