RightClick

இந்தியத் தன்மையைச் சிதைக்க வந்திருக்கும் அமெரிக்க இறக்குமதி எமன்:க்ரடிட் கார்டு


கடன் அட்டை காலன்

என் தம்பி ஒருவன் பன்னாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் கடந்த ஐந்து மாதங்களாக வேலை பார்த்து வருகிறான்.சென்ற மாதம் இறுதியில்,தனக்கு பணக்  கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான்.எனக்கோ அது மிக ஆச்சரியமாக இருந்தது.சிக்கனமாய் வாழ்வதை ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் இருந்தவன் அவன்.இந்த வேலையில் சேர்வதற்கு முன்பு அவன் பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்திலோ இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத் தான் வாங்கி வந்தான்.இப்படி மிகவும் சிக்கனமாக இருந்து வந்தவன்,பணக் கையிருப்பைப் பற்றிக் கவலைப்பட்டதால்,வேறு எதுவும் அவசரத் தேவை இருந்ததா? என்று அவனிடம் நான் கேட்டேன்.அவன் இல்லை என்று சொன்னான்.அவன் பணம் எப்படி கரைகிறது என்று கொஞ்சம் ஆராய்ந்த போது அவனைச் சுற்றி ஒரு சதிகார(அமெரிக்க மாடல்) கும்பல் விரித்த (எளிதில் புரிந்துகொள்ளமுடியாத பொருளாதார) மாய வலையில் அவன் சிக்கியிருப்பதை அறிந்துகொண்டேன்.அந்த வலை எப்படி விரிக்கப்பட்டது? என்பதை நாம் அலசுவோம்.(ஏனெனில் இதே மாய வலையில் சேமிக்கும் பழக்கமுள்ள நமது இந்தியாவே சிக்கியிருக்கிறது.அதன் சிறு வடிவத்தை உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்!!!)


நலிவடைந்துகொண்டிருக்கும் நம் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள,ஒரு பெரிய கதவு 1991 இல் நாட்டு நலன் என்ற பெயரில் நமது மத்திய அரசால் திறந்துவிடப்பட்டது.அதற்குப் பெயர் உலக மயமாக்கல்(நிஜத்தில் அமெரிக்கமயமாக்கல்)அதனால் அதுவரை வெறும் 3.50% மட்டுமே இருந்த நம் நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி,படிப்படியாக உயர்ந்து 9% வரை உயர்ந்து உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியில் ஒன்றாக மீண்டும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியும்,வீழ்ந்துகொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பும் பெரிதாகிக்கொண்டிருக்கும் பணக்கார ஏழை இடைவெளியும்,உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை எந்த விதத்திலும் குறைக்காது என்று தன் கொள்கையில் உறுதியாய் இருந்து கொண்டு,அந்தக் கொள்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
சரி,இதற்கும் என் தம்பியின் பணப் பற்றாக்குறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.(பொருளாதார சீர்திருத்தம் என்பது ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் நடவடிக்கை;அந்த நடவடிக்கை எப்படி ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் வீழ்ச்சி அல்லது எழுச்சியை உருவாக்குகிறது? என்பதைப் பற்றி இந்தியாவில் யாரும் சர்வே எடுக்கவில்லை;ஆனால்,இந்தியா பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய மேற்கு நாடுகள் எப்படியெல்லாம் நரித்தனம் செய்துவருகின்றன என்பதை இந்த கட்டுரையினை முழுமையாக வாசித்தப்பின்னர்,உணர்ந்துகொள்வீர்கள்)


நமது அரசின் தாராளமயமாக்கல் கொள்கைதான்,நமது சமூக பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைத்திருக்கிறது.இதுதான் என் தம்பியைப்போன்ற பலரின் திண்டாட்டங்களுக்கும் காரணம்.முதலில் ராக்கெட் போல உயரத்தில் சென்றுகொண்டிருக்கும் விலைவாசியிலும்,கட்டுக்குள் அடங்காது போன நகரமயமாக்கலிலும்,நடுத்தர மற்றும் பாமர மக்களுக்கு வசதியான வீடு,சுகாதாரமான ஊழல்,தரமான மருத்துவம்,கல்வி,ஏன் அத்தியாவசியமான குடிநீர்,மின்சாரம் போன்றவற்றைப் பெறுவதற்கு 365 நாட்களும் அல்லலுறுகின்றனர்.இது  ஒருபுறமிருக்கட்டும்; என் தம்பியைப் போன்ற ஒரு நல்ல உத்யோகத்தில்(வங்கிப் பணி,தகவல் தொழில்  நுட்பப்பணி போன்ற ஒயிட் காலர் வேலைகள்) இருப்போர்  கூட எதற்காக இப்படி புலம்ப வேண்டும்? முன்பே சொன்னதுபோல சமூகப் பொருளாதார கட்டமைப்பு (அமெரிக்கா மற்றும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் இந்தியாவை வேட்டையாடும் விதமாக) மாறியிருக்கிறது.நமது சேமிப்புப் பொருளாதாரம் நம்மை ஊதாரியாக்கும் செலவுப் பொருளாதாரமாக மாற்றிவிட்டது.

