RightClick

நமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்

எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார்;தினசரி வேலைக்குச் சென்றால்தான் அவரது குடும்பமே அன்றைக்கு மூன்று வேளைகளும் உணவு உண்ணமுடியும்.அவருக்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது;பிறந்த நொடியில் இருந்தே அவரிடம் பணப்புழக்கம் வர ஆரம்பித்தது;இத்தனைக்கும் அவரது திருமணம் ஆனது முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகே மூன்றாவது குழந்தை பிறந்தது; வறுமையின் கொடுமையை நன்றாகவே ஆழ்மனதில் அவர் பதிந்து வைத்திருந்தபடியால் அவர் செல்வவளம் வர ஆரம்பித்ததும்,எச்சரிக்கையாகச் செயல்பட ஆரம்பித்தார்;பணப்புழக்கத்தை பல ஆண்டுகளாக மறைத்தே வைத்துக் கொள்ளப் பழகியிருக்கிறார்;

பரம்பரைப் பணக்காரர்கள் எளிமையாக இருப்பதை கூர்ந்து கவனித்திருக்கிறார்;புதிய பணக்காரர்கள் தமது செல்வச் செருக்கை வெளியே காட்டிக் கொண்டு வெகு விரைவில் மீண்டும் ஏழ்மையை நோக்கி வந்துவிட்டதையும் பல ஆண்டுகளாக கவனித்திருக்கிறார்;எனவே,அவர் தனது குடும்பத்தில் மறைமுக சர்வாதிகாரியாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்;அதாவது,எதற்கும் கோபப் படாமல் இருந்து,சிரித்துக்கொண்டே ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்;தமக்குக் கிடைத்தபணப்புழக்க யோகத்தை வெளியே தம்பட்டம் அடிக்கவில்லை;தனது மூன்றாவது மகனால் வந்த யோகத்தை எவரிடமும் காட்டிக்கொள்ளவில்லை;மூன்றாவது மகன் பிறந்த ஒரு வருடம் கழித்தப் பின்னரே தனது கடன்களை அடைக்க ஆரம்பித்திருக்கிறார்;

 வறுமையில் இருக்கும்போது புலம்பியதை விடவும், அதிகமாக புலம்பியிருக்கிறார்;ஏதோ கடவுள் கொஞ்சம் அதிர்ஷ்டத்தைக் கொடுத்ததாகவும்,இன்னும் நிறைய கடன்களை அடைக்க வேண்டியிருக்கிறது;எப்படி அவைகளை அடைப்பது? என்று எல்லோரிடமும் புலம்பியவாறே, மூன்றாவது மகன் பள்ளிக்குச் செல்லும் முன்பாகவே சொந்தமாக இரண்டு வீடுகள் கட்டிவிட்டார்.அதன்பிறகே,செல்வச் செருக்கை ஒரு எல்லையோடு தற்காப்புக்காக எல்லோரிடமும் காட்டத் துவங்கினார்.

அதே சமயம்,தனது ஆஸ்தான ஜோதிடர் மூலமாக தனது மூன்றாவது குழந்தை பிறப்பினால் தான் இந்த செல்வ வளம் வந்தது என்பதை உணர்ந்துகொண்டார்;ஆனால்,அதை ஒருபோதும் தனது குடும்பத்தாரிடமோ,ஆருயிர் நட்புகளிடமோ காட்டிக் கொள்ளவேயில்லை;
பெரும்பாலானவர்கள் குழந்தை பிறந்ததும்,ஒரு வருடம் வரை அந்த குழந்தைபிறந்த கிரகநிலையைப் பார்ப்பதில்லை;காரணம் எல்லோரும் பார்ப்பதில்லை;அதனால் இவர்களும் பார்ப்பதில்லை;முற்காலத்தில் பால அரிஷ்ட தோஷம் என்ற தோஷம் இருந்தது;இது ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடம் வரை அந்த குழந்தையின் உயிருக்கு உத்தரவாதமில்லை;ஆனால்,இன்றைய காலகட்டத்தில் கர்ப்பகாலத்தில் இருந்தே மருந்துகள் சாப்பிட ஆரம்பிக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது;இதனால்,பால அரிஷ்டம் அல்லது பால அரிஷ்டதோஷம் தற்போது செயல்படுவதில்லை;

