RightClick

இந்தியப் பொருளாதாரத்தை வீழ்த்தும் போலிப்பண ஆதிக்கம்!!!
முக்கிய அறிவிப்பு:இந்தக் கட்டுரையானது எந்த ஒரு தினசரியிலும்,வார மற்றும் மாத இதழிலும் வெளிவராத கட்டுரை ஆகும்.இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் உண்மை! பட்டப்படிப்பு முடிப்பவர்கள் தமது நேர்முகத்தேர்வில் குழு விவாதத்திற்கும்(Group Discussion),பொருளாதாரம் பற்றிய அடிப்படையை அறிந்தவர்களுக்கும்,நமது நாட்டின் பொருளாதாரம் ஏன் தள்ளாடுகிறது? என்பதை அறிய விரும்புபவர்களுக்கு மட்டுமே புரியும்.மற்றவர்களுக்கு இதில் இருக்கும் நீண்ட விளக்கம் புரியாது.

அமெரிக்க டாலர் ஒன்றிற்கு அறுபது ரூபாய் என்ற அபாய நிலையை நோக்கி இந்திய ரூபாய் வீழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில்,நிதி அமைச்சர் இந்திய ரூபாயைக் காப்பாற்றும் பொருட்டு,அந்நிய முதலீடுகள் தேடி உலகை வலம் வந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில்,கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இறக்குமதி வரிகளை அதிகப்படுத்துவதன் மூலம் தங்கம் இறக்குமதியை தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் அரசை நையாண்டி செய்யும் வகையில் ஏப்ரல் 2013 இல் இந்திய பொதுமக்கள் தங்கம் இறக்குமதியை இரட்டிப்பு ஆக்கினார்கள்.தங்கம் இறக்குமதியின் அளவைக் குறைக்க சந்தைப் பங்குகளை வாங்குமாறு இந்தியர்களுக்கு நிதி அமைச்சர் அறிவுரை வழங்கினார்.ஆனால்,மக்கள்தான் அறிவுஜீவிகளாயிற்றே!நிதி அமைச்சரின் ‘அமெரிக்காவைக் காப்பாற்றும் முயற்சியை’ப் புரிந்துகொண்டு அதைக் காதிலேயே போட்டுக்கொள்ள வில்லை;
நிதிக்குரிய விஷயத்தில் வெளிநாடுகளுடனான நம் இன்னல்கள் தொடர்கதையாய் இருக்கும் பட்சத்தில், வெளிநாட்டவருடனான நம் தற்போதைய பிரச்னையை எதிர்கொள்ளும் நோக்குடன் நாம் கோரும் ‘மதிப்புமிக்க’ அந்நிய முதலீடுகளின் உண்மையான மதிப்பு என்ன? என்று நாம் புரிந்துகொள்ள வேண்டிய சமயம் இது.இப்பொழுது இல்லாவிட்டாலும் வெகு சீக்கிரத்தில் இந்தக்கேள்வி எழத்தான் போகிறது.கடந்த பல பத்தாண்டுகளாக,அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தை தன் டாலர்களால் வெள்ளமென நிரப்பியது.அது மட்டுமல்லாமல் உலகின் மற்ற எல்லோரையும் தன் பொருளாதாரத்தில் அங்கத்தினர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டது. அச்சடிக்கப்பட்ட டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கு வெளியே புழக்கத்தில் உள்ளது.மேலும் அதே அளவு உலகளாவிய அந்நியச் செலாவணி கையிருப்புகளும் டாலர் வகைச் சொத்துக்களாக உலக நாடுகளால் வைக்கப்பட்டுள்ளன.


டாலர் உடமை பற்றிய ஜோசப் போட்டாவின் ஆராய்ச்சிக்கட்டுரையை பாங்க் ஆஃப் இண்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் வெளியிட்டது.(BIS Paper No:15,2003).அதன்படி, 1980லிருந்து 2001 வரை எல்லை தாண்டிய டாலர் உடைமைகளின் நடத்தைபின்பற்றியதில் 2005 வரை டாலர் உடமைகள் வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்றும் கணித்துக் கூறியது. 1980 டூ 2001 வரை வருடாவருடம் அமெரிக்கா அச்சடித்த டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கு வெளியே இருக்கிறது என்ற உண்மையை அந்த அறிக்கை வெளிக்கொண்டு வந்தது.வருடா வருடம் அமெரிக்க அரசு உருவாக்கும் டாலர்களில் 2/3 பங்கு வெளியிலும், 1/3 பங்கு அமெரிக்காவிலும் இருப்பதைக் கருத்தில் கொண்டால்,ஒரு கட்டற்ற சந்தைச்சூழல் நடப்பதற்கு இயலாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


