RightClick

இதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை=பாகம் 1


ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் பவுர்ணமியன்றும்,நெல்லை மாவட்டத்தில் புளியங்குடி அருகில் இருக்கும் பாம்புக்கோவில்சந்தையில் அமைந்திருக்கும் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதிக்குச் செல்வது வழக்கம்.அங்கே நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளும் வருவது வழக்கம்.


மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியைப் பொறுத்தவரையில் மகான்களின் ஜீவசமாதிகளிலேயே மிதமிஞ்சிய சக்திவாய்ந்தது ஆகும்.இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியுடன் சுமார் 60 மகான்கள் வெவ்வேறுகாலகட்டத்தில் இங்கே ஜீவசமாதியாகியிருக்கின்றனர்.பௌர்ணமிக்கு இங்கு வருபவர்களுக்கு நுழைவுக்கட்டணம் என்று எதுவும் கிடையாது;குளிக்க,சாப்பிட,தங்கிட என அனைத்து வசதிகளையும் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியைப் பராமரிக்கும் குழுவினர் இலவசமாகவே செய்துவருகின்றனர்.இங்கு வருபவர்கள் யாராக இருந்தாலும்,அன்று இரவு தங்க வேண்டும்.அப்படித் தங்கினால்தான்,மாதவானந்த சுவாமிகளின் அருளாற்றல் கிடைக்கும்.தொடர்ந்து 24 பவுர்ணமிகளுக்கு இங்கு வருகை தருபவர்களுக்கு அஷ்டகர்மாக்களை கற்றுக்கொடுக்கும் குருவின் தொடர்பு உண்டாகும்.


சரி,எதற்கு 24 பவுர்ணமிகள் இங்கே வர வேண்டும்?
நமது முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவகர்மாக்களையும்,நமது முன்னோர்கள்(நமது அம்மா,அப்பா அவர்களின் அம்மா,அப்பா அவர்களுடைய பெற்றோர்கள்)என ஐந்து தலைமுறையினர் செய்த பாவகர்மவினைகளை நீக்குவதற்காக தொடர்ந்து 24 பவுர்ணமிகளுக்கு இங்கு வர வேண்டும்.

சரி,இங்கு வந்து என்ன செய்ய வேண்டும்?

எந்த பவுர்ணமி நாளாக இருந்தாலும் சரி!இரவு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். இரவு 12 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதிக்குள் தியானம் செய்ய வேண்டும்.இதுவரையிலும் தியானம் செய்ததில்லை எனில்,மஞ்சள் துண்டு விரித்து,அதில் அமர்ந்து மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.பிறகு தூங்கிவிட்டு,காலையில் 4.30 முதல் 6 மணிக்குள் எழுந்து (குளிக்காமல் கூட) குறைந்தது அரை  மணி நேரம் மீண்டும் ஜீவசமாதிக்குள் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.பிறகு அவரவர் ஊருக்குப் புறப்படலாம்.சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரிலிருந்து மூன்று இளைஞர்கள் நமது ஆன்மீகக்கடல் வாசித்துவிட்டு,ஒரு பவுர்ணமியன்று இங்கே வந்தனர்.அந்த பவுர்ணமியன்று நமது ஆன்மீககுரு சிவமாரியப்பன் அவர்கள் வந்திருந்தார்.இரவு 10.30 முதல் 11.30 வரை தியானம் செய்து விட்டு,சத்சங்கம் ஆரம்பமானது.வந்திருந்த அனைவரும் அவர்களின் ஆன்மீக சந்தேகங்களைக் கேட்டனர்.அதற்கு நமது ஆன்மீக குரு சிவமாரியப்பன் அவர்கள் சொன்ன விளக்கத்தில் ஆச்சரியப்பட்டனர்.

அதில் ஒரு தஞ்சாவூர் இளைஞர் மிகுந்த தயக்கத்துடன் கேள்வி கேட்டார்:
சார், எனக்கு அகத்தியரை தரிசிக்கும் ஆசை ரொம்ப நாளாக இருக்கிறது?
இங்கே வாங்க என்றார் நமது ஆன்மீக குரு சிவமாரியப்பன்.அவரின் தலைமீது கை வைத்தார்.சில நிமிடங்களுக்குப் பிறகு,
தம்பி,உங்களுக்கு அகத்தியரின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்றார்.
அந்த இளைஞனின் முகத்தில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி தாண்டவமாடியது.
எப்படிங்க சார் நான் அகத்தியரை தரிசனம் செய்வது?
ஏதும் நோட்டு கொண்டு வந்திருக்கீங்களா?
ஆமாம் சார்
எடுத்துட்டு வாங்க,எழுதிக்கங்க
அந்த இளைஞர் ஓடோடிப்போய் தனது பையில் இருந்து ஒரு டைரியை எடுத்துக்கொண்டு வந்தார்.
ஒரு மந்திரத்தை சொல்லி,அதை எப்படி ஜபிக்க வேண்டும் என்பதை அவரின் காதில் உபதேசித்தார்.பிறகு அந்த இளைஞரின் துணை சந்தேகங்களுக்கு விளக்கமாக பதிலளித்தார்.
எல்லோரும் தூங்கப் போய்விட்டோம். எல்லோரும் காலையில் 5 மணிக்கே எழுந்து,மீண்டும் ஒருமுறை மாதவானந்த சுவாமிகளை தியானித்துவிட்டு,ரயிலுக்குப் புறப்பட்டோம்.
ரயிலில் பயணிக்கும்போது,அந்த தஞ்சாவூர் இளைஞரும்,அவரது நண்பர்களும் எனது இருக்கையின் அருகில் வந்து அமர்ந்து,எனது கைகளைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப நன்றிங்க ஆன்மீகக்கடல் சார்” என்றனர்.

