RightClick

'அடுப்பெரிக்கறதுக்கு... வீட்டுக்கூரையை முறிக்காதீங்க''

கோவணாண்டி
'
நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு கோவணாண்டி எச்சரிக்கை!
ஓவியம்: ஹரன்
முறையீடு

இந்தியப் பொருளாதாரத்துல 'அடிக்கடி கிலி' ஏற்படுத்துற 'பொருளாதார புலி'... செட்டிநாட்டுச் சீமான்... பன்னாட்டு கம்பெனிகளின் 'பவர் ஸ்டார்'... இந்தியாவோட நிதியமைச்சர்... சிதம்பரம் அவர்களுக்கு, வணக்கம் சொல்லிக்கிறான், உங்க பாசக்கார கோவணாண்டி!
'அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’னு காத்திருந்து, பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானதும், நிதியமைச்சர் நாற்காலியை மறுபடியும் கெட்டியா புடுச்சுக்கிட்டீங்க. 'நம்ம ஊர்க்காரரு இம்புட்டு பெரிய பதவியில மறுக்கா உக்காந்து இருக்காரு... நிச்சயம் நாட்டுக்கும் நம்ம ஊரு ஜனங்களுக்கும் நல்லது செய்வாரு’னு நம்பிக்கையோட இருந்தாங்க பல பேரு (இதுல நான் இல்லீங்கோ). அந்த சமயத்துல... 'சிங்கம் களமிறங்கிருச்சிடோய்'னு எங்க ஊரு கதருங்க கத்துன கத்துல, காது ஜவ்வே அந்து போச்சுங்க. ஆனா, 'நான் சிங்கமில்ல, எப்பவுமே சிறு நரிதான்’னு ஒரு வருஷத்துக்குள்ளயே உணர்த்திட்டீங்களே!
'சில்லரை வணிகத்துல பன்னாட்டு கம்பெனிகள் வந்தா, இடைத்தரகர்கள் இருக்க மாட்டாங்க, நேரடி கொள்முதல் செய்வாங்க. அது மூலமா, இந்திய விவசாயி களுக்கு நல்ல விலை கிடைக்கும். உள்ளூரு கோவணாண்டிகள்லாம்... கோடீஸ்வரன்களா மாறிடுவாங்க’னு எங்களுக்கெல்லாம் ஆசை காட்டி, அந்தப் பக்கம் அந்நிய நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள அள்ளிவிட்டு, அந்நிய முதலீட்டை அடுப்படி வரைக்கும் அழைச்சுட்டு வந்திருக்கு உங்க கதர் கெவருமென்ட். இந்த நிலையில, 'அந்நிய முதலீட்டை அதிகப்படுத்த... இன்னும் சில சலுகைகளை அவங்களுக்கு கொடுக்கணும்’னு வக்காலத்து வாங்கியிருக்கீங்களே?
ஆரம்பத்துல எனக்கும் ஒண்ணும் புரியலீங்க. ''சலுகை கொடுக் கணும்னுதானே சொல்றாரு சிதம்பரம். இதுல என்ன தப்பு..?'’னு எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியார்கிட்ட கேட்டேன். மனுஷன் கதர்காரரா இருந்தாலும்... ''அட கேணப்பயலே... அதுல பெரிய தந்திரமே இருக்கு''னு சொல்லி, ஒவ்வொண்ணையும் புட்டுப்புட்டு வெச்சுப்புட்டாருங்க.
