RightClick

டீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கும்,டீன் ஏஜ் வயது குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கும் . . .


நீங்கள் பத்தாம் வகுப்பு/+2/பட்டப்படிப்பு/டிப்ளமோ/ பொறியியல் படிப்பு என்று எதை முடித்தாலும் இந்த உலகத்தை,மனிதர்களைப் பற்றி மிகவும் குறுகிய காலத்தில் புரிந்து கொள்ள வேண்டுமா? குறைந்தது ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரையிலும் நேரடி விற்பனையாளர் என்ற மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்ற வேலைக்குச் சென்றால் போதும்.

நமது கல்விக்கு நமது ஐந்தாம் வயது முதல் 10 முதல் 16 ஆண்டுகள் வரை ஒதுக்குகிறோம்;நாம் விரும்பும் படிப்பில் சேர்ப்பதோடும்,உரிய கட்டணங்கள் செலுத்துவதோடும் நமது பெற்றோர்களின் கடமை முடிந்துவிட்டது;ஆனால்,அந்த படிப்பில் அதிகமான கிரேடு வாங்க நாம் தான் படிக்க வேண்டும்;

படித்து முடித்த பல பட்டதாரிகள்,                               என் ஜினியர்கள்,டிப்ளமோதாரர்கள்,ஐ.டி.ஐ.,முடித்தவர்கள் அனைவருக்குமே வேலை காத்திருக்கிறது.ஆனால்,டிப்ளமோ முடித்த 1000 பேர்களில் 150 பேர்கள் தான் நல்ல வேலையில் சேருகிறார்கள்;பி.ஈ.,பி.டெக்., முடித்த 1,00,000 பேர்களில் 2000 பேர்கள் தான் தனது படிப்புக்குரிய வேலையில் சேருகிறார்கள்;காரணம்?
தனது படிப்பு படிக்கும் போது சாஃப்ட் ஸ்கில் எனப்படும் சிலபல மென் திறன்களை வளர்த்துக் கொள்வதைப் பற்றிய அடிப்படை ஞானம் கூட பலருக்கு இல்லை என்பதே!

அதென்ன சாஃப்ட் ஸ்கில்?

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும்;கூடவே சரளமாக ஆங்கிலப் பேச்சுப்பயிற்சியும் கற்றுக் கொள்ள வேண்டும்;ஒவ்வொரு ஆண்டு விடுமுறை நாட்களிலும் ஒரு நாளுக்கு ஒருமணி நேரம் வரை சரளமாக ஆங்கிலம் பேசப் பழக வேண்டும்;(மாநகரங்களில் வசிப்பவர்கள் ஆங்கிலத்தோடு ஸமக்ஸ்க்ருதம் மற்றும் இன்னொரு ஐரோப்பிய மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்வது அவசியம்)பனிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வு எழுதிய அன்றே பைக் டிரைவிங்,கார் டிரைவிங் கற்றுக் கொள்ளத் துவங்க வேண்டும்;கற்றுக்கொண்டு,பயிற்சி முடித்தமைக்கான லைசென்ஸ்களை வாங்கியே ஆக வேண்டும்;

சில ஆன்மீக அமைப்புகள் நடத்தும் கோடைகால பண்புப்பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்;அவை குறைந்தபட்சம் ஏழு நாட்களில் இருந்து அதிகபட்சம் 30 நாட்கள் வரை இருக்கும்;இந்த நாட்களில் இப்பயிற்சி முகாம்களில் செல்போன் பேச அனுமதி இராது.உடல்பயிற்சியுடன் கூடிய தேசபக்தி சார்ந்த நாட்டு வரலாறு போதிக்கப்படும்.இதன் மூலமாக நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை இளவயதில் முழுமையாக உணரமுடியும்.தற்போது பெண்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துகிறார்கள்.(தமிழ்நாட்டில் பெரும்பாலான மகன்கள்/மகள்கள் அம்மாகோண்டுகளாகவோ,அப்பாச்செல்லங்களாகவோ இருக்கிறார்கள்;இந்த நிலையை மாற்றி தனது வேலைகளை தாமாகவே செய்யப் பழகுவதற்கும்,எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்வதற்கும்,மாறி வரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்வதற்கும் இந்த முகாம்களுக்கு டீன் ஏஜ் குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும்).இதன் மூலமாக அளவற்ற தன்னம்பிக்கை உருவாகும்;

