RightClick

ஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்!!!
டில்லியில்  இருந்து சென்னைக்குச் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது.எனது அருகில் தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒரு இந்திய ஆட்சிப்பணித் துறை  உயரதிகாரி அமர்ந்திருந்தார்.அவர் மிகச் சிறந்த நேர்மையாளர்களில் ஒருவர்.நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம்.

அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் எந்த அளவுக்கு நேர்மையில் இருந்து கீழே வீழ்ந்துவிட்டனர் என்ற விஷயத்தை குறித்துதான்  எங்கள் பேச்சு இருந்தது.இறுதியாக அவரிடம் நான் நேரடியாக ஒரு கேள்வி கேட்டேன். ‘எப்போதில் இருந்து இந்த நேர்மைச்சரிவு ஏற்பட்டது?’பதில் நேரடியாகத் தான் இருந்தது: ‘இந்திரா காந்தி பதவிக்கு வந்தவுடன்’.அதுபோல திருபாய் அம்பானி எழுச்சி பெற்றபிறகு வர்த்தக நேர்மை என்பது வீழ்ந்து விட்டது என்றும் கூறினார்.எனது கருத்தும் அதுதான்.


இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு.இந்திய ஜனநாயகத்தை ஜனநாயக நெறிமுறைகளின்படி வாழ்ந்தும் வழிகாட்டி,நடத்திச் சென்றார்.அவரிடம் சில குறைபாடுகள் இருந்தாலும்,அவருடைய அரசியல் நீதி மற்றும் நெறிமுறைகளை ஒருவரும் குற்றம் கூறியதில்லை;நேருவை விட,இந்திராவுக்கு முன்பு இருந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களை மேற்கோள் காட்டுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.நீதி நேர்மையில் லால்பகதூர் சாஸ்திரி நேருவைக்காட்டிலும் உயர்ந்து நின்றார்.ராஜகுடும்பத்தில் பிறந்த நேரு ஒருபோதும் பணத்துக்காக கஷ்டப்பட்டதில்லை;ஆனால் சாஸ்திரி ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்.பெரிய குடும்பத்தில் பிறந்தவர்.எப்போதும் கஷ்டத்தில் இருந்தவர்.ஏழையாகவேப் பிறந்த அவர் ஏழையாகவே இறந்தார்.இத்தனைக்கும் அவர் பிரதம மந்திரியாக,உள்துறை மந்திரியாக இருந்தவர்.


‘வீடு இல்லாத உள்துறை அமைச்சர்’(Homeless Home minister) என்று அழைக்கப்பட்டவர் லால்பகதூர் சாஸ்திரி.அவர் லக்னோ நகரில் வாடகை வீட்டில் வாழ்ந்தார்.டில்லியில் அரசாங்க வீட்டில் வசித்தார்.அரசாங்கம் கொடுத்த வீட்டில் வெறும் இரண்டு அறைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு லால்பகதூர் சாஸ்திரி வாழ்ந்தார்.அந்த இரண்டு அறைகளின் பின்புறத்தில் பெரிய வெட்டவெளி இருந்தது.அங்கு இருந்த ஒரு பெரிய மாமரத்தின் கீழ்தான் சாஸ்திரியின் புதல்வர் திருமணம் நடந்தது.சாஸ்திரி அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஒரு முக்கிய ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.உடனடியாக அவர் தன்னுடைய அரசாங்கக் காரை திருப்பி அனுப்பிவிட்டார்.ஒரு பஸ் ஸ்டாண்டிற்குச் சென்று,தன்வீட்டிற்குச் செல்ல,பஸ் பிடிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்.இதை அந்த வழியாக சென்ற ராம்நாத் கோயங்கா பார்த்து அவரை தன் காரில்  கூட்டிச் சென்று அவர் வீட்டில் விட்டார்.லால்பகதூர் சாஸ்திரிக்குப்  பிறகுதான் “நெறிமுறைகள் வீழ்ந்தன;வீழ்ச்சி தொடங்கியது” என்று ராம்நாத் கோயங்கா அவர்கள் எப்போதும் கண்ணீருடன் சொல்வார்.
இத்தகைய உயர்ந்த நெறிகள்,நீதி நிரம்பிய,அரசியல் அதிகாரம்தான்,இந்திராகாந்திக்கு லால்பகதூர் சாஸ்திரியிடமிருந்து கிடைத்தது.


