RightClick

தனித்தன்மை,தனித்திறமை:பயன்படுத்தி முன்னேற

 ஒரு செயலில் உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால் எல்லாவற்றிலுமே நீங்கள் தோல்வி அடைந்துவிடுவீர்கள் என்று எண்ணக்கூடாது;இதுவரை நீங்கள் வெற்றிபெறவில்லை என்று இருந்தாலும்,எதிர்காலத்தில் உங்களால் வெற்றிபெற முடியும் என்றுதான் எண்ண வேண்டும்.

ஒரு காரியத்தில் தோல்வி அடைந்துவிட்டால் உடனே தாழ்வுமனப்பான்மையால் சோர்ந்துவிடக்கூடாது.நீங்கள் இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.ஒரு தோல்வி,உங்களது ஆற்றலுக்கு முடிவுரை எழுதிவிடாது.நீங்கள் இன்னும் அதிக உத்வேகத்துடன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

எடுத்த காரியத்தை இடையில் நிறுத்தக் கூடாது.தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தால் உங்களால் நிச்சயமாக வெற்றிக்கனியைப் பறிக்கமுடியும்.எனது சேல்ஸ் ரெப் வேலையில் இந்த உண்மையை உணர்ந்துகொண்டேன்.மாநகரங்களில் இருந்து தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளின் ஆய்வகங்களுக்குத் தேவையான கருவிகளை சப்ளை செய்யும் மார்க்கெட்டிங் கம்பெனிகளுக்கு நடுவே நாங்கள் ஒரு சிற்றூரில் இருந்து தமிழ்நாட்டு சந்தையில் காலூன்றப் போராடினோம்.இத்தனைக்கும் எங்களுக்குப் போட்டியாக இருந்த நிறுவனங்கள் இந்த தொழிலில் 50 ஆண்டுகள் வரை இருந்துவருபவை;நாங்களோ ஐந்து ஆண்டுகளாக சிறிய அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம்.இருப்பினும்,ஒரு கல்லூரிக்கு ஒரு மாதத்திற்கு நான்கு முறை சென்று எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று முயற்சித்துக் கொண்டே இருந்ததால்,அடுத்த சில வருடங்களில்  எங்களது வருடாந்திர டேர்ன் ஓவர் பலமடங்கு அதிகரித்தது.இதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டே எனது சொந்த வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்னையையும் வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடிந்தது.எனது பாஸ் அடிக்கடி சொல்லும் மார்கெட்டிங் தாரக மந்திரம்: “முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே இருந்தால்,வெற்றி நமக்கு மட்டுமே சொந்தம்!”


அரசு அலுவலகங்கள்,மாநகராட்சி அலுவலகங்கள்,உள்ளாட்சி அமைப்புகள் என்று எங்கே சென்றாலும் ஓரிரு நாட்களிலேயே நினைத்த காரியத்தை ஒரு ரூபாய் கூட செலவின்றி முடிக்கும் டெக்னிக் கைகூடியது;புதிய மனிதர்களிடம் கூச்சமில்லாமல் பேசக் கூடிய சுபாவமே நிஜமான வாழ்க்கைக்கல்வி என்பதும்,அதுவே வெற்றிக்கு முதல் படி என்பதையும் உணரமுடிந்தது.


ஒருமுறை தோல்வி கண்டதும் கடவுள் உங்களைக் கைவிட்டுவிட்டார் என்று கலங்கக்கூடாது;கடவுள் உங்களுக்கு இதைவிட மேலான எதிர்காலத்தை,பிரகாசமான வாய்ப்பை நிச்சயமாகப் பரிசளிப்பார்.உங்களது அணுகுமுறை ஆக்கபூர்வமாக இருந்தால் தோல்வி என்பதே உங்கள் வாழ்க்கையில் வராது;ஆனால்,வெற்றி உடனே கிட்டாவிட்டாலும் தாமதமாக உங்களை வந்தடையும்.எதற்கெடுத்தாலும் ‘எனக்கு அப்பவே தெரியும்’ என்றோ,  ‘நான் தான் அப்பவே சொன்னேன்ல’ என்று எல்லோருடைய குறையையும் காண்பவர்களை தூர ஒதுக்குங்கள்;இவர்கள் தானும் உருப்பட மாட்டார்கள்;தம்மோடு பழகுபவர்களையும் உருப்படவிடமாட்டார்கள்;நமது கடந்த காலத்தவறுகள் நமக்கு சரியான செயல்பாட்டுக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.யார் நமது குறைகளைச் சொன்னாலும்,நாம் அதிர்ச்சியடையக் கூடாது;அவர்கள் சொன்னதில் யதார்த்தம்’ இருக்கிறதா? அதில் எவ்வளவு சதவீதம் உண்மை? என்பதை நாமே சீர்தூக்கிப் பார்த்தாலே போதும்;நமது குறைகளை நாமே சரிசெய்து கொள்ள முடியும்.இந்த மனநிலையை இருபத்தைந்து வயதுக்குள் வளர்த்துக் கொண்டாலே அடுத்த பத்தாண்டுகள் சாதனை வருடங்களாக மாறிவிடும்;


