RightClick

நாம் ஒவ்வொருவரும் எந்த சாமியைக் கும்பிட வேண்டும்?


எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.எனக்குத் தெரிந்து எனது நண்பர்கள்,உறவினர்கள்,ஜோதிட வட்டம் என அனைவருமே எந்த கோவிலுக்குப் போகிறார்கள் என்பதை அறிய ஒரு சர்வே எடுத்தேன்.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிறிய நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒன்று.33 வார்டுகள்,125 தெருக்கள்,55,000 பேர்களே வசிக்கும் சிற்றூர்! மதுரை முதல் குற்றாலம் வரை செல்லும் துணை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்திருக்கிறது.

வெள்ளிக்கிழமையானாலே,மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரின் வடக்கு எல்லையில் பட்டத்தரசியம்மன் கோவில் அமைந்திருக்கிறது;அங்கே வாரம் தவறாமல் ஒரு கூட்டமே வரும்;அதே கூட்டம் ஒரு கி.மீ.தூரத்தில் உள்ள அருள்மிகு பெரியமாரியம்மன் கோவிலுக்கும்,அருகில் இருக்கும் அருள்மிகு பழனியாண்டவர் சன்னதிக்கும்,முனீஸ்வரர் கோவிலுக்கும் மாலை 5 மணிக்குள் வந்துவிடும்;

அதன்பிறகு,தெருவுக்குள் இருக்கும் அவரவர் குலதெய்வம் கோவில்களுக்குப் பிரிந்து செல்வார்கள்;பிறகு மாலை 7 மணிக்குள் ஸ்ரீவில்லிபுத்தூரை உலகம் முழுக்கவும் தெரியவைத்த நாச்சியாரம்மன் எனப்படும் ஸ்ரீஆண்டாளை வழிபடுவர்;அந்த கோவில் பெரிய கோயில் ஆகும்;அங்கே எல்லா சன்னதிகளையும் வழிபட்டு முடிக்க இரவு 8.30 ஆகிவிடும்;அதன்பிறகு அங்கிருந்து ராஜபாளையம் ரோட்டில்,ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு இரவு 9 மணிக்கு அதே கூட்டம் வந்து ,அங்கே பள்ளியறை பூஜையை முடித்துவிட்டு,இரவு 10.30 மணிக்கு வீட்டுக்குப்போய்விடுவர்;இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் வலம் நடைபயணமாக இருக்கும்;இந்த சூழ்நிலை கி.பி.1990 வரை இருந்தது;தற்போது,வீட்டுக்கு ஒரு சைக்கிள் கிடையாது;வீட்டுக்கு இரண்டு டூவீலர்கள் இருக்கின்றன.மேலே கூறிய எல்லா கோவிலுக்கும் பயணித்து முடிக்க ஆகும் காலம் ஒரே ஒரு மணி நேரம் தான் !!! 

எல்லா கோவிலுக்கும் போவதோடு,வழியில் இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச்சின் வாசலில் ஒரு நிமிடம் நின்று,பிரார்த்தனை செய்துவிட்டு செல்லுபவர்களும் அதிகம்.அப்படி பிரார்த்தனை செய்யும் இடமானது ,பை பாஸ் ரோடும்,பேருந்து நிறுத்தமும் சேர்ந்திருக்கும் இடம்.அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை;ஏசுநாதருக்கும் ஒரு கும்பிடு!!!(இதையெல்லாம் பார்த்துவிட்டு,யோவ் அது ஏசு நாதர்யா,அவரையெல்லாம் ஏன்யா கும்புடுறே என அந்த அப்பாவி பக்தனிடம் கேட்டால்,ஏசுநாதராவது என் பிரச்னையை தீர்க்கட்டும்!!! என்று பதில் வரும்.அந்த பதிலில் அவர்களின் விரக்தி மட்டுமா இருக்கிறது;நமது முட்டாள் தலைவர்களின் பொறுப்பற்ற நிர்வாகமும்,அதனால் ஏற்படும் விலைவாசியேற்றமும்,குடும்பம் நடத்தவே முடியாத அளவுக்கு ஒவ்வொரு இந்தியனும் படும் கஷ்டங்களும் தெரியும்!!! கேட்கும்போதே நமக்குக்கண்ணீர் வரும்)
சிலர் நடுரோட்டில்,கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச்சின் முன்பாக, சூடன் கொளுத்தி ஏசுநாதரை வழிபடுவதும் உண்டு.இப்போதும் இந்த கூத்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

