RightClick

சிவனருளை அள்ளித்தரும் திருவாதிரை நட்சத்திர கிரிவலம்!!!(1.1.14 முதல் 14.4.15 வரை)மும்மூர்த்திகளான பிரம்மா எனப்படும் அயன்,திருமால் எனப்படும் விஷ்ணு,ருத்ரன் என்ற மூர்த்தி=இம்மூவரையும் நிர்வாகிப்பவர் பைரவப் பெருமான்.பைரவப் பெருமானை உருவாக்கியவர் சதாசிவன் எனப்படும் ஆதிசிவன்.இந்த சதாசிவனின் இருப்பிடமே திரு அண்ணாமலை ஆகும்.நாம் வாழும் பூமிக்கும் நவக்கிரகமண்டலங்களான சந்திரன்,செவ்வாய்,சுக்கிரன்,சனி,புதன்,சூரியன்,ராகு,கேது இவைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மையமே விழுப்புரம் அருகில் இருக்கும் அருணாச்சலம் எனப்படும் அண்ணாமலை ஆகும்.அருணாச்சலத்தின் அவதார நட்சத்திரமே திருவாதிரை ஆகும்.


திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் விதங்களே ஒரு லட்சத்து எட்டு விதங்களாக இருக்கின்றன.சிவராத்திரி கிரிவலம்,அமாவாசை கிரிவலம்,துவாதசி கிரிவலம்,பவுர்ணமி கிரிவலம்,அவரவர் ஜன்ம நட்சத்திர கிரிவலம்,அவரவர்ஜன்ம திதி கிரிவலம்,அங்கப்பிரதட்சண கிரிவலம்,அடிக்கொரு 1008 அருணாச்சல மந்திர ஜப கிரிவலம்(இதை ஒரு தடவை முடிக்க சில மாதங்கள் ஆகும்) என்று இருக்கின்றன.திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் கிரிவலம் செல்வது  சிறந்த அதே சமயம் தகுதி வாய்ந்த சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கிரிவலம் ஆகும்.திருவாதிரை,சுவாதி,சதயம் ஆகும்.இந்த மூன்று நட்ச்த்திரங்களில் பிறப்பவர்கள் இந்த கலியுகத்தில் அதிகம்.இவர்கள் அளவுக்கதிகமாக உணர்ச்சிவயப்படுபவர்களாக இருக்கிறார்கள்:ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து விதமான வேலைகளை செய்வதில் வல்லவர்கள்;அந்த நான்கு அல்லது ஐந்து விதமான வேலைகளையும் நுணுக்கமாகவும்,நேர்த்தியாகவும் செய்வதில் சமர்த்தர்கள்.குடும்பம்,நிறுவனம்,நட்பு வட்டம்,அரசியல் போன்றவைகளில் பெரும் குழப்பத்தை சில நிமிடங்களில் செய்யும் திறனும்,ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பெரும் குழப்பத்தை சில நிமிடங்களில் சீர்செய்யும் சாகதபுத்தியும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.

