RightClick

அனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும்!!!

மூவுலகிற்கும் பயணித்துக் கொண்டே இருப்பவர் நாரதமஹரிஷி! அவருக்கு ஒரு இரும்புக்குண்டு கிடைத்தது;அந்த இரும்புக்குண்டு எந்த பத்தினிப்பெண்ணின் கையில் வைத்தாலும்,அந்த இரும்புக்குண்டு உடனே உண்ணும் பொரியாக மாறிவிடும்;எனவே,நாரதர் நேராக பிரம்மலோகத்திற்குச் சென்றார்;அந்த இரும்புக் குண்டின் மகத்துவத்தை தனது தாயான கலைவாணியிடம் கூறி,அதை அவரிடம் கொடுக்கிறார்.அந்த இரும்புக் குண்டு மாறவில்லை;
பிறகு,வைகுண்டத்திற்குச் செல்கிறார்.அங்கே,மஹாலட்சுமியிடம் அந்த இரும்புக்குண்டு பற்றிய அதிசயத்தைக் கூறியவாறு,அதை அவரிடம் கொடுக்கிறார்.இரும்புக்குண்டு மாறவில்லை;இதே போல,சிவலோகத்திற்குச் சென்று அங்கே இருக்கும் மலைமகள்(பார்வதி) மூலமாகவும் சோதித்து அறிகிறார்.இரும்புக் குண்டு மாறவில்லை;
முடிவாக,பூலோகம் எனப்படும் நாம் வாழ்ந்துவரும் கர்மபூமிக்கு வருகிறார்;பல ஆசிரமங்களுக்குச் சென்று அங்கே இருக்கும் ரிஷிபத்தினிகளிடம் விளக்கம் சொல்லி,ஒவ்வொருவரிடமும் அந்த இரும்புக் குண்டினைத் தருகிறார்,அது அப்படியே இருக்கிறது;பொரியாக மாறவில்லை;


அதேபோல,அத்திரிமகரிஷி-அனுசியா தேவி தம்பதியர் வாழ்ந்துவரும் வனப்பகுதிக்கு வருகிறார்.அனுசுயா தேவியிடமும் இந்த இரும்புக் குண்டு பற்றிய விளக்கம் சொல்லி,அவரிடமும் தருகிறார்.உடனே,அந்த இரும்புக் குண்டு,பொரியாக மாறிவிடுகிறது.அந்த பொரியை நாரதமகரிஷி சாப்பிட்டுவிட்டு,அனுசுயாவிடம் ஆசி வாங்கிவிட்டுப் போய்விடுகிறார்.
நேராக,பிரம்ம லோகம் என்ற சத்திய லோகம்,வைகுண்டம்,திருக்கையிலாயம் என்ற சிவலோகத்துக்குப் பயணித்து,அனுசுயாதேவியின் கற்புத்திறத்தை விளக்குகிறார்.முப்பெரும்தேவியரான கலைமகள்,அலைமகள்,மலைமகள் மூவரும் ஒன்று கூடி ஒரு முடிவெடுக்கின்றனர்.தங்களுடைய கணவன்மார்களை அத்திரி மகரிஷி அனுசுயா தேவி வசிக்கும் ஆசிரமப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.எதற்காக?
தங்களை விடவும் பூலோகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பத்தினியாக இருப்பதை இம்மூவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை;எனவே,அந்த பெண்ணின் கற்புத்திறன் சிறிதாவது பழுதடையவேண்டும்.


மும்மூர்த்திகளும்(பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்) துறவி வேடம் பூண்டு அத்திரி மகரிஷி ஆசிரமத்தை அடைகின்றனர்; அதிதி தேவோ பவ: என்ற வேதவாக்கியத்தின் படி(இதற்கு அர்த்தம்:அதிதி=விருந்தினர்;விருந்தினர் கடவுளுக்குச் சமம்)வந்திருக்கும் மூன்று துறவிகளையும் அனுசுயாதேவி வரவேற்று உபசரிக்கிறாள்.அந்த சமயத்தில்,அத்திரிமகரிஷி அங்கே இல்லை;அந்த மூன்று துறவிகளுக்கும் தலைவாழை இலை போட்டு,அறுசுவைஉணவுகளைப் பரிமாறுகிறாள் அனுசுயாதேவி.

