RightClick

ரேடியோ பூ இருக்கையில்,யூரியா எதற்கு?

இருபது,முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த நீரழிவு நோய்,புற்றுநோய்,பார்வைக்குறைவு,பிறவி ஊனம்,மலட்டுத்தன்மை,மன அழுத்தம் போன்ற நோய்கள் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. மேலும்,குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இது போன்ற நோய்களால் பீடிக்கப்படுகிறார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அரிசி,கோதுமை,பால்,இறைச்சி,காய்கறி,பழங்கள் போன்ற உணவுப்பொருட்களில் எஞ்சி இருக்கும் பூச்சிக்கொல்லி உள்ளிட்ட ரசாயனங்களின் எச்சங்கள் தான் இதுபோன்ற நோய்களுக்கு அடிப்படைக் காரணம் என்று முடிவுக்கு வந்திருக்கிறோம்.நாம்,நுகர்வோரிடமும் உழவர்களிடமும் இதுபற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.இழந்த நமது பாரம்பரிய உணவுப்பழக்கத்துக்கு மாறினால் மட்டுமே நம்மால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

ரசாயன உரங்கள் இடப்படும் பயிர்களில் குறிப்பாக அதிகமாக யூரியா இடப்படும் பயிர்களைத்தான் பூச்சிகளும் அதிகமாகத் தாக்குகின்றன என்பதையும் உழவர்கள் கண்கூடாக உணர்ந்து வருகின்றனர்.அதனால்,குறுகிய காலத்தில் ரசாயனத்திலிருந்து இயற்கைஉரத்துக்கு மாறுவதற்கான வழிமுறைகள் பற்றிய தேடல்கள் விவசாயிகளிடம் பெருகி வருகின்றன;

யூரியாவுக்கு ஒரு முக்கியமான மாற்று இயற்கை பொருள்தான்.நெய்வேலி காட்டாமணக்கு(Ipomoea Carnea).இதை 1962 ஆம் ஆண்டிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத்துறை அறிமுகப்படுத்திவிட்டது.அப்போது முதலே,ஆயிரக்கணக்கான தமிழக உழவர்கள் நெய்வேலி காட்டாமணக்கை தழைச்சத்தாகவும்,பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்திவருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘கடல்பாலை’; பொள்ளாச்சி பகுதியில் ‘மலை ஊணான்’, ‘ஆத்து ஊணான்’ என்றும்; நெல்லை மாவட்டத்தில் ‘ரேடியோ பூ’ ‘ரப்பர் குலை’ என்றும்; சிவகெங்கை மாவட்டத்தில் ‘அடங்காப்பிடாரி’; ராமநாதபுரத்தில் ‘வெட்டி எறிஞ்சான்’ என்றும் இந்தச் செடிக்கு வட்டார ரீதியாக பெயர்கள் இருக்கின்றன.

இந்தச் செடியின் தண்டுப்பகுதியை கொஞ்சம் வெட்டி தண்ணீரில் போட்டால்,அதில் உள்ள கணுக்களில் இருந்து வேர் இறங்கி செடி பல்கிப் பெருகிவிடும்.அதனால் தான் அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் இந்தச் செடியைக் காணமுடிகிறது.

தொடர்ந்து ரசாயன உரம் போட்டு வந்த நிலத்தில் திடீரென பயன்படுத்தினால் கூட விளைச்சல் சரியாமல் மகசூல் கிடைப்பது தான் இந்தச் செடியின் பெருமை.பல விவசாயிகள் இந்தச் செடிகளை அள்ளிக்கொண்டு வந்து வயலில் இட்டு உழுது,நெல்சாகுபடி செய்து அதிகமகசூல் பெற்றுவருகிறார்கள்.

ஆனால்,என்னதான் காட்டுக்கத்து கத்தினாலும்,இந்த ரேடியோபூ உரம் பற்றிய விஷயம் அரசின் காதுகளில் விழுவதாக இல்லை;இதை உரமாகப் பயன்படுத்துவதன் மூலம்,விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு குறைவதோடு,ரசாயன உரப்பயன்பாடு குறையும்.இதனால் சுற்றுச்சூழல்கேடுகளும் தடுக்கப்படும்.

இத்தனை நன்மைதரக்கூடிய இந்த விஷயத்தை இயற்கை வழி விவசாயிகள் பலரும் பின்பற்றி,அதன் பலனை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றனர்.ஆனால்,அரசோ வேளாண்துறையோ இதுபற்றி பிற விவசாயிகளிடமும் எடுத்துச் சொல்வதற்கு முன்வருவதில்லை;வழக்கம்போல கம்பெனிக்காரர்களுக்குத்தான் பிரச்சாரம் செய்து வருகின்றது.

நன்றி:பசுமை விகடன்.
மறுபிரசுரம்:விஜயபாரதம்,பக்கம் 15,28/6/13

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