தவிர,எல்லா கோவில்களிலும் வழிபாடு செய்ய சூடன்,பத்தி கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.வீட்டிலேயே இருந்து கொண்டு வந்துவிடுவார்கள்.முன்னோரு காலத்தில் இதே மாதிரிதான் நானும் வழிபட்டேன்.ஆனால்,எந்த சாமியும் எனக்கு வரம் தரவில்லை;நான் ஜோதிடத்தை முறையாகக் கற்றுக்கொண்டதும்,எனது ஜோதிடர்களிடம் கேட்ட முதல் கேள்வியே:மேலே கூறிய சம்பவத்தை விவரித்து,இத்தனை கடவுள்களையும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நான் கும்பிட்டும் ஏன் எனக்கு பிரச்னைகள் தீர வில்லை? என்பதுதான்!


அதற்கு எனது ஜோதிட குரு ஒரு வெடிச் சிரிப்பு சிரித்தார்;அவரது சிரிப்பு அடங்க வெகு நேரமானது;பிறகு,பொறுமையாக பதிலளித்தார்;


ஒரு கொத்தனாரைக் கொண்டு,ஹோட்டலில் புரோட்டா போடச் சொன்னால்,என்னாகும்? என எதிர்க் கேள்வி கேட்டார்.


குருவே,கிண்டல் பண்ணாமல் எனக்கு பதில் சொல்லுங்க என்றேன்.

என் கேள்விக்கு பதில் சொல்லுப்பா என்றார்.

புரோட்டா போட கொத்தனாருக்குத் தெரியாது;ஒருவேளை அந்த கொத்தனாருக்கு புரோட்டா போடத் தெரிந்திருந்தாலும்,அந்த புரோட்டாவைச் சாப்பிட முடியாது. என்றேன்.

அதே தான்,அது மாதிரிதான்.நீ இத்தனை கடவுள்களைக் கும்பிடுவதும். என்றார்.

அது எப்படி ? எனக்கேட்டேன்.

பிறந்த ஜாதகம் இல்லாதவர்கள்,தினமும் விநாயகரையும்,அவர்களின் குலதெய்வத்தையும் வழிபட வேண்டும்.அல்லது அவர்களின் முதல் குழந்தையின் ஜாதகப்படி வழிபட வேண்டிய கடவுளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சூரிய திசை வந்தால்,சூரிய நாராயண பூஜை செய்யலாம்;அல்லது தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம்;அல்லது சூரியனை தினமும் வழிபாடு செய்யலாம்.அது போதும்.

சந்திர திசைக்கு ஏதாவது ஒரு பெண் தெய்வத்தை வழிபட வேண்டும்.இது பிறந்திருக்கும் ஜாதகத்தில் சந்திரனின் இருப்பைப் பொறுத்து மாறுபடும்.

செவ்வாய் மஹாதிசை நடந்தால் முருகக்கடவுள் வழிபாடு செய்தே ஆகவேண்டும்.எந்த கோவிலைச் சேர்ந்த முருகக் கடவுளை வழிபடுவது? என்பது ஜாதகத்தைப் பார்த்தப்பின்னரே முடிவு செய்ய முடியும்.

ராகு மஹா திசை நடந்தால்,உக்கிரமான பெண்தெய்வத்தை குறிப்பிட்ட விதிமுறைகள்,மனக்கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வழிபட வேண்டும்.

குரு மஹாதிசை நடந்தால்,அண்ணாமலையாரை வழிபடவேண்டும்.

சனி மஹாதிசை நடந்தால் ஐயப்பனை வழிபட வேண்டும்.

புதன் மஹாதிசை நடந்தால் பெருமாள் வழிபாடும்,கேது மஹாதிசை நடந்தால்,சித்தர் வழிபாடும் செய்ய வேண்டும்.இவையெல்லாம் பொதுக்கருத்துக்களே! ஜோதிடத்தை நீ முழு நேரத் தொழிலாக செய்யத் துவங்கியபின்னரே,இதில் நிறையக் கற்றுக்கொள்வாய் என்றார்.

இந்த பதில் என்னை மனதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்தப் பதிவினை உங்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். ஓம்சிவசிவஓம்