RightClick

உலகில் மாற்றத்தைத் தரும் யுத்தக் கிரகப்பார்வைக்காலம்!!!(19.8.2013 to 8.10.2013)
ஜோதிடத்தில் பூமிக்காரகன் என்று செவ்வாய் அழைக்கப்படுகிறது;ஆயுள்காரகன் மற்றும் தொழில்காரகன் என்று சனி அழைக்கப்படுகிறது.இருவருமே கலியுகத்தில் தான் கடுமையாக உழைத்து மனிதர்கள்,நாடுகள்,தலைவர்களின் தலைவிதியையே மாற்றுகின்றன;ஒவ்வொரு முப்பது ஆண்டுக்கு ஒருமுறையும் சனிக்கிரகம் துலாம் ராசியில் உச்சமடைகிறார்;அப்போது உலகெங்கும் நீதி நிலைநாட்டப்படும்;ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய் உச்சம் அல்லது நீசம் அடைகிறது.செவ்வாய் உச்சமடையும் போது காவல் துறை,ராணுவத்துறை வலுமைப்படுத்தப்படுகிறது;நீசமடையும் போது பிற கிரகநிலைகளைப் பொறுத்து பூகம்பங்கள்,நாடுகளுக்கு அவமானம் அல்லது பேரிழப்புகள் அல்லது கலகங்கள் ஏற்படுகின்றன;


19.8.2013 அன்று நள்ளிரவு நேரத்தில் செவ்வாய் நீசமாகத் துவங்கி,அந்த நீச நிலையானது 8.10.2013 வரை தொடர்கிறது.இதனால் செவ்வாயின் ஆட்சி விடுகளான மேஷம்,விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்கள் பலவித கவுரவக் குறைச்சல்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள்;தொழில் கிரகமான சனியின் இயக்கத்தையே தடுத்து நிறுத்தும் சக்தி செவ்வாய்க்கிரகத்தின் பார்வைக்கு உண்டு என்று ஜோதிட கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சனி உச்சமாகி தனது முழுப்பார்வையான பத்தாம் பார்வையால் கடகராசியை கடந்த ஒரு வருடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அந்த கடகராசியில் பாசம்,துணிச்சல்,சொந்த வீடு,சொந்த சகோதரன்,ரத்த சிகப்பணுக்கள்,கோபம்,ஆவேசம் போன்ற மனித சுபாவங்களுக்குக் காரகத்துவமாக விளங்கும் செவ்வாய் நீசமாகி உச்சச் சனியின் பார்வைக்குள் சிக்க இருக்கிறார்.செவ்வாயும் தனது அரைப்பார்வையான நான்காம் பார்வையால் சனியைப் பார்க்க இருக்கிறார்.


நாம் வாழ்ந்து வரும் பூமியின் பிறந்த ராசி கடகராசி! நமது நாடான இந்தியாவின் சுதந்திர நேரப்படி,இந்தியாவின் ராசியும் கடகராசி;நம் ஒவ்வொருவரின் மனங்களையும் ஆளும் சந்திரனின் ஆட்சி வீடும் அதே கடகராசியாக இருப்பதால்,இந்த முறை நம் ஒவ்வொருவரும் (இந்த 45 நாட்களுக்குள்) ஒருசில நாட்களாவது எந்த ஒரு சிறு பிரச்னையையும் எதிர்கொள்ள இயலாமல் தவிக்கப் போகிறோம்;இதனால்,பூமியில் சிலபல மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன;இந்த மாற்றங்கள் 19.8.2013 அன்று துவங்கி 31.12.2013 வரை படிப்படியாக நிகழ இருக்கிறது.


இது தொடர்பாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் அருளிய ஆன்மீக அறிவுரைகளின் தொகுப்பு இதோ:
தனுசு ராசிக்கு எட்டாமிடத்தில் செவ்வாய் நீசமாகி 45 நாட்கள் இருக்கப் போவதால்,அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ஜீவசமாதி வழிபாடு அல்லது அரசமர வழிபாடு செய்து வர வேண்டும்.ஏற்கனவே,ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் இதைப் பின்பற்ற வேண்டியதில்லை;


முதலில் ஜீவசமாதி வழிபாட்டைப் பார்ப்போம்:
24.8.2013
31.8.2013
7.9.2013
14.9.2013
21.9.2013
28.9.2013
5.10.2013 (புரட்டாசி மாதத்து அமாவாசை)

