RightClick

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வலம்!!!


கோ என்ற எழுத்திற்கு அரசன்,ஆலயம்,இறைவன் வசிக்கும் இடம் என்ற அர்த்தங்கள் உண்டு.”கோ”வலம் என்றால் ஆலயத்தைச் சுற்றி வருதல் என்று பொருள்.
 
நெல்லையப்பர் கோவில் தோன்றிய வரலாறு: முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தார் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டது. அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டது. இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

நெல்லையப்பர்தல வரலாறு: முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார்.


 நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.
தமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் சுமார் 14 ஏக்கர் நிலப்பரவளவில் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயரில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.


“கோ”வலத்தில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
ஜோதிடத்தை தொழிலாகக் கொண்டவர்கள்,
 
ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள்,
 
அருள் வாக்கு சொல்பவர்கள்,
 
குலதெய்வத்தின் ஆசியால் தினமும் அல்லது வாரம் ஒருமுறை சாமியாடி குறிசொல்பவர்கள்,
 
வாஸ்து பார்ப்பவர்கள்,
 
நீரோட்டம் பார்ப்பவர்கள்,
 
குலதெய்வத்தை மட்டும் வழிபட்டு வருபவர்கள்,
 
குலதெய்வத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்கள்,
குலதெய்வத்தின் அருளுக்காகஏங்கிக்கொண்டிருப்பவர்கள்
தினமும் ஏதாவது ஒரு தியானம் செய்து வருபவர்கள்
தினமும் ஏதாவது ஒரு தெய்வத்தை கோவிலுக்குச் சென்றோ அல்லது வீட்டிலோ வழிபட்டு வருபவர்கள்
வீடுகளுக்குச் சென்று இல்லறத்தார்களின் நலன்களுக்காக ஹோமம்,யாகம் நடத்தி வருபவர்கள்
பழமையான ஆலயங்களில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் செய்பவர்கள்
ஆலயங்களுக்கு வாஸ்து பார்ப்பவர்கள்

ஆலயங்களுக்கு பிரசன்னம் பார்த்து,ஆலயத்தின் தோஷங்களை நீக்குபவர்கள்
 
நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள்
 
தகுந்த ஆன்மீக குரு இப்பிறவியிலேயே அமைய வேண்டும் என்று ஏங்குபவர்கள்
 
குரு தோஷம் நீங்க வேண்டும் என்று விரும்புபவர்கள்,
 
 11.3.1973 முதல் 2.9.1973வரை;
 
24.10.1973 முதல் 27.12.1973 வரை;
 
22.2.1985 முதல் 17.4.1985 வரை;
 
5.2.1997 முதல் 24.3.1997 வரை;
 
12.8.1997 முதல் 29.11.1997 வரை;
 
20.1.2009 முதல் 5.3.2009 வரை; பிறந்தவர்கள் இந்த “கோ”வல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக வளமான,நலமான,சிறப்பான வாழ்க்கையைப் பெறுவார்கள்.

கி.பி.1894 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் 4.5.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவாதிரை நட்சத்திரமும்,பஞ்சமி திதியும் சேர்ந்தே வர இருக்கிறது.இந்த அபூர்வ நாளன்று காலையிலேயே நாம் திருநெல்வேலிக்கு வந்தடைய வேண்டும்;மதியம் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் ஜீவ நதியான தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு,4.30 முதல் 5.00 மணிக்குள் நெல்லையப்பர் கோவில் வாசலை வந்தடைய வேண்டும்.வரும் போது மஞ்சள் நிற ஆடை அணிந்திருக்க வேண்டும்;அங்கே நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் தலைமையில் “கோ”வலம் துவங்கும்;மாலை 6.00 மணியளவில் “கோ”வலம் நிறைவடைந்ததும்,நெல்லையப்பர் காந்திமதியம்மனை தரிசித்துவிட்டு,வேறு எங்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.
இந்த சித்தர் வழிமுறைப்படி வழிபாடு செய்வதன் மூலமாக நமது நீண்டகாலக் கோரிக்கைகள் நிறைவேறும்.நமது ஆன்மீகச் சேவையால் நமக்கு அறிந்தும்,அறியாமலும் நம்மை வந்தடைந்த கர்மவினைகள் பூரணமாக விலகி,தொழில் முன்னேற்றம் ஏற்படும்.சோகங்கள் நிறைந்த பக்தர்கள் இந்த வழிபாடு செய்வதன்மூலமாக அவர்களின் அனைத்து சோகங்களும் முழுமையாக விலகிவிடும்.
 
மீண்டும் இதே நெல்லையப்பர் கோவலம் நிகழ்ச்சியானது 4.5.2134 அன்றுதான் வர இருக்கிறது.எனவே,இந்த தெய்வீக வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
ஆன்மீகக்கடல் அன்பர்கள்