RightClick

லட்சியம் நிறைவேற நான்கு குணம் பட்டியலிட்டார் கலாம்


திருச்சி: ""உழைப்பு, அறிவுதேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

சுத்தமான குடிநீர் தேவை :

திருச்சி ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரியில், "கல்விக்கூட்டம்' என்ற விழா நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: உங்கள் சிந்தனை, செயல் ஒன்றுபட்டால், 2020ம் ஆண்டில் லட்சியம் நிறைவேறும். அதற்கு, கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடைப்பட்ட, சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்றவேண்டும். சுத்தமான குடிநீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி, எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்றவேண்டும். சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி, பண்பாடு நிறைந்த, தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்றவேண்டும்.

உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி, வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்றவேண்டும். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற, அதை தேடி சென்றடைய வேண்டும். விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடைச் செய்யவேண்டும். உழைப்பு, அறிவுதேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும். இவ்வாறு அவர் பேசினார்.


புதிதாக படைக்கும் சிந்தனையாற்றல் :

""புதிதாக படைக்கும் சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். தஞ்சையை அடுத்த வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலையில் விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி, மூன்று நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்றுக்காலை பல்கலை வளாகத்தில் நடந்தது. துவக்கவிழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: எழுச்சியுற்ற இளைய சமூகமாக மாணவ, மாணவியரை காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு இடம்பெற்றுள்ள கண்காட்சியில் அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு மாதிரிகள், மாணவ, மாணவியர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பிரமோஸ் ஏவுகணை திட்டம் என்பது, பிற நாடுகளுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழும் திட்டமாகும். கார், பஸ் மற்றும் வாகனங்களில் பயணம் செய்யும்போது பெட்ரோல், டீஸல் உள்ளிட்ட எரிபொருட்களால் வெளியேறும் புகை, காற்று மண்டலத்தை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலுக்கும் கேடு உண்டாகிறது. அதனால், இதை தடுக்க வேண்டும். சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை, 90 சதவீதம் பெற முடியும். இதை மனதில் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை பல்கலை மாணவ, மாணவியர் ஆராய்ச்சி மூலம் நிகழ்த்த வேண்டும்.

என்னால் முடியும் என்றால் நம்மால் முடியும், நம்மால் முடியும் என்றால் இந்தியாவால் முடியும். அதனால், முதலில் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கவிதை ஒன்றை கூற விரும்புகிறேன். இதை திரும்பக்கூறி, நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

நான் பிறந்தேன், அரும்பெரும் சக்தியுடன், நற்பண்புகளுடன், கனவுகளுடன், நான் வளர்ந்தேன். நல்லெண்ணங்களை செயல்படுத்த, என்னால் முடியும் எனும் உள்ள உறுதியுடன் நான் பிறந்தேன். ஆகாய உச்சியில் பறக்க நான் பிறந்தேன். நான் ஒருபோதும் தவழ மாட்டேன். தவழவே மாட்டேன். ஆகாய உச்சி வரை பறப்பதே, என் லட்சியம். வாழ்வில் பறப்பேன். பறந்து கொண்டே இருப்பேன்.


ரைட் சகோதரர்கள் :

இந்த நம்பிக்கை தரும் கவிதையின் படி நடந்தால், பறக்க வேண்டும் எனும் உள்ளுணர்வு உங்களை லட்சியத்தை அடைய வைக்கும். லட்சியம் அறிவாற்றலை தரும். உழைப்பு, உழைப்பு என, உழைத்து கொண்டே இருந்தால், வெற்றி வந்து சேரும். சாதனை படைக்கலாம். நமக்கு முன்னே ரைட் சகோதரர்கள், தாமஸ் ஆல்வா எடிசன், மைக்கேல் பாரடே, சர்.சி.வி., ராமன் என, எண்ணற்ற விஞ்ஞானிகள் உழைப்பாலும், ஆராய்ச்சியாலும் உயர்ந்துள்ளனர். எதையும் உற்று நோக்கி ஆராய்ச்சி செய்து, புதிதாக படைக்கும் சிந்தனையாற்றலை வளர்ந்து கொண்டால், நீங்களும் சாதனை படைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
ரஷ்யா நாட்டின் தென்னிந்திய தூதர் நிக்கலோவ், அமெரிக்கா நாட்டிலுள்ள மேரிலேண்ட் மாநில கவர்னரின் ஆலோசகர் ராஜன் நடராஜன், விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், பல்கலை., பதிவாளர் அய்யாவு ஆகியோர் பங்கேற்றனர். பல்கலை வேந்தர் வீரமணி தலைமை வகித்தார்.