ஆனால் தன்னுடைய கட்சியையும்,அரசாங்கத்தையும் ஏன் இறுதியில் தேசத்தையுமே தன் பிடியில் கொண்டு வந்து நசுக்க,இந்திரா காந்தி அரசியல் அதிகாரத்தை ஆயுதமாக பயன்படுத்தினார்.வேண்டுமென்றே திட்டமிட்டு,தன்னுடைய காங்கிரஸ் கட்சியை இந்திராகாந்தி பிளவுபடுத்தினார்.எல்லா மூத்த கட்சித்தலைவர்களையும் கேவலப்படுத்தினார்.இதில் புகழ் வாய்ந்த காமராஜரும் அடக்கம்.அவர்தான் இந்திராகாந்தியை பிரதமராகவே ஆக்கியவர்.அவர்களை எல்லாம் ஆதரவுடன் தேர்தல்களில் வெற்றி பெற்றார்.ஆனால் வெற்றி பெற்றவுடன் அவர்களையும் தூக்கி  வீசி விட்டார்.சட்டத்தையும் தனக்கு வலு சேர்க்கும் வகையில் திருத்தி அமைத்தார்.


இந்திரா காந்தி பிரதமராக  இருந்தபோதும் ‘மாருதி’ஊழல் நடந்தது.நகர்வாலா ஊழலிலும் அவர் சம்பந்தப்பட்டு இருந்ததாக அப்போது சந்தேகம் எழுந்தது.இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ‘எருமைமாட்டுத் தோல் அரசியல்’ உருவானது. பொது வாழ்வில் தவறான செயல்களில் ஈடுபட்டால்,வெட்கப்படுவதற்கு மாறாக அரசியல்வாதிகள் மானம்,வெட்கம்,சூடு,சொரணை என எதுவும் இன்றி,எங்களை யார் என்ன செய்து விட முடியும்?  எங்களிடம்தான் அரசியல் அதிகாரம் உள்ளது.அதை எதிர்த்து யாரும் எதுவும் செய்து விட முடியாது என்று ‘திமிரோடு’ நடந்து கொண்டனர்.இறுதியாக இந்திரா காந்தி 1975 இல்,நெருக்கடி நிலையை நாட்டின் மீது அநியாயமாக திணித்தார்.தன் கட்சியில் தனது எதிர்ப்பாளர்கள் உள்பட எல்லா அரசியல் கட்சி தலைவர்களையும் சிறையில் அடைத்தார்.


இந்திராகாந்திக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறையில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.மாபெரும் நெறிமுறைகளையும், மாபெரும் அமைப்புக்களையும்,சுவீகரித்து நீங்கள் பதவிக்கு வந்தீர்கள்.ஆனால் அவைகள் அனைத்தையும் அழித்து ஒழித்து சின்னாபின்னமாக்கிவிட்டு நீங்கள் போகிறீர்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.இத விளைவுகள் தான் தேசமே இப்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது;தேய்ந்து கொண்டிருக்கிறது;அரசியல்நீதியை நெறிகளை திரும்பக் கொண்டுவர எப்போதோ,விதிவிலக்காக சில முயற்சிகள் செய்யப்படுகின்றன.


