RightClick

ஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவைசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு,எனது ஜோதிட குருவிடம் அடிக்கடி ஜோதிட நடைமுறைகளை கற்றுக்கொள்ளச் செல்வதுண்டு;காலை முதல் இரவு வரை அவரது ஜோதிட நிலையத்தில் அவருக்கு பணிவிடை செய்து பல நடைமுறை நுணுக்கங்களைக் கற்றதுண்டு;குருதொட்டுத் தராத கலை விளங்காது என்பது ஜோதிடப்பழமொழி! பல சுவாரசியங்களும்,சில அதிர்ச்சிகளும் அங்கே நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.


நாம் ஒரு ஜோதிடரை சந்திக்கச் செல்கிறோம் எனில்,அந்த ஒரு நாளில் அவரை சந்தித்துவிட்டுத் திரும்பும் வரை பொறுமை காக்க வேண்டும்.அவரிடம் பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்.ஒரு இளைஞர் வந்தார்;அவருக்கு பெண்  குழந்தை இருக்கிறது.அந்த குழந்தையின் வயது  அப்போது 5.அவர் தனது,தனது மனைவி,தனது மகள் என்று மூவரின் ஜாதகங்களையும் கொண்டுவந்தார்.எனது ஜோதிட குரு என்னிடம் இந்த மூன்று ஜாதகங்களிலும் நடப்பு திசை,கோச்சார நிலையை கணிக்கச் சொல்லி உத்தரவிட்டார்;அந்த இளைஞரிடம் என்ன விஷயமா? வந்திருக்கீங்க? என்றும் கேட்கச்  சொல்லியிருந்தார்.தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும்,அடுத்து பிறப்பது ஆணா? பெண்ணா? என்பதை அறியவே வந்தேன் என்றார்.


சுமார் 4 பேர்கள் ஜாதகம் பார்த்தப்பின்னர்,5 வதாக அந்த இளைஞர் ஜாதகம் பார்த்தார்.எனது ஜோதிடகுரு அவர்கள், “தம்பி,உனக்கு அடுத்து ஆண் குழந்தை”என்று தீர்க்கமாக சொன்னார்.
அந்த இளைஞனோ அடுத்து பெண் பிறந்தாலும் எனக்குச் சம்மதமே என்று வேகமாகச் சொன்னான்.
சரி தம்பி குழந்தை பிறந்ததும் வாங்க என்று அனுப்பி வைத்துவிட்டார்.


சுமார்  3  மாதங்களுக்குப்பிறகு,அந்த  இளைஞன் மீண்டும் வந்தான்.முகத்தில் கவலை தென்பட்டது.
என்ன தம்பி,நல்லபடியா பிரசவம் முடிஞ்சுதா? என்று கேட்டார் எனது ஜோதிடகுரு.
ஐயா, நல்லபடியாக பிரசவம் முடிஞ்சுது.நீங்க ஆண் குழந்தைன்னு சொன்னீங்க.ஏன்யா எனக்கு ரெண்டாவதாக பெண் பிறந்தது ? என்று கேட்டான்.
பொறுமையாக நம்ம சொல்லுறதைக் கேட்குறீங்களா? என்று பீடிகையோடு அந்த இளைஞனிடம் கேட்டார் ஜோதிடகுரு.
(மனம் நொந்தவாறு) ஐயா,சொல்லுங்க ,நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேனய்யா என்றான்.
“நீ என்ன விரும்பினாயோ அதுதான் கிடைத்தது” என்று பொறுமையாக விளக்கமளித்தார்.

ஐயா நீங்க சொல்லுறது எனக்குப் புரியல ? என்று அந்த இளைஞன் பவ்யம் காட்டினான்.எனக்கு அந்தக் கணத்தில் எனது  ஜோதிட குரு சொன்னதன் சூட்சுமம் புரிந்துவிட்டது.எனவே,நான் திடீரென சிரித்துவிட்டேன்.எனது சிரிப்பு அந்த இளைஞனுக்கு கோபத்தைத் தூண்டியது.அவன் முறைத்துப் பார்த்தான்.நான் எனது வாயைப்பொத்திக்கொண்டு,சிரித்தேன்.மீண்டும் என்னைப் பார்த்து அவன் முறைக்க எனது சிரிப்பு அடங்கியது.எனது ஜோதிட குரு எனது முதுகில் ஓங்கி அறைந்தார்.நான் அமைதியானேன்.

