RightClick

தொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜீவசமாதி வழிபாடு!!!
கலியுகம் பிறந்து 5100 வருடங்கள் ஆகிவிட்டன;மனித மனங்களுக்குள் நல்ல விஷயங்களைத் தேடி கண்டுபிடித்து பதிய வைப்பது  ஒரு சாதனையாகவும்,சுலபமாக திசை மாறிச் செல்வது சகஜமாகவும் போய்விட்டது.இந்த சூழ்நிலையில் கொஞ்சம் ஆன்மீக ஆர்வத்தோடு இருந்தாலே நம்மை சாமியார்,துறவி என்று கூறுகிறார்கள்.ஆன்மீக ஆர்வத்தையும் ரகசியமாக செயல்படுத்திட வேண்டியிருக்கிறது.இதனால்  இரண்டுவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.ஒன்று நம்மை சாமியார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்;இரண்டு நாம் செய்யும் இறை வழிபாடு/பரிகாரம் முழுமையாகச் செய்ய முடியும்;(பிறரின் பொறாமை நம்மை பாதிக்காது;)முழுமையாகவும்,முறையாகவும் செய்ய முடிவதால் அதன் பலன்கள் நம்மை முழுமையாக வந்து சேருகின்றன.மேலும் கோவில்களில் எவையெல்லாம் சித்தர்கள்,மகான்களின் ஜீவசமாதிக்கு மேலே கட்டப்பட்டிருக்கின்றனவோ,அவைகளே விரைவான வரங்களைத் தருகின்றன;இதற்கு உதாரணமாக பழனி,திருப்பதி,திருச்செந்தூர்,மதுரை,திருஅண்ணாமலை என்று ஒரு  பட்டியலை எடுத்துச் சொல்ல முடியும்.


மனிதர்களில் பெரும்பாலானவர்களின் மனங்களில் சூது,காமம்,மிதமிஞ்சிய பணவெறி அல்லது மது போதை,பெண்/ஆண் மீதான அளவற்ற இச்சை புகுந்துவிட்டது;இந்த அலை கோவிலில் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களிடம் பரவிவிட்டதால்,கோவிலின் மூல சக்திகள் கோவிலுக்குள்ளேயே சில சன்னதிகளில் பதுங்கிவிட்டன;இதனாலும்,பல பொதுமக்கள் குறைந்த பட்ச கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்கு வருவது பெருமளவு குறைந்துவிட்டது;எனவே, கோவிலின் சானித்தயங்கள் சிதைந்துவிட்டன; அல்லது சுருங்கிவிட்டன;
ஆனால்,நாம் குறுகிய காலம் வரை வழிபாடு செய்ததும் விரைவான பலன்களை எதிர்பார்க்கிறோம்;அப்படிப்பட்ட விரைவான வழிபாட்டுப் பலன்கள் கிடைக்க ஜீவசமாதி வழிபாடு செய்வதே சிறந்தது என்பதை ஆன்மீக ஆராய்ச்சிகளாலும்,நமது ஆன்மீக குரு  திரு.சிவமாரியப்பன் அவர்களின் வழிகாட்டுதலாலும் உணர முடிந்திருக்கிறது.இதை ஆன்மீகக்கடல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமா?எனது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களை ஓராண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் சந்தித்தார்;அவர் ஜவுளி சார்ந்த தொழிற்சாலை வைத்திருக்கிறார்.சுமார் 30 தொழிலாளிகளை நிர்வாகித்து,தொழிலை நடத்திவந்தார்.இந்த சூழ்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலைவாசி உயர்வு,பெட்ரோல் விலை உயர்வு,ஊழியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பது போன்றவற்றால் அவருடைய தொழில் லாபம் ஈட்டியதிலிருந்து நட்டத்தை நோக்கி இறங்கத் துவங்கியது;இந்த சூழ்நிலையைச் சொல்லி,நமது ஆன்மீக குருவிடம் ஆலோசனை கேட்டார்.அவர் பாம்புக்கோவில் சந்தையில் இருக்கும் மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்துக்கு ஒவ்வொரு சனியும் மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் வந்து(நோட்டீஸில் போட்டிருப்பது அச்சகத்தாரின் கவனக்குறைவு!) பின்வரும் பொருட்களுடன் பிரார்த்தனை செய்யச் சொன்னார்;இவ்வாறு வாரம் ஒரு  சனிக்கிழமை அல்லது மாதம் ஒரு சனிக்கிழமை என்று தொடர்ந்து 8 சனிக்கிழமைக்கு பிரார்த்தனை செய்யச் சொன்னார்.


