RightClick

தகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவலம்!!!

ஒவ்வொரு ராசியிலும் ஒரே ஒரு நட்சத்திரத்தில் பவுர்ணமி உதயாகிறது;அந்த நட்சத்திரத்தின் பெயராலேயே தமிழ் மாதங்களின் பெயர்கள் வைக்கப்பட்டன;துலாம் ராசியில் சித்திரை மாதத்தில் பவுர்ணமி தோன்றியதால் சித்திரை மாதம் தோன்றியது;இதே போல வைசாகம்(விசாகம்),ஆனிப் பூராடம்,ஆடி ஓணம்,ஆவணி அவிட்டம்,புரட்டாசி பூரட்டாதி,ஐப்பசி அசுபதி,கார்த்திகை கிருத்திகை,மார்கழி திருவாதிரை,தைப் பூசம்,மாசி மகம்,பங்குனி உத்திரம் என்று பவுர்ணமியை மையப்படுத்தி தமிழ்நாட்டில் முருகக் கடவுள் வழிபாடு தொன்றி பரவலாகிவிட்டது;


சிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலவாகிய பவுர்ணமியானது உதயமாவது மார்கழி மாதத்தில் மட்டுமே!
சிவனை அப்பாவாக ஏற்றுக் கொண்டவர்கள்;சிவனை குருவாக நினைத்து வழிபடுபவர்கள்;சிவனை தோழனாக நினைத்து தினமும் உருகுபவர்கள்;சிவனை காதலனாக நினைத்து வழிபடும் பெண்கள்;சிவனை வழிகாட்டியாக எண்ணும் பக்தர்கள் இன்றைய கலியுகத்திலும்,ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்:அவர்களை அவ்வளவுச் சுலபத்தில் கண்டறிய முடியாது;ஆத்ம பக்தியுடன் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெளித்தோற்றத்தில் பந்தா செய்வது அரிதிலும் அரிது ஆகும்.


இந்த ஆன்மீகக்கடலை நடத்தும் எம்மைவிடவும் பக்தியில் சிறந்தவர்கள் இருப்பது நிஜம்;அவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டிலும்,தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களிலும் பரவலாக இருக்கிறார்கள்;அந்த எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டும்.அவ்வாறு பக்தியில் சிறந்தவர்களுக்கு ஆன்மீகக்கடல் வழியாக வழிகாட்டவே சதாசிவம் எம்மை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்;அப்படி அனுப்பியதால் ஏற்படும் புகழ்,பெருமைகள் அனைத்தையும் எமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகருக்கே அர்ப்பணம்!!!(இதுவே சரணாகதி தத்துவம் ஆகும்)இந்த அர்ப்பணம்,குருவிற்கு நாம் சமர்ப்பணம் செய்யும் போதே அந்த சமர்ப்பணம் சதாசிவனையே போய்ச் சேரும் !


மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரநாளில் அண்ணாமலைக்கு முதல் நாளே வந்துவிடவேண்டும்.இந்த நந்தன வருடத்தின் மார்கழி மாதத்து பவுர்ணமியானது 27.12.2012 வியாழக்கிழமை இரவில் வருகிறது;
இந்த பவுர்ணமி முதல் தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் மட்டும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;அவ்வாறு சென்றால்,சிவகணமாக மாறும் தகுதியுடையவராக நாம் மாறுவோம்;