ஆச்சரியப்படும் வகையில் வருடாவருடம் அமெரிக்காவிற்கு உள்ளும் வெளி உலகத்திலும் இந்த விகிதத்தில் டாலர் பங்கீடு இருப்பது இயற்கையானது அல்ல;அது திட்டமிட்டதே என்பது தெரியவந்தது.எப்படி டாலர் எங்கும் வியாபித்து உலகை ஆட்கொண்டது என்பதைப் பார்ப்போம்:


இந்த வழிமுறை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்ட பிரட்டன் உட்ஸ் அமைப்பிலிருந்து தொடங்கியது.அமெரிக்க தங்க கையிருப்பின் பின்புலத்தோடு,மிரட்டப்பட்டு டாலர் உலகக் கரன்சியாக்கப்பட்டது.ஆனால்,1971 இல் அமெரிக்க டாலருக்குத் தான் வழங்கிய தங்க ஆதாரத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்கியது.உலகெங்கும் டாலர்கள் நிரம்பியிருந்ததால் டாலரை வைத்திருப்பவர்கள் அதை தலைமுழுகமுடியாமல் கட்டாயமாக வைத்திருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அச்சிட்ட டாலர் 40% டாலர்கள் அமெரிக்காவிற்கு வெளியே புழங்கிக் கொண்டிருந்தன.அந்த சமயம் அமெரிக்க அரசு வாங்கும் தங்கத்திற்கு இணையாக கருதப்பட்ட டாலர் நல்ல முதலீடாகக் கருதப்பட்டது.இதன் காரணமாக 20 டூ 30 வருடங்களாக டாலர் ஒரு பெரிய முதலீடாக இருக்கவில்லை;ஆனால்,உலக வர்த்தகத்திற்கான கட்டாய நடப்புமூலதனம் ஆகிவிட்டது.அது எவ்வாறு?அமெரிக்காவும் அரபு நாடுகளும் சேர்ந்து எண்ணெய் விலையை உயர்த்த ஒத்துழைத்தனர்.எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் டாலர்களில் தான் பணம் வேண்டும் என்று வற்புறுத்தி(மிரட்டி) கேட்க வைக்கப்பட்டனர்.இதனால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன.முதலாவதாக ஒவ்வொரு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் டாலர் வைத்திருக்க வேண்டியதாயிற்று.இரண்டாவதாக பெட்ரோ=டாலர்களைச் சுமந்து கொண்டிருக்கும் அரபு நாடுகள் குறைவான பலன் தரும் அமெரிக்க அரசின் பங்குகள் மற்றும் முனிசிபல் பாண்ட்களில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆக,அமெரிக்காவையே விட்டு வெளியேறிய டாலர் மத்தியக் கிழக்கு நாடுகள் வழியாக மறுபடியும் அமெரிக்காவிற்குள் வந்தது.மேலும் டாலர் பஞ்சம் உள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டியிருந்தது;அல்லது தங்களது தேவைகளுக்காக அமெரிக்க உதவியையோ அல்லது கடனையோ எதிர்பார்த்து நிற்க வேண்டியிருந்தது.பின்னர் சோஷியலிச வழிமுறை என்பது உலகளாவிய அளவில் ஆவியாய் கரைந்து போனதினால்,உலகின் ஒரே வல்லரசு என்ற நிலையில் இருந்த அமெரிக்கா டாலரை யாரும் எதிர்க்கவல்லாத நாணயமாக மாற்றியது.(என்ன நரித்தனம் & தொலைநோக்குள்ள சுயநலத்திட்டம்!!!)


