RightClick

தண்ணீரை வர்த்தகமயமாக்கும் உலகமயமாக்கல்1992 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் உலக பூமி உச்சிமாநாடு நடைபெற்றது.அங்குதான் ‘தண்ணீர் என்பது பொருளாதார மதிப்புமிக்க அரிய பொருள்’ என்கிற நடைமுறை உருவாக்கப்பட்டது.(இந்த நடைமுறையை உருவாக்கிட வல்லரசு நாடுகள் காரணமாக இருந்தன.இந்த வல்லரசு நாடுகளுக்கு இந்த சிந்தனை விதைத்தது உலகை அடிமையாக்கத் துடிக்கும் பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களே!)தண்ணீர் என்பது இலவசப் பொருள் அல்ல;பணம் கொடுத்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்று அது பாதை அமைத்துக் கொடுத்தது.


(நமது இந்து தர்மத்தின் கொள்கையே மனித சமுதாயத்தின் கொள்கை ஆகும்:அது: உணவு,தண்ணீர்,கல்வி இம்மூன்றையும் விற்பனை செய்வது மகத்தான பாவம் ஆகும்.ஆனால்,நிஜத்தில் நடப்பது என்ன? சிந்தியுங்கள் ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளே!!!)
உலகம் முழுவதும் தண்ணீர் தொடர்பான திட்டங்களுக்கு உலக வங்கி,ஐ.எம்.எஃப்,,ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சில பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.தண்ணீர் தனியார் மயம் ஆக்கப்பட வேண்டும் என்பது அந்த நிறுவனங்களின்(வல்லரசு நாடுகளின்!) அடிப்படைக் கொள்கை.


தண்ணீரை தனியாரிடம் கொடுத்ததன் விளைவாக,பல நாடுகள் மிக மோசமான அனுபவங்களைச் சந்தித்தது.சமீபத்திய வரலாறு: பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கொச்சபம்பாவின் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை பெச்டெல் என்னும் அமெரிக்க கம்பெனியிடம் ஒப்படைத்தது.உடனே, வீடுகளுக்கான தண்ணீர்க் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது.கொச்சபம்பவில் உள்ள தண்ணீர் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று அறிவித்தது அந்த பகாசுர நிறுவனம்.
அங்கு அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் இருந்தன.ஒவ்வொரு வீடாகச் சென்று மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டிகளை உடைக்க ஆரம்பித்தனர் பெச்டெல் கம்பெனியின் ஆட்கள்.மக்கள் வெகுண்டெழுந்தனர்.பெரும் போராட்டங்கள் வெடித்தன.போராட்டத்தை அடக்க,ராணுவத்தை ஏவியது பொலிவிய அரசு.இரு தரப்புக்கும் கடும்மோதல் நடைபெற்றது.இறுதியில் மக்கள் பொராட்டமே வென்றது.2002 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது பெச்டெல் நிறுவனம்.


இந்தியாவில்.   .  .

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில அரசுகளும் உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று,ஏராளமான தண்ணீர்த் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மகாநதியின் கிளை ஆறான ஷிவ்நாத் என்கிற ஜீவநதி மத்தியப்பிரதேசம்,சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாய்கிறது.அதை ரேடியஸ் வாட்டர் லிமிடெட் என்கிற கம்பெனிக்கு 1998 ஆம் ஆண்டு குத்தகைக்குக் கொடுத்தது மத்தியப் பிரதேச மாநில அரசு.அவர்கள் ஒப்பந்த விதிகளை மீறி ஏராளமான தண்ணீரை உறிஞ்சினர்.அத்துடன் நிற்காமல் ஆற்றையொட்டிய ஊர்களில் வீடு வீடாகச் சென்று, ‘உங்கள் கிணற்றில் உள்ள தண்ணீர் எங்களுக்குச் சொந்தம்’ என்று கூறினர்.ஆற்றுநீர் பூமிக்குள் கசிந்து கிணற்றுக்குள் வருகிறது என்பது அவர்களின் வாதம்.எனவே, ‘பணம் கட்ட வேண்டும்’ என்று கூறினர்.கிணறுகளில் மீட்டர் பொருத்தினர்.அதற்கு எதிரக மக்கள் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தினர்.


சர்வதேச தண்ணீர்க் கம்பெனிகளின் முதல் குறி:கர்நாடக மாநிலம்.ஏனெனில்,தண்ணீரை தனியார் மயம் ஆக்குவதற்கான அனைத்து வாசல்களும் அங்கு திறக்கப்பட்டுவிட்டன.உலக வங்கியின் உத்தரவுப்படி, ஹீப்ளி, தார்வாட்,பெல்காம்,குல்பர்கா ஆகிய நான்கு மாவட்டங்களில் 30,000 வீடுகளுக்கான தண்ணீர் விநியோகம் பிரெஞ்ச் வாட்டர் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது.மைசூரில் ஒட்டு மொத்த தண்ணீர் விநியோகமும் தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.


