RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 12

உரு ஏறத் திரு ஏறும் என்பது திருமூலரின் வாக்கு;உரு ஏற என்றால் ஒரு வாக்கியத்தை/வார்த்தையை திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லுதல் என்று பெயர்;இதில் எந்த வாக்கியம்/வார்த்தை குறிப்பிட்ட எண்ணிக்கைகளில்  உருஏற்றினால் நம்மை இறை சக்தியுடன் தொடர்பு கொள்ள வைக்குமோ ,அதுவே மந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன;மந்திரங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் சமஸ்க்ருதத்தில் மட்டுமே தோன்றின;உலகில் மனிதர்களால் பேசப்படும் 6000 மொழிகளில் பெரும்பாலான மொழிகளில் மந்திரங்கள்/மந்திர வார்த்தைகள் கிடையாது;

திரு என்றால் நமது முகத்தில் பிறரால் உணரப்படும் ‘தேஜஸ்’ என்று பெயர்.நமது உலகம் என்பது நாம் தினசரி சந்திக்கும் மனிதர்களும்,நாம் அடிக்கடி சென்று திரும்பும் இடங்களுமே! இந்த உலகத்தில் நாம் ஒருவரை முதன் முதலில் சந்திக்கும் போது அவர்களின் கண்கள் அல்லது முகமே வசீகரமாக இருப்பதை உணருவோம்;அது அவரவர் முற்பிறவியில் செய்த நற்செயல்களைப் பொறுத்து அமையும்.
அதே போல நம் ஒவ்வொருவருமே நமது முகத்திற்கு ‘தேஜஸ்’ஸை உருவாக்கி,நமது வாழ்நாள் முழுவதும் அதை வளர்த்துக் கொண்டே செல்லலாம்;உங்களது ஆன்மீக அல்லது யோகா அல்லது தியான குருவின் அருகில் சென்று சில நிமிடங்கள் நின்றால் உங்கள் மனமும் ஆழ்ந்த அமைதி அடைவதை உணருவீர்கள்;இந்த ஆழ்ந்த அமைதியானது அவர்களின் தினசரி தியானம்/யோகா/பூஜையினால் அவர்களுக்கு உருவானது ஆகும்.அதையே நாமும் நமக்குள் உருவாக்க முடியும்.
அப்படி உருவாக்கும் போது நமது சிறுசிறு மனக்குழப்பங்கள் நீங்கிவிடும்;எதற்கெடுத்தாலும் பயப்படும் அல்லது குழம்பும் மனநிலை நம்மைவிட்டு நீங்கிவிடும்;எந்த ஒரு பிரச்னையையும் வாய்ப்பாக எதிர்கொள்ளும் திறனை நமது ஆழ்மனம் பெற்றுவிடும்;இதை அனுபவத்தினால் மட்டுமே உணரமுடியும்.
நாம் வாழ்ந்து வருவது கலியுகமாக இருப்பதால்,நம்மில் பலருக்கு இந்த தினசரி தியானம் அல்லது தினசரி பூஜை அல்லது தினசரி யோகா கைகூடுவதில்லை;அப்படிப்பட்டவர்கள் தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதிவந்தாலே போதும்;நமது அனைத்துப் பிரச்னைகளும் படிப்படியாக 90 வது நாளில் இருந்து நீங்கத் துவங்கும்;ஒருவருடம் வரை விடாமல் எழுதினால் நாம் விரும்பும் அமைதியான/செல்வச் செழிப்பான வாழ்க்கை நமக்கு உருவாகத் துவங்கும்;மூன்று வருடம் வரை ஒருநாள் விடாமல் எழுதினால்(குடும்பத்தில் சுப காரியங்கள்,அசுப காரியங்களில் கலந்து கொண்டால் மூன்று வாரம் வரை எழுத இயலாது;எனவே,விட்டு விட்டு எழுதினால் 900 நாட்கள் வரை)இப்பிறவி முழுவதும் அமைதியான,கடன்கள்,நோய்,எதிரி இல்லாத வாழ்க்கை அமைந்துவிடும்.
ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு கடன் உருவாகிவிட்டது;அதை அடைக்க வருடக் கணக்கில் போராடுகிறோம்;பல சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடனை அடைக்க முயற்சி செய்கிறோம்;இருந்தும் கடன் தீரவில்லை;இப்போது ஒரு ஜோதிடரிடம் போய் நமது ஜாதகத்தைக் காட்டி கடனை தீர்க்க என்ன வழி? என்று கேட்கிறோம்;அவரும் உங்கள் ஜாதகப்படி உரிய பரிகாரத்தைச் சொல்கிறார்.நாமும் கர்மசிரத்தையோடு கடனை அடைக்க அந்த பரிகாரத்தை செய்து முடிக்கிறோம்.அப்போதும் கடன் தீரவில்லை.அடுத்த ஜோதிடரை போய் பார்க்கிறோம்;அவர் வேறொரு பரிகாரத்தைச் சொல்வார்;அதையும் செய்கிறோம்;அப்போதும் கடன் தீரவில்லை;இப்படியே அனுமார் வால் போல பரிகாரங்களைச் செய்து கொண்டே செல்கிறோம்;முடிவில் ஜோதிடத்தின் மீதும்,கடவுள் மீது நம்பிக்கை போய்விடுகிறது.விதியே என்று கடனுடன் காலம் பூராவும் போராடிக்கொண்டே இருக்கிறோம்.இதுதான் பெரும்பாலானவர்களின் நிலை