டாலர்வீதக் கணக்கில் வீழ்ந்துக் கொண்டிருந்த தங்கத்தின் விலையை வைத்து டாலரின் சக்தி வெளிப்பட்டதை அறிந்து கொள்ளலாம்.1981 இல் ஒரு அவுன்ஸ் தங்கம் $460/- 1991 இல் $362/- 2000 இல் $ 279/-க்கும் அதன் பின் 2005 இல் தான் தங்கம் $445/-ஆயிற்று.ஆக 1981 இல் தங்கத்தின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கையில் 2005 இல் குறைவாக இருந்த டாலரின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது.2006க்குப் பிறகுதான் தங்கத்தின் விலை ஏறுமுகமாகியது.ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2006 இல் $603/- என்றும்,2008 இல் $872/- என்றும்,2009 இல் $972/- என்றும்,2010 இல் $1225/-என்றும், 2011 இல் $1800/-என்றும் உச்சத்தைத் தொட்டது.இப்போது(2013) $1400க்கும் கீழே ஊசாலாடிக்கொண்டு இருக்கிறது.
டாலரின் சக்தியை அளவிடும் பொருட்டு,1981 இல் தங்கத்தின் $460/- டாலர் முதலீடு செய்வதற்குப் பதிலாக நீண்டகால அமெரிக்க பாண்டுகளில் முதலீடு செய்யப்பட்டு இருந்தால் 2005இல் அதன் மதிப்பு 3460 டாலராகக் கூடியிருக்கும்.www.measuringworth.com வழிமுறை கூறுவது போல் அதே வேளையில் தங்கத்தின் மதிப்பு $445/- ஆக தேங்கி விட்டிருக்கும்.இதன் பொருள் என்னவெனில் 2005இல் தங்கத்தின் மதிப்பு 1981 விட ஏழில் ஒரு பங்குதான் பெற்றுத்தருகிறது.இதன்காரணமாகத் தான் உலகப்பொருளாதார நடப்பு மூலதனமாக டாலர் உருவானது மட்டுமல்லாமல் தங்கத்தைவிட அதிக மதிப்புடையதாயிற்று.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் உலகின் பொருளாதாரச் செயல்பாட்டைப் பாருங்கள்; 1976 டூ 2009 வரையிலான 32 வருட காலத்தில் 29 வருடங்கள் நடப்புக்கணக்கில் (கரண்ட் அக்கவுண்ட் டெஃபிசிட்) பற்றாக்குறை கண்டது அமெரிக்கநாடு.நடப்புக்கணக்கின் நிகர பற்றாக்குறை 7.9 டிரில்லியன் டாலர்களாக இருக்கிறது.அதாவது,இதே அளவு டாலர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளது.இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் தேசியக் கடன் 39 மடங்கு அதிகமாகியுள்ளது.(381 பில்லியனிலிருந்து 14.4 டிரில்லியன் டாலர்கள்) மேலும் 100 பில்லியன் டாலர்களிலிருந்து 13.7 டிரில்லியன் டாலர்களாக அமெரிக்காவின் அந்நியக்கடன் 137 மடங்கு அதிகமாகியுள்ளது.இந்தச் சூழலிலும் அமெரிக்காவின் ஜி.டி.பி., வெறும் 14 மடங்கே அதிகரித்துள்ளது.(1 டிரில்லியனிலிருந்து 14 டிரில்லியன் டாலர்கள்) மேலும் 1975 இல் அமெரிக்காவின் உலகளாவிய முதலீடு 165 பில்லியன் டாலர்கள் என நேர்மறையாக இருந்தது.தற்போது 3.47 டிரில்லியன் டாலர்கள் என எதிர்மறையாக குறைந்துவிட்டது.வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், 1975க்குப் பிறகு அமெரிக்கா தான் வெளியில் முதலீடு செய்ததை விட அதிகமாக முதலீடு பெற்றுக் கொண்டது.இது போன்ற பொருளாதாரச் செயல்பாட்டினால் வேறெந்த நாட்டின் நாணயமாக இருந்தாலும் அதன் மதிப்பு வீழ்ந்து போயிருக்கும்.

ஆம்,வீழ்வதற்கு பதிலாக உலக வர்த்தகத்தோடு பிணைந்திருந்த டாலர் குறியீடு, 1975 இல் 34 ஆக இருந்தது.2002 இல் நான்கு மடங்கு அதிகரித்து 127 என்ற இலக்கை அடைந்தது.2009 இல் அமெரிக்காவின் மிக மோசமான நெருக்கடி காலத்திலும் கூட அது 106 ஆக  இருந்தது.தற்போது அதன்குறியீடு 100க்கு அருகே இருக்கிறது.1975 இல் குறியீடு(பங்குச்சந்தை) 632 புள்ளிகளாக இருந்தது.அக்டோபர் 12,2007 உக் 14,000 என உச்சத்தைத் தொட்டு,மார்ச் 2009 இல் 6600 என வீழ்ந்தது.மீண்டும் 2008 நெருக்கடி கால அளவையும் தாண்டி உயர்ந்து நம்புவதற்கில்லாத 15,000 என்று இலக்கைத் தொட்டு நிற்கிறது.
அமெரிக்காவின் மோசமான பொருளாதாரச் செயல்பாட்டையும் மிஞ்சி எவ்வாறு அமெரிக்கப் பங்குகள் கூரையைப் பிய்த்துக்கொண்டு மேல் எழும்புகின்றன என்பதை அதிபர் ரோனால்ட் ரீகனின் பட்ஜெட் டைரக்டராக(1981 டூ 1985) செயல்பட்ட முன்னாள் ரிபப்ளிக் கட்சியின் டேவிட் ஏ.ஸ்டார்ஹோம் அழகாக விளக்குகிறார்.ஸ்டாக் ஹோம் மார்ச் 30,2013 இல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியது: “மார்ச் மாதம் 2000 இல் தற்போதைய வரம்பை $8500 முதன் முதலில் உடைத்திருந்தது.ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தறிகெட்ட பணம் அச்சடிப்பவர்கள் தங்கள் பாலன்ஸ் ஷீட்டை ஆறு மடங்கு அதிகரித்து உள்ளனர்.(500 மில்லியன் டாலர்களிலிருந்து 3.2 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு)


