RightClick

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4விவேகானந்தரை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றைய காலக்கட்டத்திலிருந்து நாம் அவரைப் பார்க்கக் கூடாது. அவர் வாழ்ந்த காலத்தில் ஹிந்து மதமும், ஹிந்து தர்மமும் எப்படி இருந்தது, ஹிந்து மதம் உலகத்தின் பார்வையில் எப்படி பார்க்கப்பட்டது, அவர் சந்தித்த சவால்கள் எத்தகையவை என்பதையும் பார்க்க வேண்டும்.
இவற்றை தெரிந்துகொள்ளாவிட்டால் ஹிந்து மதத்துக்கான அவருடைய பங்களிப்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டில் நாம் அவரை நினைவுகூருகிறோம். அவருடைய வாழ்விலிருந்து, உரைகளிலிருந்து ஏதாவதை ஒரு தாக்கத்தைப் பெற முடியுமா என்று நாம் பார்க்கிறோம். அவருக்கு முன்னோடிகள் யாரும் கிடையாது.
விவேகானந்தரையும், ராமகிருஷ்ணரையும் புரிந்துகொள்வதற்கு ஆன்மிகத் தேடல் வேண்டும். ஆன்மிகத்தின் வழியாகவே அவரைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர,  இலக்கியத்தியத்தின் வழியாக அது முடியாது.
இந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்து மதத்தையும், இந்திய கலாசாரத்தையும் அவர் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். ஜூனாகட் சமஸ்தானத்தைச் சேர்ந்த திவான் வெளிநாட்டிற்குச் சென்று நமது மதத்தின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தினார். அதன்பிறகே, சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்க அவர் சென்றார்.
சிகாகோ மாநாட்டில் அவரது முதல் வாசகம் வெறும் வார்த்தைகளல்ல. இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை அங்கு அவர் வெளிப்படுத்தினார்.  சகோதர, சகோதரிகளே என்ற வாசகத்தின் மூலம் அமெரிக்கர்களின் ஆன்மாவை விவேகானந்தர் தொட்டார். எனவேதான், இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களையும் வசப்படுத்தியது.
பேச்சாளர்கள் கேட்பவர்களின் சிந்தனையை மாற்றலாம். ஆனால், அவர்களது நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவர மதத்தில் ஈடுபாடுள்ள, ஆன்மிகத்தில் ஊறியவர்களால் மட்டுமே முடியும். அவர்களது வார்த்தைகளுக்கு மட்டுமே அடுத்தவர்களின் ஆன்மாவைத் தொடும் ஆற்றல் உண்டு.
அந்த மாநாடு உலகிலேயே உண்மையான ஒரே மதம் கிறிஸ்தவ மதம் என்பதை அறிவிப்பதற்காகத்தான் கூட்டப்பட்டது. ஆனால், சுவாமி விவேகானந்தரின் உரை அதை மாற்றிவிட்டது. விவேகானந்தரின் பேச்சு குறித்து அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவரான ஹென்றி பரோஸ் தனது நாள்குறிப்பில், சுவாமி விவேகானந்தர் இந்த வார்த்தைகளைப் பேசியவுடன் பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு பல நிமிடங்களுக்கு கை தட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
விவேகானந்தர் 2 நிமிடங்கள் மட்டுமே,  471 வார்த்தைகள் மட்டுமே அவர் அந்தக் கூட்டத்தில் பேசினார். எங்கள் மதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
ஹிந்து மதம் உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. அனைத்து மதங்களையும் உண்மையானது என்று உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது என்றார். அதற்கு அவர் இரண்டு உதாரணங்களையும் குறிப்பிட்டார். தங்களின் தாய்நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பிறகு, முழு சுதந்திரத்தோடு இந்தியாவில் தங்கள் மதத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றி வந்த யூதர்களையும், பாரசீகர்களையும் குறிப்பிட்டு இந்தியா அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது என்று கூறினார்.
உலகில் எந்தவொரு மதமும் மற்றோரு மதத்தை ஏற்றுக்கொள்ளாது. எந்த மதம் சிறந்தது என்பதை தீர்மானிக்க குத்துச்சண்டைகள் நடைபெற்று வந்ததையும் அப்போது அவர் குறிப்பிட்டார். அவரது உரைக்குப் பிறகு, நம்முடைய மத பிரசாரகர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு பதில் அங்கிருந்து இங்கு பிரசாரகர்கள் வருவதே பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.
அந்த மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் அவரது ஆன்மிக பின்புலம்தான். அவர் துறவி என்பதாலேயே எதிரிகளையும் தம்மை விரும்புபவர்களாக மாற்றினார். சாதாரணப் பேச்சாளர் ஒருவரால் இதைச் செய்ய முடியாது.
வேறு மதத்தைச் சேர்ந்த இறைவனுடன் நமது இறைவனை வேறுபடுத்துவதும், வேறு மதத்தினரை நம்மிடமிருந்து  வேறுபடுத்துவதும் இந்தியாவைப் பொருத்தவரை பாவம் ஆகும். இதையே அவர் உலகிற்கு எடுத்துக் கூறினார். அதுவே அவரது மேதமை.
அவர் இதை எடுத்துரைப்பதற்கு முன்பாக, உலகத்தினரும், மதத் தலைவர்களும், மத அறிஞர்களும் இது குறித்து அறியாமல் இருந்தனர்.
கடந்த 2008-ல் உலக மதத் தலைவர்கள் மாநாட்டில் அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தான் சுவாமி விவேகானந்தர் 115 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார். ஏழ்மையைப் பயன்படுத்தி மக்களை மதமாற்றம் செய்யக் கூடாது என்றார். அதை இப்போது அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.