RightClick

இதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை=பாகம் 2
மதுரையில் இருந்து ஒரு ஆன்மீகக்கடல் வாசகி டிசம்பர் 2011 இல் சித்தர்கள் வருகைதரும் டிசம்பர் பவுர்ணமிக்கு கழுகுமலைக்கு வந்திருந்தார்.அவர் வரும்போது ஒரு இளைஞனையும் அழைத்து வந்தார்.தான் லேப் டெக்னீஷியன் படித்து வேலை பார்ப்பதாகவும்,அந்த இளைஞர் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்ப்பதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டனர்.இருவரையும் கழுகுமலையில் கிரிவலம் முடித்துவிட்டுப் பேசுவோம் என்று கூறிவிட்டு புறப்பட்டேன்.

கிரிவலம் முடிந்ததும்,நாங்கள் இருவரும் வேறு வேறு ஜாதி;காதலிக்கிறோம்;எங்கள் வீட்டில் இவரை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டனர்;இவர் வீட்டில் இவருக்கு அவசர,அவசரமாக பெண் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.நாங்கள் இருவர் வீட்டு சம்மதத்தோடும் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம் என்று அந்த பெண் பேசினாள்.அவளுக்கு வயது சுமார் 28 இருக்கும்.
நீங்கள் உங்கள்  ஜாதகத்தைக் கொடுங்க;பார்க்கலாம் என்றேன்.அதற்கு நாங்க ஜாதகம் கொண்டு வரவில்லை;என்ன செய்ய என்று கேட்டனர்.ஒருமுறை ராஜபாளையத்துக்கு இருவரும் உங்களுடைய ஜாதகத்தைக் கொண்டு வரவும் என்று அனுப்பி வைத்துவிட்டேன்.

ஒரு வாரத்தில் அந்த பெண்மணி தனது அம்மாவுடன் என்னை வந்து சந்தித்தார்.அவரது அம்மாவின் மனமோ தனது மகளுக்கு நல்ல வரன் அமைந்தால் சரி என்ற எண்ணத்தில் இருப்பது தெரிந்தது.அந்த 28 வயது பெண்ணிடம் ஒரு பெண் தெய்வ சக்தி இருப்பது அவரது ஜாதகப்படி தெரிய வந்தது.அதை உறுதிப்படுத்துவதற்காக,அவரிடம் எனது குலதெய்வத்தின் மஞ்சள் குங்கும பிரசாதத்தைக் கொடுத்து,தானாகவே பூசச் சொன்னேன்.பூசிய சில நிமிடங்களில் அந்த பெண்மணியின் குரல் மேலும் மென்மையான குரலாக மாறியது.சில நொடிகளுக்கு மரிக்கொழுந்து வாசனை வீசியது.பிறகு மீண்டும் சராசரி குரலுக்கு மாறியதும் அந்த பெண்மணி நிறைய தண்ணீர் குடித்தார்.
அந்தப் பெண்மணியின் காதலனின் ஜாதகப்படி,இந்தக் கல்யாணம் நடைபெறாது என்று தெரிந்தது.ஆனால்,இந்த பெண்மணியை யார் நோகடித்தாலும்,அவர்கள் பல பிரச்னைகளை சந்திப்பார்கள் என்பதை அந்த கணத்தில் உணர்ந்தேன்.எனவே,ஒரு சாதாரண பரிகாரத்தைச் சொல்லி,அந்த பரிகாரத்தை 9 வெள்ளிக்கிழமைகளுக்குச் செய்யச் சொல்லிவிட்டு அனுப்பி வைத்தேன்.
இரண்டு மாதங்கள் கடந்தன.அன்று காலை நான்  எனது ஆன்மீககுரு திரு.சிவமாரியப்பனைச் சந்தித்து,தீட்சைப் பெற்றேன்.பெற்றதும்,சில ஆன்மீகக் கடமைகளை தினமும் செய்ய என்னை வழிகாட்டினார்.பிறகு திடீரென,அவரது குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது.அப்போது,
அவர், “உன்னைத் தேடி இரண்டு பெண்கள் வெகுதொலைவிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.நீ உடனே இங்கிருந்து புறப்படு;உனது இடத்திற்கு அவர்கள் வந்ததும்,அவர்கள் என்னிடம் பேசணும்னு சொல்லுவாங்க;நீ என்னை போனில் கூப்பிடு”என்று விரைவாக அனுப்பிவைத்தார்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது.ஒரு மணி நேரத்தில் எனது ஊருக்குத் திரும்பினேன்.நான் எனது ஜோதிடாலயத்துக்கு வந்தடைந்த சில நிமிடங்களிலேயே அந்த 28 வயது மதுரைப்பெண்ணும்,அவளது தோழியும் வந்தடைந்தனர்.