தண்ணீரை தனியார் மயம் ஆக்குவதற்கு தடைகல்லாக நம் நாட்டின் சட்ட திட்டங்களும் உள்ளன.எனவே,இங்குள்ள சட்ட திட்டங்களை மாற்ற வேண்டும் என்று ஆட்சியாளர்களை நிர்ப்பந்தம் செய்கின்றன பன்னாட்டு நிதி நிறுவனங்கள்.தனியார் கம்பெனிகளுக்கு வசதியாக கர்நாடக உள்ளாட்சி நிர்வாகத்தின் சட்டங்கள் 2005 ஆம் ஆண்டு திடீரென மாற்றப்பட்டன.அதன் தொடர்ச்சியாக,பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்திய தண்ணீர்ச்சந்தையை கைப்பற்றும் நோக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த 16 தனியார் கம்பெனிகளின் உயரதிகாரிகள் கடந்த ஆண்டு(2011) பெங்களூருவுக்கு வருகை தந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.


ஏரி போன்ற பொது நீர்நிலைகள் மட்டுமல்ல;சொந்த இடத்திலேயே நிலத்தடி நீரை எடுக்கக் கூட இனி இடமில்லை;இயற்கையின் கொடையாகிய தண்ணீர்,இனிமேல் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கிற பண்டமாக மாற்றப்படுகிறது.ஏற்கனவே,விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விவசாயமே நலிந்து வரும் நிலையில்,பணம் கொடுத்தால் தான் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற சூழலை இந்திய அரசு உருவாக்குகிறது.(தேசிய தண்ணீர்க் கொள்கை 2012 இன் படி ஒரு ஏக்கர் பாசனத்திற்கு ஆண்டுக்கு ரூ.8000+ செலுத்த வேண்டும்).பாவம் இந்திய விவசாயி! இனி தண்ணீர் வாங்க பணம் இல்லாவிட்டால் அவரது நிலம் தரிசாகக் கிடக்கும் அல்லது மானாவாரி பயிர்களைத்தான் பயிரிடமுடியும்.இதன் காரணமாக,விவசாயம் அருகிப் போய் நம் நாட்டில் உணவு உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிடும் ஆபத்தான அறிகுறிகளை உள்ளடக்கியிருக்கிறது மத்திய நீர்வள அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வரைவு தேசிய நீர்க் கொள்ளை,ஓ! ஸாரி,கொள்கை.

ஆன்மீகக்கடலின்  கருத்து:இந்தியாவில் உணவு உற்பத்தி  ஒருவேளை அடுத்த சில வருடங்களில்(இந்த பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளால் குறைந்துவிட்டால்,இந்த உணவு தானியப் பற்றாக்குறையை வேறு எந்த நாட்டாலும் தீர்க்க முடியாது;அதுமட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து உணவு உற்பத்தியை மட்டும் மேற்கொண்டாலும் இந்தியாவின் ‘பசி’யைத் தீர்க்க முடியாது என்பது இந்திய அரசுக்குத்தெரியும்; ஐ.நா.சபைக்குத் தெரியும்; இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தெரியும்.
இருந்தும் ஏன் இவ்வாறு ஒரு  மறைமுக பொருளாதார யுத்தத்தை இந்தியா மீது வல்லரசு நாடுகள் திணிக்கின்றன?
120 கோடி பேர்களாகிய நாம் நமது பொருளாதார பலத்தை இன்னும் உணரவில்லை;தொலை நோக்குடைய தலைவர்களை நாம் நம்மை ஆள்வதற்கு இன்னும் தேர்ந்தெடுக்க வில்லை;தவிர, நமது வேர்களையும் பெருமைகளையும் சிதைக்கும் இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை சிறிதுகூட கண்டிக்க வில்லை;(சில மாதங்களுக்கு முன்பு,சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் ஒரு பன்னாட்டு கார் கம்பெனியில் ஆயுதபூஜையும்,விநாயகர் சதுர்த்தியும் கொண்டாட அனுமதி கேட்ட தொழிலாளர்களை அடித்து நொறுக்கியிருக்கிறது.ரெகுலராக குமுதம் ரிப்போர்ட்டர் படிப்பவர்களுக்கு இந்த செய்தி நினைவிருக்கும்;)
மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டதிட்டங்களை சிறிதும் மதிப்பதில்லை;அவைகளின் வியாபாரத்துக்கான மிகப் பிரம்மாண்டமான நுகர்வோர் சந்தையைக் கொண்ட வேட்டைக்காடாக இந்தியா மட்டுமே இருக்கிறது.வேறு எந்த  ஒரு நாடும் இவ்வளவு சுய மரியாதையின்றி,சுய விழிப்புணர்ச்சி இன்றி இருந்தது கிடையாது.ஒரு சர்வேப்படி, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் காஸ்டியூம் பொருளை ஒரு இந்தியன் தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை வாங்கிவிட்டாலே,அந்த பன்னாட்டு நிறுவனத்தின் விற்பனை பல நூறு சதவீதம் அதிகரித்துவிடுமாம்.இந்தியரின் சராசரி ஆயுள் 68 ஆண்டுகள் என்பதை நினைவிற்கொள்க)


ஓம்சிவசிவஓம்
ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கங்கள்10,11;வெளியீடு:ஏப்ரல் 2012