1.முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை
2.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு
3.விதையில்லாத கறுப்பு திராட்சை ஒரு கிலோ
4.விதை நீக்கப்பட்ட பேரீட்சை ஒரு பாக்கெட்
5.ஒரு நெய் தீபம் ஏற்றத் தேவையான பொருட்கள்
6.நாட்டு வாழைப்பழங்கள் ஆறு
7.பத்தி பாக்கெட் ஒன்று
8.வெற்றிலையும் கொட்டைப்பாக்கும் ஒருவருக்குத் தேவையான அளவு
9.(முதல் சனி அல்லது எட்டாவது சனியன்று ஒருமுறை தேங்காய் உடைக்க வேண்டும்)


முதல் சனிக்கிழமையன்று தனது ஊரான தேக்கடியிலிருந்து பாம்புக்கோவில் சந்தைக்கு காரில் வந்துவிட்டார் அந்த தொழிலதிபர்.(திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடிக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவே அமைந்திருக்கும் குக்கிராமமே பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இங்கே ரயில் நிறுத்தம் ஒன்று உண்டு;மதுரை டூ செங்கோட்டை ரயில் மார்க்கத்தில் சங்கரன் கோவிலுக்கு அடுத்த சிறிய ரயில் நிறுத்தமே பாம்புக்கோவில் சந்தை ஆகும்.)மாலை 5.30 க்கு வந்து மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்தில் டயமண்டு கல்கண்டு பாக்கெட்டை கிழித்து வைத்தார்;பேரீட்சை பழத்தின் பாக்கெட்டையும் கிழித்து வைத்தார்;நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு,பத்தி பொருத்தி,அந்த ஆறு நாட்டு வாழைப்பழங்கள் மீது நட்டு வைத்தார்.ரோஜா மாலையை மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி மீது சாத்தினார்;சுமார் ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்தார்;பிறகு,அங்கே இருந்தவர்களுக்கு டயமண்டு கல்கண்டையும்,பேரீட்சையையும் பாதி பகிர்ந்து கொடுத்தார்;மூன்று வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.
அடுத்த சனிக்கிழமைக்கு  முதல் நாள் அவரது மூன்றாவது குழந்தையான மகள் பருவமடைந்துவிட்டாள்;இதனால் சுமார் ஒரு மாதம் பாம்புக்கோவில் சந்தைக்கு வர முடியவில்லை;புண்ணியதானம் செய்துவிட்டு,மகளின் மறு சடங்கு முடியும் வரை(2 மாதங்கள்) பொறுத்திருந்துவிட்டு,3வது மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு சனிக்கிழமைகளுக்கு வந்து மேற்கூறியவிதமாக பிரார்த்தனை செய்துவிட்டு,பாதி டயமண்டு கல்கண்டையும்,பாதி பேரீட்சைப்பழம்,மூன்று நாட்டு வாழைப்பழங்கள்,பாதி விதையில்லாத கறுப்பு திராட்சையையும் வீட்டுக்குக் கொண்டு சென்று தனது குடும்பத்தாருடன் (மனைவி,மகள்கள்,மகன்கள்) பகிர்ந்து கொண்டார்;


       எட்டாவது சனிக்கிழமைக்கு முந்தைய மூன்று நாளில் அவருடைய மாமனார் இறந்து போனார்;இதனால்,மேலும் இரண்டு மாதங்களுக்கு பாம்புக்கோவில்சந்தை வருவது தடைபட்டது;எட்டாவது சனிக்கிழமையன்று தனது குடும்பத்தாருடன் பாம்புக்கோவில்சந்தைக்கு வருகை தந்து தான் செய்து வரும் ஜீவசமாதி வழிபாட்டு முறையை தனது குடும்பத்தாருக்கு  விளக்கியதோடு அனைவரும் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.


எட்டாவது சனிக்கிழமை வழிபாடு நிறைவடைந்த 90 நாட்களுக்குள் உங்களுடைய தேவை நிறைவேறும் என்று நமது ஆன்மீக குரு உபதேசித்திருந்தார்.


