சிவனே முழு முதற்கடவுள் என்பது பல கோடி ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை
ஆகும்.நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் சிவனருள் நமக்குக் கிட்டிட ஏராளமான வழிமுறைகள்
இருக்கின்றன;
தினமும் ஓருமணிநேரம் வரை சிவமந்திரம் ஜபிப்பது;தினமும் ஏதாவது ஒரு சிவாலயம்
சென்று அங்கே அன்னதானம் செய்வது;தினமும் அல்லது வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை
அண்ணாமலை கிரிவலம் செல்வது; ருத்ராட்ச தானம்
செய்வது; சிவாலயத்தினை சுத்தப்படுத்துவது(உழவாரப்
பணி); சிவ வழிபாடு முறைகளைப் புத்தகமாக வெளியிடுவது; சிவ வழிபாட்டு முறைகளை முகநூல்,மின்
அஞ்சல் மூலமாக தினமும் பத்து பேர்களுக்குப் பரப்புவது; சைவ விபூதி தயார் செய்து சிவாலயங்களுக்கு
இலவசமாகத் தருவது; பாழடைந்த சிவாலயங்களைக் கண்டறிந்து அந்த ஆலயத்தில் ஒரு கால பூஜைக்கு
நிரந்தர ஏற்பாடு செய்வது; பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் தோறும் கூட்டு
மந்திர ஜபம் செய்ய வைப்பது;ட்யூசன் மையங்களில் சிவமந்திரம் ஜபிக்கும் முறையை மாதம்
ஒருமுறை பரப்புவது;ஸ்டிக்கர்கள் மூலம் சிவமந்திரம் பரப்புவது; சிவமந்திரங்களை ஜபிக்கும்
முறையை பிட் நோட்டீஸாக அச்சடித்து சனிப்பிரதோஷ நாட்களில் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான
சிவாலயங்களில் விநியோகம் செய்வது;தேவாரப் பதிகங்களை சிறு நூல்களாக அச்சடித்து இலவசமாக
விநியோகம் செய்வது;அண்ணாமலையின் பெருமைகளை நட்பு வட்டத்தில் பரப்புவது; மாதம் ஒருமுறை
நமது தெருவுக்கு ஆன்மீகச் சொற்பொழிவாற்றும் சிவனடியார்களை அழைத்து வந்து சிவனின் பெருமைகளையும்,தேவாரப்
பதிகங்களின் பெருமைகளையும் பேச வைப்பது; என்று அடுக்கிக் கொண்டே போகலாம்;இதில் ஏதாவது
ஒன்றை மட்டும் நீங்கள் செய்தாலே சிவனருள் உங்களுக்கு பரிபூரணமாகக் கிட்டிடும்.
நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் பதிகம் பாடும் முறையை நமக்கு
போதித்திருக்கிறார்.அதன் படி,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும்;
தகுந்த சிவனடியார் ஒருவர் மூலமாக புதிய ருத்ராட்சம் ஒன்றை சிவாலயத்தில்
அணிவிக்கச் செய்ய வேண்டும்;
தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரமான காலை 4.30 முதல் 6 மணிக்குள் காலைக்
கடன்களை முடித்துவிட்டு, பதிகம் ஒன்றைப் பாட வேண்டும்;அது இயலாதவர்கள் மாலை 6 மணி முதல்
8 மணிக்குள் பாடலாம்;
வீட்டில் தினசரி பதிகம் பாடும்முறை:பூஜை அறையில் எந்த சுவாமிப்படங்கள்
இருந்தாலும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்;நைவேத்தியமாக பால்,டையமண்டு கல்கண்டு
வைக்க வேண்டும்;வாசம் நிறைந்த பத்தியைப் பொருத்த வேண்டும்;சுவாமி படத்தின் முன்பாக
கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஒரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;(வசதியுள்ளவர்கள்
மஞ்சள் பட்டுதுண்டு வாங்கிப் பயன்படுத்தலாம்)அதன்பிறகு,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று
12 முறை ஜபித்துக் கொண்டே நெற்றி நிறைய விபூதியைப் பூச வேண்டும்;இரு கைகளிலும் தலா
ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொள்ள வேண்டும்; பின்னர்,கீழ்க்காணும் விநாயகர்
துதியை ஒருமுறை பாட வேண்டும்;
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
இதன் பிறகு, “நால்வர் துதி” பாடலாகிய பின்வரும் பாடலைப் பாட வேண்டும்;
“பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி”
இதன்பிறகு, “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி எந்த ஒரு பதிகத்தையும்
பாடத் துவங்கலாம்;பதிகத்தைப் பாடி முடித்தப் பின்னர் இறுதியாகவும் ஒரு முறை “திருச்சிற்றம்பலம்”
என்று சொல்லி முடிக்க வேண்டும்.
