RightClick

21.12.2012 க்குப் பிறகும் உலகம் உயிர்த்துடிப்புடன் இயங்கும்;ஒரு போதும் அழியாது!!!

நீதிக்கிரகமான சனிபகவான் துலாம் ராசிக்குள் நுழைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.10.11.12 முதல் சனிபகவான் உச்சமாகத் துவங்கிவிட்டார்.இந்த உச்சநிலையானது பொதுவாக 100 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும்.இந்த முறை 220 நாட்கள் இருக்கப் போகிறது.இதே கால கட்டத்தில் கலியுகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இராகு பகவான் 2.12.12 அன்று துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
ராகு பகவான் நிழல் கிரகமாக இருந்தாலும்,அவருடன் யார் சேருகிறார்களோ அவரது சுபாவத்தை வாங்கி,பல மடங்கு பூமியில் மனிதர்களிடையே வெளிப்படுத்துவது அவரது வழக்கம்.யுத்தகிரகமான செவ்வாயுடன் சேரும்போது,திடீர் கலகங்களும்,போராட்டங்களும் அதிகரிக்கும்;சுக்கிரனுடன் சேரும் போது உலகெங்கும் முறையற்ற உறவுகள் பெருகும்;வக்கிரமான உறவுகள் பிரபலமடையும்.புதனுடன் சேரும் போது வர்த்தகத்தில் புதுப்புது குற்றங்கள் நடைபெறும்.சந்திரனுடன் சேரும்போது நம் அனைவருக்குமே விபரீதமான எண்ணங்கள் உருவாகும்.குருவுடன் சேரும் போது காவி உடுத்திய போலிகள் அவமானப்படுவார்கள்;போலி நிதிநிறுவனங்கள் இழுத்து மூடப்படும்;ஊழல் செய்த நிதித்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பாராமல் சிக்கி சிறைக்குச் செல்வார்கள்.

அதே போல,நீதி நேர்மை நியாயம் இவைகளைப் பாதுகாப்பது சனிபகவானே! நம் ஒவ்வொருவருக்கும் ஆயுளையும்,தொழிலையும் தருபவரும் அவரே! அவர் உச்சமாகும்போது ராகு இணைவது என்பது சுமார் 300 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்ந்த அநீதிகளுக்கு உரிய நீதி இந்த ஒன்றரை ஆண்டுகளில் கிடைக்க இருக்கிறது.(சனிபகவான் 16.12.2014 வரையிலும்,ராகு பகவான் 21.6.2014 வரையிலும் துலாம் ராசியில் பயணிக்கிறார்கள்)

தீவிரவாதம்,ஒழுங்கீனம்,முறையற்ற உறவுகள்,வதந்தி,மல்டி லெவல் மார்கெட்டிங்,குறைந்த உழைப்பின் மூலமாக மித மிஞ்சிய வருமானம் பார்த்தல்,கமிஷன் தரக்  கூடிய தொழில்கள்,பிறப்பு உறுப்பு,அளவற்ற காம இச்சை,இன்றைய ஆங்கில மருத்துவம்,விதவை,சர்ப்பங்கள்,விஷப் பொருட்கள்,அதிரடி முன்னேற்றம்,உளவுத் துறை,கணிப்பொறி,செல்போன், நெட்வொர்க்குகள்,குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள் போன்றவைகளுக்கு ராகு பகவான் மட்டுமே காரகத்துவமாகிறார்.
தொழில்,நீதி நியாயம்,ஆயுள்,மனித எலும்பு,இரும்புத்தொழில்,அடிமைத் தொழில்,அடிமைகள் வாழுமிடம், தொழிலாளர்கள் தங்குமிடம்,கீழ்ஜாதி மக்கள் இவைகளுக்கு காரகத்துவம் சனிபகவான் ஆவார்.


ராகு  தனித்து இருக்கும்போது ஒருவிதமாகச் செயல்படுகிறார்;அவரே ஒரு கிரகத்துடன் சேரும் போது அந்த கிரகத்தின் காரகத்துவத்தை வாங்கி பூமியிலிருப்பவர்களுக்கு வழங்குகிறார்.எனவே, அதர்மப்பாதையில் தர்மம் காக்கப்பட இருக்கிறது.


அதே சமயத்தில்,15.12.2012 சனிக்கிழமையன்று யுத்தக்கிரகமான செவ்வாய் தனது  உச்சராசியான மகர ராசிக்குள் நுழைகிறார்.நுழைந்து 23.1.2013 வரை மகரராசியைக் கடக்கிறார்.இந்த சூழ்நிலையில் உச்ச செவ்வாய் முழுப்பார்வையாக கடகராசியைப் பார்க்கிறார்.ஏற்கனவே,உச்சமாகிவிட்ட நீதிக்கிரகமான சனிபகவானும் தனது முழுப்பார்வையான பத்தாம் பார்வையால் அதே கடகராசியைப் பார்வையிடுகிறார்.கடகராசியில் நாம் வாழும் பூமி பிறந்தது(???!!).நாம் வாழும் இந்தியாவும் கடகராசியில் சுதந்திரமடைந்திருக்கிறது.

உச்சச் செவ்வாயானவர் தனது நான்காம் பார்வையால் மேஷராசியை இதே 45 நாட்களுக்கு பார்க்கிறார்;உச்ச சனியானனவர் தனது ஏழாம் பார்வையால் மேஷராசியை ஏற்கனவே பார்த்து வருகிறார்.இதெல்லாம் ஜோதிட ஆர்வலர்களுக்கும்,ஜோதிடர்களுக்கும் புரியும் விஷயம்.எனது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்காக விளக்கியிருக்கிறேன்.