27.12.2012 அன்று வியாழக்கிழமை காலையிலேயே அண்ணாமலை அல்லது அருகில் இருக்கும் ஊருக்கு வந்து விடவேண்டும்;பகல் முழுவதும் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்;இரவு ஏழு மணியளவில் அண்ணாமலையில் கிழக்கு கோபுர வாசலுக்கு வந்து விட வேண்டும்;வரும்போது,மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;ஆண்கள் மேலாடை அணியக்கூடாது;குளிரைப்பற்றி ஒரு போதும் கவலைப்பட வேண்டாம்;இரு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சத்தை அணிந்திருக்க வேண்டும்;தலையில்  ஒரு வில்வ இலையை ஒட்டியிருக்க வேண்டும்;செருப்பு அணியக் கூடாது;இரட்டைப்பிள்ளையார் சன்னதியில் சூறைத் தேங்காயை உடைக்க வேண்டும்;பிறகு அங்கிருந்து தேரடி முனீஸ்வரர் கோவிலுக்கு(இந்த சன்னதி கிழக்குக்கோபுர வாசலுக்கு அருகே அமைந்திருக்கிறது) வர வேண்டும்;தேரடி முனீஸ்வரரை கிரிவலம் செல்லும்போது வழித் துணைக்கு மானசீகமாக அழைக்க வேண்டும்;பிறகு,அங்கிருந்து கிழக்கு கோபுர வாசலுக்கு நேராக நின்று கொண்டு மானசீகமாக அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;அப்போது நாம் என்ன வேண்டுகிறோமோ,அந்த வேண்டுதல்களே கிரிவலம் நிறைவடைந்ததும் நமக்கு நிறைவேறும்;இந்த பலமுறை கிரிவலம் செல்லும்போது ஆராய்ந்து கண்டறிந்து கொள்ளமுடிந்தது;எனவே,கிழக்கு கோபுர வாசலுக்கு நேராக எவ்வளவு போக்குவரத்து இருந்தாலும்,கொஞ்சம் அதிகமான நேரம் நின்று அருணாச்சலேஸ்வரரை மானசீகமாக தரிசித்து(முதல் முறை வருபவர்கள் வெறுமனே வேண்டினால் போதும்) தேவையான அனைத்து கோரிக்கைகளையும் மனதுக்குள் நினைத்து கேட்டுக் கொண்டப் பிறகு கிரிவலம் புறப்படலாம்;


இங்கிருந்து வெறும் இரண்டு நிமிடம் நடக்கும் தூரத்தில் இந்திர லிங்கம் அமைந்திருக்கிறது;இந்திரலிங்கத்தை சுற்றி வலம் வந்து,அவர் முன்பாக அமர்ந்து கொண்டு குறைந்தது பத்து நிமிடம் வரையிலும் ஜபிக்க வேண்டும்.பிறகு எழுந்து புறப்படலாம்;திருவூடல் தெருவழியாகச் சென்று,மாவட்ட மருத்துவமனை வழியாக பயணித்து,அக்னிலிங்க குளத்தைக் கடந்து அக்னி லிங்கத்தை அடையலாம்;அங்கேயும் இதே போல பத்து நிமிடம் வரையிலும் அமர்ந்து ஓம்ஆம் ஹெளம் செள வேண்டவேண்டும்;பிறகு,அங்கிருந்து புறப்பட்டு அரசு கலைக்கல்லூரியைக் கடந்ததும்,நகர்ப்புறத்தை விட்டு வனப்பகுதியை வந்தடைவோம்;(தற்போது உள்பிரகாரம் வழியாக செல்ல அனுமதிப்பதில்லை;மீறிச் சென்றால் ரூ.ஆயிரம் அபராதம் என்று திரு அண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது;அரசு கலைக்கல்லூரியைக் கடந்ததும்,அண்ணாமலையின் அருகில் செல்லும் ஒரு பாதை தென்படும்.இங்கிருந்தும்  உட்பிரகாரம் எனப்படும் மலையை ஒட்டிய ஒற்றையடி மலைப்பாதை வழியாக பயணிக்கலாம்)


