RightClick

சொர்ணாகர்ஷண கிரிவலம்:ஓர் நேரடி அனுபவ அறிக்கை!!!


உலகத்தின் முதல் மற்றும் முழுமையான வழிபாட்டுமுறையான சைவ சமயம் இன்றைய திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் தாலுகாவிற்குள் அமைந்திருக்கும் உதயத்தூர் என்ற கிராமத்தில் பலகோடி ஆண்டுகளுக்கு  முன்பு தோன்றியது;தோன்றிய சில லட்சம் ஆண்டுகளிலேயே உலகம் முழுவதும் பரவியது;வேறு உலகங்களுக்கும் நாம் வாழும் பூமிக்கும் இடையே இருக்கும் இணைப்பு மையமாக அண்ணாமலை அமைந்திருக்கிறது.
இவ்வாறு அமைந்திருக்கும் இணைப்பினைப் பற்றி அறிய வேண்டுமானால்,நாம் நமது பகுத்தறிவையும்,எதற்கெடுத்தாலும் நம்பாத/எல்லோரையும் எப்போதும் சந்தேகப்படும் சுபாவத்தையும் கைவிட வேண்டும்.உணர்வுபூர்வமாக இந்த ஆன்மீகக்கடல் பதிவுகளை வாசிக்க வேண்டும்;மனப்பூர்வமாக இந்த ஆன்மீகக்கடல் பதிவுகளில் எது உங்களை ஈர்க்கிறதோ,அதை உளமார பின்பற்றத் துவங்கிடவேண்டும்;இவ்வாறு தொடர்ந்து மூன்று வருடங்கள் வரை பின்பற்றினால் நிச்சயமாக உங்களுடைய அனைத்து கர்மாக்களும் கரைந்து காணாமல் போய்விடும்;

அவ்வப்போது ஆன்மீகக்கடல் மூலமாக நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் அறிவிக்கும் அரிய மற்றும் அபூர்வமான ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே வரவேண்டும்;அவ்வாறு செய்தால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளில் நமது ஆத்மா அனைத்துக் கர்மவினைகளில் இருந்தும் நீங்கி,பரிசுத்தமான தலைமுறைக்கு உரியவர்களாக மாறிவிடுவோம்;இந்த சூழ்நிலையைக் கொண்ட ஒரு பைரவ யுகத்தை 30.11.2013 சனிக்கிழமை அன்று சைவத்தின் தலைநகரான அண்ணாமலையில் நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் துவக்கிவிட்டார்;இந்த நன்னாளில் காலையில் வந்த குரு ஓரையில்,குரு சூட்சும ஓரையில்,குரு அமிர்தாதி கணத்தில் ஐயா அவர்களின் தலைமையில் சுமாராக 2000 பக்தர்கள்  இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டனர்;அனைவருமே மஞ்சள் நிற ஆடை அல்லது பிங்க் நிற ஆடை அணிந்திருந்தனர்; கிரிவலப்பாதை முழுவதும் லோக வசிய சிவமந்திரமும்,கிரிவல சிவமந்திரமும் ஒலித்துக்கொண்டே சென்றனர்;
இந்திரலிங்கத்தின் பகுதியில் இருந்த சாதுக்களுக்கு ஐயா சகஸ்ரவடுகர் அவர்களுடன் வந்திருந்த பக்தர்கள்,ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் இட்லிதானம் (எள்பொடி+நல்லெண்ணெயுடன்) செய்தனர்;இதன் மூலமாக,முன்னோர்களுக்கு பல ஆண்டுகளாக செய்யாமல் விடுபட்டிருந்த தர்ப்பணம் நிறைவேறியது;முன்னோர்களின் சாபமும்,சனியால் ஏற்படும் ஏழரைச்சனி,கண்டச்சனி,அஷ்டமச்சனி,அர்த்தாஷ்டமச்சனி தாக்குதலும் நின்றுபோனது;


