RightClick

ஈழத்தில் இருக்கும் சிவாலயங்களும்,அங்கே இந்து தர்மத்தின் பரிதாப நிலையும்


முகவுரை: விஜயன் என்ற இளவரசன் தனது தோழர்களுடன் வட இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, இலங்கைத்தீவில் கரையிறங்குவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, ஈழத் திருநாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றுகள் உள்ளன.

இராமாயணக் கதையின் முக்கிய வில்லன் பாத்திரமான இராவணன் என்ற அரசன் இலங்கையில் மிகச் சிறப்புடன் அரசாட்சி செய்து வந்தான் என்று இராமாயணம் மட்டுமல்ல, மேலும் பல சமய, இலக்கிய நூல்கள் எடுத்தியம்புகின்றன.
இராவணன் மிகவும் சிறந்த சிவபக்தன் எனப் புராணங்களும், இராமாயணமும்கூட எடுத்துரைக்கின்றன. (இராவணன் செய்த ஒரே குற்றம் மாற்றான் மனைவிமேல் மையல் கொண்டதுதான். அது வேறு தனிக்கதை.)

இராவணன் காலத்திலேயே இலங்கையில் சிவ வழிபாடு இருந்திருக்கின்றது என்பதைச் சிறு பிள்ளைகூட உணர்ந்துகொள்ள முடியும்.
இதற்கு பல ஆதாரங்கள் இலங்கைத் தீவிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. இவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழர்களால் இயலவில்லை.
இதற்கு முக்கிய காரணம், இலங்கைத் தீவின் ஆட்சி எல்லாளன் என்ற தமிழ் மன்னனின் கையிலிருந்து துட்டகைமுனு என்ற சிங்கள அரசனிடம் பறிபோன நாளிலிருந்து, இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பலவித உரிமைகளையும், அதிகாரங்களையும் இழந்தே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
ஆகவே, இலங்கைத் தீவு முழுவதிலும் ஆட்சி செய்துவந்த தமிழர்கள் தமது வரலாற்று ஆதாரங்களைப் புதைபொருள் ஆராய்ச்சி மூலம் தேடி வெளிக்கொணர்வதற்குரிய வசதி வாய்ப்புகளை இழந்து வாழ்ந்தார்கள்.
போதாக்குறைக்கு, அக்காலத்திலிருந்து, புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பரணவிதான முதலிய சிங்கள ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கைகளில் கிடைத்த தமிழர்களுக்குச் சாதகமான ஆய்வுகளை மறைப்பதிலும், சிங்களவர்களுக்குச் சாதகமானவற்றை வெளியிடுவதிலுமே முழுக் கவனம் செலுத்தினார்கள்.
ஆயினும், போர்த்துகேயர் முதலிய அந்நிய ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகள் மற்றும் எமது திருக்கோயில்களை இடித்தொழிப்பதற்கு முன்னர் அவற்றின் அழகினால் கவரப்பட்டு அவர்கள் வரைந்த ஓவியங்கள் ஆகியவற்றின்மூலம் நமது பண்டைய வரலாற்றுச் சிறப்புகளில் சில துளிகளை அறியக்கூடியதாக உள்ளது.

அவைகளில் குறிப்பிடத்தக்கதோர் உண்மை, விஜயன் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இலங்கைத் தீவின் கரையோரங்களில் புராண காலத்து வரலாற்றுச் சிறப்பைக்கொண்ட ஐந்து ஈஸ்வரங்கள் (ஐந்து சிவன் திருக்கோயில்கள்) மிகச் சிறந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டு, வழிபடப்பட்டு வந்திருக்கின்றன என்பதாகும்.
இந்த ஐந்து ஈஸ்வரங்கள் எவை என்று பார்ப்போமா?

திருக்கேதீஸ்வரம் - மன்னார்
திருக்கோணேஸ்வரம் - திருகோணமலை
முன்னேஸ்வரம் - புத்தளம்
நகுலேஸ்வரம் - யாழ்ப்பாணம்
தொண்டீஸ்வரம் என்ற தேவன்துறை - மாத்தறை

இலங்கைத் தீவின் வரைபடத்தை எடுத்து வைத்து, இத் திருக்கோயில்கள் அமைந்திருக்கும்/ அமைந்திருந்த இடங்களை அவதானிப்போமானால், இலங்கைத் தீவின் கரையோரமாக, ஐந்து முக்கிய முனைகளில் இத் திருக்கோயில்கள் அமைந்திருப்பதை / அமைந்திருந்ததை நாம் உணர முடியும்.
'அமைந்திருந்ததை' என்று ஏன் இறந்த காலத்தில் சொல்கின்றேன் என்றால், இந்த ஐந்து புராதனச் சிறப்பு வாய்ந்த ஈஸ்வரங்களுள் முக்கியமானதொன்றான 'தேனவரம் என்ற தேவன்துறை' என்று அழைக்கப்பட்ட சிவன் - விஷ்ணு திருக்கோயில் இன்று அடியோடு அழிக்கப்பட்டு விட்டது.
இத் திருக்கோயில் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் அனைத்தையுமே அழித்தொழிப்பதற்கு பெரும்பான்மையினத்தோர் முழுமூச்சாக முயன்று மறைத்து விட்டார்கள்.- ஆனாலும், ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆகவே, எமது இக் கட்டுரைத் தொடரின் நோக்கம் - இலங்கைத் தீவில் புராதன காலந்தொட்டு மிகச் சிறப்புடன் திகழ்ந்துவந்த ஐந்து ஈஸ்வரங்கள் பற்றிய உண்மைத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதேயாகும்.
sltemple
இவற்றில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் நால்வரான சமய குரவர்களால் பாடப் பெற்ற சில தலங்களும் உள்ளன.
இத்தலங்களிலே பதிந்து 'ஈழபதீஸ்வரர்' ஆக அருள் வழங்குகின்றார், சிவபெருமான். நன்றி:www.sivantemple.org