நான் ஆற்றல் அற்றவன்;நான் மிகவும் சாதாரணமானவன்;என்னால் என்ன செய்ய முடியும் என்றெல்லாம் நினைக்கக்கூடாது.உங்களுக்குள் இப்படிப்பட்ட எண்ணங்கள் அடிக்கடி உண்டாகிறது எனில்,அது உங்களுக்கு ஆலோசனை தருபவர்களிடமிருந்து உங்களுக்குள் உண்டானது என்பதே உண்மை.நீங்கள் திறமைசாலியாக இருந்தால்,உங்கள் திறமைகள்/தனித்திறமைகள் அடிக்கடி வெளிப்பட்டுக் கொண்டே இருந்தால் இந்தக் காலத்தில் தொலைவில் இருந்து உங்களை மட்டம் தட்டுவதில்லை;பத்து நல்ல ஆலோசனை தரும் விதமாக கூடவே இருந்து நட்பு கொண்டு,பதினோராவது மோசமான ஆலோசனை வழங்கி உங்களது கொஞ்ச நஞ்ச செயல்திறனையும் முடக்குவதிலேயே தான் பலர் பழகுகிறார்கள் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.


அடுத்தபடியாக மற்றவர்களின் செயல்பாடுகளோடு,அனுபவங்களோடு உங்களது செயல்பாடுகளையும் அனுபவங்களையும் ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்;ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்தன்மை வாய்ந்தது;பிறரின் வெற்றியோடு நமது பின்னடைவை ஒப்பிட்டு பார்த்து பின் தங்கிவிடக்கூடாது.

உங்களின் தனித்தன்மை என்ன? தனித்திறமை என்ன? என்பனவற்றையெல்லாம் நீங்கள் அலசி ஆராய வேண்டும்.ஒவ்வொருவருக்கும் தனித்திறமையும்,தனித்தன்மையும் பிறந்தது முதலே உண்டு;சிலருக்கு மட்டுமே அதை இருபது வயதுக்குள் ‘கண்டறியும் திறன்’ இருக்கிறது;பெரும்பாலானவர்களுக்கு முப்பது வயதுக்குப் பிறகே உணரமுடிகிறது.இன்னும் சிலர் தனது திறமைக்குப்பொருந்தாத வேலை அல்லது தொழிலில் இருந்து தன்னையும்,தனது திறமைகளையும் வீணடித்து,சராசரி மனிதனாகவே மரணமடைந்துவிடுகிறார்கள்.

யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது;ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சாதனை படைக்கக் கூடியவர்களே!சிலருடைய சாதனைகள் வெளிப்பட்டிருக்கும்;மற்றவர்களின் சாதனைகள் எதிர்காலத்தில் வெளிப்படும்;போட்டி மனப்பான்மை உள்ளவன் எப்படியேனும் தனது தனித்திறமையால் சாதித்துவிடுவான்/ள்; பொறாமை மனப்பான்மை உள்ளவன் ஒருபோதும் தனது திறமையை வெளிப்படுத்த முடியாது;ஏனெனில்,பொறாமை உணர்ச்சி உள்ளவர்களால் ஒரு போதும் நிம்மதியாகத் தூங்க முடியாது;தன்னையும்,தனது உழைப்பையும் நம்புவதற்குக் கூடத் தெரியாது;தன்னையே நம்பாதவர்கள் யாரையாவது நம்பி ஒரு செயல்/முயற்சியில் இறங்குவார்களா? துரதிர்ஷ்டவசமாக நமது தமிழ்நாட்டில் போட்டி மனப்பான்மை உள்ளவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

நீங்கள் எந்தத் திறமையோடு இருந்தாலும் அதை அடிக்கடிப் பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்;கலையை காசாக்கத் தெரியாதவன் முட்டாள்;தனது கலைக்கு ஒரு விலை வைக்கத் தெரியாதவனை தட்சிணாதேவி சபிப்பாள் என்பது நமது பாரம்பரிய உண்மை ஆகும்.