அக்னிலிங்கத்தில் வந்திருக்கும் அனைத்து ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள்;அவர்களின் உறவினர்கள்,நண்பர்களை ஒருங்கிணைத்து,வரிசையாக்கினர் ஆன்மீகக்கடல் அணுக்கத் தொண்டர்கள்;வந்திருந்த ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு ருத்ராட்சங்களை ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தானமாக வழங்கினார்;கூடவே,கிரிவலப் பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை விளக்கினார்;உள்ளங்கையில் எப்படி ருத்ராட்சத்தை வைத்துக்  கொள்ள வேண்டும் என்ற ருத்ராட்ச தீட்சையும் வழங்கினார்.
இந்த சமயத்தில்,இரட்டைப்பிள்ளையார் கோவிலுக்கு ஏராளமான வெளியூர் ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் வந்தடைந்திருப்பதாக தகவல் அறிந்ததும்,அவர்களை உடனடியாகப் புறப்பட்டு வரும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது;  அவர்களின் வருகைக்காக அனைவரும் அக்னி லிங்கத்தில் 20 நிமிடமும்,எமலிங்கத்தில் 20 நிமிடமும் காத்திருந்தனர்;ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் சாதுக்களுக்கு இட்லி தானம் வழங்கப்பட்டது;இட்லி தானம் செய்த வாசக,வாசகிகளை விடவும் அண்ணாமலை கிரிவலப்பாதையில் இருக்கும் சாதுக்களின் எண்ணிக்கை மிக அதிகம்!

எமலிங்கத்தின் அருகில் இருந்த குளத்திலும்,அதன் சுற்றுப்புறங்களிலும் நவதானியங்களை ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் எடுத்துக் கொடுக்க ஒவ்வொருவராகப் பெற்றுக் கொண்டனர்;குளத்தினுள் இறங்கி கைகளில் இருந்த நவதானியங்களுடன் மனப்பூர்வமாக தமது கோரிக்கைகளை நினைத்து அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு குளத்தினுள்ளும்,அதன் சுற்றுப்புறங்களிலும் தூவினர்;இதே போல் ஈசான லிங்கத்தை அடையும் வரையிலும் கிரிவலப்பாதைகள்,கிரிவலப்பாதையை ஒட்டி அமைந்திருக்கும் குளங்கள்,சாலையோரங்கள்,முட்புதர்களில் நவதானியங்களும்,டயமண்டுகல்கண்டுகளும் தூவப்பட்டன;இதன் மூலமாக நவக்கிரகங்களால் ஏற்பட்டிருந்த கிரக தோஷங்கள்,தடைகள் நீக்கப்பட்டன;(ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஓரிரு கிரகம் தடைகளை உருவாக்கிக் கொண்டு,அவர்களின் வாழ்க்கையில் சாதிக்கவிடாமல் முட்டுக்கட்டையாக இருக்கும்;இந்த முட்டுக் கட்டை முழுமையாக நீங்கிடவே அண்ணாமலையில் நவதானியங்கள் தூவப்பட்டன;இதே போல,பழனிமலையிலும்,சபரிமலையிலும்,சதுரகிரியிலும்,வேறு எந்த ஒரு மலையிலும்,கொல்லிமலையிலும்,பர்வதமலையிலும் தூவலாம்;)
ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் திருமண் வழங்கி ஆசிர்வாதித்தார்;


சந்திரலிங்கத்தைக் கடந்ததும்,ஓரிடத்தில் சொர்ணாகர்ஷண கிரிவல பக்தர்கள் குழுமினர்;இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் உரையாற்றினார்:

 இன்றைய அண்ணாமலைப் பகுதியில் அக்காலத்தில் போரூர் என்ற கிராமம் இருந்தது;இந்த கிராமத்தில் வீர சைவ நெசவு சமுதாயத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார் தனகாந்தன்+பொன்னம்மாள் தம்பதியருக்கு சுபக்கிரகங்கள் சுபமான இடத்தில் வலுப்பெற்று நின்றபோது,சிவாம்சத்துடன் ஒரு ஆண் குழந்தை கி.பி.1403 ஆம் ஆண்டில் பிறந்தது;பிறந்தது முதலே அந்தக் குழந்தை பேச ஆரம்பித்தது;


வயது அதிகரிக்க,அதிகரிக்க யாருடைய உபதேசமும் இல்லாமல் வேதமந்திரங்களைப் பாடத் துவங்கியது;தினமும் மந்தார இலையில் யாசகம் பெற்று, ஒவ்வொருவருக்குமே அண்ணாமலையின் பெருமைகளை விவரித்து,ஒவ்வொருவருக்குமே அண்ணாமலையாரை எப்படி வழிபட்டால்,அவர்களின் அனைத்து பிரச்னைகளும்,கர்மவினைகளும் தீரும் என்று உரைக்கத் துவங்கியது;


ஐந்து வயதாகும் போது,தனது மகனிடம் சிவாச்சாரியார் தனகாந்தன்,

உன்னுடைய பெயர் என்னப்பா? என்று விளித்திருக்கிறார்.

