RightClick

ஜோதிடர்களுக்கான ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டுமுறை!!!(அவசியமான மறுபதிவு)

காலச் சக்கரத்தை இயக்குவதால் சதாசிவனின் நெற்றியிலிருந்து உருவான பைரவருக்கு ஸ்ரீகால பைரவர் என்று பெயர்.ஸ்ரீகால பைரவரின் சுவாசமே வாக்கியக் கணிதப் பஞ்சாங்கம்,திருக்கணிதப் பஞ்சாங்கம் என்று பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு விரிவடைகிறது.எந்த வித டெலஸ்கோப்பும் இல்லாத அந்தக்காலத்திலேயே ஆர்ய பட்டாவும்,பாஸ்கராவும் இன்னும் பல ஜோதிட வல்லுநர்களும் எழுதிய வானவியல் மற்றும் பஞ்சாங்கம் சார்ந்த நூல்களை வாசிக்கும் போது நமது தொழில் நுட்ப வளர்ச்சியெல்லாம் வெறும் அடாசு என்றே தோன்றும்.
இந்த பஞ்சாங்கங்களின் அடிப்படையில் மனிதர்களுக்கு வழிகாட்டிட இறைவனால் அனுப்பப்படும் புண்ணிய ஆத்மாக்களே ஜோதிடர்களும்,அருள்வாக்கு சொல்பவர்களும்,எதிர்காலத்தைச் சொல்பவர்களும்! இவர்கள் அனைவருமே நவக்கிரகங்களின் பிரதிநிதிகள் ஆவர்.(ஜோதிட மார்த்தாண்ட் ஓம் உலக நாதன் சொன்னபடி,ஒரு ஊரில் நவக்கிரகம் இல்லையெனில்,அந்த ஊரில் வசிப்பவர்கள் ஜோதிடரை ஒன்பது முறை வலம் வந்தாலே நவக்கிரகங்களை வழிபட்டதாக அர்த்தம்!)

ஏனெனில்,மனம் என்ற ஒன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருப்பதால்,இந்த நிமிடத்தில் ஒரு விஷயம் சரி என்று தோன்றும்;அதே விஷயம் இன்னும் சில நிமிடம்/மணி நேரம்/நாள்/வாரம் கழித்து தவறு என்று தோன்றும்.ஆக,ஒவ்வொரு மனிதனின் சுபாவம்,சந்தர்ப்ப சூழ்நிலை,கவனிக்கும் திறன்,நாம் சொல்வதைப் பின்பற்றும் முறை இவைகளைப்பொறுத்தே உண்மையைச் சொல்ல வேண்டும்.முதல் சந்திப்பிலேயே மொத்த உண்மையையும் சொல்லிவிடக் கூடாது.எதற்காக ஒரு மனிதன்/மனுஷி நம்மிடம் ஜோதிடம் பார்க்க வந்திருக்கிறார்களோ அதை மட்டும் சொல்லி அனுப்பி விட வேண்டும்.நாம் வெறும் வழிகாட்டி மட்டுமே!
நாம் வழிகாட்டியதை செய்து முடித்தப்பின்னர்,அந்த வழிமுறைக்கான(பரிக்காரத்திற்கான) பலனைத் தருவது அந்த மனிதர்களின் பூர்வ  ஜன்ம கர்மாவும்,குல தெய்வத்தின் ஆசியுமே!இவ்வாறு சில பலமுறைகள் வழிகாட்டியப்பின்னரே அவர்களது கடுமையான பிரச்னையையோ / மகத்தான யோகத்தினைப்பற்றியோ முழுமையாகச் சொல்ல வேண்டும்.இது ஒரு தொடர் செயல்களின் விளைவுகள் ஆகும்.இப்படிச் செய்வதால் தான் நம்மிடம் ஜோதிடம் கேட்க வருபவர்களும் நல்ல நிலையை எட்டுவர்;நாமும் அவர்களின் மனமார்ந்த பாராட்டுக்கு ஆளாவோம்;புண்ணியம் சேர்ப்பதற்கும் வழிகிடைக்கும்.(ஆனால்,பலர் எல்லோரிடம் தமது ஜாதகத்தை தினமும் காட்டிக்கொண்டே இருப்பார்கள்;இவர்களை நிரந்தரமாகத் தவிர்ப்பது அவசியம்)
எப்போது தேவையோ அப்போது மட்டுமே பணம் சார்ந்த விஷயங்களில் கறார் காட்ட வேண்டும்.எதற்கெடுத்தாலும் பணம் என்று பிடுங்கினால் அந்த கர்மாவை தீர்க்கவே நாம் 49 மனிதப்பிறவிகள் எடுத்து ஏமாற வேண்டும்.இன்று பெரும்பாலான ஜோதிடர்கள் அதைத் தான் செய்கிறார்கள்.நாமே பிறரின் கர்ம ரகசியத்தைக் கண்டறிந்து அவர்களைக் காப்பாற்றுகிறோம்.நோக்கம் போல வாக்குறுதிகளை அள்ளிவீசி எறிந்து பரிகாரத்துக்கு பணம் பிடுங்கினால்,நம்மிடம் பணம் கொடுக்கும் நமது ஜோதிட வாடிக்கையாளர் பரிபூரணமாக ‘இவர் நமது குரு.இவரிடம் பணம் கொடுத்தால் நமது பிரச்னைகளுக்கு பரிகாரம் நமக்காக செய்வார்’ என்று நம்பியே கொடுப்பார்.அந்தப் பணத்தை வாங்கியதுமே அந்த ஜாதகரின் தோஷம் நம்மை பிடித்துவிடும்.இந்த தோஷங்களின் அளவு நம்மை ஒரு அளவுக்கு மேலே பிடித்துவிட்டால்,அது நமது குடும்பத்தில் வினோதமான சிக்கல்களை உருவாக்கிவிடும்.வசதியாக வாழ்வதை விட,நிம்மதியாக வாழ்வதே மேல்!
அப்படி நிம்மதியாகவும்,நேர்மையாகவும் வாழ்வதற்கே ஸ்ரீகால பைரவர் வழிபாட்டுமுறையை இந்தப்பதிவின் மூலமாக ஜோதிடர்களுக்கும்,அருள்வாக்குச் சொல்பவர்களுக்கும்,எண்கணித மேதைகளான நியூமராலஜிஸ்டுகளுக்கும் அறிமுகப்படுத்துகிறோம்.மற்றவர்கள் இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்ற வேண்டியதில்லை;
ஜோதிடர்கள் அசைவம் ஒரு போதும் சாப்பிடக்கூடாது;       மது  அருந்தக்கூடாது;                             போதைப் பொருட்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது.  ஒழுக்கசீலர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும்.போனிலோ,நேரிலோ ஒருவருக்கு ஜோதிடம் கணித்துப்பலன் சொல்லும் போது நமது உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.ஏதாவது ஒரு தெய்வத்தை தினமும் மனப்பூர்வமாக வழிபட வேண்டும்.யாரிடமும் எப்போதும்,எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் இருக்க வேண்டும்.இவையெல்லாம் நமது வாக்குபலத்தை அதிகரிக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை;நமது திசையின் அதிதேவதையை வழிபடலாம்;அல்லது அனைத்துக்கிரகங்களின் தலைவனான ஸ்ரீகாலபைரவரை வழிபடத் துவங்கலாம்.
மாதம் ஒருமுறை வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் (அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது)                   திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல வேண்டும்.அவ்வாறு கிரிவலம் செல்லும் போது மஞ்சள் ஆடை அணிந்து மனதுக்குள் ஓம்அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலப்பாதை முழுவதும் அனாவசியமாகப்பேசக் கூடாது.தனிமை கிரிவலம் நல்ல பலன்களைத் தரும்.அல்லது கூட ஒருசிலரை அழைத்துச் செல்லலாம்;அந்த ஒருசிலர் நமது ஜோதிட சீடர்களாக இருப்பது இன்னும் சிறப்பு.