ஏன் இந்த நிலை?
நாம் செய்யும் எந்த ஒரு பரிகாரமும் நமக்கு பலன் தர வேண்டும் எனில்,நாம் ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்.
எப்போதும் மது அருந்தி போதையில் இருப்பவர்களின் ஜாதகமே செயல்படாது;அவருக்காக/அவரது நன்மைக்காகச் செய்யும் பரிகாரம் பலனளிக்காது.
ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையை மீறியவர்களுக்கு பரிகாரம் பலனளிக்காது;
பரிகாரம் செய்பவருக்கு பித்ரு தோஷம் இருந்தால்,பரிகாரத்திற்கான பலன் அவரை வந்து சேராது.(லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் பித்ரு தோஷம் என்று பெயர்;அவ்வாறு இருந்து கேது மஹாதிசை அல்லது ராகு மஹாதிசை வந்துவிட்டால் அவர் பித்ருதோஷத்தை உடனடியாக நீக்கிடவேண்டும் என்பதை முன்னோர்கள் குறிப்பால் உணர்த்துகிறார்கள் என்றுதான் அர்த்தம்.)

பித்ரு தோஷம் உள்ளவர்கள் ஒரு பரிகாரத்திற்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை சில வாரங்கள் தொடர்ந்து வழிபாடு செய்யும் போது அந்தக் கடவுள் இவரது வழிபாட்டை கவனிக்கும்;இவரது நோக்கத்தை உணர்ந்துகொள்ளும்;இவருக்கான வரத்தை தரும்;அந்த வரம் இவருக்கு நேரடியாக வராது;இவரது குலதெய்வத்திடம் அந்த வரத்தை ஒப்படைக்கும்;குலதெய்வமோ இவரது முன்னோர்களாகிய பித்ருக்களிடம் அந்த வரத்தை ஒப்படைக்கும்;பித்ருக்கள் இவர் எந்த வழிவம்சத்தைச் சேர்ந்தவர்? என்பதைக் கண்டறிந்து அந்த வழிவம்சத்தைச் சேர்ந்த பித்ருக்களிடம் ஒப்படைக்கும்;ஒவ்வொரு தலைமுறை பித்ருக்கள் கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்;இவருக்கு முந்தையை 5வது, 4வது,3 வது ,2வது தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்கள் கைக்கு வரும்போது அவர்கள் தற்கொலை அல்லது கொலையின் மூலமாக இறந்திருந்தால் அவர்கள் பல ஆண்டுகளாக பசியோடும்,தாகத்தோடும் தவித்துக் கொண்டிருப்பார்கள்:அவர்கள் இந்த வரத்தை பரிகாரம் செய்தவரிடம் கொண்டு போய்ச் சேர்க்காமல் தாமே தடுத்து நிறுத்திவிடுவர்.

இதை ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளனர் இண்டாலஜிஸ்டுகளும்,அதீத உளவியல் மற்றும் ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள்.