ஆம்,முன்பெல்லாம் நம்  வருமானத்தில் ஒரு பகுதியை(நடுத்தர,மேல் நடுத்தர மக்களின் நிலை) சேமிப்பதற்கு என்றே  முதலில் எடுத்து வைக்கும் பழக்கம் இருக்கிறது.இந்த பழக்கம் சுமார் 20,000 ஆண்டுகளாக உருவானது;ஆனால்,தற்போதைய உலக மயமாக்கல்,தாராளமயமாக்கலால் இன்று சேமிக்கும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.இது ஏதோ நம்மை திடீரென மாற்றிய மாயாஜாலம் இல்லை;எப்படி நம் வீட்டில் காலையில் நீச்சுத்தண்ணீர் எனப்படும் நீராகாரம் அருந்தும் பழக்கத்தை அழித்துவிட்டு,அந்த இடத்தை காபி,டீ  அருந்தும் பழக்கம் அமர்ந்துகொண்டதோ அப்படித்தான் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்ரு மறுபடியும் நாம் நீராகாரம் பக்கம் செல்வோமா? இதேபோலத்தான் மெல்ல வந்து நம் சட்டைப் பைகளில் அமர்ந்து கொண்டது இந்த க்ரடிட் கார்டு எமன்!!!


க்ரடிட் கார்டின் ஆபத்து இது நம்மை வெறும் கடனாளியாக்குகிறது என்பதோடு மட்டுமல்லாமல் நமது பண்பாட்டையும் மாற்றிவிடுவதைத்தான் இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நாம் வாங்கிய சம்பளக்கவரை மறக்காமல் வீட்டிற்குக் கொண்டு வந்து தாயிடம் கொடுப்போம்;மணமான பின்னர்,மனைவியிடம் கொடுப்போம்;அல்லது பூஜையறையில் வைப்போம்;இதுவே நமது பண்பாடு.அதன்பிறகு,அந்த சம்பளத்தொகையைக் கொண்டு வருங்காலமாகிய நமது குழந்தைகளுக்காக சேமிக்கத்துவங்குவோம்;பிறகே மற்ற செலவுகளுக்கு செலவு செய்ய ஒதுக்குவோம்;


இன்று கார்டு கலாச்சாரம் வந்தப்பின்னர்,பாதுகாப்பு என்ற என்ற பெயரில் வங்கிக் கணக்கிலே வைக்கிறோம்.இந்திய வங்கிகள் இன்றும் தனது தெளிவான பணக்கொள்கையால் நமது கலாச்சாரத்தை காத்து வருகின்றன.ஆனால்,இந்தியாவில் வணிகம் செய்ய வந்த அந்நிய மற்றும் பன்னாட்டு வங்கிகள் நமது சேமிப்புகளை சூறையாட எல்லா வேலைகளையும் செய்கிறது.அவசரத்தேவைக்குக் கடன் வாங்குவதை விட்டுவிட்டு,ஆடம்பரத் தேவைக்கு நம்மை வாங்க வைக்கும் வேலையைத் தூண்டி வருகின்றன.இதை எளிமையாக விளக்கும்பொருட்டு ஒரு தனி நபரின்(என் தம்பியின்) வாழ்க்கை முறையை எடுத்துக்கொள்வோம்:


அந்த பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் தம்பிக்கு மாதச் சம்பளம் ரூ.25,000/-அதில் பெர்குசைட்ஸ்(perquisites) என்று மீல் வவுச்சர்களும் (i.e.Sodexo Meal Pass) அல்லது FOOD கார்டு என்றோ கிட்டத்தட்ட 3000 ரூபாயை அவன் மாதச் சம்பளத்திலிருந்து கழித்துவிடுகிறார்கள்.முதலில் Staff welfare என்ற அடிப்படையில் கொடுக்கப்படும் இந்தச் சலுகை வருமானவரிச்சட்டத்தின்   FBT & Perquistes Act on food coupon/meal vouchers Rule 3(%)iii படி ஒரு நிறுவனத்தில் வேலை நிமித்தமாக வேலை நேரங்களில் மட்டும் தர்ப்பட வேண்டிய ஒரு கூப்பனின் விலை ரூ.50/-அதிகபட்சம் ஒரு நாளுக்கு இரண்டுமுறை கூப்பனை உபயோகிக்கலாம் என்று இருக்கும்.சட்டத்தின் கண்களில் கறுப்புத் துணி கட்டிவிட்டு,பிரபல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் Sodexo/orangeபோன்ற உணவுக்கூப்பன்களும்,FOOd கார்டுகளும் எப்படியெல்லாம் உபயோகப்படுத்தப்படுகின்றன என்று பார்க்கும்போது,எப்படியெல்லாம் நம் அரசுக்கு வரி ஏய்ப்பும்,நமது நுகர்வுத்தன்மை மாறிவருவதையும் தெளிவாகப் பார்க்கலாம்.