“தனகாந்தன் என்பது எனது பெயர்” என்று அந்த சிவ அம்சம் தெரிவித்திருக்கிறது.


“எனது பெயர் எப்படியப்பா உனது பெயராகும்?” என்று சிவாச்சாரியார் தனகாந்தன் தனது மகனிடம்  கேட்டிருக்கிறார்.அதற்கு,அந்த சிவ அம்சமான குழந்தை,

இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து செல்வ வளங்களையும் படைத்து,அதை காக்கும் சக்தி ஈஸ்வரனுக்கு மட்டுமே உண்டு;அந்த ஈஸ்வரனின் பெயரே தனகாந்தன்! அதுவே அடியேனது பெயர்

என்று தனது தந்தைக்கு உபதேசித்திருக்கிறது.அதைக் கேட்டு கண்ணீர் மல்க சிவாச்சாரியார் தனகாந்தன்,

அப்பா,அடியேன் செய்ய வேண்டிய கடமை யாது? அதற்குரிய பொருளுக்கு எங்கே செல்வது? என்று தனது மகன் தனகாந்தனிடம் வேண்டியிருக்கிறார்.


உடனே,அண்ணாமலை இருக்கும் திசையை நோக்கி, அடியேனது பெயர் தனகாந்தன் என்பது நிஜமெனில்,பொருள் கொடுங்கள் தந்தையே! என்று வேண்ட,மறு கணமே வீட்டு முற்றம் முழுவதும் பொன் மழை பொழிந்திருக்கிறது.


தனது தந்தையிடம் அவைகளை எடுத்து பத்திரப்படுத்தி வைக்கச் சொல்லிவிட்டு,அதைக் கொண்டு அண்ணாமலையார் கோவில் திருப்பணிகளில் ஈடுபடத் தூண்டியிருக்கிறார்.தனது வாழ்நாள் முழுவதும் அதை தனகாந்தன் தொடவே இல்லை;


சிவாச்சாரியர் தனகாந்தனும் தனது மகனின் ஆசைப்படி,அண்ணாமலையார் கோவில் திருப்பணியையும்,32 வகையான தர்மங்களையும் செய்திருக்கிறார்.


ஐந்து வயது முதல் 16வயது வரையிலும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆறு வேளைகளிலும் ஆறுமுறை கிரிவலம் வந்திருக்கிறது;

கூடவே,ஏராளமானவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த குறிபிட்ட நாளில் கிரிவலத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது;ஒரே ஒரு முறை கிரிவலம் வந்தவர்கள் தமது துயரங்கள் நீங்கி,வளமான வாழ்வை அடைந்தனர்;அவ்வாறு கிரிவலம் வரும்போது சிவசக்தி ஜீவ ஐக்கிய தரிசனம் செய்யும் இடத்தில் நின்று நீண்டநேர பிரார்த்தனை செய்து தனது வறுமையை முழுமையாக நீக்கியுள்ளனர்;


கி.பி.1419 ஆம் ஆண்டில் அதே இடத்தில் இருந்து அண்ணாமலையை நோக்கி ஒளி வடிவில் பயணித்து இரண்டற கலந்திருக்கிறார் தனகாந்தன்! அந்த நாளே கார்த்திகை மாதம் வரும் சனிப்பிரதோஷமும்,அபிஜித் நேரமும் கூடிய சுபயோக சுபவேளை ஆகும்.


தனகாந்தன் என்ற சதாசிவ பரமேஸ்வர சித்தருக்கு ஜீவசமாதி கிடையாது;அண்ணாமலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஜீவசமாதிகளும்,சித்தர் ஜீவசமாதிகளும் இருக்கின்றன;பல சிவ பக்தர்கள் ஒளிவடிவில் அண்ணாமலையாருடன் இரண்டறக் கலந்து விட்டனர்;இன்றும் கூட அவ்வப்போது,இப்படி அண்ணாமலையாருடன் ஒளிவடிவில் இரண்டறக் கலப்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது;


இந்த சுபவேளையில் வந்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவருமே அண்ணாமலையாரின் ஆசியோடு,தனகாந்தனின் ஆசிர்வாதத்தால் உங்களின் அனைத்து நியாயக்  கோரிக்கைகளும் நிறைவேறும்;அவ்வாறு நிறைவேறியதும்,மறக்காமல் எமக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.