ஆயினும் அந்த காலகட்டத்தில் பொருளாதார உற்பத்தி வருடத்திற்கு 1.7 சதவீதம் என்ற கணக்கில்தான் வளர்ச்சி கண்டது.தொழில்களில் முதலீடு 0.8சதவீதம் என்ற கணக்கிலும் வேலை வாய்ப்புகள் 0.1 சதவீதம் என்ற கணக்கிலும் திணறிக்கொண்டிருந்தது.இது போல மைய நிலையான குடும்ப வருமான வளர்ச்சி 8 சதவீதம் வீழ்ந்தது.அதேபோல் நடுத்தர வர்க்கத்தினருக்கான வேலைகளும் 6 சதவீதம் இறக்கம் கண்டது.
அடித்தளத்தில் உள்ள 90% அமெரிக்க மக்களின் நிகர சொத்து மதிப்பு 2% குறைந்தது.ஊனமுற்றோர் மற்றும் உணவுக்கூப்பன் பெறுவோரின் எண்ணிக்கை 59 மில்லியன் என இரட்டிப்பாகியது.இது ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர் என்று கணக்காகிறது. “விரைவிலேயோ அல்லது சற்றே தாமதமாகவோ” இன்னும் சில வருடங்களில் உண்மையான பொருளாதாரப் பலனுக்குப் பதிலாக ஃபெடரல் ரிசர்விலிருந்து வெள்ளமென வரும் போலிப் பணத்தை ஆதாரமாகக் கொண்டு வீக்கம் அடைந்த வால் ஸ்ட்ரீட் நீர்க்குமிழியும் வெடித்துச் சிதறப் போகிறது” என்று வரும் முன் உரைத்தார் ஸ்டாக்ஹோம்.
இந்த அளவு உயர்மதிப்புப் பெற அமெரிக்கப் பங்குகளுக்கோ அல்லது வெளியில் இருக்கும் டாலருக்கோ அமெரிக்கப் பொருளாதாரம் எதையும் செய்யவில்லை என்பது வெளிப்படையானது.மட்டமாகச் செயல்படும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் டாலருக்கு ஏன் உயர்ந்த மதிப்புள்ளது? என்று பொருளாதாரம் சார்ந்த பகுத்தறிவிற்கு உட்பட்ட எந்தவித விளக்கமும் தரமுடியாததால்,2006 இல் இரண்டு ஹார்டுவேர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பொருளாதாரத்திற்கு வெளியே சென்று இயற்பியல் ரீதியாக இந்தப் போக்கை விளக்க முற்பட்டனர்.பிரபஞ்சத்தைத்தாங்கி நிற்கும் ‘இருண்ட பருப்பொருளைப்’ போல,டாலர் உலகப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கிறது என்றும்,மக்கள் அதனால் டாலரில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டனர்.


ஆனால்,இந்த இருண்ட பருப்பொருள்கருத்தியல் 2008 நெருக்கடியில் வெடித்துச் சிதறியது.இப்போது அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்பது எது? ஒரே வார்த்தையில் ஸ்டாக்ஹோம் சொன்னது “போலிப் பணம்’.இதற்கு மரியாதைக்குரிய தொழில்நுட்பப் பெயர் உண்டு-குவாண்டிடேடிவ் ஈசிங்(Q.E.,) மற்றும் மானிடரி பேஸ்(MB)

