RightClick

குருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்!!!ஒருவரது பிறந்த ஜாதகத்தில் நவக்கிரகங்களில் எட்டு கிரகங்கள் பலமிழந்தோ அல்லது நீசமாகியோ அல்லது பாவக்கிரகங்களுடன் சேர்ந்தோ இருந்தாலும், அவரது ஜாதகத்தில் குரு ஆட்சி பெற்று,அவரது பிறந்த லக்னத்துக்கு முழுச் சுபராக இருந்தால்(யோகம் மட்டும் தருபவராகி,யோகம் தரும் இடத்தில் இருந்தால்) அவரது வாழ்க்கை சகல வளங்களோடும் நலங்களோடும்  ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு நொடியும் இருக்கும்.

அதே சமயம்,ஒருவரது பிறந்த ஜாதகத்தில் எட்டு கிரகங்களும் வலுவாக இருந்து,குரு நீசமாக இருந்தால்,அவரால் தனித்து எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது;எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ள முடியாது; போதுமான நுண்ணறிவு இராது; என்று ஜோதிட அறிவியல் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு மனிதனின் இதயம்,ஒரு பிரச்னையை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயும் திறன்,சாஸ்திரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் திறன்,திடீர் சிக்கல்களை உடனே எதிர்கொண்டு அதைத் தீர்க்கும் புத்திசாலித்தனம்,புத்திரப்பாக்கியம்,தங்கம்,யோகாசனப் பயிற்சி மையங்கள்,கல்வி,ஆசிரியர்,ஜோதிடப்புலமை,தீர்க்கதரிசனத் திறன்,புனிதமான பொருட்கள்,பணம்,செல்வ வளம்,வங்கிகள்,கொடுக்கல் வாங்கல் தொழில்,நிதி நிர்வாகம்,மூலிகைகளின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளும் சாமர்த்தியம்,வேதசாஸ்திரங்கள்,வேத பண்டிதர்கள்,சுபமான காரியங்கள்,நல்ல நம்பிக்கை,கல்வி நிலையங்கள் போன்றவைகளுக்கு குரு கிரகமே பொறுப்பாகிறார்.(காரகத்துவமாகிறார்)
பல அனுபவ மொழிகளும்,ஜோதிட பழமொழிகளும் குருவின் அருளாலேயே நமக்கு கிடைத்திருக்கின்றன.குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டு வித்தையே என்ற பழமொழி மூலமாக குருவின் மகத்துவத்தை உணரலாம்.ஆன்மீகக்கடல் வலைப்பூவை யாம் நடத்தினாலும்,தகுந்த குருவின் அருள் கிடைத்தப்பின்னரே,வெகு ஜனத் தொடர்பில் ஒரு புகழை எம்மால் எட்ட முடிந்தது என்பதை ஆரம்ப கால ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் உணருவார்கள்.

ஒவ்வொரு பதிவிலும் எனது / நமது ஆன்மீக குரு என்று குறிப்பிடக் காரணம்,குருவைப் புகழ்வது அல்ல;குருவின் அருளால் யாம் உங்களுக்கு அவருடைய ஆன்மீக உபதேசத்தைத் தெரிவிக்கிறோம் என்று குருவின் தத்துவத்தை உங்களுக்கும் உணர்த்துவதற்கே!!! ( குருவிடம் தாம் எதிர்பார்க்கும் வித்தையை கற்று நீங்கியப் பின்னர், குருவை இழிவு படுத்துவதும்,அவரது புகழை மறைத்து தாமே பெரிய ஆளாகக் காட்டிக்கொள்வதும் குரு துரோகம் ஆகும்.இந்த சூழ்நிலை கலியுகத்தில் மட்டுமே சர்வ சாதாரணமாக எல்லாத் துறைகளிலும் காணலாம்.உதாரணங்களாக உங்கள் அலுவலகம்/தொழிலிலேயே இருக்கிறார்கள்)
குரு நீசமாக இருப்பவர்களும்,குருவின் அருளுக்காக ஏங்குபவர்களும் பின்வரும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி குருவின் அருளைப் பெறலாம் என்று நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் போதித்திருக்கிறார்.
குரு நீசமாக இருந்த கடந்த காலங்கள்:இந்த தேதிகளுக்குள் பிறந்தவர்களும்,இந்த வழிபாட்டினைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.இதன் மூலமாக குருபலம் ஏற்படும்.          23.4.1949 முதல் 17.2.1950 வரை;
9.4.1961 முதல் 29.1.2962 வரை;
7.3.1973 முதல் 13.1.1974 வரை;
22.2.1985 முதல் 25.12.1985 வரை;
5.2.1997 முதல் 29.11.1997 வரை;
20.1.2009 முதல் 22.3.2009 வரை;
5.1.2021 முதல் 1.2.2021 வரை;(இந்த நாட்கள் இனிமேல்தான் வரப்போகுது;இந்த நாட்களின் சிசேரியன் மூலமாகவோ,இயற்கையான வழிமுறையின் மூலமாகவோ குழந்தை பிறப்பு இருக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது)
மேலே குறிப்பிட்ட தேதிகள் மற்றும் தேதிகளுக்குட்பட்ட நாட்களில் பிறந்தவர்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இராது;சுயமாக செயல்பட முடியாது;சில ஜோதிடவிதிகள் படி சில விதிவிலக்குகள் இருக்கும்.அப்படிப்பட்ட விதிவிலக்குகள் இருப்பவர்கள் இந்த சுயபரிகாரம் செய்ய வேண்டியிருக்காது;