அதே போல பெண் குழந்தை பிறந்தால் அது யோகம் என்று தமிழ்நாட்டில் ஒரு நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது;அது உண்மையல்ல;யோகத்தை ஆண்குழந்தையும் தரும்;அதே போல முதல் குழந்தை தான் யோகத்துடன் பிறக்கும் என்ற நம்பிக்கையும் தமிழ்நாட்டில் பரவலாக இருந்து வருகிறது.அதுவும் உண்மையில்லை;
(ஒரு முக்கியமான எச்சரிக்கை:உங்களுக்கு யோகத்தை அள்ளித் தரும் குழந்தை பிறந்தால்,அந்த ஜோதிட ரகசியத்தை வாழ்க்கைத் துணையிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது இந்த பொறாமையுகத்தில் அவசியம்.சில ஆண்டுகளுக்கு முன்பு,தமிழ்நாட்டின் அண்டைமாநிலம் ஒன்றில் ஒருவருக்கு யோகத்தை அள்ளித்தரும் ஒரு பெண்குழந்தை ஒருவருக்கு பிறந்தது;பிறந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர் ஒரு மாதத்திற்கு ரூ.100 கோடி வரை சம்பாதிக்குமளவுக்கு அந்த பெண் குழந்தையின் யோகம் செயல்பட்டுவந்தது;தனது அத்தனை வளர்ச்சிக்கும் அந்த மகள் தான் என்று அந்த அப்பா ஊரெல்லாம் தெரிய புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
அவரது தொழில் போட்டியாளர்களும்,உறவினர்களும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து,அவர் சொல்வது உண்மையா? என்பதை அடுத்த சில ஆண்டுகளில் கண்டறிந்தனர்.அது உண்மை என்று அறிந்ததும்,அந்த யோகக்கார பெண் குழந்தையை கொன்றுவிட்டனர்;இந்தத் தகவல் 2008 ஆம் ஆண்டு ஜீனியர் விகடனில் வெளிவந்தது;)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஜோதிட செண்டிமெண்ட் தமிழர்களுக்கு மட்டுமே உரியது.ஏனெனில்,உலகத்திலேயே சகுன  சாஸ்திரத்தை கண்டறிந்தது நமது தமிழ் இனம்தான்! இந்த சகுன சாஸ்திரம் கண்டறிந்து சில ஆயிரம் ஆண்டுகளானாலும் இன்றும் நம்மிடையே உலவிவருகிறது.

திரையுலகத்தில் சகுன சாஸ்திரம்,செண்டிமெண்டாக காலம் காலமாக இருந்துவருகிறது.கோட் சூட் போட்டு ஒரு காட்சியாவது வைத்தால் தான் ‘வில் வித்தை’நடிகரின் படம் வெற்றியடையும் என்று அவரே நம்புவது ஒரு உதாரணம்!அரசியலில் சொல்லவே வேண்டாம்: ஒவ்வொரு அரசியல் தலைவருமே ஒவ்வொருவிதமான செண்டிமெண்டுகளை தனது தினசரி வாழ்வில் பின்பற்றிவருவதை நாம் தினசரி வாழ்க்கையில் செய்தித்தாள் மூலமாக அறிந்து கொண்டே இருக்கிறோம்.ஒரு உதாரணம்: மதுரையில் இருக்கும் அரசியல் வாரிசு,தனது ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தையும் நரசிங்கப் பெருமாள் கோவில் வாசலில் துவக்குவதைச் சொல்லலாம்;
##########################################################
தனி மனிதர்கள் மத்தியில் ஏராளமான ஜோதிட செண்டிமெண்டுகள் பின்பற்றப்பட்டுவருகின்றன;ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள்!

