RightClick

புத்தக வாசிப்பின் மகிமை!!!
ஏதாவது ஒரு புதிய புத்தகம் வாசித்தவரின் உரையாடலில் ஒரு நறுமணம் கமழ்கிறது என்று திபத் பழமொழி கூறுகிறது.

உண்மைதான்.ஒருமுறை ஸ்ரீவினோபா பாவே எழுதிய ‘கீதைப் பேருரைகள்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன்.அவ்வாரம் சேலத்தில் பொங்கல் விழா பற்றி சிறப்புரை ஆற்றினேன்.திரு.ஏ.ஏ.ராமாராவ் என்ற பெரியவர், “அண்மையில் ஏதோ ஒரு நல்ல புத்தகம் படித்த தாக்கம் உங்கள் உரையில் இருந்தது” என்றார்.

ஆம்,நூல் வாசிப்பதால் நன்மைகள் ஏராளம்.உலகில் எந்த சக்தியும் அவர்களது வாசிப்பைத் தடுக்க முடியாது என்பது  போல் புத்தகப்பித்தர்கள் இருக்கிறார்கள்.ஒருமுறை தினமணிக்கதிரில் வந்த கட்டுரையில்,
“சதா குடித்துக் கொண்டே இருக்கும் கணவனைப் பற்றி குடும்ப நண்பரிடம் மனைவி புகார் செய்தாள்.அந்த நண்பரின் அறிவுரையால்(கவுன்சிலிங்) கணவன் மனம் திருந்தினான்.ஆனால்,காலப் போக்கில் புத்தகப்புழுவாக மாறினான்.அதே நண்பரிடம் சென்று, ‘பழைய படி அவரை குடிகாரனாகவே மாற்றிவிடுங்கள்;அந்தக் கொடுமையே பரவாயில்லை’ என்று மன்றாடினாள் மனைவி. அத்தனை போதை புத்தக வாசிப்பில் உள்ளது என இகழ்வது போல புகழ்ந்து பேசப்படுகிறது.
ஆங்கில எழுத்தாளர் பிரான்ஸின் பேக்கன்  என்பவர் Reading make a ready man என்றுகூறுகிறார்.ஆன்மீகக்கடலோ தினமும் புத்தகம்/வலைப்பூவில் சில பக்கங்களாவது வாசிக்காதவர்கள் உயிர் இருந்தும் நடைபிணம் என்கிறது.ஏனெனில்,அறிவே சக்தி;வலிமையே வாழ்க்கை என்பதை புத்தகப்புழுக்களாக இருப்பவர்களுக்குத் தான் தெரியும்.(பிரபலமான வலைப்பூ எழுத்தாளர்கள் ஒவ்வொருவருமே தனது துறைசார்ந்த புத்தகங்கள்,வலைப்பூக்களை தினமும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள்;அவ்வாறு வாசிப்பதை அவர்கள் நிறுத்திவிட்டால்,அவர்களின் வலைப்பூவில் சுவாரசியம் குறைந்து போய்விடும்)

பேரறிஞர்களும்,சிந்தனையாளர்களும் புத்தகவாசிப்பை அன்றாடக் கடமையாக கருதி அதற்கு நேரம் ஒதுக்கினார்கள்.
பெர்னாண்ட் ரஸ்ஸல் என்ற தத்துவ ஞானி, ‘ஒரு புத்தகப்புழு இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது’என்று தனது கல்லறையில் எழுத வைத்தார்;
புத்தகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி காந்திஜி கூறுகையில், “நல்ல புத்தகங்களை வாசிக்கும்போது, நல்ல நண்பர்களுடன் இருப்பதாக உணர்கிறேன்” என்கிறார்.
தீட்சை பெற்று ஊர் திரும்பும்போது சீடனுக்கு குரு செய்யும் உபதேசம் : உண்மை பேசு,தர்மத்தைக் கடைபிடி;சுயவாசிப்பு(தினமும் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்தல்) செய்வதில் தவறாதே
தினசரி நல்ல புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் அனுபவம் ஒரு குளியல் போல ஆழ்மனதில் உள்ள மாசுக்களை துடைத்தெறிகிறது. மனச்சோர்வை நீக்குவதற்கு மனநலமருத்துவர்கள் எழுதித் தரும் ‘ப்ருஸ்கிருப்ஸனில்’ புத்தகம் வாசிப்பதையும் சேர்த்துவிடலாம்.