குவாண்டிடேடிவ் ஈசிங் என்றால்,மைய வங்கிகளிடமிருந்து சந்தை வட்டியில்லாமல் கூட கடன் பெறத் தயாராக இல்லாதபோது,மையவங்கிகள் சந்தையில் செயலாற்றுபவர்களை தனியார் முதலீடுகளை பத்திரங்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள் வாயிலாக கடன் பெற மைய வங்கிகள் ஆசை காட்டும்.இந்த முறையிலேயே டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட(மெய்யாக அச்சிடப்படாத)டாலர்களை தனியாருக்கு வழங்கும்.இதனால் நிதி அமைப்பிற்குள் போலிப்பணம் புழக்கத்தில் விடப்படும்.
2008 லிருந்து அமெரிக்க ஃபெடரல் வங்கி 2.35 டிரில்லியன் டாலர்கள் டிஜிட்டல் பணத்தை உருவாக்கியுள்ளது.ஐரோப்பிய மைய வங்கி தன் கம்ப்யூட்டர்கள் மூலம் 1.14 டிரில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது பிரிட்டன் 588 பில்லியன் டாலர்களை உருவாக்கியுள்ளது.ஜப்பான் தன் கம்ப்யூட்டர் சர்வர்கள் மூலம் 848 பில்லியன் டாலர்களை புழக்கத்தில் விட்டிருக்கிறது.வரும் 18 மாதங்களில் மேலும் 1.35 டிரில்லியன் டாலர்களை வெளியிட உள்ளது.


கடந்த நான்கு வருடங்களில் 4928 டிரில்லியன் போலி டாலர்கள்,யென்கள்,யூரோக்கள் மற்றும் பவுண்டுகள் உலகப் பொருளாதாரத்திற்குள் விடப்பட்டுள்ளன.ஜப்பானிலிருந்து மாதம் 72 பில்லியன் என்ற கணக்கில் மேலும் 1.4 டிரில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதரத்திற்குள் நுழைய உள்ளது.கம்ப்யூட்டர்களால் உருவாக்கப்படும் இந்த இருப்பில் இல்லாத,பொய்ப் பணத்தினால் எந்தவித உண்மையான வளர்ச்சியோ சேமிப்போ எற்படுவதில்லை;ஆனால்,இது உலகெங்கிலும் பங்குச் சந்தைக் குறியீடுகளை உயர்த்திக்கொண்டே போகிறது.இதை ஸ்டாஷோப்,போலிப்பணம் என்றும் BBC நிறுவனம் ‘காற்றிலிருந்து வரும் பணம்’ என்றும் அழைக்கின்றனர்.இந்தப் போலிப் பணத்தினால் உலகப் பொருளாதாரம் சந்திக்கக் கூடிய அபாயம் ஒரு தனிக்கட்டுரைப் பொருளுக்குத் தரும்.(இந்த இடத்திற்கு வெகு விரைவில் பிட் காயின்கள் வரப் போகின்றன;மேல்நாட்டிலிருந்து எந்த புதுமை வந்தாலும் ஆ என்று வாயைப் பிளந்து கொண்டு நமது நாட்டின் பொருளாதாரத்தை நாமே நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம்)
இந்தப் போலி பிராமிசரி நோட்டுக்களே பங்குகள்.,சொத்துக்கள் என்றும் பிற வளங்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகின்றன.இந்தப் போலிப் பணமே தொடர்புடைய பொருளாதாரங்களில் வெளிப்பட்டு சொத்துக்களின் விலையைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன.


இப்படியாக காற்றிலிருந்து மாயமாய் காய்த்த பணத்தைத் தான் நாம் எல்லைதாண்டிய முதலீட்டுக் கொள்கைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் என்ற பெயரில், ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று நம் மெய்யான திடச் சொத்துக்களையும் வளங்களையும் அமெரிக்காவிற்கும் பிற வல்லரசு நாடுகளுக்கும் விற்கிறோம்.இது போலிப் பணம் கொண்டு செய்யப்படும் காலனியாதிக்கம் இல்லாமல் வேறு என்ன? இப்படி இருந்தால் ஒரு டாலரின் மதிப்பு ரூபாய் 60/-என்ற அளவில் மட்டுமா வீழ்ச்சியடையும்?
உலகத்தின் நிஜமான (பொருளாதாரத்) தீவிரவாதிகள் இந்த போலிப் பணத்தை உருவாக்கி அதன் மூலம் உழைக்கும் நாடுகளைக்கொள்ளையடிக்கும் வல்லரசுநாடுகள் என்று சொல்லலாமா?
எழுதியவர்: ஆடிட்டர் குருமூர்த்தி,
நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள்7,8,9,10;வெளியீடு ஜீலை 2013