உங்கள் குழந்தையை சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணியாளராக்கிட விரும்புகிறீர்கள் அல்லது ஐ.ஏ.எஸ் ஆக்க விரும்புகிறீர்கள் அல்லது உங்கள் தொழிலின் வாரிசாக்கிட விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்;நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
எட்டாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு ஆண்டு விடுமுறை வரை உங்கள் குழந்தைக்கு நீங்கள் பொறுப்புள்ள பெற்றோராக மட்டுமல்ல;சிறந்த அந்தரங்க நண்பனாகவும் உருவெடுக்க வேண்டும்.

முதலில் ஆறு மாதங்களுக்குக் குறையாமல் டைப்ரைட்டிங் வகுப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும்;பிறகு ஸ்போகன் இங்கிலீஷ் பயிற்சியில் சேர்த்துவிட வேண்டும்.ஸ்போகன் இங்கிலீஷ் பயிற்சியானது வெறும் சம்மர் கோர்ஸ் அல்ல;அது ஒரு தொடர் முயற்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்;எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டு விடுமுறைநாட்களில் அனுப்பி வைப்பதோடு உங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துவிடக் கூடாது;நீங்களே உங்கள் குழந்தையிடம் சிறு சிறு ஆங்கில வாக்கியங்களில் பேச வேண்டும்;பேச வைக்க வேண்டும்;பிறகு,கணினியில் அடிப்படைப்பயிற்சியில் சேர்க்க வேண்டும்;பனிரெண்டாம் வகுப்பு நிறைவடையும் போது கார் ஓட்டும் பயிற்சிப்பள்ளியில் சேர்க்க வேண்டும்;கூடவே,ஹிந்திப்பேச்சுப்பயிற்சி மற்றும் ஆங்கிலம் அல்லாத இன்னொரு சர்வதேச மொழியில் பேச பயிற்சிப்பள்ளியில் சேர்க்க வேண்டும்;இந்த நான்கு வருடங்களில் ஒருபோதும் விடுமுறை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லக் கூடாது;


ஒரு சூப்பர் மார்கெட்டில் பில் போடும் இடத்தை உங்கள் குழந்தை கவனித்தால் அது ஆச்சரியப்படத்தான் செய்யும்.மிகக் குறைந்த நேரத்தில் அதிகமான பொருட்களுக்கு பில் போடும் வேகத்தைப் பார்த்து அதிசயப்படும்;நீங்கள் உங்கள் குழந்தையிடம் அது ஒன்றும் பெரிய அதிசயமில்லை;நீ தினமும் வெறும் முப்பது நிமிடம் பயிற்சி செய்தால் அதைவிடவும் திறமைசாலி ஆகலாம் என்று மனரீதியாக உங்கள் குழந்தையின் மனதில் ‘சாகசத்தை’ பதிவு செய்ய வேண்டும்.

பட்டப்படிப்பு முடித்ததும்,குறைந்தது ஒரு வருடம் வரை,அதிகபட்சம் மூன்றாண்டுகள் வரையிலும் மார்கெட்டிங் துறையில் ஒவ்வொருவரும் பணிபுரிய வேண்டும்.இது மட்டுமே இளைஞர்கள்,இளம்பெண்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றிட குறுக்கு வழி! 


ஒவ்வொரு துறையிலும் வாய்ப்புகளும்,சவால்களும் கொட்டிக்கிடக்கின்றன;ஒருங்கிணைப்புத்திறமை உள்ளவர்களே இந்த வாய்ப்புகளைச் சரியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்;மென்மேலும் உழைத்து பெரும் செல்வந்தர்களாகிவிடுகிறார்கள்;பொறாமை உணர்ச்சி உள்ளவர்களும்,சோம்பேறிகளும் ஒருபோதும் இவைகளைப் பயன்படுத்துவதில்லை;எனவே,வானம் வசப்படும் என்பது மார்கெட்டிங் துறையில் கிடைக்கும் அனுபவத்தின் மூலமாக மட்டுமே!!!