நூல்வாசிப்பு,சிந்தனையைத் தூண்டும் யோகாப் பயிற்சியைப் போன்றது; ஒரு தியான நிலையைப்  போன்றது;ஒரு உளவியல் தெரபியைப் போன்றது.ஒரு சுய ஹீலிங்கைப் போன்றது.
விழுப்புண் படாத நாளை ஒரு வீரன் விரும்புவதில்லை;என்று வள்ளுவர் கூறுவது போல, தினசரி வாசிப்பு இல்லாத நாள் என்று நமக்கு ஒரு நாளும் இருக்கக் கூடாது.
வாசிப்பில் மோகம்,குறையாத ஈர்ப்பு ஒரு மனிதனைச் சான்றோனாக்குகிறது.புதிய புத்தகங்களை வாங்கிப்படிக்கும் தாகம் மேலும் கூடுகிறது.
நல்ல புத்தகங்கம்,நல்ல இணையதளம்/வலைப்பூ நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் உற்ற தோழன் என்பது பலரின் அனுபவம்.கண்டதைத் தின்பவன் பயில்வான்;கண்டதைக் கற்க பண்டிதனாவான்.
சிலவருடங்களாக சென்னை,ஈரோடு,ராஜபாளையம்,மதுரை,நாகர்கோவில்,கோயம்புத்தூர்,காஞ்சிபுரம்,மயிலாடுதுறை,சிதம்பரம்,பாண்டிச்சேரி,நாகர்கோவில்,திருச்செந்தூர் போன்ற மாநகரங்களில் புத்தகப்பெருவிழா நடைபெற்றுவருகிறது.புத்தகக் கண்காட்சியில் பலர் ஏராளமான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றார்கள்.கிராம நூலகங்களில் கூட  வாசகர் கூட்டம் நிறைகிறது.ஆனால்,அவர்களின் அறிவுத்தேடலுக்கு ஈடுகொடுக்கும் புத்தகங்கள் கிடைப்பதில்லை என்பது மட்டுமே சோகமான வலி !!!
மனிதனின் அறியாமையை நீக்கி,ஞான ஒளி ஏற்றும் விழிப்புணர்வு தீபங்களே புத்தகங்களும்,வலைப்பூக்களும்,இணையதளங்களும்.சிறந்த படிப்பாளிகளே சிறந்த படைப்பாளர்களாக மிளிர முடியும்;நிறையப் படித்தால் தான் சிறந்த பேச்சாளராகவோ,எழுத்தாளராகவோ,பொறுப்பு மிக்க குடும்பத்தலைவராகவோ,தேசபக்தி நிறைந்த இந்தியனாகவோ,தான் செய்யும் தொழிலில் எக்ஸ்பர்ட்டாகவோ,தான் பார்க்கும் வேலையில் முன்மாதிரியாகவோ,இவை அனைத்தும் நிறைந்த சகலகலா வல்லவனாகவோ பரிணமிக்க முடியும்.எனவே,தனது துறையில் சாதிக்கும் ஆர்வமுள்ள எவரும் தினமும் ஏதாவது புத்தகம் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்;
வரலாறு படைக்க விரும்புவோர் முதலில் வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்;அதற்கு தினமும் புத்தக வாசிப்பு பழக்கமே முதல் தகுதி என்று ஐரோப்பாவை தனது போர்வியூகத்தினால் ஆண்ட நெப்போலியன் சொல்லியிருக்கிறார்.இவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,நமது தமிழ் மன்னர் ராஜராஜசோழன் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார்.இவர் தமது இளமைவயதில் சுமாராக பத்தாயிரம் ஓலைச்சுவடிகளை வாசித்தவர்;அதில் ஒன்றுதான் நாம் விரும்பும் சித்தரை நேரில் தரிசிக்கும் வழிமுறை என்ற ஓலைச்சுவடி! இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறையைப் பின்பற்றி வெறும் ஏழே ஏழு நாட்களில் தாம் விரும்பும் சித்தரை நேரில் தரிசித்திருக்கிறார்.பிறகு,மாதம் ஒருநாள் அந்த சித்தரை தரிசித்து தமது ஆத்மபலத்தை அதிகரித்திருக்கிறார்.