ஆம்,அரசு தரும் வரிச்சலுகையானது(As per the IT act) ஐம்பது ரூபாய் வவுச்சர்களுக்கு மேலே பொருந்தாது.ஆனால்Sodexo  பாஸ் கூப்பனில் 100 மற்றும் 2000 ரூபாய் வவுச்சர்கள் அதிகமாக இருக்கும்.Food Card தேய்க்கப்படும் இடங்கள் எப்படி இருக்கும் உங்களுக்குத் தெரியாதா என்ன?KFC,Mac Donald’s,Pizza hut போன்ற பன்னாட்டு உணவகங்களோடு நம் நாட்டு பெரிய நிறுவனங்களான அடையார் ஆனந்த பவன்,சரவணா பவன்,வசந்த பவன்,ஸ்ரீமிட்டா,அஞ்சப்பர் என்று நவநாகரீக ஆடம்பர உணவகங்களில் மட்டுமே இந்த FOOD கார்டுகளை தேய்க்க முடியும் என்றால் எப்படிப்பட்ட ஒரு பொறியில் சிக்கிக் கொண்டோம் என்று புரிகிறதா?


இதுவரை தன் வாழ்க்கையில் நூறு ரூபாய்க்குள் மிகத் தாராளமாக மூன்று வேளையும் உணவு உண்டு வந்த என் தம்பிக்கு,இப்போது ஒரு வேளை சாப்பாடே நூற்றைம்பதுக்கும் குறையாமல் இருக்கிறது என்றால் அவனை எப்படி ஒரு பாழுங்கிணற்றில் தள்ளிவிடுகிறது இந்த கார்பரேட் கலாச்சாரம்.என் தம்பியும் அந்தக் கார்டினை வைத்து 10 முதல் 15 நாட்கள் சாப்பிடுகிறான்.பணம்தீர்ந்தவுடனும் கூட நாவில் ஒட்டியிருக்கும் மாயருசி அவனை அங்கேயே தொடர்ந்து சாப்பிட வைக்க உந்துகிறது.இந்த இடம் தான் நம் நுகர்வுக் கலாச்சாரம் மாறும் புள்ளி.இதற்குப்பிறகு சுவையாக,ஆரோக்கியமாக,மலிவான விலையில் கிடைக்கும் ஏதாவது சிறிய ஓட்டல்களிலோ அவன் சாப்பிடப்போவதில்லை.


இந்த FOOD கார்டுகளை அவன் காய்கறி,பழம் வாங்க உபயோகப்படுத்தினாலும் அதையும் ரிலையன்ஸ் ஃபிரஷ் ,மோர்ஸ்,ஸ்பென்ஸர் போன்ற மெகா பஜார்களில்தான் வாங்க வேண்டும். அது போன்ற கவர்ச்சிகரமான ஸ்டோர்களில் சில நேரங்களில் அவன் விலை குறைவாகக் கொடுத்தாலும்,தேவையற்ற உணவுப்பண்டங்களை அவன் நுகர்வு செய்வதை(பயன்படுத்துவதை)க் கட்டுப்படுத்த முடியாது.சில நேரம் தியேட்டர், மால்களில் உள்ள கேண்டீன்களில் கூட அவன் உபயோகிக்கிறான் என்றால்,இதற்கு வருமான வரிவிலக்கு தரும் அரசிற்கு எவ்வளவு நன்மை?


எல்லாவற்றிற்கும் மேல் சாப்பிடும் பண்டங்களுக்கு கொடுக்கும் கூப்பன்களில் நமது நுகர்வு போக எவ்வளவு மீதி இருந்தாலும் திரும்ப வராது என்பது இதில் பெரிய கொடுமை!!!