ஆனால்,அந்த மூன்று துறவிகளும் உண்ணும் இடத்தில் அமர்ந்தார்களே தவிர,சாப்பிட ஆரம்பிக்கவில்லை;மூன்று துறவிகளுமே ஒரே குரலில் அனுசுயா தேவியிடம், “நீ உனது கையால் உணவு ஊட்ட வேண்டும்.அவ்வாறு ஊட்டினால்தான் நாங்கள் சாப்பிடுவோம்”என்று கூறிவிட,ஒருகணம் அனுசுயாதேவி திடுக்கிட்டுப்போனார்.
உடனே,சமையலறைக்குச் சென்று,தனது தனது தவ ஆற்றலால் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதையும்,அவர்கள் எதற்காக வந்திருக்கின்றனர் என்பதையும் அறிந்துகொள்கிறாள்.எனவே,தான் தவம் செய்யும் போது பயன்படுத்தும் கமண்டல நீரை எடுத்து,தனது கணவர் அத்திரிமகரிஷியை நினைத்து,அந்த மூன்று துறவிகள் மீதும் தெளிக்கிறாள்.அந்த மூவருமே ஒரு வயது குழந்தைகளாக உருமாறிவிடுகிறார்கள்.


இப்போது அந்த மூன்று குழந்தைகளுக்குமே தனது கையால் உணவு ஊட்டிவிடுகிறாள்.(நீங்கள் இந்த இடத்தில் வேறுவிதமாக படித்திருப்பீர்கள்;அதுதான் உண்மை!)
தத்தம் கணவன்மார்கள் பூமிக்குச் சென்று வெகு காலம் ஆகியும் திரும்பவில்லை என்பதை அறிந்து கலவரப்பட்ட மனதோடு கலைமகளாகிய சரஸ்வதி,அலைமகளாகிய மஹாலட்சுமி,மலைமகளாகிய பார்வதி மூவருமே அத்திரிமகரிஷி ஆஸ்ரமத்தை அடைகின்றனர்;அங்கே தமது கணவன் குழந்தையாக இருப்பது கண்டு திகைத்து,மூவருமே அனுசுயாதேவியிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.அந்த கணத்தில் அந்த மும்மூர்த்திகளுமே ஒன்றிணைந்து உருவாக்கிய தெய்வமே ஸ்ரீதத்தாத்தரேயர்.


இந்த கதை புராணங்களில் வருகிறது.இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில்,பொறாமை உணர்ச்சியும்,தான் என்ற அகங்காரமும்(திமிரும்) ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உண்டு;அதைக் கைவிட முறையான பயிற்சி எடுக்க வேண்டும்;
 தினசரி ஸ்ரீகால பைரவரை வழிபட்டு வருவதாலும் அல்லது தினசரி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு வருவதாலும் நமது ஆத்ம சக்தி அதிகரிக்கும்;நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் போதிக்கும் ஆன்மீகப்பயிற்சிகளை தினமும் பயிற்சி செய்து கொண்டே வந்தாலும் நமது ஆத்ம சக்தி பெருகும்;குரு அருள்,திரு அருள்,சிவ அருள் கிட்டும்;அதே சமயம்,நமது மனம் கொஞ்ச காலம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும்;பிறகு,நம்மைவிட ஆன்மீகத்தில் முன்னேறியவர்களைக் கண்டு பொறாமைப்படும்;நம்மை விட ஆன்மீகத்தில் பின் தங்கியிருப்பவர்களைக் கண்டு திமிர் கொள்ளும்;பேராசைக்காரனும்,பொறாமைப்பிடித்தவனும் தான் நினைத்ததைச் சாதிக்க எதையும் செய்யத் தயங்க மாட்டான் என்பது சாணக்கிய நீதி சொல்லும் சத்திய வாசகம் ஆகும்.


நமது வேலை அல்லது தொழிலைச் செய்து கொண்டே ஆன்மீக முயற்சிகளில் படிப்படியாக முன்னேறும் போது இரண்டே இரண்டு விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;ஒன்று முறையான தாம்பத்தியத்தை இறைவனே அனுமதிக்கிறார்;(இல்லறமல்லாமல் துறவறம் இல்லை;என்பதன் அர்த்தம் இதுதான்!)இரண்டு=நானே பெரியவன் என்ற அகங்காரம் வராமல் நமது மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்;இந்த இரண்டும் நமது ஒவ்வொரு பிறவியிலும் நம்மோடு வந்தால் அடுத்த சில பிறவிகளிலேயே காம ஆசையே இல்லாத ஞானியாக(ஸ்ரீரமணமகரிஷி/சுவாமி விவேகானந்தர்) பிறக்கும் அளவுக்கு ஆன்மீகத்தில் முன்னேறிவிடுவோம்;அவ்வாறு முன்னேறிவிட்டால்,மறுபிறவி இல்லாத முக்தியை நம்மால் எட்டிவிட முடியும்.


இந்த ஆன்மீக போதனையை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு(செல் எண்:9677696967) பைரவ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்;


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