டிப்ளமோ/பட்டப்படிப்பின் ஒவ்வொரு வருட செமஸ்டர் விடுமுறையின் போதும் மார்கெட்டிங் எக்ஸிகுயூடிவாக உள்ளூரில் இருக்கும் வேலையில் இலவசமாகக்கூட பணிபுரிவது நன்று + அவசியம்.
ஏன் எனில்,நாம் படித்துப் பெறும் பட்டப்படிப்பு இந்த உலகத்தை எதிர்கொள்ள ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே! எது நிஜமான கல்வி தெரியுமா? சக மனிதர்களைப் புரிந்து கொள்வதை உணர வைக்கும் கல்வியே உண்மையான கல்வி! அது சந்தைப்படுத்துதல் என்ற மார்கெட்டிங் துறையில் மட்டுமே விரைவாக கிடைக்கிறது.
யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எங்கே ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும்? என்ற அணுகுமுறை விஞ்ஞானம்(BEHAVIOUR SCIENCE) புத்தகங்களில் இல்லை;இருந்தாலும் அதை நம்மால் 30 வயது வரை பின்பற்றி நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திட முடியாது.


அது மட்டுமல்ல;நமது பாரத தேசத்தில் ஒரு மனிதனது உண்மையான சொத்து என்பது அவரு/ளுடைய முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் வீடு,நகைகள்,சேமிப்புப் பத்திரங்கள்,தோட்டம் போன்றவை அல்ல;நம்பிக்கையும்,விசுவாசமும் மிக்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கும் நண்பர்கள்/நண்பிகளே! மனித மனங்களில் இடம் பிடித்து,அந்த நட்பினை ஆயுள் முழுக்க பராமரிக்கும் லாவகமே! 


தனி மரம் ஒருபோதும் தோப்பாக முடியாது;மனிதனுக்கு உறவுகள் அவசியம்;உற்றார்,உறவினர் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்;ஆனால்,நல்ல நட்பு கஷ்டகாலத்தில் கைகொடுக்கும்;ஆறுதல் கூறும்;சரியான விதத்தில் வழிகாட்டும்;
பழகும் போது நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்;அவ்வாறு இருப்பது மிகவும் அவசியம்;நல்லதொரு முன்மாதிரி நண்பர்கள்,தம்பதியர் குறைந்துவிட்டதால் தான் இன்றைய இளைஞர்கள் சின்னத்திரை நாயகர்களையும்,நாயகிகளையும்,திரைப்பட நாயகர்களையும்,நாயகிகளையும் முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்பத்தை அனுபவிக்க எத்தனை,எத்தனையோ உறவுகள் ஓடி வரும்;ஆனால்,துன்பத்தை,வேதனையை,அவமானத்தை,துயரத்தை,அவமதிப்பை பகிர்ந்து கொள்வதற்கு இந்த செல்போன் யுகத்தில் எத்தனை உறவுகள் முன்வருகின்றன?

1990 வரை ஒரு நிறுவனத்தில் மேனேஜராவதற்குத்தான் இந்த மாதிரியான திறமைகள் தேவைப்பட்டன;தற்போதைய வருடமே 2014! வேலையில் சேருவதற்கே இந்தத் தகுதிகள் தேவைப்படுகின்றன;பள்ளி,பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்;முதலில் திக்கித் திக்கித்தான் பேச முடியும்.யார் தன்னம்பிக்கை அதிகமாக  வைத்திருக்கிறார்களோ,யார் தனது எட்டாம் வகுப்பு முதல் தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கம் வைத்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே மேடையில் கோர்வையாகப் பேச முடியும்.

பின்வரும் விதிமுறைகள்+ சந்தைப்படுத்துதல் அனுபவம் இரண்டுமே உங்கள் எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்திடவும்,தாழ்வு மனப்பான்மையின்றியும் வாழ கைகொடுக்கும்;

1.உங்களுக்கென்று இருக்கும் கொள்கைகளைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.