இனி க்ரடிட் கார்டுகள்,ரிவார்ட் பாயிண்ட்கள் மற்றும் பேபேக் கார்டுகள் எப்படியெல்லாம் நம்மைச் சீரழிக்கின்றன என்று பார்ப்போம்:ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் சில இ-ஷாப்களில் நீங்கள் கடன்காரராக (க்ரடிட் கார்டு வைத்திருந்தால்) மட்டுமே ஷாப்பிங் செய்ய முடியும்.க்ரடிட் கார்டுகளுக்கு டெபிட் கார்டை விட கட்டணம் குறைவாக இருக்கும்.இந்த க்ரடிட் கார்டுகளை வாங்கி கட்டணக்கொள்கையை(கொள்ளையை) அறிந்து மிகத் துல்லியமாக செலவு செய்து கட்டணத்தில் இருந்து தப்புவோர்கள் நிறைய இருப்பதால்,பன்னாட்டு வங்கிகள் க்ரிமினலாக யோசிக்க ஆரம்பித்து கண்டுபித்த மற்றுமொரு கவர்ச்சிகரமான திட்டம் தான் ரிவார்ட் பாயிண்ட்ஸ்,போனஸ் பாயிண்ட்ஸ் முறை.


பல ஷாப்பிங் மால்களிலும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் உங்கள் முதல் நுகர்விலேயே உங்களுக்கு ஒரு உறுப்பினர் அட்டை ஒன்று வழங்கப்படும்.அதில் உங்கள் நுகர்வுக்கு(பர்சேஸ்ஸுக்கு ஏற்ப) உங்கள் அட்டைக்கு போனஸ் பாயிண்டுகள் வழங்கப்படும்.அதை உபயோகித்து நீங்கள் மறுபடியும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு(லாபகரமான) பொருளை வாங்கலாம். ஆனால்,அந்த பரிசினை பெறுவதற்குள் தாங்கள் பொறுமையின் எல்லைக்கே செல்ல வேண்டும்.(குறைந்த பட்ச வேல்யு 2000 பாயிண்டுகளாவது இருக்க வேண்டும்)
இப்பொழுது ஒரு புதிய பல்பொருள் அங்காடி(குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட)NMART என்ற பெயரில் வந்துள்ளது.இந்தக் கடையில் நீங்கள் உறுப்பினராக சேரும்போது ரூ.5500/- கொடுக்க வேண்டும்.(உங்கள் வசதிப்படி ரூ.10,000/- அல்லது ரூ.12,000/-கூட கொடுக்கலாம்)..அதற்கு உங்களுக்கு ரூ.220/-க்கான பரிசு வவுச்சர்கள் 48 மாதங்களுக்கு வழங்கப்படும்.(ஆனால், அதை நீங்கள் எண்ணெய்,சர்க்கை,நெய் போன்ற மளிகைப் பொருட்களைத் தவிர்த்து வேறு பொருட்களை மட்டுமே வாங்க முடியும்)இது போக 48 மாதங்களுக்கு ரூ.1500/-க்கான கடன் வசதி உங்கள் உறுப்பினர் அட்டையில் வழங்கப்படும்.அதற்கு 30 நாட்களுக்குள் நீங்கள் அதைச் செலுத்த வேண்டும்.ஏதாவது ஒரு மாதம் நீங்கள் அதைச் செலுத்தத் தவறினால் உங்களின் அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்படும்.இதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டு ரூ.72,000/-க்கு  பொருட்களை நான்கு ஆண்டுகளுக்குள் வாங்கியிருந்தால்,நாம் கட்டியிருந்த உறுப்பினர் தொகை ரூ.11,000/-ஆகக் கிடைக்கும்.
இது போன்ற திட்டங்கள் உறுப்பினர் சேர்க்கை,மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஆகியன இன்ஷீரன்ஸ் நிறுவனங்களில் வரும் unclaimed பிரீமியம் போல செயல்படாத உருப்பினர் வைப்புத்தொகையினை சுருட்டி வைப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகின்றன.


 SBI கார்டிலிருந்து  ICICI கார்டு வரை,தங்கள் வாடிக்கையாளர்கள் கடன் அட்டையினைத் தொடர்ந்து உபயோகிக்க அவர்களின் நுகர்விற்கு ஏற்ப போனஸ் பாயிண்டுகளை வழங்குகிறது.இது போன்ற நுகர்வுகளை மட்டுமே நாம் விரும்ப ஆரம்பித்தால்,நம் வீட்டின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும்,முகமறிந்து கடனளிக்கும்,நம் மளிகைக்கடை அண்ணாச்சிகளையும்,நமக்கென்று விட்டு ருசியுடனும் ஆரோக்கியத்துடனும் ஸ்பெஷலாக தோசை சுடும் கிச்சன் மாமிகளையும் நாம் வாழ்வில் மறந்துவிடுவோம்.அதே போல,ஒரு திடீர் செலவில் கட்ட முடியாமல் போனால் க்ரடிட் கார்டு டியூவை வசூலிக்க நமது தன்மானத்தை அடகு வைக்க தயாராகிவிடுவோம்.தேவையா இந்த வாழ்க்கை?


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள்24,25,26;மே 2012.