அக்னி லிங்கத்தைக் கடந்ததும் பேசாமல் வர இயலாது;இருப்பினும் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடாப்பிடியாக ஓம் ஆம் ஹெளம் செள என்று ஜபித்து வர வேண்டும்;ஏனெனில்,நாம் அண்ணாமலையாரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை அன்று பவுர்ணமி வரும் நாளில் கிரிவலம் வருகிறோம்;நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் சிவகணங்களும்,சிவனுக்கு அருகில் இருப்பவர்களும் கண்காணித்தபடியே இருக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்;அடுத்தபடியாக எமலிங்கம் வரும்;அங்கேயும் பத்து நிமிடம் வரையிலும் அமர்ந்த நிலையில் ஓம்ஆம் ஹெளம் செள என்று ஜபிக்க வேண்டும்;இவ்வளவு நேரமாக இந்த சிவமந்திரம் ஜபித்து வருவதால்,தண்ணீர் தாகம் எடுக்கும்;இந்த நேரத்தில் இளநீர் அல்லது தண்ணீர் அருந்தலாம்;காபி,டீயை விலக்கவும்;இவ்வாறு கிரிவலப் பாதை முழுவதையும் கடந்து குபேரலிங்கம்,ஈசான லிங்கம் வந்து இறுதியாக பூத நாராயணப் பெருமாள் சன்னதியை வந்தடைய வேண்டும்.பூத நாராயணப்பெருமாளை வழிபட்டு முடித்தப் பின்னரே,கிரிவலம் நிறைவடைந்ததாக அர்த்தம்.அதன்பிறகு,நாம் நமது சொந்தக் கதைகளைப் பேசலாம்;இப்படி கிரிவலம் சென்றால் மட்டுமே முழுமையான கிரிவலம் வந்ததாக அர்த்தம்;இடையிலேயே பேருந்தில் ஏறி புறப்பட்டால் அண்ணாமலைக்கு வருகை தந்ததன் நோக்கம் நிறைவேறாது;கிரிவலம் நாம் முறையாக முடிக்கவில்லை என்றே அர்த்தம்!


நாம் எமலிங்கம் வரையிலும் யாரிடமும் பேசாமலும்,வேறு எந்த வெட்டிவேலையும் செய்யாமலும் ஒரு விநாடி கூட வீணாக்காமல் ஓம்ஆம் ஹெளம் செள ஜபித்து வந்தால்,நமது கைகளுக்குள் இருக்கும் ஐந்து முக ருத்ராட்சங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு விநோதமான உணர்வைப் பெறுவீர்கள்;அது என்னவெனில்,அந்த ருத்ராட்சம் ஒவ்வொன்றும் துடிக்க ஆரம்பிக்கும்;நமது உள்ளங்கைகள் குறுகுறுக்க ஆரம்பிக்கும்;நமது  மந்திர ஜபத்தை அந்த அண்ணாமலையார் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்பதே இதன் சூட்சும அர்த்தம் ஆகும்.


இப்படி தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாட்களில் மட்டும் கிரிவலம் வந்தால்,சிவப் பதவி நம்மைத் தேடி வரும்;அதற்கு தகுதியுடையவராக நாம் உயர்ந்து விடுவோம்;
கிரிவலம் நிறைவடைந்ததும்,நாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையை கழற்றி பத்திரமாக வைக்கவேண்டும்;கையில் வைத்திருந்த இரு ருத்ராட்சங்களையும் அந்த ஆடையோடு பத்திரப்படுத்த வேண்டும்.இந்த இரண்டையும் அடுத்த மார்கழி மாதத்து பவுர்ணமிக்கே பயன்படுத்த வேண்டும்;


நமது ஊருக்குத் திரும்பிய ஒரு சில  நாட்களுக்குள் நமது பெரிய பிரச்னைகள் தீர ஆரப்பதையோ,தீர்ந்து போனதையோ பார்ப்பீர்கள்! ஒரே ஒரு மலையை ஒரே ஒரு முறை  மனதுக்குள்சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்தபடி நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை நடந்து சென்றாலே நமது பிரச்னைகள் தீர்கிறது எனில்,இதை விடவும் எளிய ஆனால் சர்வசக்தி வாய்ந்த பரிகாரம் இந்த பூமியில் உண்டா?
பின் குறிப்பு:தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 கோவில்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவதை விடவும்,ஒரே ஒரு மார்கழி மாத பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது உயர்ந்தது;இந்த வரிகளுக்குள் புதைந்திருக்கும் ஆன்மீக   உணர்வை உணர ஆருத்ரா கிரிவலங்கள் சென்று பாருங்கள்;உணருவீர்கள்!!!(நமது வாழ்நாள் அறுபது வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்,60 X 365=21900  நாட்கள் தான் வருகிறது.ஒரு நாளுக்கு ஒரு நாள் என்று வைத்துக் கொண்டால்,நமது வயது 60ஐத் தாண்ட வேண்டும்)


ஓம்ஹ்ரீம்மஹாபைரவாய நமஹ