2.உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் உலகம்;அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

3.உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றித் தெரியாவிடில்,உடனே தெரியாது என்று உரியவர்களிடம் ஒப்புக்கொள்ளுங்கள்.அதே சமயம்,அதைப் பற்றி அறிந்து கொள்வது ஒன்றும் அவமானகரமான செயல் அல்ல;

4.எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு;அதற்காக அவர்களை வெறுக்க வேண்டாம்.

5.நீங்கள் ஒரு தவறு செய்து அதை மற்றவர்கள் கண்டுபிடித்து உங்களிடமே சொன்னால்,தயங்காமல் அந்தத் தவற்றை ஒப்புக் கொள்ளுங்கள்;

6.மற்றவர்களின் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.இதனால் அவர்களுக்கு உங்களை பிடித்துப்போகும்;

7.கோபப்படும் போதோ அல்லது குழப்பமான மனநிலையில் இருக்கும் போதோ செல்போனில் சம்பந்தப்படுபவர்களிடம் தொடர்பு கொள்ளாதீர்கள்.குறுந்தகவலும் அனுப்ப வேண்டாம்.

8.பணம்,நேரம்,பேச்சு இவைகளை அளவோடும்,தேவைப்படும் போதும் மட்டும் செலவிடப்பழகிக் கொள்ளுங்கள்.இந்த கருத்தை முறையாகப் பின்பற்றினால் அடுத்த பத்தாண்டுகளில் உங்கள் துறையில் நீங்கள் தான் முன்னோடியாகத் திகழுவீர்கள்.

9.ஒருவருடைய குறையை எப்போதும் எவரிடமும் கூறாதீர்கள்.உங்களைப் பற்றி யாராவது குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
10.எப்போதும் சுருக்கமாகப்பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.

11.மனதைச் சலனப்படுத்தும்,கிளுகிளுப்புக்குள்ளாக்கும்,போதைக்குள்ளாக்கும் எந்த விஷயத்திற்கும் ஒரு போதும்,ஒரு தடவைகூட இடம் தராதீர்கள்.ஆரம்பத்தில் மன மகிழ்வூட்டுவதாகவும்,போகப் போக உங்கள் உடல் ஆரோக்கியத்தை அந்த ‘கிளுகிளுப்பு’ சீர்குலைத்துவிடும்;உங்கள் நினைவுத்திறனை அழித்துவிடும்;நோயாளியாக்கிவிடும்; போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் உங்கள் இடத்தை தக்க வைக்க முடியாமல் போய்விடும்.

12.இணையம்,செல்போன்,முகநூல்,டுவிட்டர் போன்றவை தகவல் தொழில்நுட்ப சாதனைகளின் உச்சம் தான்! ஆனால்,நேரடியாக சந்தித்து பேசி,பழகுவதைப் போல சிறந்த அணுகுகுறை(behaviour)யைப்போல வேறு எதுவும் இந்த உலகில் எந்த நூற்றாண்டிலும் தோன்றப்போவது கிடையாது.நேரடியாகப்பேசி,பழகுவதன் மூலமாகவே ஒரு சிறந்த நட்பையோ,வாழ்க்கைத்துணையையோ மதிப்பிட முடியும்.

13.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டுவிடவேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.

14.பிற மனிதர்கள் பேசும் போது உன்னிப்பாக கவனிக்கப்பழகிக்கொள்ளுங்கள்.

15.பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்;அதே போல பிறர் உங்களுடைய நேரத்தை வீணடிக்க அனுமதிக்காதீர்கள்.

16.ஒருவருக்கு ஒரு உதவியைச் செய்வதில் சிறிது சந்தேகம் இருந்தாலும்,அதைச் செய்ய ஒப்புக் கொள்ளாதீர்கள்.

17.முடிவு செய்தல்,செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் (உங்களிடம் பணிபுரிபவர்களுக்கு) முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

18.ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்;போலியான பாராட்டுக்களை ‘அள்ளி’விட வேண்டாம்.

19.தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள். மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

20.உங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நமது பாரத தேசம் வல்லரசாக நாம் செய்ய வேண்டியது என்ன? நமது வேலை/தொழிலை அக்கறையோடும்,நேர்மையாகவும் பார்ப்பது மட்டுமே!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