''சில்லரை வணிகத்துல அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வரக்கூடாதுனு தேசமே போராடுனப்ப, நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்ல. முதலீடு செய்றவங்க, முதலீட்டுல பாதி பணத்தை (50%) குடோனு, பில்டிங்னு கட்டடமா கட்டணும். உம்ம பாஷையில சொல்லணும்னா அசையா சொத்துல முதலீடு பண்ணுவாங்க. அதனால திடீர்னு அவங்க ஓடிப்போயிட முடியாது. அதேமாதிரி, கண்ட இடத்துல கடையைத் திறந்து சில்லரை வியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டாங்க. 10 லட்சம் மக்களுக்கும் அதிகமா வாழற நகரங்கள்லதான் கடையைத் தொறப்பாங்க. மூணாவது, அவங்க கடைகள்ல 30 சதவிகிதம் இந்தியாவுல உற்பத்தியாகுற பொருளுங்கள விப்பாங்க’னு சொல்லித்தான் அனுமதியை அள்ளிவிட்டாங்க. ஆனா, அதெல்லாம் 'ஆடுகிட்ட ஓநாய் சொன்ன கதை’ங்கிறது அப்ப யாருக்கும் புரியாம போயிடுச்சு.
அனுமதி வாங்கிட்டு உள்ள வந்த பிறகு, வாயைத் தொறந்த வால்மார்ட், '50 சதவிகிதம் பணத்தை பில்டிங்ல போடுறதுக்கு நாங்க என்ன முட்டாள்களா?’னு கோவிச்சுக்கிடுச்சு. அதோட '10 லட்சம் மக்கள் வாழுற நகரங்கள்’னு விதிகள்ல இருக்கற வார்த்தையை '10 லட்சத்துக்கு கீழ் மக்கள் வாழுற நகரங்கள்’னு மாத்து. 30 சதவிகிதம் இந்திய பொருட்களை வாங்கி விற்க முடியாது... 20 சதவிகிதம்தான் விற்க முடியும்’னு கண்டிசன்கள வேற போட்டுட்டிருக்கு.
'இப்ப இந்திய உற்பத்தி பொருளுங்கள 20 சதவிகிதம்தான் விப்போம்’னு சொல்றவன்... நாளைக்கு, '100 சதவிகிதம் எங்க பொருளை மட்டும்தான் விப்போம்’னு சொல்லிட்டா, இங்க உற்பத்தியாகுற பொருளையெல்லாம் சுடுகாட்டுலயா விக்க முடியும்''னு வாத்தியாரு போட்ட போடுல... 'ஷாக்' ஆயிட்டேன்.
''ரூபாய் நோட்டுல சிரிக்கிற காந்திய மதிக்காம, டாலருக்கு அலைஞ்சாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல முருகன் டாலர் கூட மிஞ்சாது. அந்தளவுக்கு மோசமா இருக்கு அந்நிய செலாவணி கையிருப்பு.  நாடு நாசமா போச்சு''னு வயசான காலத்துல வார்த்தைகளாலயே வறுத்துட்டாருங்க அந்த வாத்தியார்.
அய்யா சிவகங்கை சீமானே... அடுப்பு எரிக்கறதுக்கு வீட்டுல விறகு இல்லைனா, வீட்டுக்கூரையை முறிச்சு அடுப்பு எரிக்க முடிவு பண்ணிட்டீங்களே... இது நல்லாவா இருக்கு? 'இன்னிக்கு நிலைமையை சமாளிச்சா போதும்’னு அப்பப்ப நீங்களும்... நிதியமைச்சர் பதவியில உங்கள மாதிரி ஏற்கெனவே உக்கார்ந்திருந்தவங்களும் எடுத்த தப்புத்
தப்பான முடிவுகள்தான், இந்தியாவை இத்தனை இக்கட்டுல தள்ளி விட்டிருக்கு.
இனியாவது, உள்நாட்டு உற்பத்தியை நம்பி திட்டம் போட்டு, நாட்டை வளப்படுத்த பாருங்க. அதை விட்டுட்டு எல்லாத்தையும் இறக்குமதி செஞ்சுட்டே இருந்தா... 'இந்தியானு ஒரு நாடு இருந்துச்சு. கதர் பெருமை பேசியே, அதை காலி பண்ணிட் டாங்க இந்த காங்கிரஸ்காரங்க’னு வரலாறு காறித் துப்பிடும்... ஜாக்கிரதை!
இப்படிக்கு,
கோவணாண்டி