தனகாந்தன் மந்தார இலையால் ஆடை அணிந்திருப்பார்;மந்தார இலையில் யாசகம் பெற்று சிவத் தொண்டு புரிந்திருக்கிறார்;பிற்காலத்தில் இவர் சதாசிவ பரமேஸ்வரசித்தர் என்ற பெயருடன் பிரபலமடைந்தார்;

இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொண்டிருக்கும் ஏராளமான பக்தர்கள் காலையில் சாப்பிடாமலேயே வந்திருக்கின்றனர்;இந்த அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கு அண்ணாமலையாரும்,தனகாந்தன் ஐயாவும் பரிபூரணமாக ஆசிகளை வழங்குவார்;
இந்த சிற்றுரையின் முடிவில் சொர்ணாகர்ஷண நாணயம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது;அவ்வாறு வழங்கப்பட்ட சொர்ணாகர்ஷண நாணயங்களைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1008 ஆகும்.

குபேரலிங்க வளாகத்தில் அமைந்திருக்கும் மைதானத்திலும் மறுபடியும் ஒருமுறை சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் தெய்வீக ரகசியம் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது;பிறகு,நமது தேசமும்,மாநிலமும்,ஊரும்,குடும்பமும் நலமுடனும்,வளமுடனும் வாழ கூட்டு தியானம் செய்யப்பட்டது;இதன் மூலமாக வந்திருந்த அனைவருக்கும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் ஸ்பரிச தீட்சை வழங்கினார்.

ஸ்பரிச தீட்சை வழங்கியப் பின்னர்,1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 சித்தர்களும் ஒன்றாக வர இருக்கும் கழுகுமலை கிரிவலநிகழ்ச்சி 16.12.2013 திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெற இருப்பதை ஐயா சகஸ்ரவடுகர் அனுமதியுடன் ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி(எ)சிவமுனி அறிவித்தார்.கழுகுமலையானது கோவில்பட்டிக்கும்(மதுரை டூ திருநெல்வேலி நெடுஞ்சாலை), சங்கரன்கோவிலுக்கும்(ராஜபாளையம் டூ திருநெல்வேலி துணை நெடுஞ்சாலை) நடுவே அமைந்திருக்கும் ஒரு கிராமம் ஆகும்.இங்கே கழுகாச்சல மூர்த்தி என்ற பெயருடன் முருகக் கடவுள் அருள்பாலித்து வருகிறார்.சித்தர்கள் அடிக்கடி சூட்சுமமாகவும்,நேரடியாகவும் வந்து செல்லும் இடம் இது; 

மதியம் 12.40க்கு பூத நாராயணர் கோவிலில் இனிதாக சொர்ணாகர்ஷண கிரிவலம் நிறைவடைந்தது;மதிய நேரத்தில் குபேரலிங்கத்தின் வாசலிலும்,ஈசான லிங்கத்தின் வாசலிலும் மதிய உணவு தானமாக நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் வழங்கினர்;

மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் சனிப்பிரதோஷம் அபிஷேகம் நடைபெற்றது;சனிப்பிரதோஷ அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மழை கொட்டத்துவங்கியது;கொட்டும் மழையிலும் இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் கிழக்குக் கோபுர வாசல்,வடக்குக் கோபுர வாசலில் அன்னதானம் செய்தார்கள்;துவாதசி திதி அன்னதானம் இனிதாக நிறைவடைந்தது;

இரவு 9 மணிக்கு பள்ளியறை பூஜை இனிதே நிறைவடைந்தது;

முக்கிய குறிப்பு:பல வாசக,வாசகிகள் தமது குடும்பத்தாருடன்/குழுவினருடன் சேர்ந்து ஐயாவுடன் சொர்ணாகர்ஷண கிரிவலம் செல்ல ஆசைப்பட்டிருந்தனர்;அவர்களின் கிரிவலப்பயணத்தின் போது,அவர்களைத் தலைமை தாங்கி நடத்தியதே ஐயா சகஸ்ரவடுகர் தான்!!! காலை 9 மணி வரை இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட அனைவருக்குமே சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைத்துவிடும்;பலர் வெகுதூரத்தில் இருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விடுப்பு எடுத்து வந்திருந்தனர்;அவர்கள் அனைவருக்குமே தனகாந்தன் என்ற சதாசிவபரமேஸ்வர சித்தரின் ஆசி கிடைத்துவிட்டது!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