RightClick

கைப்பேசி என்கிற எட்டப்பன்!


உனக்கு ஒரு பரம ரகசியமான விஷயம் சொல்லப் போகிறேன். தப்பித் தவறிக்கூட நீ அதை வேறு யாரிடமும் சொல்லிவிடக் கூடாது?'' என்று நீங்கள் கைப்பேசி மூலம் உங்களுடைய நண்பரிடம் குசுகுசுவென்று ஒரு செய்தியைச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அந்தப் பரம ரகசியத்தை இந்தியாவிலிருந்து மட்டுமன்றி, அகில உலகத்திலிருந்தும் பல நூறு பேர் ஒட்டுக் கேட்டுக்கொண்டும் பதிவு செய்துகொண்டுமிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!
வனவிலங்குகள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள் போன்றவற்றின் கழுத்தில் ஓர் அலைபரப்பிக் கருவியைப் பொருத்திவிட்டு, வானில் சுற்றி வரும் புவியியல் இடமறியும் செயற்கைக் கோளின் உதவியுடன் அந்த விலங்குகளின் நடமாட்டத்தை உயிரி ஆய்வர்கள் கண்காணிப்பார்கள்.
கைப்பேசி உண்மையில் உங்கள் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு ரேடியோ காலர். நீங்கள் நடந்தாலும் நின்றாலும் பறந்தாலும் எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், யார் யாருடன் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்கள் என்பன போன்ற விவரங்களை அக்கணமே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களில் பதிவு செய்யும் எட்டப்பன். அதைக் கொண்டு அழைக்கவும் அழைக்கப்படவும் முடிவது உங்களுக்கு ஆசை காட்டும் தூண்டிற் புழு.
கடந்த ஆண்டில் அமெரிக்கக் காவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் கைப்பேசி நிறுவனங்களிடமிருந்து 13 லட்சம் கைப்பேசி உரையாடல்களைப் பற்றிய பதிவுகளைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். பல சமயங்களில் உளவுத்துறையினர் உரிய வாரண்டுகள் ஏதுமில்லாமலேயே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
ஜிபிஎஸ் மூலம் புவிப்பரப்பில் துல்லியமாக இடம் அறியும் தொழில்நுட்பமும் கைப்பேசிகளின் பரிணாம வளர்ச்சியும் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. ஐஃபோன், ஸ்மார்ட்ஃபோன் என்று பற்பல பயன்பாடுகளுடன் அதிநவீனக் கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றைக் கைப்பேசி என்று அழைப்பதுகூட இன்றளவில் பொருத்தமில்லை. அவற்றின் மூலம் கைப்பேசி நிறுவனங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்து உங்களுடைய ஒவ்வோர் அசைவையும் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.
காரிருளும் பனிமூட்டமும் அவற்றின் பார்வையைத் தடுக்க முடியாது. ஆழ்கடலுக்கு அடியிலும் சுரங்கங்களுக்குள்ளும் அடர்ந்த வனாந்தரங்களுக்குள்ளும்கூட அவற்றால் பார்க்க முடியும்.
ஸ்மார்ட் ஃபோன் போன்ற அதிநவீனமான கருவிகள் பற்பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றை ஒருவர் பயன்படுத்தும்போதெல்லாம் அவரைப் பற்றிய தன்னிலை விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த எந்தக் கடைகளில் என்ன என்ன பொருள்களை எப்போதெல்லாம் வாங்குகிறார்; அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது; என்று எப்போது எவ்வளவு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிறார் அல்லது வங்கியில் செலுத்துகிறார்; மின்னஞ்சல் மூலம் யார் யாருடன் எப்போதெல்லாம் தொடர்பு கொள்கிறார்; எந்த இணைய தளங்களைப் பார்வையிடுகிறார்; எந்தவிடத்துக்கு, எந்த நேரத்தில், உறங்கப்போய் எப்போது கண் விழிக்கிறார்; இத்யாதித் தகவல்களை அவர் தன்னையும் அறியாமல் கைப்பேசி நிறுவனங்களில் உள்ள கருவிகளில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்.