“எதுக்கு தம்பி?” எனக் கேட்டேன்.

“நம்ம சிவமாரியப்பன் சார் சொல்லிக்கொடுத்த சித்தரை தரிசிக்கும் மந்திரத்தை நான் மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில் ரூ.5000/- தட்சிணை கொடுத்து கற்றுக்கொண்டேன்.”

நான் அதிர்ச்சியாகி, “என்னப்பா சொல்றீங்க” என கத்தினேன்.உடனே,ரயில் இருந்த சக பயணிகள் அனைவரும் என்னையே கவனிக்கத் துவங்கினர்.எனக்கு கூச்சமாகிவிட்டது.சிறிது நேரத்தில் நிதானமாகிய நான் அவர்களை அழைத்துகொண்டு ரயிலின் வாசலுக்கு வந்துவிட்டேன்.


“ஆமாம் சார்,அவங்க கூட அந்த மந்திரத்தை மட்டும் தான் சொன்னாங்க.எப்படி ஜபிக்கணும்னு கேட்டதுக்கு சரியா விளக்கமாகச் சொல்லவில்லை;அதனால எப்படி ஜபிக்குறதுனு தெரியாம அமைதியா இருந்துட்டேன்.”


“ஏம்பா,நீங்க ஜபிச்சிருக்கலாமே?”


“இல்லைசார்,மந்திரங்களை முறையாக ஜபிக்கலேன்னா, பிரச்னைகள் வருமாமே!”

“ஆமாம்”

“சிவமாரியப்பன் சாருக்கு நாங்க ஏதும் தட்சிணை தரணுமா?” என்று கேட்டனர் அந்த மூன்று தஞ்சாவூர் இளைஞர்களும்!

“எதுவும் தரவேண்டாம்”

(சந்தேகத்தோடு) எனக்கு அவரிடம் தட்சிணை எப்போது எப்படி தரணும்னு கேட்குறதுக்கு கூச்சமா இருந்துச்சு.ஏதும் தட்சிணை தரணும்ணா சொல்லுங்க;இப்ப குடுத்துடறோம்.நீங்க அவரிடம் குடுத்துடுங்க என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டனர்.


நீங்க இப்படிக் கேட்டது தெரிஞ்சா அவர் என்னை திட்டுவாரு.வேணும்ணா ஒண்ணு செய்ங்க என்றேன்
சொல்லுங்க,நாங்க என்ன வேணும்ணாலும் செய்றோம் என்று கோரஸாக அந்த மூன்று இளைஞர்களும் கேட்டனர்.


எனது பையிலிருந்து கொஞ்சம் அச்சடித்த காகிதங்களை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன்.
இந்த நோட்டீஸ்ல ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிக்கணும்னு அச்சடிச்சிருக்கு.இதை உங்களால எவ்வளவு அச்சடிச்சு தர முடியுமோ,அவ்வளவு குடுங்க என்றேன்.


அவர்கள் அந்த நோட்டீஸ்களை வாசிக்க ஆரம்பித்தனர்.சில நிமிடங்களுக்குப் பிறகு,
அந்த இளைஞர்களில் ஒருவர் கேட்டார்:

“சார்,நாங்க எவ்வளவு அச்சடித்துத் தரணும்?”

உங்களால எவ்வளவு அச்சடித்துத் தர முடியும்?

“நீங்க எங்களுக்கு குரு மாதிரி,நீங்களே சொல்லுங்க”

“ராஜபாளையத்துல 1000 நோட்டீஸ் அச்சடிக்க ரூ.450/- ஆகுது.உங்களால எவ்வளவு அச்சடித்துத் தர முடியும்?” என மீண்டும் நான் கேட்டேன்.

உடனே,அவர்களில் ஒரு இளைஞன் தனது பர்ஸிலிருந்து ரூ.1000/-எடுத்துக் கொடுத்தான்.
“சார்,நீங்களே 2000 நோட்டீஸ் அச்சடிச்சுக்குங்க” என்றான்.
“தம்பி,நீங்கதான் அச்சடித்துத் தரணும்”என்ற நான்,எனது முகவரி அட்டையை(விசிட்டிங் கார்டு) கொடுத்து,இந்தாங்க என் அட்ரஸ்.இதுக்கு நீங்களே அச்சடித்து,எனக்கு பார்சல் சர்வீஸில் அனுப்பிடுங்க”
அந்த இளைஞர்களில்  ஒருவன்,
“சார்,தப்பா நினைக்காதீங்க,இதோ வந்துடறோம்”என்றவன்,தனது சகாக்களை அழைத்துக்கொண்டு சென்று, சில நிமிடங்களில் திரும்பிவந்தான்.
“சார் நாங்க 5000 நோட்டீஸ் அச்சடித்து அனுப்பிவைக்கிறோம்.இதை அப்படியே சிவமாரியப்பன் சாரிடம் சொல்லிடுங்க” என்றான்.


“சரிப்பா,எனது ஊர் வந்துருச்சு;பார்ப்போம்” என்றவாறு நான் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் இறங்கினேன்.அவர்களின் கண்களில் நன்றிகலந்த மகிழ்ச்சியும்,பெருமிதமும் தெரிந்தது.ரயில்  மதுரைக்கு புறப்பட்டது.
ஓம்சிவசிவஓம்