இந்த 45 நாட்களில் நாம் வாழும் பூமியும், இந்தியாவும் போரால்,கலகத்தால்,அன்னிய நாட்டு உளவுத்துறைகளின் குரங்குச் சேஷ்டைகளால் கடுமையாக பாதிக்கப்படும்;நயவஞ்சகத்தால் கோடிகளைச் சுருட்டியவர்கள் மாட்டிக்கொள்வார்கள்;தண்டனைக்குள்ளாவார்கள்;அல்லது அவமானப்படுவார்கள்;அவர்கள் அரசியலில் மீண்டும் தலையெடுக்கவேமுடியாது;


தமிழ்நாடு மற்றும் இந்தியா மட்டுமல்ல;உலகம்முழுவதுமே பண மோசடி செய்த அயோக்கியர்கள் வகையாகச் சிக்கிச் சீரழிவார்கள்;கறுப்புப் பணம் மொத்தமும் அரசாங்கத்தை வந்து சேரும்.
கடகம் மற்றும் மேஷ ராசியினர்தான் அதிகமாக இந்த காலகட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணாதீர்கள்;அனைத்து ராசியினரும் கடுமையாகவே பாதிக்கப்படுவார்கள்;தனுசு ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வாகனப்பயணத்தின் போதும்,சாலையைக் கடக்கும்போதும்,ரயில் பாதையைக்கடக்கும் போதும் மிக  நிதானமாக இருக்க வேண்டும்.கடகராசியினர் கடந்த ஓராண்டில் செய்த தப்புக்களின் விளைவுகள் கர்மவினையாக திரும்பவரும்;மிதுனராசியினர் பேசும் பேச்சுக்கள் குடும்பத்திலும்,அலுவலகத்திலும்  குழப்பத்தை உருவாக்கும்;


 கன்னிராசியினர் அளவுக்கு மீறி பொறுத்துப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது; துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் பயண நேரம் தவிர மற்ற நேரங்களில் காலபைரவ மந்திரத்தையோ,அவர்களுடைய இஷ்ட தெய்வ மந்திரத்தையோ விடாமல் ஜபித்து வருவது அவசியம்.கும்ப ராசியினர் மற்றும் கும்ப லக்னத்தில்  பிறந்தவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

கடந்த ஒரு வருடம் வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள் அல்லது தினமும் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் அல்லது ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபட்டு வருபவர்களுக்கு பெரிய அளவில் பிரச்னைகள் வராது;ஏழரைச்சனி நடைபெறும் கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினரும்,அஷ்டமச்சனி நடைபெறும் மீன ராசியினரும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகும்.எனவே,இன்றிலிருந்தாவது ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.


முனீஸ்வரரைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள்,முனி என்ற பெயரைக் கொண்டவர்கள் தினமும் ஏதாவது ஒரு மிருகம் அல்லது பறவைக்கு உணவு தானம் செய்வது நல்லது;ஜோதிடர்கள் கண்டிப்பாக ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்;ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒருபோதும் அசைவம் சாப்பிடக்கூடாது;மது அருந்தக் கூடாது;முறையற்ற உறவில் ஈடுபடவே கூடாது.


பூமியின் புவியியல் அமைப்பில் மகத்தான மாற்றங்கள் நிகழும் காலம் இந்த 45 நாட்கள் ஆகும்.அல்லது மகத்தான மாற்றங்கள் நிகழ்வதற்கான அடையாளங்கள் வெளிப்படும்;இதே போன்ற சூழ்நிலை 10.4.2013 புதன் முதல் 21.5.2013 செவ்வாய் வரையிலும்;
19.8.2013 திங்கள் முதல் 8.10.2013 செவ்வாய் வரையிலும்; ஏற்பட இருக்கிறது.                                            இதோ,சீனாவும் ஜப்பானும் ஒரு தீவுக்காக நேற்று 12.12.2012 அன்று மோதத் துவங்கிவிட்டார்கள்;உலக நாடுகளில் பல தமது வெளியுறவுக்கொள்கைகளின் படி செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகும்;போராட்டங்களும்,யுத்த முன்னேற்பாடுகளும் துவங்கிவிட்டன;அரசின் கொள்கையை வடிவமைப்பவர்களின் மனதில் பேராசை மற்றும் போர்வெறி உருவாகியிருக்கிறது.


இந்தக் கால கட்டத்தில் நாம் செய்ய வேண்டியது அடிக்கடி அண்ணாமலைக்கு கிரிவலம் செல்வது தான்;அப்படிச் சென்று குறைந்தது 5 கிலோ நவதானியங்களையும்,குறைந்தது 1 கிலோ டயமண்டு கல்கண்டுகளையும் கிரிவலப்பாதையில் தூவ வேண்டும்.ஒவ்வொரு முறையும் கிரிவலம் வரும்போதும் மஞ்சள் நிற ஆடை அணிந்து ,இரு கைகளிலும் ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக்  கொண்டு மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமாக மனித உயிர்ச் சேதம் நிகழாது.இனி ஒரு போதும் அரசுகளை நம்பமுடியாத சூழ்நிலை இருப்பதால்,நாம் வாழும் பூமியை நாமே பாதுகாத்திட ஆன்மீக முயற்சிகளை எடுப்போம்;

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