பல கைப்பேசி நிறுவனங்கள் இத்தகைய தகவல்களைச் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உங்களுக்கு ஓர் அயல்நாட்டு அல்லது உள்நாட்டு ஓட்டலிலிருந்து அழைப்பு வந்தால் வியப்படைய வேண்டாம். அந்த ஓட்டல் இருக்கும் ஊருக்கு நீங்கள் அலுவல் நிமித்தம் அடிக்கடி செல்கிறீர்கள் என்பதையும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு சென்று பத்து நாள்கள் தங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் அது கைப்பேசி நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டது என எளிதாய் ஊகிக்கலாம்.
சுற்றுலாப் பயணிகள் ஒரு புதிய ஊரிலுள்ள முக்கியமான இடங்களுக்குச் செல்லும் பாதையறிய வரைபட வசதியுள்ள கைப்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவுகிறது.
ஒவ்வோராண்டும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் போக்குவரத்துகள், உரையாடல்கள், நிதி நிலவரங்கள் மட்டுமன்றி, சிந்தனைப் போக்குகளைக் கூடக் கண்டறியவும் கண்காணிக்கவும், தொகுத்து வைக்கவும், தமக்குள் பரிமாறிக் கொள்ளவும் உதவுகிற புதிய சேவைகளைக் கொண்ட கைப்பேசிகளை உருவாக்குவதற்குப் பல மில்லியன் டாலர்களைச் செலவழிப்பதாகக் கொலராடோ பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியராக உள்ள பால் ஓம் கூறுகிறார்.
இதையறியாத மக்கள் தேனில் வந்து விழும் ஈக்களைப்போல ஆவலுடன் ஸ்மார்ட் ஃபோன், ஐ போன் என அதிநவீனக் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தி உணர் கருவிகள் மற்றும் இணையச் சுற்றுகளின் இடையறாத கண்காணிப்பு வலையில் வலுவில் வந்து சிக்குகிறார்கள்.
அதிநவீனக் கைப்பேசிகளின் உதவியால் பூமியில் எந்தவொரு பொருளின் இருப்பிடத்தையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் புள்ளி துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஒருவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவு ஊகித்துவிட முடியும்.
ஒரு கைப்பேசி நிறுவனத்திலுள்ள கருவிகள் அதன் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகள் எந்த இடங்களிலுள்ளன என்பதை இடையறாது பதிவு செய்து கொண்டே இருக்கின்றன. பல சமயங்களில் காவல் துறையினர் அப்பதிவுகளைக் கோரிப் பெறுவதுண்டு. குறுந்தகவல் செய்திகள் மூலம் விளம்பரம் செய்வோரும் இப்பதிவுகளைக் கோருவார்கள்.
இப் பதிவுகள் ஓராண்டுக் காலத்துக்குப் பராமரிக்கப்பட்ட பின் அழிக்கப்படுவது வழக்கம். ஆயினும், அரசு, நீதிமன்றங்கள் அல்லது காவல்துறையின் கோரிக்கைகளுக்கு இணங்கச் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்படும். ஒருவரது நடமாட்ட விவரங்களிலிருந்து அவருடைய ஜாதகத்தையே கணித்துவிட முடியும். அவர் நாள் தவறாமல் அலுவலகம் சென்று காலை முதல் மாலை வரை அங்கேயே தங்கி இருக்கிறாரா; இடையிடையே வெளியே சென்று சொந்த வேலைகளை முடிக்கிறாரா; மாலையில் அலுவலகத்திலிருந்து நேராகச் சொந்த வீட்டுக்குப் போகிறாரா அல்லது வேறு வீட்டுக்குப் போகிறாரா; அல்லது பார், சூதாட்ட விடுதி என்று பொழுது போக்குகிறாரா; ஜிம் அல்லது பீச்சில் நடை பயின்று உடல் நலத்தை அக்கறையுடன் பேணிப் பராமரிப்பவரா; எந்த மருத்துவரிடம் எந்த நோய்க்குச் சிகிச்சை பெறுகிறார்? எந்தப் பொழுதுபோக்கு கிளப் அல்லது தொழிற்சங்கம் அல்லது அரசியல் கட்சியில் உறுப்பினராயிருக்கிறார்? சிக்கனமானவரா அல்லது செலவாளியா; இன்னோரன்ன ஏராளமான தன்னிலைத் தகவல்களைக் கைப்பேசிகள் மூலம் திரட்ட முடியும்.