தாம் சோழ மன்னராக பொறுப்பேற்றதும்,அந்த சித்தரின் அருள் ஆலோசனைப்படியே தமது ஆட்சியை நடத்தியிருக்கிறார்.அதனால் தான் இந்த உலகத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்ய முடிந்தது;அலெக்ஸாண்டருக்கும் முன்பே இந்த உலகத்தை ஆண்டது நமது தமிழ் மன்னர் ராஜராஜசோழன் ஆவார்.அவருக்கு இந்த புத்தகவாசிப்பு(அக்காலத்தில் ஓலைச்சுவடி வாசிப்பு!!!) ஆதாரமாக அமைந்திருக்கிறது.
வரலாறு படைப்பவர்கள் தனது வரலாற்றை எழுத நேரமில்லாத அளவுக்கு தினமும் திட்டமிட்டும்,சாதுர்யமாகவும் உழைக்க வேண்டும் என்பதும் சுவாமிவிவேகானந்தரின் வாக்கு.
நமது ஆத்மார்த்தமான நிரந்தர குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பரிந்துரைப்படி ஒவ்வொரு இல்லத்திலும் சிறு நூலகம் இருக்க வேண்டும்;நல்ல புத்தகங்களை படித்து குடும்பத்தார் அதைப் பற்றி விமரிசனம் செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்;சினிமா,அரசியல் பேச்சு மற்றும் நமது பண்பாட்டை சிதைக்கும் கொலைக்காட்சியின் தாக்கத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
ஒரு நூலகம் திறக்கப்பட்டால்,பத்து காவல் நிலையங்களை  மூடிவிடலாம்!!!
புத்தகங்கள் வாழும் இடத்தில் நமது கடவுளும் வாழ்ந்து வருகிறார்.நமது பாரத நாட்டில் காஞ்சிப் பல்கலைக்கழகம்,நாலந்தா பல்கலைக்கழக நூலகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இருந்தன;அந்நிய நாடுகளில் இருந்து வந்த மத வெறியர்கள் அந்த நூலத்தைக் கொளுத்தியபோது,தொடர்ந்து ஆறு மாதங்கள் எரிந்துகொண்டே இருந்தன.அதில் சுமாராக இருபது லட்சம் வருடங்களாக நமது முன்னோர்கள் தமது அறிவு,ஆத்மபலத்தால் கண்டறிந்த மானுட இனத்துக்குத் தேவையான அறிவுத்தொகுப்புகள் அழிந்தே போயின.
எவ்வளவு அதிகமாக புத்தகம்,வலைப்பூ,இணையம் வாசிக்கிறோமோ அவ்வளவு விரைவாக வளாகத் தேர்விலோ,குழு விவாதத்திலோ சுலபமாக வெற்றியடைய முடியும்.
எவ்வளவு வயது வரை படிக்கிறோமோ,அவ்வளவு காலத்துக்கும் நமது வருமான அளவு உயர்ந்துகொண்டே செல்லும் என்பது இந்த அறிவு யுகத்தின் வரம் ஆகும்.
புத்தகம் வாசிப்பு என்பது ஒரே நாளில் உருவாகிவிடாது;நமது குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிருந்து வீட்டில் தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை நாம் உருவாக்கிட வேண்டும்;அது குறைந்தது நான்கு ஆண்டுகள் தொடர்ந்தால்,அதுவே புத்தக வாசிப்பாக மலர்ந்துவிடும்;நாம் வாழ்ந்து வரும் அறிவு யுகத்தில் சாதிக்கவும்,லட்சக்கணக்கான சம்பளம் ஒவ்வொரு மாதமும் வாங்கிடவும் இந்த பழக்கம் நம்  ஒவ்வொருவருக்குமே தேவை;
நமது குடும்பநூலகத்தில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகப்பட்டியல்களை இங்கே கொடுத்துள்ளோம்.இன்று முதல் நாமும் ஒரு குடும்ப நூலகத்தை ஆரம்பிக்கலாமா!!!

