RightClick

பட்டினியில் வணிகம்(சுதேசிச் செய்தியில் வெளிவந்திருக்கும் பொருளாதார விழிப்புணர்வுக் கட்டுரை)


அண்மையில் நெதர்லாந்து நாட்டில், Zembla என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிப்பவர்கள் ஆய்வு செய்ததில்,பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.ஆய்வின் விளைவாக Zembla தயாரிப்பில் உருவான HANDLE IN HONGER (பட்டினியில் வணிகம்)ஆவணப் படத்தில்,பங்குச் சந்தைக்கும்,பட்டினிச் சாவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை வெளிக்கொணர்ந்துள்ளனர்.உணவுப்பொருட்களின் விலையை செயற்கையாக ஏற்றி வைக்கும்,வணிக சூதாடிகளால் தான் இத்தனை பிரச்னைகள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.சோமாலியாவில் அல்லது இன்னொரு ஆப்ரிக்க நாட்டில் மக்கள் பட்டினியால் இறப்பதைப் பற்றி இச்சூதாடிகளுக்குக் கவலை இல்லை;இன்னும் சொல்லப் போனால்,பட்டினிச் சாவுகளுக்கு அவர்களும் ஒரு முக்கியக்காரணம்.ஒரு பக்கம் மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் கோடி கோடியாக பணம் புரளுகிறது.
உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம்,முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட அளவு பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிடுவார்கள்.முதலீட்டாளர்கள் கேட்கும் அளவு பண்டத்தை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பு.முதலீட்டாளருக்கும்,விவசாயிக்கும் இடையில் யூக அடிப்படையில் விலையைத் தீர்மானிக்கும் இடைத் தரகர்கள் நுழைந்துவிட்டனர்.இவர்கள்,விவசாயியையோ அல்லது உணவுப் பண்டத்தையோ கண்ணால் காண்பதில்லை;பெரு நகரம் ஒன்றில்,அலுவலகத்தில் சொகுசாக உட்கார்ந்து கொண்டே,கணினித் திரையில் விரும்பியவாறு விலையைத் தீர்மானிக்கிறார்கள்.2004 ஆம் ஆண்டு வரையில்,வீட்டு மனை போன்றவற்றில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.அமெரிக்காவில் வீட்டுக்கடன் பிரச்னையால்,நிதி நெருக்கடி ஏற்பட்டதால்,அதனை பாதுகாப்பற்ற முதலீடாகக் கருதி,உணவுத் துறைக்குள் புகுந்துவிட்டனர் யூக வணிகர்கள்.


2006 ஆம் ஆண்டு முதல்,உலகச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன.கோதுமையின் விலை 80% உயர்ந்தது.அரிசி 320% உயர்ந்தது.அதே காலகட்டத்தில் 30 நாடுகளில் 200 மில்லியன் (ஒரு மில்லியன்= 10,00,000; 200 மில்லியன்=200  கோடி )மக்கள் போஷாக்கின்மையால் அல்லது பட்டினியால் வாடினார்கள்.

உணவுப்பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் சூதாடிகளுடன்,மேற்கத்திய நாடுகளின் ஓய்வூதிய நிறுவனங்களும்,வங்கிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளன.இந்த நிறுவனங்கள் தமது பங்குதாரருக்கு கொடுக்க வேண்டிய ஈவுத்தொகை(டிவிடெண்டு)யை அதிகப்படுத்துவதற்காக,உணவுப்பொருள் வணிகத்தில் முதலீடு செய்கின்றன.ஒரு நிறுவனம் இலாபத்தை எதிர்பார்ப்பதும்,பங்கு தாரருக்கு லாபத்தில்பங்கு கொடுப்பதும் ,முதலாளித்துவ தர்மப்படி நியாயமானதாக இருக்கலாம்.ஆனால்,அதற்காக லட்சக்கணக்கான பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடுவது அநியாயமானது;மனித தர்மத்துக்கு எதிரானது.இதிலே,ஓய்வூதிய நிறுவனங்களின் பங்கு சர்ச்சைக்குரியது.ஏனெனில்,பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் வயோதிக கால சுக வாழ்வை உறுதிபடுத்துவதற்காக,வறிய நாடுகளைச் சேர்ந்த மக்களை பஞ்சத்திற்கு பலி கொடுக்கிறார்கள்.(மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே,இது மாறுவதெப்போ;தேறுவதப்போ நம்மக் கவலை)

Zembla தயாரிப்பாளர்கள்,நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர்.மிகப் பெரிய ஓய்வூதிய காப்புறுதி நிறுவனமான Zorg en Welzijn 700 மில்லியன் யூரோ உணவுப்பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளது.அதனோடு போட்டி போட்டுக்கொண்டு,அரசாங்க ஊழியர்களின் காப்புறுதி நிறுவனமான ABP 500 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது.ஐ.நா.சபையில் பணியாற்றும் Oliver de Schutter, ‘ஓய்வூதிய நிறுவனங்கள் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால்,அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக’ தெரிவித்தார்.


ஐரோப்பிய ஒன்றியம்,உணவுப்பொருள் வர்த்தகத்தில் சூதாடுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கின்றது.அதே நேரம்,புருசெல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள யூக வணிகர்களின் நல அமைப்பு,அந்த சட்டத்தை வர விடாது தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 16,வெளியீடு ஏப்ரல் 2012