கைப்பேசிகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மட்டுமே பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. அதிநவீனக் கைப்பேசிகளின் பயன்படு நேரத்தில் 20 சதவிகிதம்தான் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுவதாக ஓர் இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. மீதி நேரமெல்லாம் இணைய தளத்தில் மேய்வது, விளையாட்டு, இசை, சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது எனச் செலவழிக்கப்படுகிறது.
அதிநவீனக் கைப்பேசியை வைத்திருப்பவருக்கு கைக்கடிகாரம், கேமரா, கால்குலேட்டர், சிடி பிளேயர், பண்பலை ரேடியோ போன்ற சாதனங்களே தேவையில்லை. அவற்றின் பணிகளையெல்லாம் ஓர் அதிநவீனக் கைப்பேசியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கடன் அட்டைகள், வங்கிக் கணக்கு வரவு செலவுகள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது எல்லாமே கைவிரல் முனைகளில் சாத்தியமாகிவிட்டன.
சினிமா டிக்கெட் முதல் ரயில் அல்லது பஸ் டிக்கெட் வரை கைப்பேசி வாங்கித் தரும். ஒரு மடிக்கணினிக்குச் சமானமாகச் செயல்படக்கூடிய கைப்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டன.
கண்காணிப்பு வலையில் சிக்க விரும்பாத கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள், கடத்தல் மன்னர்கள் போன்ற சட்டவிரோதிகள் பொய் முகவரி கொடுத்து அல்லது அனாமதேயமாக ரொக்கப் பணம் தந்து பிரீபெய்டு முறையில் கைப்பேசி இணைப்பு பெறுவார்கள். ஓரிரு நாள்கள் அவற்றைப் பயன்படுத்திவிட்டு கைப்பேசிகளை உடைத்து நொறுக்கி விடுவார்கள். அவை இருக்குமிடம் தெரிந்தாலும் அவற்றை அந்த நபர்களுடன் தொடர்புபடுத்த முடியாது. பல நாடுகளில் பிரீபெய்டு முறையில் ரொக்கமாகக் கட்டணத்தைச் செலுத்தினால் பெயரையும் முகவரியையும் தெரிவிக்க வேண்டாம். அரபு நாடுகளிலும் பர்மாவிலும் கிளர்ச்சியாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கண்காணிப்பிலிருந்து தப்பிவிடுகிறார்கள். நம் நாட்டில் அது முடியாது.
நம்மைப் போன்ற சாமானியர்கள் அழைப்பு அனுப்பவும் பெறவும் மட்டுமே வசதி செய்யும் கைப்பேசிகளை வாங்கி வைத்துக்கொண்டு கண்காணிப்பாளர்களின் கவனத்தை அதிக அளவில் கவராமல் பயன்படுத்தலாம். நாம் போகுமிடம் அவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகக் கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போவதில் அர்த்தமில்லை. கைப்பேசியைப் பயன்படுத்தாதபோது அதை அணைத்து வைக்கலாம். ஆனால், நம்மை யாராவது அழைத்தால் தெரியாமல் போகும். பாட்டரியை வெளியே எடுத்து வைத்தாலும் போதும். ஆனால், மீண்டும் உள்ளே பொருத்துவதற்குத் தனித்திறமை வேண்டும். கைப்பேசியே இல்லாமலிருப்பது உத்தமம். ஆனால், அது அசாத்தியம். உண்மையை ஒப்புக் கொள்வோம். கைப்பேசி ஓர் இன்றியமையாத இன்னல், விலக்க முடியாத வில்லன், ஒதுக்க முடியாத ஒற்றன்தான் என்றாலும் அது இல்லாமல் வாழ்க்கை பூரணம் பெறாது!