1.சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்

2.ஞான தீபம்  மூன்றாம் பகுதி

3.தேசப்பிரிவினையின் சோகவரலாறு=எழுதியவர் ஹெ.வே.சேஷாத்திரி

4.என்று காண்போம் எங்கள் சிந்துவை=எழுதியவர் கேப்டன் எஸ்.பி.குட்டி

5.எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள்

6.ஷிவ் கெரா எழுதிய உங்களால் வெல்ல முடியும்

7.ஜேம்ஸ் ஆலன் எழுதி எம்.எஸ்.உதய மூர்த்தி தமிழில் மொழி பெயர்த்த வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

8.டாக்டர் விஜயலக்ஷ்மி பந்தையன் எழுதிய ஆழ்மனத்தின் சக்திகள்,நர்மதா பதிப்பகம் வெளியீடு

9.நான் ஏன் நாத்திகனானேன்? தந்தைப்பெரியார்

10.வந்தார்கள்,வென்றார்கள்=மதன் எழுதியது;விகடன் பிரசுரம் வெளியீடு

11.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ

12.காமத்திலிருந்து கடவுளுக்கு=ஓஷோ(காமம் பற்றிய சிக்கல்கள் தீரவும்,சந்தேகங்கள் தெளியவும்)

13.ரொமான்ஸ் ரகசியங்கள்=விகடன் பிரசுரம் வெளியீடு(புதுமணத்தம்பதிகளுக்கு பரிசளிக்க)
14.மனசே,ரிலாக்ஸ் ப்ளீஸ்(இரண்டு பாகங்கள்) =சுவாமி சுகபோதானந்தா

15.ஓம்சக்தியும் அணுசக்தியும்(பதிப்பகம் பெயர் தெரியவில்லை;ஆனால்,பழைய புத்தகக்கடைகளில் மட்டும் கிடைக்கும்)

16.இது ராஜபாட்டை அல்ல;நடிகர் சிவக்குமார் தனது சினிமா வாழ்க்கையை எழுதியிருக்கிறார்.

17.முன் கதைச் சுருக்கம்-எழுத்தாளர் பாலகுமாரனின் ஆட்டோபயோகிராபி(தன் வரலாறு)

18.கண்சிமிட்டும் விண்மீன்கள் மராட்டிய மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஸயின்ஸ் ஃபிக்ஷன் நாவல்

19.எனது போர் முறை =சுவாமி விவேகானந்தர்

20.கரித்துண்டு=மு.வ.,

21.மனம் தரும் பணம்=கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சுயமுன்னேற்ற நூல்

22.அடுத்த நொடி=நாகூர் ரூமி

23.நான் நேசிக்கும் இந்தியா=ஓஷோ

24.வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்=சுமாராக நான்கு ஆண்டுகள் தொடர்ந்து யாரிடமும் பேசாமல் மவுனவிரதமிருந்து விட்டு பிறகு தனது கொள்கையை நவீன மதமாக வெளிப்படுத்தியவர் ஓஷோ.இவரைப் பற்றி அறிந்து கொள்ள இவரின் புத்தகங்களில் முதலில் இந்தப் புத்தகத்தைத் தான் வாசிக்க வேண்டும்.அப்போதுதான் ஓஷோவைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.நமது சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.

25.ஸ்ரீரங்கன் உலா=ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் அந்நியர் படையெடுப்பால் நாற்பது ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்தது;அந்த காலத்தில் ஸ்ரீரங்கநாதரை எப்படியெல்லாம் பாதுகாத்தார்கள் என்பதை விவரிக்கும் நாவல் இது.

26.நீங்களும் முதல்வராகலாம்=நக்கீரனில் தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர்.(இன்றைய ஏமாற்று யுகத்தில் நமது துறையில் நம்மை,நமது பதவியைத் தக்கவைக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை விவரிக்கும் நூல்)

27.விவேகானந்தர் பாறை: நினைவுச்சின்னத்தின் வரலாறு=ஏக்நாத் ரானடே,வெளியீடு:விவேகானந்த கேந்திர வெளியீடு(ஒரு தனி மனிதன் தமது ஒருங்கிணைப்புப் பணியால் விவேகானந்தர் பாறையில் எப்படி விவேகானந்தர் தியானமண்டபத்தை கட்ட போராடினார்? என்பதை உணர்வு பூர்வமாக விவரிக்கும் நிஜக்கதை;இதை வாசித்தப் பின்னர்,கன்னியாக்குமரி விவேகானந்த பாறைக்கு ஒரு முறை பயணித்துப் பாருங்கள்;ஏக்னாத் ரானடேயின் தியாகம் புரியும்;நாம் படும் கஷ்டமெல்லாம் கஷ்டமே இல்லை என்பதும் தெரியும்;நமது தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரித்துவிடும்)