மஞ்சள்,குங்குமம்,சந்தனம்,பால்,மஞ்சள் நிற வஸ்திரம்,செவ்வந்திப்பூக்களால் மட்டும் உருவாக்கப்பட்ட மாலை அல்லது மஞ்சள் நிறப்பூக்களால் கோர்க்கப்பட்ட மாலை,நெய்வேத்தியமாக கொண்டைக் கடலை மாலை(மஞ்சள் நிற துண்டு,இரண்டு ஐந்துமுக ருத்ராட்சம் போன்றவைகளையும் கொண்டு வர வேண்டும்) இவைகளை  வியாழ சோமேஸ்வரர் கோவிலுக்குக் கொண்டு வர வேண்டும்.இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் மாநகரில் இருக்கும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இங்கே,இந்தப் பொருட்களை ஏதாவது ஒரு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்கு மேல் கொண்டு வர வேண்டும்.(தமிழ் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையாகவோ அல்லது குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி இவைகளில் ஏதாவது ஒரு நட்சத்திரம் வரும் வியாழக்கிழமையாகவோ இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்)வசதி படைத்தவர்கள்,குருவின் மீது அளவற்ற பாசம் கொண்டவர்கள் மஞ்சள் நிறப் பட்டு வஸ்திரமும் கொண்டு வரலாம்;

இங்கே வந்து மூலவரை வழிபட வேண்டும்.வழிபட்டு ஒரு மணி நேரம் வரை மூலவரின் முன்பாக ஒரு மஞ்சள் துண்டில் வடக்கு நோக்கி அமர்ந்து ஓம்சிவசிவஓம் என்று ஒரு மணிநேரம் வரை ஜபிக்க வேண்டும்.(எப்படி ஜபிக்க வேண்டும் என்பதை அறிய இங்கே சொடுக்கவும்)பிறகு,மூலவருக்கு தமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்;


பின்னர்,நவக்கிரக சன்னதியில் இருக்கும் வியாழபகவானுக்கு கோவில் பட்டர்/சிவாச்சாரியாரிடம் கூறி அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகம் நிறைவடைந்ததும்,நெய்வேத்தியமான கொண்டைக் கடலையை குரு பகவானுக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும்;மஞ்சள் நிற வஸ்திரத்தை அணியச் செய்ய வேண்டும்.மஞ்சள் நிறப் பூக்களை குருபகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.அப்படி செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தங்களை கொஞ்சம் ஒரு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.சேகரித்து,நமது வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.கொண்டு வந்து குரு பலம் வேண்டுவோர் அந்த தீர்த்தத்தை வீட்டுத் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.இந்த அபிஷேகம் முதலான பரிகாரங்களைச் செய்யும் பூசாரி/பட்டர்/அந்தணருக்கு தாராளமாக காணிக்கையை வழங்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 12 வியாழக்கிழமைகளுக்குச் செய்து வர குரு பலம் உண்டாகும்.சிலருக்கு குருவால் உண்டான பித்ரு தோஷம் அடியோடு விலகும்.திருமணத்தடை உடனே நீங்கும்.இந்த வழிபாட்டை தொடர்ந்து 12 வியாழக்கிழமை(ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் மாதாந்திர வியாழக்கிழமைகளில் செய்து வரலாம்)இவ்வாறு ஒருசில வியாழக்கிழமைகளுக்கு குருப்ரீதி செய்து வர, சில சுப சகுனங்களை நேரில் காணலாம்.