சுந்தரர்,திருப்புகலூர் இறைவனை நோக்கிப் பாடிய பதிகம் இது!இப்பதிகத்தில்
உள்ள பதினொரு பாடல்களைகயும் ஒரு நாளுக்கு ஒருமுறை வீதம் 28 நாட்கள் பாடிட நாம் வாழத்
தேவையான உணவு,உடை,இருப்பிடம் குறைவின்றி கிடைக்கும்.
தம்மையே புகழ்ந்திச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே 1
மிடுக்கு இலாதானை வீமனே விறல்
விசயனே வில்லுக்கிவன் என்று
கொடுக்கிலாதானைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பார் இலை
பொடிக்கொள் மேனி எம் புண்ணியன்
புகலூரைப் பாடுமின் புலவீர்கள்
அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே 2
காணியோ பெரிதுடையனே கற்று
நல்லனே சுற்றம் நல்கிளை
பேணியே விருந்தோம்புமே என்று
பேசினும் கொடுப்பார் இலை
பூணி பூண்டுழப்புள் சிலம்பும் தண்
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணியாய் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே 3
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்துடல்
நடுங்கி நிற்கும் இக்கிழவனை
வரைகள் போல் திரள் தோளனே என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை
புரை வெள் ஏறுடைப் புண்ணியன்
புகலுரைப் பாடுமின் புலவீர்காள்
அரையனாய் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே 4
வஞ்ச நெஞ்சனை மா சழக்கனைப்
பாவியை வழக்கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாதுவே என்று
பாடினும் கொடுப்பார் இலை
பொன் செய் செஞ்சடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோய் அறுத்துஞ்சு போவதற்கு
யாதும் ஐயுறவில்லையே 5
நலம் இலாதானை நல்லனே என்று
நரைத்த மாந்தரை இளையனே
குலம் இலாதானைக் குலவனே என்று
கூறினும் கொடுப்பார் இலை
புலம் எலாம் வெறி கமழும் பூம்
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
அலமராது அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே 6
நோயனைத் தடம் தோளனே என்று
நொய்ய மாந்தரை விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கெலாம் என்று
சாற்றினும் கொடுப்பார் இலை
போய் உழன்று கண் குழியாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே 7
எள் விழுந் திடம் பார்க்கும் ஆகிலும்
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ளலே எங்கள் மைந்தனே என்று
வாழ்த்தினும் கொடுப்பார்
இலை
புள் எலாம் சென்று சேரும் பூம்
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
அள்ளல் பட்டழுந்தாது போவதற்கு
யாதும் ஐயுறவில்லையே 8
கற்றிலாதானைக் கற்று நல்லனே
காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை முற்றனே என்று
மொழியினும் கொடுப்பார் இலை
பொத்தில் ஆந்தைகள் பாட்டறாப்
புகலூரைப் பாடுமின் புலவர்காள்
அத்தனாய் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே 9
தையலாருக்கு ஓர் காமனே என்றும்
சால நல அழகு உடையனே
கை உலாவிய வேலனே என்று
கழறினும் கொடுப்பார் இலை
பொய்கை வாவியில் மேதி பாய்
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐயனாய் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே 10
செறுவினில் செழுங்கமலம் ஓங்கு தென்
புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம் பொழில் நாவலூரன்
வனப் பகையப்பன் சடையன் தன்
சிறுவன் வன் தொண்டன் ஊரன் பாடிய
பாடல் பத்திவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே 11
பதிகம் ஓவ்வொன்றையும் பாடும் எளிய வழிமுறையை நமக்கு போதித்த நமது ஆன்மீக
குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களுக்கு பைரவ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