RightClick

கோடைவிடுமுறையும்,குடும்ப அமைப்பைக் காக்க நாம் செய்ய வேண்டியதும்!!!


(தமிழ்நாட்டில்)கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது;உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது 12க்கு மேல் இருந்தால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி,உங்கள்குழந்தையை ஆன்மீகப்பாதைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.(ஏனெனில்,இந்து தர்மத்தைத் தவிர,அனைத்து மதங்களிலும் சிறுவயதிலேயே தங்களது மதத்தைப் பற்றி சொல்லிக்கொடுத்துவிடுகின்றனர்.ஆமாம்,ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஸ்லாமியர்கள் தமது குழந்தைகளோடு தொழுகைக்குச் செல்வதை கட்டாயக்கடமையாகச் செய்கிறார்கள்;ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தமது குடும்பத்துடன் சர்ச்சுக்குச் செல்வதை பெருமையாகவும்,பொறுப்பாகவும் நினைக்கிறார்கள். நாம் மாதம் ஒருமுறை கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வதை கடமையாக வைத்திருக்கிறோமா? நாம் அப்படிச் செய்வது மிக மிக குறைவு)

மனோதத்துவ ரீதியாக ஒரு குழந்தைக்கு அதன் ஏழு வயதுக்குள் ஆன்மீகச்சிந்தனையை ஊட்டாவிட்டால்,அதன்பிறகு அதற்கு தெய்வீகம்,ஆன்மீகம்,மதம் பற்றிய எண்ணங்களை உருவாக்கமுடியாமலேயே போய்விடும்.1990ஆம் ஆண்டு வரையிலும் மாதம் ஒருமுறையாவது குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் இருந்தது.இப்போது பணம் சம்பாதிக்கும் வெறியில்,வேகத்தில் அதற்கெல்லாம் நேரமேது?

இந்த கோடை விடுமுறையில் ஊட்டி,கொடைக்கானல் செல்வதை விடவும்,பழமையான புராதனமான ஆலயங்களுக்கு  குடும்பத்துடன் செல்வதே சிறந்தது.மிகவும் புராதனமான கோவில் நகரங்களைப் பற்றி  ஆன்மீகக்கடலில் குறிப்பிட்டிருக்கிறோம்.அங்கே செல்லும் முன்பு,அந்தக்கோவிலைப் பற்றிய முழுத்தகவல்களையும் திரட்டிக்கொண்டு நமது குழந்தைகளுடன் கோடை ஆன்மீகச் சுற்றுலா செல்ல வேண்டும்.தமிழ்நாட்டில் 38,000 பெரிய கோவில்கள் இருக்கின்றன.கடவுளே பூமிக்கு வந்து மனிதனாக வாழ்ந்தது,நமது தருமம்மிகு  தமிழ்நாட்டில் மட்டுமே! இதற்கான ஆதாரங்களாக இந்த கோவில்கள் இருக்கின்றன.தமிழ்நாட்டில் மட்டும் கோவில் நகரங்கள் சுமார் 190 இருக்கின்றன.கோவில் கிராமங்களோ 40,000 இருக்கின்றன.இவைகளைப்பற்றிய விரிவான விளக்கங்களே குமுதம் பக்தி ஸ்பெஷல்,சக்தி விகடன்  என மாத இதழ்களாக பரிணமித்திருக்கின்றன.

அந்தக் கோவிலைப் பற்றிய விளக்கத்தை அந்த கோவிலுக்குள் நடந்து செல்லும்போது நமது குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்;கணபதி சன்னதியில் கணபதி காயத்ரி மந்திரத்தை நமது குழந்தைகளுக்கு ஓத வேண்டும்;சிவன் சன்னதி/பெருமாள் சன்னதியில் எப்படி கும்பிட வேண்டும்? என்பதை விளக்க வேண்டும்;நவக்கிரகங்கள் அவைகளைப் பற்றிய விளக்கங்கள்,ஒவ்வொரு சன்னதியிலும் இருக்கும் சுவாமிகளைப் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்கு விளக்க வேண்டும்.
பிறகு,அந்த கோவிலில் மூலவருக்கு எதிராக ஒரு இடத்தில் மஞ்சள் துண்டில் அமர்ந்து,ஒரு நோட்டைக் கொடுத்து,108 முறை ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் எழுதச் சொல்ல வேண்டும்;

15 வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால்,அன்னதானத்தின் பெருமைகள்,யாருக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும்? பாவ புண்ணியம் என்றால் என்ன? இந்து தர்மத்துக்கு உண்டான ஆபத்துக்கள்.அதை எதிர்கொண்ட விதங்களைப்பற்றிய நமது மகான்களின் வரலாறு போன்றவைகளை அழகாக விளக்கமளிக்க வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால்,இந்து மதம் ஒரு விஞ்ஞான பூர்வமானது என்பதை அந்தக் கோவிலுக்குள் விளக்க வேண்டும்.அதற்கான ஆதாரங்களே ஆன்மீகக்கடலின் தொகுப்பு ஆகும்.இதில் செயற்கைக்கோளை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்,தியானத்தினால் மனதில் உண்டாகும் மாற்றங்கள் என நவீன விஞ்ஞானத்தையும்,நமது இந்து தர்மத்தையும் இணைத்துச் சொல்ல வேண்டும்.

இந்த கோடை விடுமுறையில் வாரம் ஒரு கோவில் வீதம் குறைந்தது மூன்று வெவ்வேறு கோவில்களுக்கு நமது குழந்தைகளை அழைத்துச் செல்வோம்;கோவிலில் எழுத ஆரம்பித்த ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் மந்திரத்தை தினமும் வீட்டில் 108 முறை மட்டும் எழுதத் தூண்டுவோம்;இவ்வாறு பக்தியையும்,ஆன்மீகச் சிந்தனையையும் சுமார் 5 ஆண்டுகளுக்கு நமது குழந்தைகளுக்கு உண்டாக்கிவிட்டால்,நமது குழந்தை ஒருபோதும்  முறையற்ற காமப் பிரச்னையில் சிக்கிக்கொள்ளாது.

இந்து தர்மத்துக்கும்,நமது இந்தியாவுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய சேவை இது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

இப்போது விதைப்போம்;அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய இந்து வல்லரசாகிவிடும்.

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்