தமிழ்நாட்டில் பலருக்கு ஒவ்வொரு மாதமும் கும்பகோணம் வந்து வியாழ சோமேஸ்வரர் கோவிலில் குருப்ரீதி செய்ய முடியாது;ஏனெனில்,பணத்துக்கு அதிபதியான குருவே உரியவர்களுக்கு பலமில்லாமல் (அவர்களின் ஜாதகத்தில்) இருக்கும்.அப்படி சிரமப்படுபவர்கள்,அவரவர் ஊர்களில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் நவக்கிரக பீடத்தில் இந்த குருப்ரீதியைச் செய்யலாம்.இவ்வாறு தொடர்ந்து 11 முறை செய்து விட்டு,
12 வது முறை மட்டும் கண்டிப்பாக கும்பகோணம் அருள்நிறை வியாழ சோமேஸ்வரர் ஆலயத்துக்கு வருகை தந்து குருப்ரீதியைச் செய்ய வேண்டும்.அவ்வாறு வரும்போது மூலவருக்கும் சேர்த்து அபிஷேகம் =ஒருமுறை மட்டும் = செய்ய வேண்டும்.(வேறு ஒரு வழிமுறையும் உண்டு;இந்த 12 வியாழக்கிழமைகளில் குருப்ரீதியை அவரவர் ஊர்களில் செய்து வரும் போது மூன்றாவது,ஆறாவது,ஒன்பதாவது மற்றும் பனிரெண்டாவது வியாழக்கிழமைகளிலும் கும்பகோணம் வருகை தந்து வியாழசோமேஸ்வரர் கோவிலில்  குருப்ரீதி செய்யலாம்.அவ்வாறு செய்யும்போது பனிரெண்டாவது முறை வரும்போது மூலவராகிய வியாழ சோமேஸ்வரருக்கு கண்டிப்பாக அபிஷேகமும்,குடும்ப அர்ச்சனையும் செய்ய வேண்டும்.)

22 வயது வரையில் படிப்பவர்களுக்கு குரு பலமின்றி,கல்வியில் பெரும் போராட்டமே நிகழும்.அப்படிப்பட்டவர்கள் அவரவர் ஊர்களில் மேற்கூறிய பொருட்களுடன் அபிஷேகம் செய்யும் போது,அபிஷேகத்தில் தேனையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.தேன் அபிஷேகத் தீர்த்தத்தை தனியாக ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.வழிபாடு நிறைவடைந்ததும்,குருபகவானுக்கு நேர் எதிராக அமர்ந்தவாறு அந்த மாணவ/வியின் பெற்றோர் அல்லது அர்ச்சகர் அந்த அபிஷேகம் செய்யப்பட்ட தேனை அந்த மாணவ/வியின் நாக்கில் தடவ வேண்டும்.இவ்வாறு பனிரெண்டு வியாழக்கிழமைகளில் செய்து வர கல்வித்தடைக்குக் காரணமாக இருக்கும் குருபலவீனம் நீங்கும்.கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும்.

குரு பரிகாரஸ்தலம் ஆலங்குடி என்று நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம்.தட்சிணாமூர்த்தியின் பரிகாரஸ்தலமே ஆலங்குடி ஆகும்.தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கு ஒரு சிறு தொடர்பும் கிடையாது என்பதே உண்மை;நம்மிடையே இது போன்ற ஏராளமான தவறான நம்பிக்கைகள் பல நூற்றாண்டுகளாக விதைக்கப்பட்டிருக்கின்றன;அவைகளின் அடிப்படையில் நாம் வழிபாடுகளையும்,பரிகாரங்களையும் செய்வதால் தான் நமது கர்மவினைகள் தீர்வதில்லை;
குரு பகவானின் பரிகார ஸ்தலம் கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயமே!!!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் குரு குரு குரு நமஹ
ஓம்சிவசிவஓம்