அல்லது


மாதம் ஒருமுறை(அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது) திருச்செந்தூருக்குச் சென்று கடலில் குளிக்க வேண்டும்.அதுவும் எப்படி? முதலில் நாழிக்கிணற்றில் குளிக்க வேண்டும்.பிறகு கடலில் குளிக்க வேண்டும்.பிறகு கடற்கரையில் இருக்கும் மூவர் ஜீவசமாதியில் வழிபாடு செய்ய வேண்டும்.அந்த மூவர்(சைவம்) ஜீவசமாதியில் உறைந்திருக்கும் மகான்களே  திருச்செந்தூரின் கடலோரக்கோவிலை கட்டுவதற்குக் காரணமாக இருந்தவர்கள்! அவர்களது சன்னதியில் 15 நிமிடம் வரையிலும் மஞ்சள் துண்டில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.அதன்பிறகே திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபட வேண்டும்.அன்று முழுவதும் வேறு நீரில் குளிக்கக் கூடாது.இவ்வாறு செய்தால் மட்டுமே பிறரது ஜாதகங்களை பார்த்து,பார்த்து நம்மைப் பீடித்திருக்கும் நவக்கிரக தோஷச் சுமைகள் நம்மை விட்டு விலகும்.
வீட்டில் தினமும் பின்வரும் ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை உடல் மற்றும் மன சுத்தத்தோடு ஜபிக்க வேண்டும்.ஒரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து மனதுக்குள்(மானசீகமாக) ஸ்ரீகாலபைரவரை(உங்கள் ஊரில் இருக்கும் கால பைரவரை நினைத்தால் போதும்.இதற்காக சிலபல முறை உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று ஸ்ரீகால பைரவரை உற்று நோக்கி மனதுக்குள் படம்பிடித்துக் கொள்ளவும்)உங்களுடைய புருவ மத்திக்கு கொண்டு வந்து பின்வரும் மூலமந்திரத்தை 27 முறை மட்டும் ஜபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய போற்றி


இப்படி 27 முறை ஜபித்தப்பின்னர்,கண்விழித்து,மனக்கண்ணால் ஸ்ரீகாலபைரவரின் பாதத்தை நினைக்க வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் 100 நாட்களுக்குப்பிறகு நமது வாக்குப் பலிதம் அதிகரிக்கும்.உங்களுடைய நேர்மைக்கு பாதுகாப்பையும்,பக்கபலத்தையும் அதிகரிக்கும்.
காலத்தை இயக்கும் கடவுளாக ஸ்ரீகால பைரவர் இருப்பதால் நிஜத்தில் ஒவ்வொரு ஜோதிடரும் நவக்கிரகப் பிரதிநிதி என்பது எந்த அளவுக்கு உண்மையோ,அதே போல ஸ்ரீகாலபைரவரின் பிரதிநிதி என்பதும் உண்மை.(மேலே கூறிய விதிமுறைகளை விடாப்பிடியாக பின்பற்றினால்!!!)
ஸ்ரீகால பைரவரின் ஆசியாலும்,ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் ஆசிர்வாதத்தாலும்,நமது குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் வழிகாட்டுதலாலும் இந்த பதிவினை உங்களுக்கு அனுப்பியிருக்கிறோம்.வாழ்க வளர்க உயர்க ஜோதிடர்கள் அனைவரும்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