ஆனால்,இந்த தொழிலதிபருக்கு 21 வது நாளே ஒரு சர்வதேச நிறுவனம் இவரது தொழிற்சாலைக்கு ஐந்து வருட ஒப்பந்தப்பணிகளை கொடுத்துவிட்டுச் சென்றது;மேலும் இவருடைய பணியாளர்களுக்கு நிர்வாக மற்றும் மனோதத்துவம் சார்ந்த பணி பயிற்சியையும் வழங்கியது;இதன்மூலமாக ரூ.4 லட்சம் கடனாளியாக இருந்தவர்,இன்று ஆண்டுக்கு ரூபாய் இருபது லட்சம் லாபமீட்டு நிறுவனமாக வளர்ந்து வருகிறது.இவருக்கு முதல் சனிக்கிழமை வந்து வழிபட்டதும்,இவரை தவறாக வழிநடத்திச் சென்ற ஆலை நிர்வாகி வேலையை விட்டுப் போய்விட்டார்;அப்படிப் போன சில நாட்களில் இன்னொரு எம்.பி.ஏ.,பட்டதாரி வேலை கேட்டு வந்தார்.வந்தவரோ மூன்று வருட அனுபவமுள்ளவர்;இந்த எம்.பி.ஏ.வந்த சேர்ந்த சில நாட்களிலேயே பணியாளர்களின் எண்ணிக்கை தாமாகவே உயரத் துவங்கியது;


இரண்டாவது சனிக்கிழமைக்கும் முதல் சனிக்கிழமைக்கும் நடுவே இருந்த இரண்டு மாதங்களில் தேவையில்லாத செலவுகள் ஏற்பட்டன;இரண்டாவது சனிக்கிழமையிலிருந்து எட்டாவது சனிக்கிழமைக்குள் இவர் எதிர்பார்க்கும் பணியாளர்கள்,கடன் வசதி,பொருத்தமான தொழில் நட்புகள் கிடைக்கத் துவங்கின.ஒவ்வொரு சனிக்கிழமையும் பாம்புக்கோவில்சந்தைக்கு வந்து வழிபட்ட அன்று இரவு அவர் தாம்பத்தியத்தையும்,ஆபாசப்படங்கள் பார்ப்பதையும் தவிர்த்தார்;பாம்புக்கோவில் சந்தைக்கு வரத் துவங்கியது முதல் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தினார்;இவரது மன உறுதியால் இவரது குடும்பத்தாரும் சைவத்துக்கு மாறினார்கள்.நான்காவது மற்றும் ஆறாவது சனிக்கிழமைகளில் விதையில்லாத கறுப்புதிராட்சை கிடைக்கவேயில்லை;அவ்வாறு ஏதாவது ஒருபொருள் கிடைப்பது தடைபடத்தான் செய்யும்;கவலைப்பட வேண்டியதில்லை;ஒவ்வொரு சனிக்கிழமையும் இவர் தனது வீட்டிலிருந்து நேராக பாம்புக்கோவில்சந்தை மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்துக்கு மாலை 5.30க்கு வருவார்;ஒரு மணி நேரம் வரை இருந்துவிட்டு சுமார் ஏழு  மணிக்கு புறப்படுவார்;வேறு எந்த கோவிலுக்கும்,எவர் வீட்டுக்கும் செல்லாமல் மீண்டும் தனது வீட்டுக்குச் செல்வதை கடமையாக வைத்திருந்தார்;வழியில் சாப்பிடுவதற்காகக் கூட தான் போய் உணவகங்களில் வாங்குவதில்லை;தனது ஓட்டுநரிடம் கூறி உணவுப்பொருள் வாங்கிவரச் சொல்லுவார்.


இன்று தொழிலில் எந்த ஒருகுறையுமின்றி வளர்ந்து வருகிறார்.அவருடைய சம்மதத்தோடு இந்த பதிவு வெளியிடப்படுகிறது.


ஆன்மீகக்கடலின் கருத்து: இதே போல உங்கள் ஊர்களில் இருக்கும் ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளிலும் முயன்று பார்க்கலாம்;100% பலன்கள் கிடைக்கும்;பலருக்கு கிடைத்துவருகின்றன;


ஓம்சிவசிவஓம்