இந்த நாட்களில் ரோஜாப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாலை;நெய் தீபம்,ஒரு கிலோவுக்குக் குறையாமல் டையமண்டு கல்கண்டு,விதையில்லாத கறுப்புத் திராட்சை குறைந்தது அரைக் கிலோ(கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டாம்);விதையில்லாத பேரீட்சை பழம் ஒரு பாக்கெட்,வெற்றிலை+கொட்டைப்பாக்கு+ஆறு நாட்டு வாழைப்பழங்கள்,பத்தி பாக்கெட்
இவைகளுடன் உங்கள் ஊரில் இருக்கும் ஜீவசமாதிக்குச் செல்ல வேண்டும்;பூசாரி இருந்தால் இவைகளைக்கொடுத்துவிட்டு உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு ,அரைமணி நேரத்திற்குக் குறையாமல் பத்மாசனமிட்டு,கண்களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும்;செல்போனை சைலண்டில் வைத்துவிட்டீர்களா?
பிரார்த்தனை முடிந்தப்பின்னர்,டையமண்டு கல்கண்டு,கறுப்புத் திராட்சை,பேரீட்சை,வாழைப்பழங்கள் இவைகளில் பாதியை கேட்டு வாங்கிக் கொண்டு அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;யாருமே வராவிட்டால் வீட்டுக்குக் கொண்டு சென்று நமது வீட்டினர்,அருகில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து தரலாம்;

அல்லது

அருகில் இருக்கும் பழமையான கோவிலுக்குச் சென்று அங்கே அரச மரம் இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும்.அந்த அரசமரத்திற்கு சந்தனம்,குங்குமம் பூச வேண்டும்;பிறகு,அரை லிட்டர் பால்(முடிந்தவரையிலும் பாக்கெட் பாலைத் தவிர்க்கவும்)அதன் வேர்களில் ஊற்ற வேண்டும்;பிறகு அந்த அரசமரத்தடியில் குறைந்தது அரை மணி நேரம் அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும்.சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டும் அரசமரத்தைத் தொட்டு இந்த வழிபாடுகளைச் செய்யலாம்;மற்ற நாட்களில் ஒரு போதும் தொட்டு வழிபடக்கூடாது;
இந்த வழிபாட்டுமுறையை தனுசு ராசிக்காரர்கள் தான் பின்பற்ற வேண்டும் என்றில்லை;தனுசு லக்னத்தில் பிறந்தவர்களும் செய்யலாம்;பிற ராசிக்காரர்கள் செய்ய வேண்டியதில்லை;

சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசி,மீன ராசி,மேஷ ராசியினர் பின்வரும் சுயபரிகாரத்தை இந்த 45 நாட்களும் ஒரு நாள் கூட விடாமல் பின்பற்ற வேண்டும்.இதன் மூலமாக தேவையில்லாத பிரச்னைகள் வராது;திடீர் ஆக்ரோஷம் ஏற்படாது;நமக்கு வர வேண்டிய வீண்பழிகள் ஆரம்பக் கட்டத்திலேயே விலகிவிடும்;

ஒவ்வொரு நாளும் காலையில் காகத்திற்கு எள் கலந்த பழைய சோறு வைக்க வேண்டும்;மாலையில் பைரவ வாகனத்திற்கு(நாய்க்கு=வளர்ப்பு நாயாக இருந்தாலும் சரி,தெரு நாயாக இருந்தாலும் சரி) தரமான பிரட் வாங்கி வைக்க வேண்டும்; மேலும்,காலை அல்லது மதியம் அல்லது மாலை அல்லது இரவு நேரத்தில் வயதான மற்றும் நிராதரவாக வாழ்ந்து வரும் தம்பதிகளுக்கு(தம்பதி கிடைக்காவிட்டால் பாட்டி அல்லது தாத்தாவுக்கு) 5 இட்லி மட்டும்+நல்லெண்ணெய் கலந்த எள் பொடி+ சாம்பார்+சட்னி தானம் செய்து வர வேண்டும்.(காலையில் தானம் செய்தே மிக நன்று).நாமே வீட்டில் சமைத்துக்கொடுத்தால் அளவற்ற நன்மைகள் நம்மைத் தேடி வரும்;முடியாதவர்கள் கடையில் வாங்கியும் தரலாம்;
மற்ற ராசிக்காரர்கள் வயதான தம்பதிகளுக்கு தினமும் தானம் செய்து வரலாம்;
இவைகளைப் பின்பற்றுவதன் மூலமாக இந்த சிக்கலான காலகட்டத்தினைக் கடந்துவிடலாம்;

இந்த அரிய உபதேசத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