 இருவருமே திருமணமாகி,அடுத்தடுத்த வீட்டில் வசித்து வந்தனர்;திருமணமாகி குழந்தைகள் பெரியவர்களானாலும் யாராலும் பிரிக்க முடியாத சகோதரர்களாக வாழ்ந்து வந்தனர்;இந்நிலையில் மூத்தவருக்கு செவ்வாய் மஹாதிசை ஒரு வருடத்தில் துவங்க இருந்தது;அவரது ஜோதிடரின் ஆலோசனைப்படி,மூத்தவர் தனது வீட்டைக் காலி செய்து அருகில் இருந்த தம்பியின் வீட்டில் குடியேறினார்;இளையவர் அண்ணனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு மூத்தவரின் வீட்டிற்கு குடும்பத்தோடு இடம் மாறினார்;எட்டு ஆண்டுகள் கடந்தன;மூத்தவருக்கு செவ்வாய் மஹாதிசை முடிந்து இராகு மஹாதிசை துவங்கியது.மீண்டும் சகோதரர்கள் அவரவர் வீடுகளுக்கு மீண்டும் குடியேறி இருவருமே தத்தம் சொத்துக்களை பாதுகாத்துக் கொண்டனர்.

ஒரு திறமையான ஜோதிடர் நேர்மையான முறையில் ஜோதிடம் பார்த்தால்,அவரால் ஒரு சாதாரண மனிதனையும் சகலகலா வல்லவனாக்கிட முடியும்;மகத்தான செல்வந்தராக்கிட முடியும்;தேவை அந்த சாதாரண மனிதனுக்கும்,அவரது ஆஸ்தான ஜோதிடருக்கும் இடையே ஒளிவு மறைவு இல்லாத நட்பும்,ஜோதிட பக்தியுமே!!!
***********************************************************************************

சிலருக்கு நீல நிறச் சட்டை அணிந்திருக்கும் நாளில்  எடுத்த அனைத்துக் காரியமும் வெற்றியடைவதைக் கவனித்திருப்பர்;

சிலருக்கு குல தெய்வம் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பினால்,வாழ்க்கையில் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டி வருகின்றனர்.

சிலர் ஒரு குறிப்பிட்ட செண்டிமெண்ட் வைத்திருக்கின்றனர்:-வீட்டில் இருந்து வெளியே புறப்படும் போது தனது மனைவியிடமிருந்து ரூ10/-மட்டுமாவது வாங்கிச் சென்றால் அந்த நாள் முழுவதும் அவருக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இன்னும் சிலர் தினமும் தனது தாயாரிடம் காலில் விழுந்து வணங்கிவிட்டு, அவர் வாயால் ஓரிரு நல்ல வார்த்தை வாங்கியப் பின்னர் புறப்பட்டால் தான் அந்த நாளே வெற்றி நிரம்பியதாக இருக்கிறது.

இன்னும் சிலர் தனது விட்டின் வாசலில் அமைந்திருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் வழிபட்டுவிட்டுச் சென்றால் தான் அந்த நாள் அவருக்கு சுறுசுறுப்பும்,சாதிப்பும் நிரம்பியதாக அமைகிறது.

