RightClick

இந்துப்பண்பாட்டின் நிஜப்பிரதிநிதிகள்

பீகாரில் ஒரு எளிமையான மனிதர் வாழ்ந்து வருகிறார்.அவர் எந்த ஒரு அமைப்புடனும் தொடர்புடையவர் அல்ல;துறவியான அவர் பொறியியல் பட்டதாரி ஆவார்;அவர் 50 முதல் 200 துறவிகளை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.அவரது ஒரே எண்ணம் நேபாளம் மீண்டும் இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே!!!(இந்து நாடாக இருந்த நேபாளத்தை கம்யூனிச அரசு,மதச்சார்பற்ற நாடாக மாற்றிவிட்டது)

டெல்லியில் ஒரு நடுத்தரவயது மனிதர் உள்ளார்.ஏழை எளியவர்கள் தங்களது மகள்களை திருமணம் செய்து கொடுக்க எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பார்த்து மிகுந்த வேதனை அடைகிறார்.இன்னும் சொல்லப்போனால் பெற்றோர்களைக்காட்டிலும் கலக்கமடைகிறார்.ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு தனது சொந்தச் செலவில் திருமணம் வைக்கிறார்.தந்தையைப்போல ஒவ்வொரு செயலையும் கரிசனத்துடன் கவனித்துக்கொள்கிறார்.ஏழைப்பெண்களின் திருமணக்கோலத்தைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்.சொந்த மகள் பிரிந்து போவதைப்போன்ற உணர்வுடன் நெஞ்சம் கலங்குகிறார்.


ஹரித்துவார் அருகில் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் சுற்றியுள்ள 200 கிராமங்களுக்கு  கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களைத் தேடிப்பிடித்து உதவி செய்து அவர்களை சிறு தொழிலதிபர்களாக மாற்றியுள்ளார்.அவர்களது குழந்தைகளுக்கு சத்தான உணவும் தரமான கல்வியும் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.


ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, பசுமையான மேய்ச்சல் நிலம் இல்லாமல் கால்நடைகள் அவதிப்படுவதையும்,பசுக்களை வைத்திருப்பவர்கள் அல்லல்படுவதையும் கண்டு மனம் வருந்தினார்.தரமான புல்லை வளர்த்து பசுமையான மேய்ச்சல் நிலத்தை உருவாக்கினார்.இதனால் பசுக்கள் செழுமையாக வளர்ந்தன.அதிக அளவில் பால் கொடுக்கத் துவங்கின;சுற்று வட்டாரமே இதனால் மேம்பாடு அடைந்தது.பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் மிகவும் வித்தியாசமான மனோபாவம் கொண்டவர்.கசாப்புக் கடைக்குக் கொண்டு செல்லப்படும் ஒரு பசுவை விடுவிப்பது என்பதை தனது தினசரி கடமையாகக் கொண்டுள்ளார்.பசுவை மீட்டு,கோசாலையில் ஒப்படைக்கிறார்.அது மட்டுமல்லாமல்,பசுவின் பராமரிப்பிற்கும் ஒரு தொகையை தானமாகக் கொடுக்கிறார்.

உத்திரப்பிரதேசத்தில் புலந்த்ஷஹர் அருகே போலீஸ் அதிகாரி ஒருவரின் தந்தை வயது முதிந்த நிலையிலும் ஓர் இளைஞனைப் போல சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்.அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைச் சேர்த்துக்கொண்டு ஜிகாதிபயங்கரவாத சக்திகளை விரட்டியடித்துவருகிறார். தனது தந்தையின் செயல்பாடுகளைப் பாராட்டி போலீஸ் அதிகாரி கவிதைகள் இயற்றியுள்ளார்.மகாராணா ப்ரதாப்,சிவாஜி மஹாராஜ் ஆகியோரின் வழித்தடத்தில் செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.


அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ஒரு இந்தியர்,நாடு கடந்தப் பிறகும் தனது இறை நம்பிக்கையில்,இந்து தர்மத்தின் விஞ்ஞான ரகசியங்களை சேகரித்துக் கொண்டே இருக்கிறார்.இந்த தகவல்களை மின் அஞ்சல் மூலமாக உலகம் முழுவதும் இருக்கும் தனது நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வருகிறார்.துணுக்குகளைப் பரிமாறிக்கொள்கிறார்.சிலர் பதிலளிக்கிறார்கள்.பெரும்பாலானவர்கள் பதிலளிப்பதில்லை;ஆனால்,அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து மின் அஞ்சல்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.