பரிகாரம் செய்தவர் ஜோதிடரை செமத்தியாக திட்டு திட்டு என்று திட்டித் தீர்ப்பார்;

எந்த ஒரு பரிகாரமும்,பரிகார வழிபாட்டிற்கான பலன்களும் பரிகாரம் முடித்த நாளில் இருந்து 100 நாட்களுக்குள் பலன்களைத் தரும்;சிலருக்கு 300 நாட்களாகும்;ஏன் 300 நாட்களாகிறது தெரியுமா? இவர் தாம் செய்ய இருக்கும் பரிகாரத்தை வேறு ஒரு ஜோதிடரிடம் சொல்லி ‘செக்’செய்திருப்பார்;அல்லது நெருங்கிய உறவினர்/நண்பரிடம் இப்படி இதற்காக செய்யப்போகிறேன் என்று சொல்லியிருப்பார்.அவர்களின் பொறாமை எண்ணங்கள் அவரது பரிகாரப் பலன்கள் கிடைப்பதை தாமதிக்கச் செய்யும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பித்ருதோஷம்,முன்னோர்கள் சாபம்,கேமத்துருவ தோஷம் போன்றவைகளை உரிய ஜாதகரே நேரில் வந்து உரிய வழிபாடு,பூஜை,பரிகாரம் மூலமாகச் சரி செய்வதே பலன் தரும்.பெரும்பாலான ஜோதிடர்கள் இதற்கு பொறுப்பேற்று அதற்குரிய தொகையை பெற்றுக் கொண்டால் அவர்களை அந்த தோஷங்கள் பிடித்துக் கொள்ளும்;

அன்னதானம்,ஆடை தானம்,எண்ணெய்தானம் போன்றவைகளை உரிய ஜாதகர் தனது சார்பாக யாரை வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம்;வேறு எந்த பரிகாரத்தையும் உரிய ஜாதகர் நேரடியாகச் செய்தால் மட்டுமே பலன் உண்டு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அது ஒரு வருமானத்திற்கான வழிமுறையுள்ள ஒரு தொழில்! ஜோதிடத்திற்கு யார் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு ஆன்மீகத்தில் இந்த பிறவியிலேயே முன்னேறுவதற்கான முடிவில்லாத படிக்கட்டு!
அருள்வாக்கு,வாஸ்து,சாமுத்ரிகா லட்சணம்,நட்ட ஜாதகம் எனப்படும் பிரஸன்ன ஜாதகம்,கைரேகை,சரக்கலை,மூலிகை மருத்துவம் எனப்படும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம்,ஆவியுலக ஆராய்ச்சி,பாவ புண்ணியத்தை விளக்கும் தர்மநீதி நூல்கள்,பரிகாரத்தை விளக்கும் அதர்வண வேதம்,ஒருவரை சித்தராக்கிட உதவும் அட்டகர்மாக்கள்,சோழிப் பிரஸன்னம்,வெற்றிலை ஜோதிடம்,பஞ்சபட்சி சாஸ்திரம் இவைகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை;கலிகாலத்தில் இவை தனித் தனி துறைகளாக இருக்கின்றன.பிற யுகங்களில் இவை அனைத்தும் அறிந்தவரே நிமித்திகன் என்று அழைக்கப்பட்டார்.

ஜோதிடத்தின் மூலமாக தவறான வழிகாட்டுபவர் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பார்;தனது மனசாட்சிப்படியும்,சுயகட்டுப்பாட்டுனும்,எப்போதும் அசைவம் சாப்பிடாமலும்,எப்போதும் மது அருந்தாமலும்,எப்போதும் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியாகவும் இருப்பவர்களுக்கு வாக்கு பலிதம் உண்டு.
ஜோதிடத்தின் மூலமாக ஒரே ஒரு குடும்பம் சிறப்பான முன்னேற்றத்தை எட்டினாலும் அந்த ஜோதிடர் இப்பிறவியிலும் மறுபிறவிகளிலும் சகல சம்பத்துக்களுடன் வாழ்வார்;நவக்கிரகங்கள் சாதாரண மனிதர்களை கவனிப்பதை விடவும்,ஜோதிடர்களையும்,இறைவனுக்கு தொண்டு செய்பவர்களையுமே கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறது.எனவே,ஜோதிடர்கள் சமுதாயத் தொண்டில் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய  நமஹ