தொடர்ந்து 108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்பவர்களுக்கு இப்பிறவியிலேயே அவர்கள் விரும்பும் எதையும் அருளுவார் அண்ணாமலையார்.ஒரு  நாளில் எந்த நேரத்தில் திருவாதிரை நட்சத்திரம் துவங்குகிறது என்பதை அறிந்து,அந்த நேரத்தில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் கிரிவலத்தைத்  துவக்க வேண்டும்;அவ்வாறு துவக்கும்போது மஞ்சள் நிற வேட்டி அணிந்திருக்க வேண்டும்;பெண்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருப்பது அவசியம் ஆகும்; இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்து  முக ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்; நமது உச்சந்தலையில் மூன்று மடல்களைக் கொண்ட வில்வ இலையை ஒட்டி வைத்து புறப்பட வேண்டும்.இரட்டைப்பிள்ளையாரை வழிபட்டப்பின்னர்,தேரடி முனீஸ்வரரை வழிபட்டுவிட்டு,கிழக்கு கோபுரவாசலுக்கு நேராக சாலையில் நின்று அண்ணாமலையாரை மனப்பூர்வமாக தியானித்து நமக்கு வேண்டியதை அங்கேயே கேட்டுவிட வேண்டும்;இதற்கு கிரிவல வேண்டுதல் என்று பெயர்.(இது பலருக்குத் தெரியாது)இப்படி இங்கேயே வேண்டுவதன் மூலமாக கிரிவலப்பாதையில் இருக்கும் ஒன்பது லிங்கங்களிடமும் வேண்டிவிட்டதாகவே அர்த்தமாகிறது என்று ஒரு சிவனடியார் சொன்னது ஆச்சரியமளித்தது.(கடந்த காலங்களில்-கிரிவலம் புறப்படும் போது- கிழக்கு கோபுர வாசலில் நின்று வேண்டியதுதான் இதுவரை நிறைவேறியிருக்கிறது.கிரிவலப்பயணத்தில் வேண்டியது நிறைவேற வில்லை;)பிறகு கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலப் பயணம் முழுவதும் ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தவாறு செல்ல வேண்டும்;


14 கி.மீ.தூரமுள்ள கிரிவலப்பாதையினை கடக்க குறைந்தது நான்கு மணி நேரமும்,அதிகபட்சம் எட்டு மணிநேரமும் ஆகிறது.இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும்,விடாமல் ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தவாறும் சென்றால் நமது ஜப எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது.இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திர ஜபத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை;

கிரிவலப்பயணத்தில் ஆங்காங்கே தண்ணீர் அல்லது இளநீர் மட்டும் அருந்திக்கொள்ளலாம்.(காபி,டீ,பால்,குளிர்பானங்கள் அருந்தக் கூடாது) இவ்வாறு தண்ணீர் அல்லது இளநீர் அருந்துவதால் அதுவரை நாம் ஜபித்த ஓம் அருணாச்சலாய நமஹ மந்திரஜபமானது நமது உடலுக்குள் பதிவாகிவிடும்.அண்ணாமலையின்  கிரிவலப்பாதையில் ஜபித்த ஓம்அருணாச்சலாய நமஹ மந்திர ஜபமானது உடனே நமது உடலுக்குள் பதிவானால் வெகுவிரைவில் சிவனது அம்சமான ருத்ரனாக மாற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.(தண்ணீர்,இளநீரைத்  தவிர வேறு எதை அருந்தினாலும்,எதை சாப்பிட்டாலும் மந்திரம் உடலுக்குள் பதியாமல் போய்விடும்;வீணாக எதைப்பேசினாலும் இதே கதிதான்)
இப்படி முதல்முறை மனக்கட்டுப்பாட்டுடன் கிரிவலம் வருவது மட்டும் சிரமமாக இருக்கும்;அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும்.அப்படி ஒரேஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம்அருணாச்சலாய நமஹ ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறு நாளே நமது கடுமையான பிரச்னை ஒன்று தீர்ந்துவிடும்;அல்லது தீர்ந்துவிடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பது அனுபவ உண்மை.கிரிவலம் முடிந்ததும்,கண்டிப்பாக மூலவரான அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும்.தரிசனம் செய்து விட்டப்பின்னர்,நேரடியாக நமது வீட்டுக்குச் செல்ல வேண்டும்;வேறு எந்த கோவிலுக்கும்,எவரது வீட்டுக்கும் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.இந்த கிரிவலத்துக்குப் பயன்படுத்தும் மஞ்சள் நிற ஆடைகளை வேறு எப்போதும் பயன்படுத்தக் கூடாது;துவைக்கக் கூடாது;ருத்ராட்சங்களையும் இதே போலத்தான்! ஒவ்வொரு முறையும் வேறுவேறு வில்வதளங்களை பயன்படுத்த வேண்டும்.திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கிரிவலம் மிகச் சுலபமாக கைகூடும்;