1960 இல் சோம்நாத்தில் ஒரு விவசாயியின் கண்ணில் அபூர்வமான காட்சி தென்பட்டது.அந்த வித்தியாசமான காட்சியைப்பார்த்து அவர் வேதனைப்பட்டார்.பள்ளிக்கூடத்துக்குச் செல்ல வேண்டிய வயதிலுள்ள சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல முடியாதது தான் அவரது வேதனைக்குக் காரணமாகும்.அந்த ஏழை விவசாயி தனக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை விற்று ஒரு பள்ளிக்கூடத்தை துவக்கினார்.முதலில் 5 சிறுமிகள் மட்டுமே சேர்ந்தார்கள்.இப்போது அது மிகப் பெரிய பள்ளிக்கூடமாக வளர்ந்தோங்கியிருக்கிறது.நாகபுரியில் சமூகநலனில் நாட்டம் கொண்ட ஒரு சிறு குழுவினர், “ப்ளாட்பார்ம் பள்ளிக்கூடம்” நடத்தி வருகின்றனர்.பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி வரும் இரவலர்களின் குழந்தைகளுக்கு அங்கு தினந்தோறும் சில மணி நேரம் கல்வி கற்பிக்கப்படுகிறது.இதற்காக அவர்களிடமிருந்து ஒரு பைசா கூட வசூலிக்கப்படுவதில்லை;இத்தகைய முயற்சி ஒடிசாவிலும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.


இமாச்சலப்பிரதேசத்தில் குகைக் கலைஞர் என்று அழைக்கப்படுகின்ற ஒருவர் இருக்கிறார்.உண்மையில் அவர் குகை வாசி அல்ல;குகை ஓவியங்களைப் பற்றி ஆழமான ஆய்வு நடத்தி வருகிறார்.ஆவணப்படுத்தியுள்ளார்;இதன் அடிப்படையில் இமாச்சலப்பிரதேசத்தில் அவர் அற்புதமான அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளார். அதற்கு மிகுந்த பாராட்டு கிடைத்துள்ளது.பார்வையாளர்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது.


சித்தார்த்தன் என்ற மன்னன் புத்தராக உருவெடுத்த பெருமையுள்ள நகரம் கயா ஆகும்.இந்த கயா நகரில்  ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் தனது பூர்வீக கிராமத்துக்கு வாரந்தோறும் செல்கிறார்.அங்குள்ள மக்களுக்கு இலவசமாக மருத்துவசேவை செய்கிறார்.இதே போல கான்பூரில் மருத்துவக்கல்லூரிப் பேராசியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் ஒருவர் ஏழை எளிய மக்களுக்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவமுகாம் நடத்தி வருகிறார்.இதற்கு சக டாக்டர்களும் மாணவர்களும் நண்பர்களும் உதவிசெய்து வருகிறார்கள்.


இதைப்போல ஆயிரக்கணக்கான உதாரண மனிதர்கள் நம் நாட்டில் இருக்கின்றார்கள்.ஒவ்வொருவரும் ஒருவகையில் மாணிக்கங்களாகவும்,ரத்தினங்களாகவும் சமுதாயத்தில் ஒளிவீசுகிறார்கள்.இயற்கை விவசாயம்,தண்ணீர் சேமிப்பு, சுற்றுச்சூழல், கல்வி மருத்துவம்,சுகாதாரம்,பெண்கள் திருமணம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.அனைவரைப் பற்றியும் தொகுத்துரைப்பது எளிதானது அல்ல;ஆனால் அந்த தொகுப்பை ஒரு வலைப்பூவாகவாவது வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என ஆன்மீகக்கடல் விரும்புகிறது.நீங்கள் செய்யலாமே?


இவர்கள் எல்லாம் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாகப் பிரகாசித்து வருகிறார்கள்.அரசிடமிருந்து எந்த உதவியையும் பெறாமல்,எதையும் எதிர்பாராமல்,விளம்பரத்தை நாடாமல்,பிரதிபலன் பற்றி கணக்கு போட்டு பாராமல் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே இவர்கள் எல்லாம் சேவைசெய்து வருகிறார்கள்.உண்மையிலேயே இவர்கள்தான் பாரத நாட்டின் சமுதாய ரத்தினங்கள் ஆவார்கள்.இவர்களது சேவைக்கு பத்மஸ்ரீ,பத்மபூஷண்,பத்மவிபூஷண்,பாரத ரத்னா,நோபல் பரிசு போன்றவையெல்லாம் ஈடு ஆகமாட்டா.


உண்மையான பாரத சமுதாய ரத்தினங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பாரதம் மகத்தான தேசமாக எழுச்சி பெறும்.உண்மையிலேயே ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கனலாக உள்ளது.இதை வளர்க்கவே இந்தப்பதிவு வெளியிடப்படுகிறது.இந்தப்பதிவு நீங்களும் சமூக சேவை ஏதாவது ஒரு வடிவத்தில்,எந்த ரூபத்திலாவது செய்ய உந்துகோலாக இருந்தாலே இந்த பதிவு வெளியிட்டதற்கான பலன் உண்டு.


இந்த பதிவானது விஜயபாரதம் வார இதழில் உண்மையான பாரத ரத்தினங்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.


ஆதாரம்:விஜயபாரதம்,பக்கங்கள் 14,15;நாள் 13.4.12.