நான் அந்த இளைஞனிடம் பேசினேன்:தம்பி,அன்னைக்கு நம்ம குரு என்ன சொன்னாரு? என்று கேட்டேன்.
“உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்னு சொன்னார்” என்றான்.
அது நீ என்னப்பா சொன்னே? என்று எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினேன்.
“எனக்குப் பொண்ணு பிறந்தாலும் சம்மதம்னு சொன்னேன்” என்று நொந்த குரலில் சொன்னான்.
அதைத்தான்பா நம்ம குரு சொல்லுறாரு.அவரு தனது ஜோதிட அனுபவப்படியும்,உனது எதிர்பார்ப்புப்படியும் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்னு சொன்னாரு.அப்படிச் சொன்னாருன்னா நீ எல்லாம் உங்க ஆசிர்வாதம்னு சொல்லிட்டுப் போயிருக்கணும்.அல்லது சரிங்கய்யான்னு சொல்லிட்டுப் போயிருக்கணும்.நீ குறுக்கே பேசினது நடந்துருச்சு என்று விளக்கினேன்.அவனும் மன சமாதானம் அடைந்தான்.அவன் போனதும்,என்னிடம் ஜோதிட உபதேசம் செய்தார்: இது உனக்கும் பொருந்தும்.நீ யார் கிட்ட ஜோதிட ஆலோசனை கேட்கப்போனாலும் சரி,அல்லது அருள்வாக்கு கேட்கப்போனாலும் சரி.அவங்க உனக்கு கடவுள் மாதிரி;அவங்க மனசுல இருந்து வருவது வெறும் ஜோதிடம் அல்ல;உனது எதிர்காலத்தைத்தீர்மானிக்கும் எதிர்கால உண்மைகள்!!! அப்படி அவங்க பேசும்போது நீ ஒருபோதும் குறுக்கே பேசக்கூடாது.அவங்க பேசி முடித்தப்பின்னர்,அவங்களே உன்னிடம் கேட்பாங்க: 
வேறு என்ன சந்தேகமோ கேளுப்பா என்ற அர்த்தம் வருமாறு அவர்கள் சொன்னபிறகே நீ உனது சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.
எனது ஜோதிட குரு சொன்னதில் பல உள்ளார்த்தங்கள் இருக்கின்றன.அந்த இளைஞனின் முதல் குழந்தை பெண்.அந்தப் பெண்குழந்தையின் பிறந்த ஜாதகப்படி அவளது லக்னத்துக்கு மூன்றாவது இடத்தில் ஆண் கிரகம் ஆட்சி பெற்று இருக்கிறது.அந்த இளைஞன்,அவனது மனைவியின் ஜாதகங்களும் அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஆணே பிறக்கும் என்பதை உறுதி செய்ததை நான் அவர்களுடைய ஜாதகங்களை கணிக்கும்போது மதிப்பிட்டேன்.குருவின் முன்னால்,இவ்வாறு அனாவசியமாக அந்த இளைஞனைப்பேச வைத்தது எது? அதுதான் அவனை இயக்கும் விதி.


இதே போல எனது ஜோதிட வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.ஒரு வயதான அம்மா ஜாதகம் பார்க்க வந்தார்.அவருக்கு ஐந்து பிள்ளைகள்.மூத்த மகனுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்தது.அவர்கள் அந்த மூத்த மகன்,மருமகள்,முதல் பேரக்குழந்தை ஜாதகங்களை வைத்துக்கொண்டு அடுத்த குழந்தை எப்போது பிறக்கும்? அது ஆணா? பெண்ணா? என்று கேட்டார்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும்படி அனுப்பி வைத்துவிட்டேன்.சரியாக இரண்டு ஆண்டு முடியும்போது தேடி வந்துவிட்டார்.அப்படி வந்திருக்கும்போது மீண்டும் அதே கேள்வி கேட்டார்.அவரிடம் தற்போது உங்கள் மருமகள் கர்ப்பமாக இருக்கணுமே? என்று கேட்டேன்.

ஆமாம்யா,அதான் அடுத்தது பெண்ணா? பையனா? னு தெரிஞ்சுக்கறதுக்காக வந்தேன் என்றார்.

நீண்ட கணக்குகள்,மதிப்பீடுகள்,ஜோதிட ஆய்வுகள் செய்து 15 நிமிடத்தில்
“உங்களுக்கு பேத்திதான் பிறப்பாள்” என்றேன்.

“அப்போ பேரன் கிடையாதா?”என்று வில்லங்கமாக பேச,
“பேரனும் உண்டு” என்று திடீரென என்னையறியாமல் பேசிவிட்டேன்.

அந்த வயதான அம்மா என்னை ‘இவனெல்லாம் ஒரு ஜோதிடனா?’ என்ற சந்தேகப்பார்வையை என்மீது வீசிவிட்டுப் போய்விட்டார்.

சில மாதங்கள் கழிந்தன.அவருடைய மூத்தமருமகளுக்கு குழந்தைகள் பிறந்தன.முதலில் ஒரு பெண் குழந்தையும்,அடுத்து ஒரு ஆண் குழந்தையும் =இரட்டைப்பிள்ளளயாக பிறந்தன.


அந்தக் குழந்தைகள் பிறந்து 3 மாதங்களுக்குப்பிறகு,அந்தக் குடும்பமே காரில் தேடிவந்தது.அப்படி வரும்போது இரட்டைக்குழந்தைகளைக் கொண்டு வந்து.என்னைப் பெயர் வைக்கச் சொன்னபோதுதான் எனக்கு ஆச்சரியம் உண்டானது.


ஒவ்வொரு ஜோதிடரும் தெய்வத்தின் பிரதிநிதிக்குச் சமம்! எப்போது தெரியுமா? தனது எதிரியே தன்னிடம் ஜாதகம் பார்க்க வந்தாலும்,அந்த ஜாதகத்தில் இருக்கும் ஜோதிட உண்மைகளை நடுநிலையோடு வெளிப்படுத்தும் போது!!!