அந்த 28 வயது லேப்டெக்னீஷியனுக்கு முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது.அவளுடன் வந்திருந்த அவளுடைய தோழிதான் பேசினார்.நான் உடனே,எனது (நமது)குரு சிவமாரியப்பன் அவர்களுக்கு போன் செய்தேன்.அவர்,அந்த லேப் டெக்னீஷியனிடம் போனைக் கொடுக்கச் சொன்னார்.அந்த லேப் டெக்னீஷியன் திடீரென கத்தினாள்.

“எனக்கு போன் செய்ய நீ யாரு?” என ஒரு வயதான கிழவி குரலில் பேசினாள்.உடனே,நான் பயந்துபோய், “அண்ணே,நான் என்ன செய்ய?” என்றேன்.அவர் சொன்னபடி,நான் அவர்களை அமரச்செய்துவிட்டு, எனது ஜோதிடாலயத்தின் அருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்றேன்.அங்கே அவர் மீது சாத்தப்பட்ட அருகம்புல்லில் இருந்து இரண்டு புல்களை மட்டும் எடுத்து,எனது சட்டைப்பைக்குள் வைத்து,மீண்டும் எனது ஜோதிடாலயத்துக்குள் நுழைந்தேன்.இப்போதும் குருவானவர் போனில் இருந்தார்.இப்போது குருவிடம் அந்த லேப் டெக்னீஷியன் பேசினாள்.அப்படிப் பேசும்போது, சம்பந்தாசம்பந்தமில்லாமல் சில நிமிடம் பேசினார்.அந்த நேரத்தில் எனது ஜோதிடாலயத்தில் மரிக்கொழுந்து வாடையும்,சந்தன வாசனையும்,ஜவ்வாது வாசனையும் மாறி மாறி குப்பென அடித்துக்கொண்டே இருந்தது.பிறகு,அந்த பெண் சாதாரண குரலில் பேசினாள்.
அவள் அவ்வாறுப் பேசியதும்,அவளின் பின்னால் ஆறடி உயரத்தில் மனித உடலும்,அவனின் தோளில் வவ்வாலுக்கு இருப்பதைப்போல இரண்டு கறுப்பு இறக்கைகளும் இருந்தன.அவன் கத்திக்கொண்டே எனது ஜோதிடாலயத்திலிருந்து பறந்து போனது அந்த 28 வயது லேப் டெக்னீஷியனுக்குத் தெரிந்தது.மிகுந்த நிம்மதியோடு அந்த பெண் தனது தோழியோடு மதுரைக்குப்புறப்பட்டாள்.


ஒரு வாரம் கழிந்தபின்னர்,மீண்டும் எனது குருவை சந்தித்தேன்.அப்போதுதான் இந்த சம்பவத்துக்கு அர்த்தம் புரிந்தது.
இந்த 28 வயது லேப் டெக்னீஷியனை காதலனனின் அப்பாவானவர்,இந்த காதல் ஜெயிக்காமல் இருப்பதற்காக கேரளாவுக்குச் சென்று ரூ.25,000/- செலவழித்து,இந்த பெண்ணினை படுத்த படுக்கையாக்கி,நோயாளியாக்கி,யாருமே திருமணம் செய்யாத அளவுக்கு மாந்திரீக வேலை பார்த்திருக்கிறார்.ஆனால்,இந்தப் பெண்மணியின் உடன் இருக்கும் பெண் தெய்வமானது,இவளை மதுரையிலிருந்து ராஜபாளையத்துக்கு திடீரென அழைத்து வந்திருக்கிறது.(இந்த ரகசியம் அவளுக்கே தெரியும்.ஆனால்,அவளுக்கு தன்னையே காப்பாற்றத் தெரியாது)


இந்தச் சம்பவத்துக்குப் பிறகு,அந்த பெண்மணி இன்று வரை ஒரு போன்கூட பேசவில்லை;அவர்களின் காதல் என்ன ஆனதென்று தெரியவில்லை;அந்தப் பெண்மணி நமது ஆன்மீககுரு சிவமாரியப்பன் அவர்களிடமும் பேசவில்லை;

பின்குறிப்பு:இந்தப் படங்களில் ஏதேனும் வித்தியாசங்கள் தெரிகின்றனவா?
ஓம்சிவசிவஓம்