28.மனித மனத்தின் மகத்தான சக்திகள்=இந்து பப்ளிகேஷன்ஸ் வெளியீடு(நமது மனதின் சக்தியை பயன்படுத்த விரும்புவோர் படிக்க வேண்டிய மனோதத்துவ அரிச்சுவடி புத்தகம் இது)

29.டாலர் தேசம்=பா.ராகவன்(அமெரிக்கா எப்படி பல நாடுகளிடையே போரை மூட்டி வல்லரசானது? என்பதை விவரிக்கும் நூல்)

30.ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்=கண்ணதாசன் பதிப்பகம்

31.காவல் கோட்டம்(சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை எப்படி இருந்தது என்பதை எழுத்தால் கொண்டுவந்திருக்கும் ஆச்சரியம் இது!!!)

32.ஆரிய மாயை,திராவிட மாயை ஒரு கட்டுக்கதை

33.ஏழைபடும் பாடு=விக்டர் ஹ்யூகோ,தமிழில் கவியோகி சுத்தானந்த பாரதி(பிரஞ்சு புரட்சியின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நாவல்;ஒரு அருமையான காதல் கதையும் இதில் உண்டு)

34.உழவுக்கு வந்தனம்=கோ.நம்மாழ்வார்(சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வெளியீடு)

35.பாரத நாட்டின் விஞ்ஞானச் சாதனைகள்=பாரதிய கலாச்சார சமிதி வெளியீடு

36.சில்லறை வர்த்தகத்தைச் சீரழிக்கும் அந்நிய நேரடி முதலீடு=எஸ்.குருமூர்த்தி,சேகர் ஸ்வாமி

37.சகோதரி நிவேதிதை=ஸ்ரீஇராமக்ருஷ்ணமிஷன் வெளியீடு

38.விலைராணி=சாண்டில்யன்(சாணக்கியரின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் நாவல்)

39.யவன ராணி=சாண்டில்யன்(தமிழர்களின் கடற்படையின் வலிமையை நாவலாகச் சொல்லும் புத்தகம்)

40.தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்=ரா.பி.சேதுப்பிள்ளை

41.எப்படி ஜெயித்தார்கள்? சில மார்கெட்டிங் சாகசங்கள்=ரமேஷ்  பிரபா

42.அர்த்தமுள்ள இந்து மதம்=கவியரசு கண்ணதாசன்(ஒரே புத்தகமாகவும்,பல பாகங்களாகவும் கிடைக்கின்றன)

43.தெய்வத்தின் குரல்=காஞ்சிப் பெரியவரின் பேச்சுக்களின் தொகுப்பு(இந்து மதத்தின் வேர்கள் தமிழ்ப்பண்பாடு என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கும் நூல்!!!)

44.பைரவ ரகசியம்=காகபுஜண்டர்சித்தர் தருமலிங்க சுவாமிகள் எழுதிய          பைரவ வழிபாட்டுமுறைகளின் தொகுப்பு,வெளியீடு:காகா ஆஸ்ரமம்,திருஅண்ணாமலை

45.பைரவ விஜயம்=மிஸ்டிக் செல்வம் ஐயா

46.ஆன்மீகத்திறவுகோல்=மிஸ்டிக் செல்வம் ஐயா

47.ஆன்மீகப்பயணம்=மிஸ்டிக் செல்வம் ஐயா

48.ஒரு கோப்பைத் தேனீர்=ஓஷோ

49.உலகை ஆளவரும் இந்தியன்

50.பதஞ்சலி யோக சூத்திரம்=ஸ்வாமி=இந்து பப்ளிக்கேஷன்ஸ்

51.திருக்குறள் ஞான அமுது=அகத்தியர் சன்மார்க்க சங்கம்,திருச்சி.