உதாரணமாக,அத்வானி அவர்கள்மீது ஹவாலா ஊழல் குற்றச்சாட்டு எழுந்த போது ,அவர் தானாகவே முன்வந்து தன் பதவியை ராஜினாமா செய்தார்.தன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்வரை,தான் தேர்தல்களில் போட்டியிடப்போவது இல்லை என்று அவர் அறிவித்தார்.அதே மாதிரி நடந்தும் கொண்டார்.ஆனால் இன்றுள்ள போட்டிபோடும் அரசியல் சூழ்நிலையில் அவருடைய சொந்தக் கட்சியே அத்வானி அவர்களின்,அத்தகைய உயர்ந்த அரசியல் நீதி,நெறி உதாரணத்தை பின்பற்றி நடக்காமல் உள்ளது.அரசியல் நீதி,நெறிமுறைகள் என்பதற்குப்பதிலாக ‘அரசியல் அதிகாரம் மட்டுமே’ என்ற நிலை உருவாகிவிட்டது.இப்போது அம்பானிக்கு வருவோம்;விதிகளை இயற்றுவோரிடம் அம்பானி கைகோர்த்துக்கொண்டு அசைக்கமுடியாதவராக உருவெடுத்தார்.அவர்கள் அம்பானிக்கு வசதியாக துணைவிதிகளை உருவாக்கி,அவருக்கு வசதிகள் செய்து கொடுத்தனர்.இதனால் விதிகளை மீறாமலேயே ,அதேசமயம் காரியம் சாதித்துக்கொள்வது சுலபமாக இருந்தது.  அரசு மற்றும் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்களிடம் அம்பானி தனது வணிகத்தில் கிடைத்த,சட்ட விரோதமாக சம்பாதித்த செல்வங்களை அள்ளிவிட்டு அவர்களையும் தன்னுடைய பங்குதாரராக மாற்றிவிட்டார்.டாட்டா,பிர்லா,மகிந்திரா,பஜாஜ் என அனைவரையும் காட்டிலும் அம்பானிதான் வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்தார்.டாட்டா வியாபாரத்தில் நீதியையும்,நெறிமுறைகளளயும் கடைபிடிக்கும் விஷயத்தில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக,முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.அம்பானியோ ‘வியாபாரத்தில் வெற்றி’ என்பதற்கு முன்மாதிரியாக இருந்தார். அம்பானி போன்றவர்களுடன் போட்டி போட்டு வெல்ல இயலவில்லை என்று டாட்டாவை ஊடகங்கள் பரிகாசம் செய்தன; அதே ஊடகங்கள் எந்த நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல்,வியாபாரத்தில் லாபம் சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கொளாகக் கொண்டு செயல்பட்ட அம்பானியின் வெற்றியை வானளாவக் கொண்டாடின.


இந்திராக்காந்தியாவது அதிகாரவர்க்கத்தை,ஊடகங்களை எதிர்த்துப் போராடினார்.அம்பானி ஒருபோதும் போராடவில்லை;மாறாக அம்பானி அனைவரையும் ‘விலைக்கு வாங்கி’ வளைத்துப் போட்டுவிட்டார்.எல்லோருடைய மதிப்பையும் அவருடைய பணத்தில் எடை போட்டார். அவருடைய பணம் ராம்நாத் கோயங்காவிற்கு முன்னால் மட்டும் எடுபடாமல்,அலியாகிவிட்டது.அப்போதுதான் அம்பானி யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.அம்பானி அந்த சமயத்தில் ஒரு கடிதத்தை ‘போர்ஜரி’ செய்தார். தனக்கும் ராம்நாத் கோயங்காவுக்கும் இடையே நடந்து கொண்டு இருந்த யுத்தத்தை அவர் ராஜீவ் காந்தி பக்கம் திருப்பிவிட்டார்.அம்பானி நெறிமுறைகளை துவைத்து துவம்சம் செய்தார்.வணிகத்தை “கொள்ளை அடிப்பதாக” அவர் மாற்றினார்.


அரசு மற்றும் அரசில் முக்கிய பங்கு வகிப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த செல்வத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு எந்த நெறிமுறைகளைப் பற்றியும் கவலைப்படாமல் ‘வியாபார வெற்றி ஒன்றை மட்டுமே’ குறிக்கோளாக கொண்டு செயல்படுவதுதான் “அம்பானி பாணி”. இன்று நடக்கும் கோடானுகோடி ஊழல்களுக்கு,அம்பானியின் இந்த அணுகுமுறைதான் அச்சாணியாகும்.


அப்படி என்றால் எல்லாமே போய் விட்டதா? அப்படி இல்லை;அரசியலிலும்,வணிகத்திலும் இன்னும் நல்ல நேர்மையான ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள்.அவர்கள் இப்போது நிலவும் ஊழல் மலிந்த சூழ்நிலையை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.சாதாரண மக்கள் இன்னும் எளிமையான,ஊழல் அற்ற வாழ்வுதான் வாழ்கிறார்கள்.லால்பகதூர் சாஸ்திரி போன்ற ஒரு தலைவரை எதிர்பார்த்துதான் அவர்கள் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


நன்றி:தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 14.6.2012 மற்றும் சுதேசிச் செய்தி பக்கங்ள் 13,14;ஜீலை 2012