RightClick

எங்கும் எதிலும் சுதேசியம்


சுதந்திரம் என்பதே சுதேசியத்தின் அடிப்படை சிந்தனை;இதனை மண்வாசனையுடன் எழுதியுள்ளார் ஜஸ்டின் திவாகர்.இவர் 85 நாடுகளை சுற்றி வந்தாலும் தன் சொந்த ஊரின்,சுதேசியின் அருமையை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளார்.அதன்மூலம் தனது சிந்தனையை இந்த புத்தகம் மூலம்(சுதேசி=ஏன் எதற்கு எப்படி) அனைவருக்கும் வழங்கியுள்ளார்.


மீனவர் பிரச்னை,கடல்சார் ஆராய்ச்சி,விவசாயத்தின் இன்றைய நிலை,சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலம் என பல துறைகளை 30 அத்தியாயங்களில் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


‘பக்கத்து வயலில் பயிர் காய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் சண்டைக்காரராக இருந்தாலும் காலால் வயலின் வாமடையை சற்று உடைத்து விட்டுப் போவான்.அவன் தான் விவசாயி என்பவன்.எனவே,அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொண்டாலே நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு வந்துவிடும்.அந்நதிகளை விவசாயிகள் தீர்வுடனும் நீருடனும் வைத்திருப்பர்’ இந்தபத்தியே இந்த புத்தகத்திற்கு ஒரு சோறு பதம்.

‘அணுகுண்டைச் சுயமாகத் தயாரித்த ஊரில் தண்ணீரையும்,உப்பையும் விற்க வெளிநாட்டுக் கம்பெனிகள் தேவைப்படுகிற நிலை’   “நாலந்தா பல்கலைக்கழகத்தின் எண்ணற்ற ஓலைச்சுவடிகளையும் கணித இலக்கியப்  பொக்கிஷங்களையும் தீக்கரையாக்கியதும் இதே வெளிநாட்டவர்தான்”

நமது சரித்திரத்தை வெளிநாட்டுக் கம்பெனிகளை,அவர்களது பார்வையில் எழுத வைத்து,அதைப் பாடமாகப்  படிக்க நமது சிறார்களைப் பணிப்பது சரித்திர விசித்திரம்=எனக் கூறியிருப்பது வரலாற்றிலும் சுதேசி உணர்வின் தேவையை விளக்குகிறது.
காகித மூலதனம் என்ற தலைப்பில் எழுதியுள்ள பங்குச்சந்தை மற்றும் வெளிநாட்டு காப்பீடு நிறுவனங்கள் நமது பணத்தை வெளிநாட்டுக்கு சுரண்டிச் செல்வதை விவரிக்கிறார்.மேலும் நமது முதலீடு எப்படி இருக்க வேண்டும் என்பதையும்,அந்த முதலீடு அது எப்படி நமது நாட்டுக்கே மீண்டும் பயன்பட வேண்டும் என்பதையும் கூறுகிறார்.


பாரதத்தில் மக்கள் தொகை அதிகம் இருந்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை,எனவே,மனித வளத்தை அதிகரிக்க வேண்டும்.இல்லையென்றால் அடிப்படைப் பணிகள் செய்ய ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என எச்சரிக்கை விட்டுள்ளார்.
கோள வெம்மை(எர்த் வார்மிங்)க்கும் சுதேசியே தீர்வு என்பதை ஆணித்தரமாக நிறுவியுள்ளார்.கூட்டுக்குடும்பமே வீட்டையும் நாட்டையும் உயர்த்தும் என்பதை விளக்கும் இவர்,பெண்களுக்கு இந்தியாவில் அளிக்கும் முக்கியத்துவத்தை சிறப்பாக விளக்கியுள்ளார்.


நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை வைத்தியத்திற்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
விதேசி ஏன் கூடாது என்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியுள்ளார்.இது நம் கண்ணை நாமே குத்திக்கொள்ளாமல் இருப்பதற்கு உதவும்.


ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பாடம்.பாடம் மட்டும் அல்ல.அது ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.பொருளாதாரம் பேசுகிறது,சுற்றுச்சூழல் பேசுகிறது,நமது வாழ்க்கையில் நிம்மதிக்கு கைகாட்டி வழிசொல்கிறது ,சுதேசி என்றால் என்ன? சுதேசியை இன்றைய சூழலுக்கும் பயன்படுத்த முடியுமா? பயன்படுத்த வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு ஆணித்தரமாக பதில் அளிக்கிறது இந்த புத்தகம்.
இந்நூல் உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்டு உள்ளூரிலேயே அச்சிடப்பட்டுள்ளது என்பது இப்புத்தகத்தின் ஆசிரியரின் தீராத சுதேசிய சிந்தனையின் வெளிப்பாடு.

நூல் பெயர்:சுதேசி ஏன் எதற்கு எப்படி
ஆசிரியர்:ஜஸ்டின் திவாகர்
பதிப்பகம்:அலைகள்=நெய்தல் வெளி
விலை:ரூ.110/- பக்கங்கள் 132.


இப்புத்தகம் விலைக்கு வேண்டுவோர் aanmigakkadal@gmail.com க்குத் தொடர்பு கொள்ளவும்.