சிலருக்கு திருமணம் ஆகும் வரையிலும் வாழ்க்கை  மிக மெதுவாகவும்,வேதனையும்,அவமானங்களும் நிரம்பியதாக இருந்திருக்கும்; திருமணம் ஆனப் பின்னர்,கிடுகிடுவென்று வளர்ச்சி மேல் வளர்ச்சியை அடைந்து வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்பை மட்டுமே அனுபவித்துவருகின்றனர்.இது போன்ற திடீர் அதிர்ஷ்டசாலி கணவன்களை நமது தெருவிலேயே காணலாம்.(அதிர்ஷ்டசாலி மனைவிகளும் உண்டு;ஆமாம்!)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்நாட்டில் அதுவும் மீனாட்சி நகரில் சைக்கிள் தயாரித்து வந்த நிறுவனம் அது! தற்போது  வாகனத்தயாரிப்பில் இந்தியாவின் ஒட்டு மொத்த சந்தையையும் கைப்பற்றிய கையோடு,ஆசிய நாடுகள் முழுவதிலும்  வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது.அந்த நிறுவனத்தை உருவாக்கியவரின் ஜாதகப்படி,சொந்த நிறுவனம் நடத்தும் யோகமே கிடையாது;அவர் சொந்தமாக நிறுவனம் ஆரம்பிப்பதற்காக ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறார்;அப்படி கடன் வாங்கியதன் விளைவாகவே இவரது சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் இன்று சர்வதேச  வாகன நிறுவனமாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
இந்த ஜோதிட ரகசியத்தை தற்செயலாக அவரிடம் அவரது ஆஸ்தான ஜோதிடர் ‘கண்டுபிடித்து’ சொல்ல,அவரது ஆலோசனையை மூன்று தலைமுறையாக பின்பற்றி வருகின்றனர்.
நீ யாரிடம் கடன் வாங்கியிருக்கிறாயோ,அவரிடம் மொத்தக் கடனையும் அடைத்துவிட்டால்,அத்துடன் உனது நிறுவனத்தின் வளர்ச்சியும் நின்றுவிடும்;
நீயும் சரி,உனது வாரிசுகளும் சரி;அந்தக் கடனை அடைக்கவே கூடாது;அதே சமயம்,அந்த கடன் கொடுத்தவரும்,அவரது வாரிசுகளும் உன்னிடமோ,உனது வாரிசுகளிடமோ ‘எங்கள் கடனைத் திருப்பித் தாருங்கள்’ என்று கேட்டுவிட்டாலே உனது நிறுவனத்தின் வளர்ச்சி நின்றுவிடும்.
1950களில் ரூ.10,000/-கடன் வாங்கி முழுமையான நம்பிக்கைக்குரிய என்ற பெயரில் மும்பையில் நிறுவனம் துவக்கினார் அவர். தனது கடின உழைப்பாலும்,ஒருங்கிணைப்புத் திறமையாலும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக தனது கமர்ஷியல் கார்பரேஷனை ஆக்கிவிட்டார்;தனது இறுதிக் காலத்தில் அவரது வர்த்தக சாம்ராஜ்ஜியம் 74 விதமான பொருட்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.ரூ.1,00,000 கோடி மதிப்பிலான சொத்துக்களோடு வளர்ந்திருந்தது;

அவரது மறைவிற்குப் பின்னர்,அவரது வாரிசுகளுக்கு பாகப்பிரிவினை செய்தது அவர்களின் ஆஸ்தான ஜோதிடரே! சகோதரர்களின் பிறந்த நேரப்படி யாருக்கு எந்தத் தொழில் சரிப்பட்டு வரும் என்பதை உரியவர்களுக்குப்புரிய வைத்து ஒவ்வொருவருக்கும் உரிய தொழிலை(இண்டஸ்ட்ரி) ஒப்படைத்தார்.இன்று இவர்களே அடுத்த ஜனாதிபதியையும்,அடுத்த பிரதமரையும் நிர்ணயிக்கும் இடத்தில் இருந்து வருகிறார்கள்.ஆமாம்! உலகமயமாக்கலின் விளைவால் இந்தியாவில் ஜனநாயகம் என்ற முகமூடியுடன் முதலாளித்துவமே ஆட்சி புரிகிறது.
**********************************************************************************
எதற்காக இந்த பதிவில் உண்மைச் சம்பவங்களை எழுதி வெளியிடுகிறோம் எனில்,

ஜோதிடக் கலை ஒரு நுட்பமான அறிவியல் கலை;

ஏராளமான ஆன்மீக ரகசியங்களை நமக்குத் தரக் காத்திருக்கும் தெய்வீகக் கலை;

மனிதர்களுக்கு,நிறுவனங்களுக்கு,அரசியல் கட்சிகளுக்கு,ஒரு நாட்டிற்கு,ஒரு குறிபிட்ட பகுதியில் வாழ்பவர்களுக்கு  தலைசிறந்த வழிகாட்டும் கலை;

விஞ்ஞானமும் மெய்ஞானமும் நிரம்பிய கலை;

எல்லாத் துறைகளிலும் போலி இருப்பது போல இங்கேயும் போலிகள் உண்டு;ஜோதிடக் கலைக்கு எதிராக ஏராளமான பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன;சரியான/நேர்மையான ஜோதிடரைக்  கண்டறிவது அவரவரின் தனிப்பட்ட சாமர்த்தியம்.இதற்கு என்று எந்த ஒரு பார்முலாவும் கிடையாது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