இப்படி குறைந்தது 27 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அதிகபட்சமாக 108 திருவாதிரை நட்சத்திரநாட்களுக்கு கிரிவலம் வந்தால் நாம் சிவகணமாக மாறிவிடுவோம்;அல்லது ருத்ரனாக உயர்ந்து விடுவோம்;ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 13 திருவாதிரை நட்த்திரம் தான் வரும்;108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு மொத்தம் ஒன்பது வருடங்கள் தேவைப்படுகின்றன.இது ஒரு மிக பிரம்மாண்டமான ஆன்மீகமுயற்சி! களத்தில் இறங்குவோமா?


இந்த ஜய வருடத்தின் திருவாதிரை நாட்களின் பட்டியல்:

14.1.14 செவ்வாய் காலை 8.19 முதல் 15.1.14 புதன் காலை 10.44 வரை;

10.2.14 திங்கள் மதியம் 3.36 முதல் 11.2.14 செவ்வாய் மாலை 5.58 வரை;

9.3.14 ஞாயிறு இரவு 10.58 முதல் 10.3.14 திங்கள் நள்ளிரவு 1.17 வரை;

6.4.14 ஞாயிறு காலை 6.23 முதல் 7.4.14 திங்கள் காலை 8.40 வரை;

3.5.14 சனி மதியம் 1.54 முதல் 4.5.14 ஞாயிறு மாலை 4.04 வரை;

30.5.14 வெள்ளி இரவு 9.24 முதல் 31.5.14 சனி இரவு 11.38 வரை;

27.6.14 வெள்ளி விடிகாலை 4.50 முதல் 28.6.14 சனி காலை 6.53 வரை;

24.7.14 வியாழன் மதியம் 12.19 முதல் 25.7.14 வெள்ளி மதியம் 2.15 வரை;

20.8.14 புதன் இரவு 7.42 முதல் 21.8.14 வியாழன் இரவு 9.04 வரை;

17.9.14 புதன் முழுவதும்(புதன் இரவு கிரிவலம் செல்லலாம்)

14.10.14 செவ்வாய் காலை 10.17 முதல் 15.10.14 புதன் காலை 11.52 வரை;

10.11.14 திங்கள் மாலை 5.40 முதல் 11.11.14 செவ்வாய் இரவு 7.11 வரை;

7.12.14 ஞாயிறு இரவு 12.57 முதல் 8.12.14 திங்கள் நள்ளிரவு 2.17 வரை;

4.1.15 ஞாயிறு காலை 8.19 முதல் 5.1.15 திங்கள் காலை 7.40 வரை;(இந்த நாளில் பவுர்ணமி!)

31.1.15 சனி மதியம் 3.55 முதல் 1.2.15 ஞாயிறு மதியம் 3.53 வரை;

27.2.15 வெள்ளி இரவு 11.32 முதல் 28.2.15 சனி இரவு 12.39 வரை;

27.3.15 வெள்ளி காலை 7.15 முதல் 28.3.15 சனி காலை 8.13 வரை;
இந்த பெருமுயற்சியைச் செய்ய விரும்புவோர் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்;முறையற்ற உறவு,அசைவ உணவு,மது இவைகளை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.இதனால்,இப்பிறவியிலேயே சிவனருள் கிட்டும்;முற்பிறவிகளில் ஏராளமான சிவ வழிபாடுகள் செய்தவர்கள் இந்த திருவாதிரை கிரிவலம் செல்வதன் மூலமாக இப்பிறவியோடு சிவகணமாகும் வாய்ப்பு கிட்டும்;

மேலே கூறப்பட்டிருக்கும் நாட்களில் திருவாதிரை நட்சத்திரம் எந்த நாளில் இரவு முழுவதும் இருக்கிறதோ அப்போது கிரிவலம் செல்வது சிவனருளை அள்ளித்தரும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் வாக்கு!!! எனவே,ஐயா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகளைத் தெரிவித்தவாறு திருவாதிரை கிரிவலம் செல்வோம்;


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