RightClick

ஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோம்;


மும்மூர்த்திகளை இயக்கி இந்த பிரபஞ்சத்தையே கட்டிகாத்து வருபவர் சிவபெருமானின் அவதாரமான பைரவர் ஆவார்.பைரவரின் வடிவங்கள் மொத்தம் 64 ஆகும்.இதில் வீட்டில் வைத்து வழிபடத் தக்கவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி போன்றவைகளின் வேதனைகளைத் தீர்க்க பைரவர் வழிபாட்டால் மட்டுமே முடியும்.


ஏனெனில்,நவக்கிரகங்களில் சனிபகவானின் குருவாக இருப்பவர் பைரவரே! நம் ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகப்படி நமது தொழிலையும்,ஆயுளையும் நிர்ணயிப்பவர் சனிபகவானே! தொழிலை தந்ததற்கு சனிக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோமா?அவரால் மட்டுமே நமக்கு ,நமது குணம்,சுபாவம்,திறமை,ஆளுமை,இருக்கும் செல்வ வளம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு தொழில் அல்லது வேலையை நிர்ணயம் செய்கிறார்.அந்த சனிக்கே நவக்கிரக பதவியைக் கொடுத்தவர் பைரவர் ஆவார்.இந்த பூமி,உயிர்கள்,நவக்கிரகங்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் தனது காலச்சக்கரத்தின் மூலம் இயக்குபவரே கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.பைரவரின் திருவிளையாடல்கள் நமது தமிழ்நாட்டிலேதான் நிகழ்ந்திருக்கிறது.


ஏமாற்றுதலும்,பித்தலாட்டமும்,ஒழுங்கீனமும் கொண்ட இந்த கலியுகத்தில் ஒழுக்கரீதியாக எந்தத் தவறுமே செய்யாமலேயே வீண்பழி ஒருவர் சுமக்கிறாரெனில் அவர் நிச்சயமாக சென்ற பிறவிகளில் செய்த தவறுகளை அனுபவித்துவருகிறார் என்றே அர்த்தமாகும்.அவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,2,4,8,10 ஆம் இடங்களில் ஏதாவது ஒன்றில் இராகு அல்லது கேது அமைந்திருக்கும்.அப்படி அமைந்திருந்து ராகு அல்லது கேது மஹாதிசை வந்து,ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி வந்தால்,அவர்கள் வீண்பழியை சுமந்தே ஆகவேண்டும்.பல தம்பதியரிடம் காமம் கலந்த ஈகோ விளையாட்டு உருவாகி அதன் முடிவாக இருவருமே அவமானப்படுகிறார்கள்.இந்த சூழ்நிலையை தடுக்கவும்,ஏற்கனவே உண்டான சூழ்நிலையை மாற்றவும் ஏற்படுத்தப்பட்ட பைரவரே ஸர்ப்ப பைரவர் ஆவார்.இவர் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இருக்கும் சங்கர நயினார்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.செவ்வரளி மாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளுடன் வீட்டில் சமைக்கப்பட்ட வெண்பொங்கல் அல்லது பாசிப்பருப்பு சாதம் இவைகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சங்கரன்கோவில் ஸர்ப்ப பைரவர் சன்னதிக்கு வருகை  தந்து,இந்த பொருட்களால் ஸர்ப்ப பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.(பூசாரியிடம் கொடுத்துதான்!)அபிஷேகம் நடைபெறும்போது பைரவரின் அஷ்டோத்திரம் அல்லது பைரவ பாடல் ஏதாவது மனதுக்குள் ஜபிப்பது அவசியம்.அபிஷேகம் நிறைவடைந்தபின்னர்,கொண்டு வந்திருக்கும் படையலான பாசிப்பருப்பு சாதம் அல்லது வெண்பொங்கல் சாதத்தை கோவிலுக்கு வந்திருப்பவர்களுக்கு பாதியை பரிமாற வேண்டும்.மீதியை வீட்டிற்குக் கொண்டுவந்து,குடும்ப உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து எட்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்குச் செய்துவிட்டால்,ராகு மற்றும் கேதுவால் வர இருக்கும் அவமானங்கள் வெகுவாகக்குறைந்துவிடும்.(திருமணமாகாமல்  இருக்கும் சர்ப்ப தோஷ ஜாதக,ஜாதகிகள் 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இவ்வாறு சங்கரன்கோவில் ஸர்ப்ப பைரவர் வழிபாட்டைச் செய்ய வேண்டும்.தொடர்ந்து 8  ஞாயிற்றுக்கிழமைகளுக்குச் செய்ய முடியாவிட்டாலும்,விட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யலாம்.இதன் மூலம் திருமணத் தடை அகலும்;அதே சமயம் ஜாதகத்தில் இருக்கும் ஸர்ப்ப தோஷங்களின்  வீரியம் 10 % அளவுக்குச் சுருங்கிவிடும்)திருமணமானவர்கள் பலருக்கு ஸர்ப்ப தோஷங்கள்  செயல்படுவதுண்டு.அப்படி செயல்படும்போது கணவன் மனைவிக்குள் ஏற்படும்பிரச்னைகளால், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளே அதிகம்பாதிக்கப்பட்டுவருகின்றனர்.கணவன் மனைவி பிரிந்துவிடுகின்றனர்.இதனால்,பிற குடும்பங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.இதைச் சரிசெய்ய மேலே கூறியதுபோல,6 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.
மிக முக்கியமான குறிப்பு என்னவெனில்,எந்த ஞாயிறு அன்று இவ்வாறு ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்கிறோமோ,அந்த ஞாயிறும் அதற்கு முந்தைய நாளும் காமரீதியான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.அப்போதுதான் வழிபாட்டுக்கான பலன்கள் முழுமையடையும்.              இந்த வழிபாட்டுரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு ,ஆன்மீகத்தென்றல் திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு கோடி கூகுள் நன்றிகள்!!!
ஓம்சிவசிவஓம்