52.பொருளாதாரம் புதிரல்ல=சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

53.பெண்மையைப் போற்றுதும்,பெண்மையைப் போற்றுதும்

54.நம்பிக்கையை விதைக்கும் நல்லுள்ளங்கள்

55.நம்மை நாமே எப்போது உணர்வோம்

56.சீட்டுக்கட்டு மாளிகை(52 முதல் 56 வரையிலான புத்தகங்கள் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் வெளியீடுகள்)

57.சதுரகிரி தலபுராணம்=தாமரை நூலகம் வெளியீடு

58.பேசும் கலை=முனைவர் கு.ஞானசம்பந்தன்(வெளியீடு:விஜயா பதிப்பகம்,20,ராஜ வீதி,கோயம்புத்தூர்.0422-2394614,2382614)$ விஜயா பதிப்பகத்தின் பல நூல்கள் அரிய தகவல்களைத் தெரிவிக்கின்றன.ஆனால்,அவைகள் தமிழ்நாட்டின் பெரும்பாலான கடைகளில் கிடைப்பது அரிது;எனவே,இவர்களிடம் விலைப்பட்டியலையும் சேர்த்து வாங்கிக் கொள்வது நன்று.

59.நாதுராம் விநாயக் கோட்சே=தமிழில் இஜட்.ஒய்.ஹிம்சாஹர்.வெளியீடு:குமரிப்பதிப்பகம்,8,நீலா தெற்குவீதி,நாகப்பட்டிணம்.

60.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப்பதிப்பகம்
(*குமரிப்பதிப்பகத்தின் வெளியீடுகளும் மிகவும் அரிதான,அபூர்வமான நூல்கள் ஆகும்.இவர்களைத் தவிர பிறரிடம் கிடைப்பதில்லை)

61.ஹிந்து விழாக்களும்,விரதங்களும்=ஆர்.பி.வி.எஸ்.மணியன்(வெளியீடு:வர்ஷன் பிரசுரம்,தி.நகர்,சென்னை.044 24361141)

62.காக்கும் தெய்வம் ஸ்ரீமஹாபைரவர் வழிபாட்டுமுறைகள்=வேம்புச்சித்தர்(வெளியீடு:சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்,ராயப்பேட்டை,சென்னை.044 43993029)

62.சதுரகிரி யாத்திரை=குடந்தை ஸ்யாமா=விகடன்பிரசுரம் வெளியீடு

63.அகத்தியர் ஜீவநாடி=ஹனுமத்தாஸன்(இந்த புத்தகத்தின் மொத்தமும் இணைய வெளியில் வலைப்பூவாகக் கிடைக்கிறது)

64.காலப்பிரகாசிகை=ஜோதிடர்களுக்கு ஜோதிட ஆராய்ச்சிக்கு உதவும் நூல்=வெளியீடு தஞ்சை சரபோஜி மஹால் நூலகம் வெளியீடு
65.வானம் வசப்படும்=பிரபஞ்சன் எழுதிய நாவல்(ஆனந்த ரங்கப்பிள்ளை டைரிக்குறிப்பு என்ற புத்தகத்தின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் பிரஞ்சு அரசாங்கத்தில் நிகழ்ந்த முக்கியச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்,தினமணிக்கதிரில் வெளிவந்த தொடர் இது!!! சாகித்ய அகாடமி விருது பெற்றது)

இந்தப் பட்டியல் முடிவானது அல்ல;இன்னும் நீளும்;ஆனந்தவிகடன்,குமுதம்,ஜீனியர் விகடன்,தினமலர்,தினமணி,தினத்தந்தி,மாலைமுரசு,மாலை மலர்,சக்திவிகடன்,சுட்டிவிகடன் என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு தினசரி,வார,மாத இதழிலும் புத்தக விமரிசனம்,பு(து)த்தகம் என்ற பெயரில் புதியதாக வெளிவந்திருக்கும் நூலைப் பற்றிய விமரிசனங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன;கூடவே,அதன் விலை,வெளியிடும் பதிப்பகம் போன்றவைகளும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.அந்தப் பக்கங்களைத் தொகுத்து வைத்துக் கொண்டால்,பிற்காலத்தில் அதிலிருந்து நமக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.


தவிர,உங்கள் ஊரில் புத்தகக்கண்காட்சி நடந்தால் குறைந்தது இரண்டு நாட்கள் சென்று ஒரு அலசு அலசினால்,நீங்கள் தேடும் புத்தகங்கள் நிச்சயமாக கிட்டும்.


ஓம்சிவசிவஓம்